முள்ளிவாய்க்கால் கண்ணீரும் புலம்பெயர் கைக்குட்டைகளும்…..!

In முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் கண்ணீரும் புலம்பெயர் கைக்குட்டைகளும்……!

தனது கணவர், தான் பெற்ற இரண்டு பிள்ளைகள் ஆகியோரை இறுதி யுத்தத்தில் இழந்து தனியே வசிக்கின்றாள் அந்தத் தமிழ் விதவை. உழைக்கவும், பிழைக்கவும் வழியின்றி அவள் வாழ்வு கண்ணீரினால் கட்டப்பட்டிருக்கின்றது. தனித்திருக்கும் அவளுக்கு தைரியம் ஊட்டுவாரும் இல்லா நிலை. இந்தச் சந்தர்ப்பத்தில் மனிதாபிமானம் கொண்ட தமிழுறவின் கண்கள் அவளைக் காண்கின்றது. அவளின் கண்ணீர்க்கதை அவன் மனதைத் தைக்கிறது. அவளுக்கு உதவி செய்ய அவனிடம் ஏதுமில்லை. ஆனால் உதவுவார் ஓடிவருவர் எனும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. அவன் கைகள் புலம்பெயர் தமிழுறவுகளிடம் அவளுக்காக நீள்கிறது. புலம்பெயர் கையொன்று அந்தத் தமிழ் விதவையின் கண்ணீரைத் துடைக்கிறது. மாதாந்ததம் அவள் வாழ்க்கைக்கான உதவிப்பணம் அனுப்பும் வகை செய்யப்படுகின்றது. யாருமே எனக்கில்லை என நினைத்திருந்த அவளுக்கு யாரோ எனக்காக இருக்கின்றார்கள் எனும் ஆறுதல் தைரியமூட்டுகின்றது. அவளை அறியாத மன்ணை நேசிக்கும் மனம் அவளுக்காகவும் சேர்த்து அங்கே உழைக்கின்றது. அந்த‌ உழைப்பின் ஒரு பகுதி இவளை இன்றுவரை தாங்குகின்றது.

மேலே எழுதியது முற்றிலும் உண்மையான ஒரு பதிவு. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் இலங்கையின் ஆயுதப்போர் முடிவுக்கு வந்தபோதினிலே பல்லாயிரம் பேர்களின் அவல வாழ்க்கையும் தொடக்கத்திற்கு உள்ளானது. தனிநபர் வாழ்க்கை மட்டுமல்ல சமூகம் சார்ந்த புதைவுகளும் தொடங்கின. வாழ வழியின்றி தற்கொலை செய்த சம்பவங்களும் தமிழர் நிலத்தில் நடந்தேறின. உணவுக்கும், உறைவிடத்திற்கும், ஆடைக்கும், அடைக்கலத்திற்குமென தடுமாறின பல்லாயிரம் நெஞ்சங்கள். இந்த வேளையில்தான் கண்ணீர் துடைக்கும் கைக்குட்டைகளாகின புலம்பெயர் புனிதர்களின் கரங்கள். அப்படியானால் தாயகத்திலிருந்து உதவிகள் வழங்கப்படவில்லையா? வழங்கப்பட்டன. ஆனாலும் பெருவீதமும், அதிகமான தொடர்தலுமே இங்கே நோக்கப்பட வேண்டியது. உதாரணமாக ஒரு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் எவ்வித உதவியும் இன்றி தவிக்கின்றார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு அத்தியாவசிய உதவி தேவைப்படுகின்றபோது அவர் பற்றிய தகவல் எங்கே அனுப்பப்படுகின்றது? எங்கே இவர்க்கு உதவி கிடைக்கும் என அநேகர் எண்ணம் கொள்கின்றார்களென்றால் அது புலம்பெயர் தேசத்தில் வாழும் புனிதர்களை நோக்கியே ஆகும். இவ்விடத்தில் புலம்பெயர் தேசத்துப் புனிதர்கள் என சொல்லிடக் காரணம், புலம்பெயர் தேசத்தில் வாழும் யாவரும் இப்பணிகளில் ஈடுடவில்லை என்பதனேலேயாம். அதீத வசதிகள் கொண்ட அநேகர் தானும் தன்பாடு என்றும், இன்னும் அநேகர் இவைகளைக் குறித்து எண்ணிப் பார்க்காததுமான நிலையுமுண்டு. ஆயினும் தாயகத்துத் தமிழர்களை தமது சொந்தமென எண்ணி நித்தமும் உருகும் புலம்பெயர் தமிழர்கள் போருக்குப் பிந்திய மனிதாபிமான‌ செயற்பாடுகளில் இடைவிடாது ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விடத்தில் இன்னுமொரு முக்கிய விடயம் நோக்கத்தக்கது. தாயகத் தமிழர்களுக்கு உதவி வழங்கும் அநேக புலம்பெயர் தமிழர்கள் அந்த நாட்டில் தமக்கான ஒரு சொந்த மனையையோ, தனித்துவ வாகன வசதியையோ கொண்டிராதவர்கள் அநேகர் உளர். தமக்கான தேவைகள் பூரணமாக்கப்படாத நிலையிலும், தமது உழைப்பின் குறிப்பிட்டளவான வீதத்தினை மாதாந்தமோ, குறிப்பிட்ட கால இடைவெளிகளிலோ தாயகத்தின் ஏதோவோர் பணிக்காக வழங்கி வருகின்றார்கள்.

