ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் ஒரே சமரில் காலை இழந்த அண்ணனும் கண்ணை இழந்த தங்கையும்.

In பகிரப்படாத பக்கங்கள்

இலக்கினை அடைவதற்கன்றோ!

ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் ஒரே சமரில் காலை இழந்த அண்ணனும் கண்ணை இழந்த தங்கையின் வரலாறு…!

காலைப் பத்திரிகையில் அச்செய்தியை கண்ணுற்றபோது விபரிக்கமுடியாத எண்ணங்களால் நான் சூழப்பட்ட போது, என் மனக்கண் கடந்தகால எண்ணப்பதிவுகளின் பக்கங்களை விரைவாகப் புரட்டியது. ஓராண்டின் முன்னர் பூநகரி வெற்றிச்சமரின் பின்னர் அந்தப் போராளியின் அருகில் நின்று பணிவிடை புரிகிறேன். அப்பொழுது வெற்றியின் உணர்வுகளை மீறி அதற்காக விதையானவர்களின் எண்ணங்களும் அச்சமரில் தங்கள் அங்கங்கள் இழந்தவர்கள் எங்கள் கண்முன் வேதனையில் துடிப்பதும் என் எண்ணங்களை ஆட்கொண்டிருக்கின்றது. ஆயினும் எனது பணியைச் சலனமில்லாமல் செய்வதற்கு முயற்சிக்கின்றேன்.

அவன் தலையை அருகிலிருந்து வருடி விடுகின்றேன். ‘இந்த நேரத்தில் இவனின் பெற்றோரோ அல்லது உடன் பிறப்புகளோ இவனிற்கு அருகில் இருந்தால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்.’ என எண்ணமிட்ட என்மனம், அப்படியான ஒரு எண்ணம் அவனுக்கு வராத அளவுக்கு நான் கவனமாக இருக்க வேண்டுமென என்னை எச்சரிக்கின்றது. மௌனமாக இருக்கும் அவனின் நிலையை அவதானிக்கின்றேன். பெருமளவு குருதி இழந்ததால் ஏற்பட்டிருக்கும் உடலின் சோர்விற்கும், ஒரு கால் இழந்த நிலையில் இருக்கும் அவனின் மன நிலைக்கும் உடல் அசையும் ஒவ்வொரு கணமும் அதில் ஏற்படும் வேதனைக்கும் இடையிலான ஒற்றுமைக்கும், அவனின் அனுபவம் நிறைந்த கண்களின் ஒளிர்விற்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் ஒன்று இருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது. இதனால் அவனைப்பற்றி அறிய ஆவலுறுகின்றேன்.

கெரில்லாத் தாக்குதலிற்கான இராணுவ வரலாற்றில் சாதனை படைத்த இத் தாக்குதலின் வெற்றிக்குக் காரணமாக இருந்த வேவுப்புலிகளிற்குத் துணைப் பொறுப்பாளர் இவன் என அறிந்தவுடன் ஏனோ என் மனதில் திருப்தி ஒன்று ஏற்படுகின்றது.

“தம்பி அவனுக்குக் கனநேரமாக தண்ணி கொடுக்கயில்ல கொஞ்சம் “சூப்” எடுத்துக் கொடுங்கள் “

இவ்வாறு அருகிலிருந்த இன்னுமொரு போராளியை இவன் சுட்டிக்காட்டிக் கூறியபோது, நான் ஏதோ தவறிழைத்ததுபோல் என் மனசாட்சி என்னைச் சுடுகிறது. ஆயினும் இது சாத்தியமா? எனும் வினாவும் சேர்ந்தெழுகிறது. காடு மேடு என்று பாராது, பனி குளிர் என்று சோராது, கடும் இருளிலும் எதிரியின் குகைக்குள் வாசம் செய்து அவனின் சுவாச வீதத்தைக்கூட அளந்துவரும் இவ் வேவுப்புலி தன்காலை இழந்துவிட்டான். இனி இவனால் தொடர்ந்து இவ்வாறு இயங்கமுடியாது. ஓவியன் விழியிழந்தது போல், பாடகன் நாவிழந்தது போல், தன்பணிக்கு அவசியமான அங்கமிழந்திருக்கும் இப்புலி இந்நிலையிலும் எவ்வாறு ஏனைய போராளிகளின் நலனில் கவனம் செலுத்த முடிகிறது? இது சாத்தியமா? இந்த வேளையிலும் இவன் தன்னைப்பற்றிச் சிந்தியாது மற்றவர் நலனில் அக்கறை கொண்டு, அனைத்தையும் அவதானித்தவண்ணம் இருக்கிறானே! ஒருவேளை வேவுப்புலிகளிற்கு இது சாதாரண விடயமாகவும் இருக்கலாம்.

