தாய் மண்ணுக்காய் தாய் மண்ணிலே விதையாகிய வீரப் புலிகளின் வீர வரலாறு ஒன்று…!

In பகிரப்படாத பக்கங்கள், வரலாற்று சுவடுகள்

ஒரு நாள்

அது 19.07.1997.

பெரியமடு எனும் அக்கிராமம் தன் குடிமக்களைப் பிரிந்து, போராளிகளை அரவணைத்தவண்ணம் விடிகிறது. கண்டி வீதிக்கு கிழக்கேயும், நெடுங்கேணி வீதிக்கு வடக்கேயும் அமைந்திருக்கிறது அது. சுமார் நூறு குடும்பங்களையே தன்னில் கொண்டிருந்திருக்கும். அதிலிருந்து இரண்டு மைல் தொலைவில் நைநாமடு என்னுமிடத்தில் போராளிகளும் ஜயசிக்குறு இராணுவமும் அடிக்கடி கைகலந்து கொண்டிருக்கின்றனர். இரணைமடு அணையில் அலைகள் வந்து மோதுவதைப் போல் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியும் அதனைத் தடுக்கும் புலிகள் ஏற்பாடும் அமைந்துள்ளது. அக் கிராமத்தில் தான் அப் போர்க்கள பிரதேசத்திற்குரிய பிரதான மருத்துவ முகாம் அமைந்திருக்கிறது. பதுங்கு குழிகள், நிலக்கீழ் அறைகள் எனப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பாரிய குண்டுத் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. காயங்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பது, நோயாளிகளைப் பராமரிப்பது, களஞ்சியம் என தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அன்று காலை மாறாக அங்கிருக்கும் போராளிகள் செயலில் உற்சாகம் தென்படுகின்றது. முகங்களில் மகிழ்ச்சிப் பிரவாகம் எடுக்கின்றது. நேற்றுமாலை இவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் கிபிர் குண்டு போட்டது. அதில் எவரும் வீரச்சாவு அடையவோ, காயப்படவோ இல்லை. ஆனால் சில வீடுகளைக்

காணவில்லை . பல மரங்கள் அகால மரணம் அடைந்திருந்தன. முறிந்திருந்த தென்னை மரங்களில் இருந்து சிதறிய தேங்காய்களை இவர்களில் சிலர் சேகரிக்கின்றார்கள். தொதல் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். இந் நிகழ்வு தைப்பொங்கல் போன்ற நாட்களில் அதிக சிறார்கள் இருக்கும் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை ஞாபகமூட்டுகிறது. துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்த நிலையில் இன்பமாய் இருக்க இவர்களிடம் கற்றுக்கொள்ளலாம். தொதல் தாய்ச்சி அடுப்பில் ஏற்றப்பட்டுவிட்டது. நெருப்பு சுவாலைவிட்டு எரிகின்றது. பச்சை பனைமட்டை மூலம் தொதலைக் கிண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ராஜன் பலமாகக் கேட்கிறான். “டொக்டர் காய்ச்சல்காரருக்கு தொதல் கொடுக்கலாமோ?’

அப்பொழுது செல் குத்தும் சத்தம் கேட்கிறது. சில வினாடிகளில் எறிகணை மழை பொழிவதற்கான முழக்கமே இது எல்லாரும் உடனேயே பதுங்கு குழிக்குள் செல்கின்றார்கள். வழமை போல் நெடுக்காகவும், கிடையாகவும் எறிகணைகள் அப்பிரதேசத்தில் வீழ்ந்து வெடிக்கின்றன. “சரி இன்று முழுக்க பங்கருக்குள்ள கழியப்போகுது” ஒருவன் சிரித்தபடியே கூறுகின்றான். சிறிது நேரத்தில் எல்லாம் ஓய்ந்துவிட்டது. பொந்துகளை விட்டு வெளிவரும் நண்டுகள் போல் ஒவ்வொருவராக வெளிவருகின்றார்கள்.

“அடிப்பிடிக்கப் போகுது, அடிப்பிடிக்கப்போகுது” என்று கூறியபடியே ஓடிப்போன ராஜன் ஒரு மட்டையால் தொதலைக் கிண்டிய வண்ணம் மறுகையால் எரியும் விறகுகளை வெளியால் எடுத்து நெருப்பை அணைக்கின்றான். “பதம் சரிவந்திட்டுது.” அவன் கூற மீண்டும் “கும்…கும்….” செல் குத்தும் சத்தம் கேட்கிறது. உடனேயே சுடச்சுட தாய்ச்சியையும் தூக்கிக் கொண்டு பதுங்கு குழிக்குள் செல்கிறார்கள். “அடாது செல் அடித்தாலும் விடாது தொதல் கிண்டுவோம்” இவன் பலமாகச் சொல்வது கேட்கிறது மீண்டும் அமைதி.

