உரிமைப்போரில் உணர்வுப்புலன் இழந்தும் உள்ளம் தளராத புலிவீரர்கள்

In வரலாற்று சுவடுகள்

இலட்சிய வாழ்வில் ஒரு துளி

உரிமைப்போரில் உணர்வுப்புலன் இழந்தும் உள்ளம் தளராத புலிவீரர்கள்

தன்னருகில்வந்து தானியங்கள் கொத்தியுண்ணும் பல்வகைப் புறாக்களின் அழகை ரசித்தவண்ணம் இருக்கிறான். அவை தெத்தித் தெத்தி’ நடப்பதும், காலைச் சூரிய ஒளி அவற்றின் கழுத்தின் மேற்பகுதியில் பட்டுத்தெறிப்பதால் மேலும் மிளிர்வைக் கொடுப்பதும், அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்க வேண்டும். ஆயினும் அவனின் ஒளி நிறைந்த விழிகளில் ஏக்கமொன்று தெரிகிறது. தான் அன்புடன் வளர்க்கும் அப்புறாக்களுக்கு தானியம் அள்ளிவீச முயல்கிறான். ஆனால் அவன் கையை நோக்கியவன் பெருமூச்சொன்று விடுகிறான். அதனால் அவன் உணர்வுகளின் ஆழத்தை அளக்கமுடிகிறது. பெருவிரலுடன் சேர்த்து மற்ற மூன்று விரல்களும் சுமாராகத்தான் அசைகின்றன. மற்ற இரண்டும் அதற்கு மறுக்கின்றன. “எண்டாலும் இரண்டு வருசத்திற்கு முந்தினதிலும் பார்க்க, இப்ப நல்ல முன்னேற்றம்” தனக்குள் சமாதானம் கூறிக் கொள்கிறான். இவன் பின்னால் திரும்பி தலையசைக்க அருகில் நிற்கும் சக போராளியின் உதவியால் இவனிருக்கும் சக்கர நாற்காலி நகரத் தொடங்குகின்றது. அப்புறாக்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பறக்கின்றன. அவன் மனமும் கடந்த காலத்தை நோக்கிச் சிறகடிக்கின்றது.

அப்பொழுது அவனிற்கு பதினாறாவது வயது நடக்கின்றது. க.பொ.த (சா/த) பரீட்சை எடுப்பதற்கான காலம். எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக உயர்தரத்தைப் பற்றிச் சிந்திக்கும் காலம். ஆனால் காலம் அவனைக் களத்திற்கு அழைக்கின்றது. வன்னிக் காட்டினுள் அவன் வரிப்புலியாகின்றான். பல களங்களில் தொடராய் கால் பதித்ததால் வீரத்தளும்புகளால் உடலை நிறைக்கிறான். நேரடி கள அனுபவங்கள், சண்டைக்கான திட்டங்கள் தீட்டும் திறனால் தன் போர் அறிவைப் பெருக்குகின்றான். இப்பொழுது இவனின் குடலில் கணிசமான பகுதி இவனிடம் இல்லை . கீழ் காலில் ஏற்பட்ட பலமானகாயம் இன்னும் ஆறவில்லை . ஆயினும் அவன் பணி தொடர்கிறது.

சுமாராக மூன்று மாதம், தான் நேரடியாக வேவு பார்த்து, திட்டம் தயாரித்து, ஒரு குழுவைத் தலைமை தாங்கி, மற்றக் குழுக்களுடன் சேர்ந்து இலக்கு நோக்கி நகர்த்துகிறான். அவன் நினைக்கும் வேகத்திற்கு ஏற்றாற்போல் காலடி எடுத்துவைக்க அவனால் முடியவில்லை . முட்புதர்களையும், மரவேர்களையும், செடிகொடிகளையும் விலத்தி விரைவதற்கு அவன்

கால் ஒன்று உதவி செய்ய மறுக்கின்றது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் உயிர் போகும் வலியின் பிரதிபலிப்பு, நெற்றியில் உருவாகும் நெருக்கக் கோடுகளில் தெரிகிறது. இவனின் துப்பாக்கியைத் தாங்கியிருக்கும் வலக்கரத்தில் ரவையொன்று எப்பவோ ஊடுருவிச் சென்றதற்கான அடையாளம் எதையோ விபரிக்க முற்படுகின்றது.