இவனின் திறனும் அனுபவமும் தொடர்ந்து இனிமேல் கிடைக்காது. என்ற இவனின் வீரமரணச் செய்தியை அறிந்தவுடன் எனது மனம் அவனின் தொடர்காலச் செயல்களின் சிந்தனையில் இருந்து விடுபடமறுக்கிறது.

முச்சக்கர நாற்காலியில் அவனை இருத்தி, மாடிப்படிகளின் வழியே மெல்ல இறக்குகின்றார்கள். ஒவ்வொரு படியிலும் இறங்கும்போது குலுங்குவதால் ஏற்படும் வலியுணர்வை, அவன் இமைகள் கண்களை மூடுவதில் இருந்தும், நெற்றி சுருங்குவதிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிகிறது. இப்பொழுது என்ன அவசரம்? ஏன் இவனை இவ்வாறு சிரமப்படுத்துகினம் என என்மனம் ஆதங்கம் அடைகிறது.

அவனிருக்கும் நாற்காலி இப்பொழுது விழுப்புண்ணேற்ற பெண் போராளிகளின் விடுதியினுள் நுழைகிறது. ஆம்! போராட்ட நகர்வில் கடினமான, ஆனால் தவிர்க்க முடியாத சோகமான பல பக்கங்களில் இதுவுமொன்றுதான். எதிர்கால வாழ்வு பற்றி இனிமையான நிகழ்வுகளை நினைக்க வேண்டிய வயதில், இவர்கள் தங்கள் அங்கங்களை இழப்பதற்கான தேவையென்ன? பொதுவாக தங்கள் நகங்களைக் கூட அழகாகச் சீவி, வர்ணம் பூசி ரசிக்கவேண்டிய வயதில், இதற்கான அங்கங்களையே முழுமையாக இழந்திருக்கும் நிலை ஏன? உண்மையில் இவர்களைப் பார்ப்பவர்களின் உள்ளங்களை ஒரு முறையாவது இக்காட்சி உலுக்கி எடுக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்களை ஒவ்வொருவராகக் கடந்துசென்ற இவனின் நாற்காலி ஒரு கட்டிலின் அருகில் நிற்கிறது.

அங்கு நோக்குகையில் இதயத்தை ஏதோவொன்று பலமாகப் பிடித்து அழுத்துகின்றது. எப்படி…. எப்படி… இவள் தாங்கப் போகிறாள்? இரண்டு கண்களும் வெண்துணிக் கட்டினுள், சூரியனையும், வெண்மேகங்கள் மறைப்பதுண்டு. ஆனால் அங்கு சிறிதளவாவது ஒளிக்கசிவிருக்குமே! ஆனால் இவளின் கண்கள் முழுமை யாகவல்லவோ மூடப்பட்டுள்ளது. அப்பொழுது அருகில் எவரோ கிசுகிசுப்பது, “ஒருகண் போட்டுது. மற்றதைப்பற்றி இப்ப சொல்ல இயலாதாம் ” காதுக்குள் ஈயம் காய்ச்சி வார்ப்பதுபோன்று, அவர் வார்த்தைகள் கேட்போர் மனங்களை வதைக்கிறது. எனினும் என் பார்வை சற்று நகர்கிறது. மீண்டுமொரு இடி உறுதியென்னும் எண்ணச் சுவர்களைப் பிளக்கிறது. அவளின் வலது கரத்தில் ஒரு பகுதியைக் காணவில்லை .

“கடவுளே! என்ன இருந்தாலும் இப்படி நீ செய்யக்கூடாது”.

சிதறியோடும் என் எண்ணங்கள் கூட்டினுள் கொண்டுவர அரும்பாடுபடுகையில், “அம்மா.. உன்ர அண்ணன் வந்திருக்கிறன்”

இவனின் உதடுகள் உதிர்த்த இச்சொற்கள் இதயத்தில் எரிமலையொன்றை வெடிக்க வைக்கிறது.