வோக்கியில் அறிவித்தல் வருகிறது, “உங்களுக்குரியது வருகிறது” உடனேயே எல்லோரும் காயக்காரரை ஏற்றுக்கொள்வதற்காக தயாராகின்றார்கள். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் விரைந்து வந்து கிறீச் என பிறேக் பிடித்து நின்ற சிறு வாகனத்தில் இருந்து ஐந்து விழுப்புண்ணடைந்தோர் இறக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கான சிகிச்சைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுகின்றன. அந் நிகழ்வானது முடுக்கிவிடப்பட்ட சில றோபோக்களின் செயற்பாட்டை ஒத்திருந்தது. அதில் ஒரு இயந்திரத் தன்மை காணப்படுகின்றது. எனினும் அது அவர்களின் சிறப்புத் தேர்ச்சியை வெளிப்படுத்துகின்றது. போலும், பூரண பரிசோதனைக்காக ஆடைகள் மளமளவென வெட்டி அகற்றப்படும்போது அவன் அதனை அவதானிக்கின்றான். ஐவரில் மூவரின் அடிவயிறு முழுவதும் வட்டக்கடி ஆக்கிரமித்திருந்தது.

“சே இவ்வளவு கஸ்டப்பட்டாலும் இதை ஒளிக்க ஏலாமல் இருக்கு. என்ன செய்கிறது குளிசையோ அல்லது பூச்சு மருந்தோ குறைந்தது ஆறு கிழமைக்கு தொடர்ந்து பாவிக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மருந்து கொடுக்க வேண்டும். போதியளவு இல்லை ஒவ்வொரு நாளும் குளித்து, உடுப்பு தோச்சு, காயப்போட்டு சுத்தமாக இருக்க வேணும். களமுனையில் இது சாத்தியமில்லை. லேசான ஆடைகளை அணியிறதுக்கு இராணுவ உடையின் யதார்த்தம் இடங் கொடுக்காது. காயப்போடுகின்ற உடுப்பும் செல்லடியில் காயப்பட்டு போகுது. ஒருசில கிழமைக்கு மாற்று உடுப்பு வாறதற்கே கடினமாக இருக்குது” என பலவகை எண்ணங்கள் மனதில் ஓட அதனை வெளிக்காட்டாமல் அவன் உயிர்காக்கும் சிகிச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதும் மேலதிக சிகிச்சைக்காக பின் தளங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

சிறிது நேரத்தில் மீண்டும் அறிவித்தல் வருகிறது. உங்களுக்குரியது இன்னும் இரண்டு வருகிறது. வாகனம் வந்தவுடன் இருவரும் வேகமாக இறக்கப்படுகின்றார்கள். ஒருவரின் கால் முழங்காலின் கீழ் சிதைந்து தொங்குகின்றது. முகம் வெளிறிக் காணப்படுகின்றது. இரத்தம் பாரிய அளவில் வெளியேறி இருக்கவேண்டும். மற்றவருக்கு மேல் தொடையில் காயம் காலில் காலுக்குரிய பிரதான’ நாடி சேதம் அடைந்திருக்க சந்தர்ப்பம் உண்டு. எனவே நாடியினைச் சத்திர சிகிச்சை மூலம் திருத்தி அமைக்கவேண்டும்.

குறைந்தது ஆறு மணித்தியாலங்களுக்குள் இவரை அனுப்பிவைக்க வேண்டும். இல்லையேல் கீழ் அவயம் முற்றாக அகற்ற வேண்டி ஏற்படலாம். ஆனால் முதலாமவருக்கு சரியான முறையில் குருதிப்பெருக்கை நிறுத்தி கட்டுப்போடவேண்டும் என்றால், என்பை வெட்டவேண்டும். பூரண மயக்கத்தில்தான் அதனைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் அவர் குறைந்தது ஆறு மணித்தியாலங்கள் பயணிக்க முடியாது. எனவே சாதாரண நோநிவாரணியுடன் என்பை வெட்ட வேண்டியதுதான். மேற்படி விடயங்களைக் கொண்டு உடனே செயலில் இறங்குகின்றான். நோநிவாரணி கொடுக்கப்பட்டு இன்னுமொருவரின் உதவியுடன் என்பு வெட்டும் கம்பி வாளினால் சற சறவென என்பை அறுக்கின்றான். மற்றவர்களுக்கு வேதனையை கொடுக்கும் செயல்களை ஒட்டுமொத்த நன்மை கருதி மேற்கொண்டாலும், செய்பவனுக்கு அது மனவேதனையை ஏற்படுத்துவது தெரிகிறது. காயமடைந்தவன் வலியை உணர்ந்து முகம் சுழிக்கும்போது இவனின் வேகத்தில் தடை ஏற்படுகின்றது.