நடுநிசி, எல்லோரும் நிலையெடுத்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக பல சிரமங்களின் மத்தியில் தீட்டிய தாக்குதல் திட்டத்தின் அறுவடை ஆரம்பம் ஆகப்போகின்றது. கணங்கள் எல்லாம் யுகங்களாகக் கழிந்தவண்ணம் உள்ளது. சிறு அரவம் கூட எதிரியை உசாராக்கிவிடும். அந்த மினிமுகாம் தாக்குதலில் இவனுக்கு சில காவலரண்களைக் கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கால்கள் தரையைத் தழுவும்போது நெரிபடும் சருகுகளின் சத்தம்கூட அவர்களின் காதுகளுக்கு எட்டாவண்ணம்தான் அம்முகாமிற்கு அண்மையில் நகர்ந்துவந்தார்கள். ஆயினும் ஏனோ போலும். ஆபத்தின் ஊடே ஓர்மத்துடன் முன்னேறுவதற்கும், அமைதியாக, நிதானமாக முன்னேறுவதற்கும் இடையே நீண்ட இடைவெளி காணப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் தங்கள் இலக்குகளை வெற்றி கொள்வதில் குறியாக இருக்கின்றார்கள். அப்பொழுது ஆர்.பி.ஜி கணையொன்று தீ கக்கியவண்ணம் விரைந்துசென்று காவலரண் ஒன்றைத் தகர்க்கிறது. அக்கணத்துடன் துப்பாக்கிகளினதும் ஏனைய கனரக ஆயுதங்களினதும் கோரப்பசிக்குத் தீனி கொடுப்பதில் போராளிகள் தீவிரமாகிறார்கள். எதிரியிடமிருந்து கிடையாகப் பொழியும் ரவை மழை இடையே, வெற்றித் தேவதையை நோக்கி புலி வீரர்கள் விரைகின்றனர்.

அப்பொழுது, எங்கிருந்தோ வந்த ரவையொன்று இவன் கழுத்தை ஊடுருவிச் செல்கின்றது. கட்டளைகளைப் பிறப்பித்தவண்ணம் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தவன் பின்நோக்கித் தள்ளப்படுகின்றான்.

சில நாட்களின் பின் கண்விழித்தவன் தன்னிலை உணர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கிறான். தான் இப்பூமியில் இல்லாத மாதிரி உணர்கிறான். தனது உடலில் தலை தவிர்ந்த ஏனைய பகுதிகள் இருப்பதையே அவனால் உணர முடியவில்லை . அவனுக்கு தன்னிலை மெல்லமெல்ல….. தெரியவருகின்றது. கண்வழியோடும் கண்ணீர் கன்னம் வழியே பாய்ந்து படுக்கையை நனைக்கிறது.

ஆம்! உறுமித்திரிந்த புலிவீரன், சுதந்திர மண்ணில் பறக்கவிரும்பியவன், பங்குபற்றிய ஓட்டப் பந்தயங்களில் எல்லாம் முதலாவதாக வந்தவன் முதன்முறையாகத் தன் இயலாமையை உணர்கின்றான். எத்தனையோ எதிரிகளுக்கு எமலோகத்திற்கு

வழிகாட்டுவதற்காகத் துப்பாக்கி விசைவில்லுக்குக்கு விசை வழங்கிய அவன் விரலும், தற்பொழுது உணர்வில்லாத பகுதியாகிவிட்டது. உடலின் பெரும்பகுதி உணர்விழந்தாலும், செயலிழந்தாலும் மனம் உரமிழக்காமல் இருப்பதற்காக, அதற்குப் படிப்படியாக பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கிறான்.

“நான் எழும்பித் திரிய எவ்வளவு நாள் எடுக்கும்?” இக் கேள்வியை அவன் வெளிப்படையாகக் கேட்பதில்லை: தன்னைத்தானே கேட்பது வழக்கம். இப்பொழுதே இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. இன்னும்…… ஓ எவ்வளவு பெரிய தாக்கம், அதனால் ஏற்படும் தவிப்பு சொற்களால் சிறையிட முடியாதவை. சகல விடயங்களுக்கும் இன்னொருவரில் தங்கியிருக்கவேண்டிய நிலை. ஆயினும், தாயாக மாறும் போராளிகளால் அவன் வாழ விரும்புகிறான்.