அப்படி இருக்கவே கூடாது.

என் மனம் இதை ஏற்க மறுக்கிறது. “எப்படி இவனால் இதைத் தாங்க முடியும்? ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் ஒரே சமரில் தம் இதழ்களை இழப்பதா? தன் தங்கையின் நல்வாழ்வைக் கண்குளிரக் காணவேணுமென சராசரிச் சகோதரர்கள் போல இவனும் எண்ணியிருப்பானே, இவள் இன்று கண்ணிழந்து காணப்படுகிறாளே! இவள் தன் பிஞ்சுக்கரங்களால் செல்லமாய் இவன் கன்னத்தில் எத்தனை தடவை அடித்திருப்பாள்? இன்று அக்கைகளில் ஒன்றைக் காணவில்லையே! அவளுக்கு சிறு தலையிடி என்றாலேயே இவன் தன்கால்கள்

நிலத்தில் நிற்க முடியாமல் பதைபதைத்திருப்பானே! இன்று அவனால் அதைக்கூடச் செய்ய முடியாதே! என்ன! எமனுடனேயே சளைக்காமல் போர் புரியும் இச்சத்திர சிகிச்சை நிபுணரின் கண்களும் பனிக்கின்றனவே! எங்களாலேயே தாங்க முடியவில்லை . இச்சோக நிகழ்வை இவன் எப்படித் தாங்கப் போகிறான்? வார்த்தைகளால் வளைக்க முடியாத இச்சோக நிகழ்வினூடு அண்ணணையும் தங்கையையும் மாறிமாறி அவதானிக்கிறேன். சிலவேளை அண்ணனின் இந் நிலையைக் கண்டு தங்கை அழுதிருக்கலாம: அல்லது இவனுக்கும் அவள் ஆறுதல்கூற முற்பட்டிருக்கலாம். ஆனால் அதற்குத் தானே இப்பொழுது அவனால் முடியாது. ஆனால் அவளின் குப்பி கடிக்கத் துணிந்த உதடுகள், ஏதோ சொல்லத் துடிப்பதை உணரமுடிகிறது. தங்கையின் மறுகரத்தைப் பற்றும் இவன், அவளிற்கு அதனூடு எதையோ சொல்ல முற்படுகிறான் போலும். இருவருமே எதுவும் கதைக்காத ஒரு மௌன நிலையில், சிறிது நேர இடைவெளியின் பின்,

“தங்கச்சி! இப்ப எங்களைத் தலைவன் வளர்க்கிறான். நாங்கள் புலிகளல்லவா”

எதுவித சலனமும் இல்லாமல் இவன் உதடுகளின் மூலம் வெளிப்படும் உணர்வுகள், எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றது.

ஆம்! எவ்வளவு உறுதியானவர்கள் இவர்கள். இவ்வாறான எத்தனையோ நிகழ்வுகள் பலருக்குத் தெரியாமலே தமிழீழ மண்ணில் அரங்கேறுகின்றன. இவை எல்லாம் எம் இலக்கினை அடைவதற்கன்றோ!

தூயவன்

சமரும் மருத்துவமும் நூலிருந்து
ஈழப்பறவைகள் இணையம்

குறிப்பு இந்தப் பதிவை பார்வையிடும் எம் உயிரிலும் மேலான எமது தளபதிகளே போராளிகளே மற்றும் எம் போராளிகளோடு இணைந்து பணியாற்றிய எமது மக்களே.. நீங்கள் நின்ற களங்களில் மறக்க முடியாத எமது மண்ணுக்காய் விதையாகிய எமது போராளிகளின் வீர வரலாறுகளை அழிய விடாது எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். மற்றும் நீங்கள் குரல் பதிவு செய்தும் எமக்கு அனுப்பி வைக்கலாம். எமக்காய் வித்தாகிய எமது வீரர்களின் வரலாறுகளை எமது சந்ததியிடம் கொடுப்பது எமது கடமை…

எமது மின்னஞ்சல் – eelapparavai@gmail.com / info@eelapparavaikal.com

நன்றிகள்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.