தருதி ஏற்றுதல், மட்டை வைத்து கட்டுதல் போன்ற ஏனைய இன்னோரன்ன சிகிச்சைகளைச் செய்துமுடித்த பின்னர் “வாகனத்தில் ஏற்றுங்கோ” அவன் கூறுகின்றான். அப்பொழுது வாகனத்திற்கு பொறுப்பாக நிற்பவர் “டொக்டர் கொஞ்சம் பொறுக்க ஏலாதோ? இன்னும் இரண்டு கேஸ் வருகுதாம் சேர்த்து ஒரு

வாகனத்தில் அனுப்பலாம் தானே? ” தயக்கத்துடன் வெளிவரும் இக்கேள்வி அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. இதனூடு வாகனங்களின் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை ஞாபகமூட்டுகின்றான் போலும். “இல்லை இதை உடனே அனுப்பவும் மிச்சத்தை வந்தவுடன் பார்ப்போம் ” அவன் பதில் கூற உடனே வாகனத்தில் காயமடைந்தவர்கள் அனுப்பப்படுகின்றனர். இவன் நேரத்தைக் கணக்குப் பார்க்கின்றான். “காயமடைந்து மூன்று மணித்தியாலங்கள் கடந்து விட்டன. இந்த ரோட்டில் பயணிக்க நான்கு மணித்தியாலங்கள் வேணும். வாகனமோ முற்றிய தொழுநோயாளிக்கு பிரியமில்லாமல் பணிவிடை செய்பவன் விரல்கள் போலவே வீதியில் பயணிக்க முடியும் என்ன செய்வது” மேற்படி எண்ணியவாறே மீண்டும் வரும் காயங்களை ஏற்க பொருட்களை தயார்படுத்தச் செல்கிறான். பின் அடுத்த வளவினுள் காய்ச்சல்காரர் இருக்கும் வீட்டிற்கு செல்கின்றான். அங்கு பதினைந்து பேர்வரை சிகிச்சை பெறுகின்றார்கள். பத்துப் பேரிற்கு மலேரியா, இருவரிற்கு வயிற்றோட்டம், மூவரிற்கு சாதாரண காயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு ஒவ்வொரு காலும் யானைக்கால் மாதிரி வீங்கி இருக்கிறது. மலேரியாவால் பாதிக்கப்பட்டவரில் இருவருக்கு அன்றுடன் மருந்து முடிகின்றது. ஆனால் அவர்கள் பலவீனமாக இருப்பதால் சில நாட்களாவது கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும். இப்படி எண்ணியபடியே அவன் அவர்களுக்குரிய சிகிச்சைகளை சரி பார்க்கையில் அப்பகுதிப் பொறுப்பாளர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இவனருகில் வருகிறார். “டொக்டர் காய்ச்சல் மாறினவை இருக்கினமோ? ரீம் டமேச்சாகப் போயிற்றுது பொய்சன் கவர்பண்ண ஆட்கள் காணாது” எனக் கேட்கின்றார்.

அவனுக்கு சங்கடமான நிலை உடல்நிலையைப் பொறுத்தவரையிலும் எவரையும் அனுப்பமுடியாது. ஆனால் கள நிலையைப் பொறுத்தவரையில் மருந்து முடித்த இருவரையும் அனுப்பலாம் என்ன செய்வது? அவன் யோசித்துக்கொண்டிருக்க அந்த இருவரும் “டொக்டர் நாங்கள் போறம் எங்களுக்கு மருந்து முடிஞ்சுது தானே?” கேட்கின்றார்கள். “சரி போங்கோ” என அரைமனதாய் சம்மதிக்கின்றான். ஏனையோரைப் பார்த்து “கவனமாக இருங்கோ, உங்கட பாதுகாப்பிற்கு நீங்கள் தான் பொறுப்பு. பின் தளங்களில் எவரும் காயப்படக்கூடாது என கட்டாய ஓடர் வந்திருக்குது”. என இவன் கூறி அவ்விடத்தை விட்டு வெளியே வரவும், மீண்டும் செல் குத்தும் சத்தங்கள் கேட்க நிலவறை ஒன்றினுள் செல்கின்றான். செல்கள் இவர்கள் இருந்த பகுதியிலேயே சரமாரியாக விழுந்து வெடிக்கின்றன. நிலக்கீழ் அறை அதிர்கின்றது. குண்டுச் சிதறல்கள் மரங்களில் சடசடவென படும் சத்தம் கேட்கிறது. வெளியில் தலைகாட்ட முடியாத நிலை. சுமார் இருபது நிமிடங்களின் பின்னர் அமைதி ஏற்படுகின்றது. ஓட்டினுள் இருந்து தலை நீட்டும் ஆமைபோல் மெல்ல வெளியே வந்து பார்க்கிறான்.