தமிழீழம்….. தமிழீழம்…. இதற்காய் இவன் எவ்வளவு வேதனைகளையும், சோதனைகளையும் எத்தனை காலம் வேண்டுமானாலும் தாங்கத் தயார். இந்நாட்டு மக்கள் சுதந்திர மண்ணில் மகிழ்ச்சியாக வாழ்வதைக்காண தன்கண்கள் இரண்டும் இருந்தால் போதும் என நினைப்பவன். “தட்டித்தவறி நான் செத்திட்டா என்ர கண்ணை யாராவது ஒரு தமிழ் மகனுக்கு தானம் செய்யுங்கோ. அதனால நான் தமிழீழத்தை பார்ப்பேன்.” இவனது வாயில் இருந்து வரும் இவ்வார்த்தைகள் உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டும் வீடியோ படங்களாகவே தெரிகின்றன.

தலை வேர்க்கிறது, உணர்வு தெரியும் பகுதியெல்லாம் உயிர்போகும் வேதனையால் துடிக்கின்றது, அவனுக்கும் தெரிகிறது. சிறுநீர் வெளியேறப் போகுதென்று. அவனது சிறுநீர் வழியினூடாக சிறுநீர்ப்பைவரை பொருத்தப்பட்டிருக்கும் ரப்பர் குழாயூடே சிறுநீரும் இரத்தமும் கலந்து வெளிவருகின்றது. அதனை அவதானித்தவன் மனத்தில் எதுவித சலனமும் இல்லை . ஏனெனில் சிலகாலமாக இது பழகிய ஒன்றுதான். ஆயினும் ஒரு நாளில் எத்தனை தடவை இவ்வேதனையைத் தாங்குவது. எனினும் இது தவிர்க்க முடியாததாகவே காணப்படுகின்றது. இந்நாட்டில் நரம்பியல் நிபுணர்களின் பற்றாக்குறையும், இத்துறைசார் நிபுணத்துவ பற்றாக்குறையும், இயற்கையாகவே நரம்புக்கலங்களின் பிரிந்து பெருகும் ஆற்றலற்ற நிலையும், அவனின் பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலம் சீராகும் காலத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் செய்கின்றன.

குழாயில் இருந்து நீர் பாயும் ஓசையையும் தாண்டி, அவர்களின் சிரிப்பொலியும், கும்மாளமடிக்கும் சத்தமும் வருகின்றது. இப்பொழுது அவன் ‘ஸ்ரெச்சரில’ இருந்தபடியே குளித்துக் கொண்டிருக்கிறான். அருகில் நிற்கும் சக போராளிகளுடன் அவன் பம்பலாய்’ சிரித்துக் கதைத்தவண்ணம் குளிக்கிறான். “டேய் எனக்கு இப்ப கை ஏலும்” எனக் கூறியவண்ணம் தனது இயலாத கையால் தண்ணியை அள்ளி மற்றவனின் தலையில் வார்க்கின்றான். இப்படியே இவர்கள் மாறி மாறி தண்ணீர் ஊற்றுவதும் பலத்து சிரிப்பதும் பார்ப்பதற்கு

இதமாக இருக்கிறது. ஆயினும் “எப்படி இவனால் இந்நிலையிலும் மனம்விட்டுச் சிரிக்க முடிகிறது?” எனும் கேள்வி மனதில் எழத்தான் செய்கிறது. இதற்கான பதில் உலகமே அறிந்த ஒன்றுதான். உறுதியும் பரிவும் மிக்க தலைவரினால் அவர்கள் வளர்க்கப்படுபவர்கள்.

குளித்து உடைகள் மாற்றிய பின்பு, அவன் முச்சக்கர நாற்காலியில் இருந்தவண்ணம் சக பேராளிகளின் உதவியால் புறாக்கூட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றான். தனது வலது கரத்தால் மிகவும் கஸ்ரப்பட்டு அப்புறாக்கூட்டின் தாளை நீக்கி கதவுகளை திறக்கிறான். உள்ளிருந்த புறாக்கள் சடசடவென தங்கள் இறக்கைகளை அடித்தவண்ணம் வெளிவந்து முச்சக்கர நாற்காலிக்கு அருகாமையில் தரையில் அமர்கின்றன. தனது மடியில் மற்றப் போராளி வைத்த பாத்திரத்தில் இருந்த தானியங்களை மெல்ல மெல்ல அள்ளி அப்புறாக்களுக்கு சிந்துகிறான். அவை அதனைக் கொத்தி உண்ணும் அழகையும், தெத்திப் பாயும் ரம்மியத்தையும் ரசித்த வண்ணம் கண்களை கசக்கியபடி சிரிக்கின்றான்.

தூயவன்

சமரும் மருத்துவமும் நூலிருந்து
ஈழப்பறவைகள் இணையம்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.