தமிழர் தாயகத்தில் எந்தக் கிராமத்திற்குச் சென்றாலும் அந்தக் கிராமத்தில் ஒருவரோ, பலரோ யாரோ ஒரு புலம்பெயர் தமிழரினால் ஆதரிக்கப்படும் நிலை காணமுடிகின்றது. எந்தப் பாடசாலைக்குச் சென்றாலும் மாணவர்கள் அநேகருக்கு புலம்பெயர் தமிழுறவுகளின் ஆதரவுக்கரம் கிடைக்கும் பதிவு இருக்கின்றது. தவிரவும் எந்தப் பாடசாலையிலும் ஏதோவொரு பொதுவான கற்றல் உதவி புலம்பெயர் தமிழர்களினால் வழங்கப்பட்டிருக்கும்.

மாற்றுத்திறனாளி அமைப்புகள், தொண்டுசார் அமைப்புகள், சமூக மட்ட அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும் அநேகமாக புலம்பெயர் அமைப்பு ஒன்றிடம் அல்லது தனிநபரிடம் ஆதரவினை பெற்றவையாக அல்லது பெற்றுக்கொண்டிருப்பவையாக இருப்பதை பரவலாக காணமுடிகின்றது.

இருப்பினும் புலம்பெயர் சில அமைப்புகளின் பணிகள் தொடர்பான விமர்சனங்களும் போருக்குப் பிந்திய காலத்தில் எழாமல் இல்லை. அதீத விளம்பரம் தேடுதல், வெளிநாட்டில் சேகரிக்கப்பட்ட நிதிகளை சீராக தாயகத்திற்கு அளிக்காமை என அவை இருக்கின்றன. இருந்தாலும் நாம் இதில் எழுத வந்த முக்கிய விடயம் போருக்குப் பிந்திய கண்ணீர் துடைப்பில் புலம்பெயர் தமிழர்கள் உண்மையான தூய மனிதாபிமானத்துடன் செயற்பட்டதாலும், செயற்பட்டுக்கொண்டிருப்பதனாலும் பல்லாயிரம் பேர்களின் கண்ணீர் துடைக்கப்பட்டிருக்கின்றது என்பதே.

போருக்குப் பிந்திய புலம்பெயர் தமிழுறவுகளின் மனிதாபிமான நடவக்கைகள் அநேகம் தனிநபர் அல்லது குடும்பத்தினை சார்ந்து அமைந்திருந்தாலும், சமூகக் கட்டமைப்புக்களினை மையப்படுத்தியும் அநேகம் இடம்பெறுகின்றன. கூட்டுத் தொழில் ஊக்குவிப்பு மையங்கள், பராமரிப்பகங்கள், வாழ்வாதாரச் செயலூக்கங்கள் என அவை உள்ளன. உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவரின் தொழிற்சாலையில் 100 வரையான தொழிலாளர்கள் பணி செய்து தமது வாழ்வாதாரத்தினை ஈட்டிக்கொள்வதனைக் காணலாம். இதில் ஒரு தொழிற்தன்மை இருந்தாலும் குறித்த புலம்பெயர் தமிழர் பாதிக்கப்பட்டோரினை உயர்த்துவதை மையமாக்கி அதை ஆரம்பித்து இருப்பதே முக்கியமாது. விவசாயப் பண்ணைகள், தொழிற்பேட்டைகள் என புலம்பெயர் தமிழர்களின் உதவியோடு வடக்கு கிழக்குப் பகுதிகளில் அநேகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பிறந்த நாள் விழாக்கள், பிற கொண்டாட்டங்களை தவிர்த்து அதற்குச் செலவழிக்கும் பணத்தினை தாயகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் பாரிய பணிகளும் போருக்குப் பின்னர் அதிகமாக இடம்பெறுகின்றன. தாயகத்திற்கு வருகை தரும் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையானோர் ஏதேனுமொரு ஆதரவற்றோர் இல்லத்திற்கோ, அல்லது அத்தியாயாவசிய உதவி வேண்டிய இடத்திற்கோ செல்லுவதையும், ஏதேனுமோர் உதவி அளித்துச் செல்வதையும் இந்த நாட்களில் அதிகம் காணலாம். பலரின் உதவிகள் வெளித்தெரிகின்றன. அல்லது ஊக்குவித்தல் கருதியோ, பிற காரணம் கருதியோ வெளியாக்கப்பட்ட்டிருப்பினும், எவ‌ருக்குமே தெரியாமல் பெரியளவிலான உதவிகளை வழங்கும் அநேகர் புலம்பெயர் தேசத்தில் உள்ளனர்.