சற்றுத் தொலைவில் இருந்த இன்னுமொரு நிலவறையில் வாசலில் இன்னும் புகை விலகவில்லை. அருகில் நின்ற தென்னைமரம் ஒன்று வட்டுடன்

முறிந்திருந்தது. ஏனைய மரங்கள் தலைவிரி கோலமாக நின்றன. ஏதோ விபரீதம் அதில் நடந்திட்டுது என அவனுக்கு விளங்கியிருக்க வேணும் அவ்விடம் நோக்கி அவன் ஓட, “டொக்டர் ஓடி வாங்கோ…. டொக்டர் ஓடி வாங்கோ” எவனோ ஒருவன் சத்தமிடவும் சரியாக இருந்தது. விரைவாய் ஓடி அந்த நிலவறையை அடைகின்றான். உள்ளே ஒரு போராளி கழுத்தின் வலது பக்கதில் காயத்துடன் கீழே படுத்திருக்கின்றான். இன்னுமொருவன் இதிலிருந்து இரத்தம் பீறிடாமல் பீல் கொம்பரசினால் அழுத்திப் பிடித்திருக்கின்றான். அவனைக் கண்டதும் அவன், “டொக்டர் நான் காயப்பட்டிட்டேன். எனக்கு வயித்துக்கு கீழே ஒன்றும் தெரியவில்லை. கால் கை ஒன்றையும் ஆட்ட இயலாமல் இருக்கு, உடம்பெல்லாம் எரியிறமாதிரி இருக்கு” அவன் ஈனக்குரலில் கூறுகின்றான். இவனோ உடனடியாக காயத்தைப் பரிசோதிக்கின்றான். பின் நீண்ட பலகை ஒன்றில் அவனைப் படுக்கவைத்து தலை ஆடாமல் இருக்க இரண்டு பக்கமும் மண்மூட்டை வைத்து ஆளையும் பலகையையும் சேர்த்துக் கட்டுகிறான். நெஞ்சைப் பரிசோதித்து மூச்சு விடுவதில் பிரச்சினை இல்லை என்பதனை உறுதிப்படுத்திய பின் “வாகனத்தைக் கொண்டுவந்து கொண்டு போங்கோ” கூறியபடியே காயப்பட்டவனின் முகத்தைப் பார்க்கிறான். இவனின் மூளையத்தினுள் அணுகுண்டு ஒன்று வெடிக்கின்றது. காயமடைந்தது ராஜன். அவனது தலைமயிரை கோதி விட்டவன் அதனூடு எதைக்கூற முனைந்தானோ தெரியவில்லை. மௌனமாக வெளியே வருகின்றான்.

தொதல் கட்டியைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அன்றைய ஞாபகங்கள் மீண்டும் மீண்டும் அலைமோதிக் கொண்டிருந்தன. ஒரு மணித்தியாலத்தின் முன் கேள்விப்பட்டான், ராஜன் வீரச்சா எனும் செய்தியை. மெல்ல தொதலைக் சாப்பிடுகின்றான். அதன் ஒரு சுவையையும் நாக்கு மூளைக்கு அறிவிக்கவில்லை . போலும், ஆனாலும் அதிலிருந்து அகத்துறிஞ்சப்படும் சத்து தொடர்ந்தும் இவன் செய்யப்போகும் வேலைகளுக்கு சக்தி வழங்கும். அப்பொழுது விரைந்துவந்து ஒரு பிக்கப் நின்றது. அதிலிருந்து சில போராளிகள் இறங்கிக் குதூகலமாகச் சிரித்தபடியே இவர்களின் முகாமிற்குள் வருகின்றார்கள். வந்தவர்களில் ஒருவர் இவனிடம் வந்து, “என்ன டொக்டர் சுகமாக இருக்கிறீர்களா? என்ன உங்கட தோட்டத்துக்குள்ளையும் யானை புகுந்துட்டுதுபோல” எனக் கூறுகின்றான். அவன் மரத்தின் கீழ் வீழ்ந்து கிடக்கும் மாம்பழங்களைப் பார்த்தவாறு “டொக்டர் மாம்பழ ஜாம் சாப்பிட்டிருக்கின்றீர்களா? ஐம்பது மாம்பழம் வரும்போல கிடக்கு நாளைக்கு ஜாம் செய்வோம்.” கூறியபடியே மாம்பழங்களை ஒரு இடத்தில் தவித்தான். இவனும் எதுவும் நடைபெறாததுபோல அவனுடன் சிரித்துக் கதைத்தபடியே மாம்பழங்களைச் சேகரிக்கத் தொடங்குகிறான். சூரியனும் நாளை உதிப்பதற்காக இன்று மறைகின்றது. இன்றைய சோகங்களும் இன்றைய மகிழ்ச்சிகளும் நாளையும் வரும்…..

தூயவன்

சமரும் மருத்துவமும் நூலிருந்து
ஈழப்பறவைகள் இணையம்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.