இந்நிலந்தான்!
இந்நிலந்தான் — அது
என்நிலந்தான்!
சிங்களப் போர்ப்படை
சீறி எழுந்ததும்
எங்கள் உரிமை
இருட்டில் எரிந்ததும் (இந்நி…)
எங்கள் செவியறை
வேர்கள் அதிர்வுற
எங்கும் அழுகுரல்
இன்றும் ஒலிப்பதும் (இந்நி…)
பிஞ்சுக் குழந்தையின்
பேசாக் குரல்வளை
கெஞ்சும் பொழுதும்
கிழித்துயிர் போட்டதும் (இந்நி…)
கதிரவன் எம்மேல்
கனலெறி குண்டை
அதிகம் பொழிந்தே
அழிக்கத் தொடங்கிய(து) (இந்நி…)
பெண்ணை இழந்ததும்
பிள்ளை எரிந்ததும்
மண்ணை இழந்ததும்
மானம் இழந்ததும் (இந்நி…)
கண்ணை இழந்ததும்
கைகால் இழந்ததும்
அன்னைத் தமிழ்நிலம்
யாவும் இழந்ததும் (இந்நி…)
விடுதலை என்னும்
பெரும்பசி போக்கக்
கடும்புலி போர்க்களக்
காட்டில் புகுந்ததும் (இந்நி…)
நாயும் நரிகளும்
ஒன்றாய்த் திரண்டதும்
பாயும் புலிகளின்
பின்புறம் பாய்ந்ததும் (இந்நி…)
கோழைகள் கையினால்
கோடி மறவர்கள்
ஈழத் தரையினில்
இன்னுயிர் மாய்த்ததும் (இந்நி…)
தோளில் இனச்சுமை
தூக்கிச் சுமந்தவர்
ஆழக் குழியில்
அமைதி சுமப்பதும் (இந்நி…)
இனமணம் வீசிய
எந்தமிழ் மண்ணில்
பிணமணம் வீசப்
பெருந்துயர் கண்டதும் (இந்நி…)
சிலநாள் தமிழ்மொழி
செம்மை வளத்தில்
அழகாய் ஒளிரும்
அரியணை சாய்ந்ததும் (இந்நி…)
மீளும் தமிழின
மீட்சித் தடைபடக்
காலம் ஒருபிழை
கண்ணெதிர் செய்ததும் (இந்நி…)
மீண்டுமென் தாய்நிலம்
மீட்கும் உறுதியைத்
தீண்டியென் நெஞ்சினைத்
தீவிடச் செய்வதும் (இந்நி…)
— ஏறன் சிவா