ஐயோ நான் சாகப் போறன் – நான் செத்து போவன் – கர்ப்பிணித் தாய்

In முள்ளிவாய்க்கால்

ஐயோ நான் சாகப் போறன்… நான் செத்து போவன் – கர்ப்பிணித் தாய்  – சுபாசினி

இன்றைக்கும் நெஞ்சை அழுத்தும் பாரத்தை தரும் பல நிகழ்வுகள் நிறைந்து கிடக்கிறது. அதில் சுபாசினி என்ற கர்ப்பினிப் பெண்ணை மறக்க முடியாது. அந்தப் பெண் துடிப்புள்ளவள் எதிர்காலத்தை நிதானமாக கணிக்கக் கூடியவள் அதனால் அடிக்கடி

“நான் செத்துடுவன் …. நான் செத்துடுவன் “ என பயந்து கொண்டிருந்தாள்.

அவள் கனரக ஆயுதப் பயிற்சிகளைப் பெற்ற ஒரு போராளியாக இருந்தாள். அவளின் சகோதரனனான (இரட்டைக் குழந்தைகள்) லெப்டினன் தாவீது வீரச்சாவடைந்த நிலையில் அவள் இயக்கத்தில் இருந்து விலத்தி வீட்டுக்கு வந்திருந்தாள். போராட்ட வாழ்க்கையில் இருந்து வீட்டுக்கு வந்து சாதாரண வாழ்க்கையைத் தொடர்ந்தாலும் திடமானவளாகவே காணப்படுவாள்.

தாய் தந்தையின் ஏற்பாட்டில் திருமணம் செய்து மகிழினி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்த அவள் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தாள். அவளின் வாழ்க்கை மிகச் சிறப்பாகவே போய்க் கொண்டிருந்தது. இவ்வாறான வாழ்க்கைப் பயணத்தில் முள்ளிவாய்க்காலில் நாம் முடக்கப்பட்டிருந்த போது மீண்டும் கருவுற்று ஆறு மாத சிசுவை வயிற்றில் சுமந்திருந்தாள்.

அவள் இறுதி நேர சண்டைகளின் போது தனது திடத்தை இழந்திருந்தாள். தான் சாவடைந்து விடுவேன் என்ற பயம் அவளை ஆட்கொண்டிருந்தது. போராளியாக இருந்ததால் தாக்குதல்களுக்கு எவ்வாறு பாதுகாப்புத் தேட வேண்டும் என்று தெரிந்திருந்தாலும் அவளால் ஆறுமாத கருவைச் சுமக்கும் வயிற்றோடு பாதுகாப்பைத் தேடுவது சிக்கலாக இருந்தது.

அவளால் பதுங்ககழிகளுக்குள் செல்ல முடியாது. . உடனே நிலத்தில் படுக்க கூட
முடியவில்லை. கர்ப்பகாலத்தில் அடிக்கடி வெளியேற்ற வேண்டி இருந்த சிறுநீர் கழிப்பதற்காகவும் அவளால் வெளியில் போக முடியவில்லை. I வடிவ திறந்த பதுங்ககழிக்குள் அவளால் நீண்ட நேரம் இருக்க முடியவில்லை. அவ்வாறு பல இடர்களைச் சுமந்து வாழ்ந்தாள் சுபாசினி.

தான் உயிர் தப்பவும் தன் பிள்ளையைக் காப்பாற்றவும் தனது வருங்காலத்தை பாதுகாக்கவும் முயன்றாள். அதற்காக அரச மருத்துவராகவும் பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரியாகவும் இருந்து இறுதிவரை தன் பணியை செய்த மருத்துவக் கலாநிதி ஒருவரை சந்தித்து பலமுறை வேண்டுகிறாள். மீண்டும் மீண்டும் சந்தித்து நச்சரித்தாள்.

“டொக்டர் என்னை கப்பல்ல அனுப்புங்கோ பிளீஸ் என்னால இங்க இருக்க முடியவில்லை. நான் செத்திடுவன் டொக்டர்… என் பிள்ளையையும் என்னையும் மட்டுமாவது அனுப்புங்கோ “

என தன்நிலையை கூறி பலமுறை வேண்டுகிறாள். ஆனால் அன்றைய காலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த பயங்கர காயங்களுடன் அதி தீவிர சிகிச்சைகளுக்காக உடனடியாக அனுப்ப வேண்டிய காயப்பட்ட மக்களின் தொகையும் தன்மையும் அந்த மருத்துவ அதிகாரியால் இவளுக்கான அனுமதியை கொடுக்க இடமளிக்க வில்லை.