கல்விசார் செயற்பாடுகள் மட்டுமல்லாது, கலை, விளையாட்டு, இலக்கியம் எனவும் புலம்பெயர் தமிழர்கள் தாயகத்து செயற்பாடுகளுக்கான பெரியளவிலான உதவிகளை வழங்கியிருக்கின்றார்கள். இவைகளில் முரண்படு நிலைகளும் தோன்றாமலில்லை. இருந்தபோதும், நமது உறவுகளுக்கு நாம் கொடுக்க வேண்டும் எனும் மனோநிலை இருக்கின்றமையே இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

இதனைக் கடந்து அரசியல் முன்னெடுப்புகள், உணர்வுசார், எழுச்சிசார் செயற்பாடுகளிலும் ஏதோவோர் வகையில் புலம்பெயர் தேசத்தவர்கள்ன் உதவிகள் கலந்திருக்கின்றன. பிரதானமான தமிழ்க் கட்சிகள், எழுச்சிசார் முன்னெடுப்பாளர்கள், உணர்வுசார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள், புலம்பெயர் சிறு குழுக்கள் அல்லது அமைப்புகள் அல்லது தனிநபர்களிடமிருந்து அநேக நிதிசார் வளங்களை போருக்குப் பின்னர் பெற்றிருக்கின்றார்கள். அனர்த்த நிலைமைகளின்போதும் பல்வேறு வகையான உதவிகள் புலம்பெயர் தேசத்திலிருந்து தாயகத்திற்கு கைகொடுத்திருக்கின்றன.

போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நாளில் ஏன் இதனை பதிவு செய்தோம்? இந்தப் பத்து ஆண்டுகளில் அரசு சார்ந்த மேம்படுத்தல் முன்னெடுப்புகள் இடம்பெற்றிருப்பினும், அரசினால் செயற்படுத்தமுடியாத அநேக விடயங்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் உதவியே கைகொடுத்திருக்கின்றது. தவிரவும் தாயக, தமிழகத் தமிழர்களும் அநேக உதவிகளை தொடராக வழங்குகின்றார்கள். ஆனால் பெருவீதமான பங்களிப்பு என்பது புலம்பெயர்ந்து வாழும் மக்களினூடாக தமிழர்களுக்கு கிட்டிச்சேர்ந்திருக்கின்றன. ஆக இந்தப் பத்து ஆண்டுகளில் கண்ணீர் துடைத்து, கரம் கொடுத்து இருளான வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்த புனிதமான புலம்பெயர் தமிழர்களை இந்த நாளில் பாதிப்புற்று பண்படுத்தப்பட்ட உளங்கள் மறக்கலாகாது. உதவிகளைப் பெறும் அநேகருக்கு தமக்கு உதவி செய்யும் உறவுகளைத் தெரியாது. உதவியளிக்கும் உள்ளங்கள் அநேகருக்கு தமது உதவியைப் பெறுபவரைத் தெரியாது. இருப்பினும் இவர்களிடையே பெயரிடமுடியாத பெரும் பிணைப்புண்டு. அது நம் நிலத்தாவர் எனும் நல்மனமே.

முள்ளிவாய்க்காலினால் கிடைத்த கண்ணீரினை புலம்பெயர் கைக்குட்டைகள் துடைத்தமையை இந்தப் பத்தாவது ஆண்டில்
நினைத்துக்கொள்வோம்.

புரட்சி

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.