“ இல்லையம்மா நீங்க இப்பத்தான் ஆறு மாதம் எங்கள இப்ப நிறை மாத கர்ப்பினிகளைத் தான் கப்பல்ல அனுப்ப சொல்லி ICRC சொல்லுதம்மா அதோட இங்க ஆயிரக்கணக்காக சனம் காயத்தோட இருக்கு இதுக்க உங்களை அனுப்புறது கஸ்டம் அம்மா. நீங்கள் இன்னும் இரண்டு மாதம் கழித்து வாங்கோ நாங்கள் அனுப்புகிறோம்….”

இதே பதிலை பலமுறை அவளுக்கு சொல்லி திருப்பி அனுப்புகிறார் அந்த பிராந்திய மருத்துவ அதிகாரி. ஏனெனில் அப்போதய நிலையில் சிங்கள அரசு அனுப்பும் கப்பலில் வெறும் 400 பேரளவில் தான் திருகோணமலைக்கு அனுப்பக் கூடியதாக இருக்கும். அதுவும் தினமும் வரவேண்டிய கப்பல் இரண்டு நாளுக்கொரு முறை வந்தது.

கப்பல் வந்தாலும் மக்களை அதில் அனுப்ப சிங்களப் படைகள் தடையாக இருந்தன.  கப்பல் வரும் போது கப்பல் தரித்து நின்ற இடத்தை நோக்கி சிங்களத்தின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

தமிழீழ மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் இணைந்து பல ஆயிரம் மக்களின் உயிர்களைக் காத்திருந்தாலும் மருத்துவ வளங்கள் அற்று இருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கப்பலில் திருகோணமலைக்கு அனுப்பப்பட வேண்டி நிலையிலையே பல ஆயிரம் மக்கள் இருந்தார்கள். இந்த நிலையில் சுபாசினியை கப்பலில் அனுப்புவதில் சிரமம் வந்ததால் அனுமதி மறுக்கப் பட்டது.

அவளின் குடும்பம் இருந்த மாத்தளன் பகுதியில் தினமும் சாவின் விழிம்பில் இருந்தாள். அன்றும் பயங்கர செல்லடி வரைஞர்மடத்தை வளைத்து பொக்கனைப் பக்கமாக இராணுவம் எம் நிலத்தை அபகரித்திருந்தது. அதனால் தலை நிமிர்ந்த முடியாத எறிகணைவீச்சு நடந்து கொண்டிருந்தது.  அவள் பதுங்ககழிக்குள் குடும்பத்தோடு அமர்ந்திருந்தாள். நீண்ட நேரமாக அதற்குள் இருந்ததால் பல சிரமங்களை அவள் சுமந்தாள்.

பசி வயிற்றைக் குமட்டியது. சிறுநீர் கழிக்க வேண்டி இருந்தது. அவளால் சிறுநீரை அடக்க முடியவில்லை. ஒரு கர்ப்பினிப் பெண்ணால் சிறுநீரை அடக்குவது என்பது கடினமானது. அதனால் அவள் வரப்போகும் ஆபத்தை பொருட்படுத்தாது வெளியில் செல்ல முனைகிறாள். துணைவன் மறிக்க மறிக்க பதுங்ககழியை விட்டு வெளியேறுகிறாள்.

கூடச் செல்ல முனைந்த கணவனிடம்

“மகளை கவனமாக பாருங்கோ உடனே வாறன்”

என்று சொல்லி போகிறாள் அதனால் அவள் வெளியேறிதைப் பார்த்த அவளின் தாய் அவளுடன் கூட செல்கிறாள். தாயும் தமக்கையும் தனியே போவதைப் பார்த்த கடைசித் தம்பியும் அவர்களுடன் கூட செல்கிறான் .

அப்போது அடிக்கப்பட்ட ஆட்லரி எறிகணை அவர்களருகில் வீழ்ந்து வெடிக்கிறது. சுபாசினி படுகாயமடைகிறாள். தாய்க்கு ஒரு கை எலும்பின் ஒரு பகுதி காணாமல் போகிறது. சிறு தசைத் துண்டிலும் தோலிலும் அவரின் கை தொங்கிய படி கிடக்கிறது. அதுவும் அந்த தோல் இரண்டு மூன்று முறை முறுகுப் பண்ணுக் கிடந்தது. தம்பி தலையில் படுகாயமடைந்து அவனும் கீழே விழுகிறான். இது நடந்த அந்த நொடியில் தொடர்ந்து எறிகணைகள் அருகில் வெடிக்கின்றன. வீழ்ந்தவர்களை யாரும் தூக்க முடியவில்லை.  தூக்க முடியாத அளவுக்குப் பலமான தாக்குதல் நடக்கிறது.

வெளியில் சென்றவர்கள் இத்தாக்குதலுக்கு கூட திரும்பி வராதது கண்டு  சுபாவினுடைய கணவன் தனது உயிரையும் பொருட் படுத்தாது வெளியில் வந்து பார்க்கிறார். அங்கே இரத்தச் சகதியில் மூவரும் கிடந்தனர். உடனடியாக அவர்களை தூக்குகிறார். அதற்குள் மற்ற உறவுகளும் வர அந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை. அதனால் அவர்கள் கடற்கரையால் வெளியேறிச் செல்கின்றனர். ஏனெனில் பொக்கணைப் பக்கத்தில் இருந்து ஊடறுத்த இராணுவம் கடற்கரையைத் தவிர்ந்த பிரதேசத்தைக் கைப்பற்றி இருந்தது. அதனால் கடற்கரை வழியாக வலைஞர்மடத்துக்கு வருகிறார்கள்.

அங்கே இருந்த மருத்துவமனையில் அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சுபாசினி இறந்து விட்டதை உறுதிப்படுத்துகிறார்கள். ஏனைய இருவரையும் சத்திரசிகிச்சைக்காக உள்ளே எடுக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் இருவரையும் தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை இருவருக்கும் உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டி இருந்தது. இரத்தத்தை யாரிமும் எடுக்கக் கூடிய நிலை இல்லை. அவ்வாறு இரத்தம் குடுப்பதற்கு யாராவது தயாராக இருந்தாலும் எடுப்பதற்கு குருதிப்பை இல்லை (Blood bag )அதனால் அவசர நோயாளர்களுடன் திருகோணமலைக்கு ICRC கப்பலினூடாக அனுப்புகிறார்கள்.

அதே நேரம் கப்பலுக்கு ஏறுவதற்காக படகில் சுபாசினியின் தாயைம் தம்பியும் தங்கையும் செல்கிறார்கள். தன் மகளை இழந்து விட்ட சோகம் ஒருபுறம் காயத்தின் வலி மறுபுறம் என தாய் ஏறுகிறார். அப்போது தண்ணீர் தருமாறு வேண்டி அழுகிறார். நான் தண்ணீர் எடுக்கச் செல்கிறேன். ஆனாலும் அதற்குள் படகு கப்பலை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருந்த சுபாசினியின் தாய் இறுதி வரை தண்ணீர் அருந்தாமலே படகிற்குள் உயிர்விட்ட செய்தி எனக்கு பின்னால் தான் தெரிந்தது.

அதுவும் படகிற்குள் இருந்து வெளியில் கையை நீட்டி கடல் தண்ணீரைக் கையில் அள்ளி தாய்க்குப் பருக்க முயன்ற மகளின் கண்முன்னே தாய் தண்ணீர் பருகாமல் உயிர் விட்டிருந்தர்.

அதே நேரம்  குடும்பத்தில்  இருவரை இழந்து இருந்த சுபாசினியின் கணவனும் மகளும் அவளின் உடலைக் கூட அடக்கம் செய்யாது சோர்ந்து போய் கிடந்தனர். மருத்திவமனையின் ஓரத்தில் தம்மை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று  தூக்கத்தில் இருந்து எழுந்த மகிழினி பசியில் அழுது துடித்துக் கொண்டிருந்தாள்.

மகிழினியைத் தூக்கிக் பசியாற்ற யாரும் இல்லை. அவளுக்கு ஒரு கப் டீ குடுக்க யாரும் இல்லை அங்கே இருந்தவர்கள் அனைவரும் காயங்களின் மோசத்தால் சோர்ந்து போய்க் கிடந்தனர். அப்போது அங்கே காயமடைந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் கா. வே பாலகுமாரன் அவர்கள் மகிழினியைத் தூக்கிக் கொள்கிறார். அன்பாக அவளை ஆதரித்து அருகில் யாரிடமோ சுடுநீர் வாங்கி தேநீர் தயாரித்து அவளின் பசி போக்குகிறார். உண்மையில் அந்தக் காட்சி வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை.

ஒரு தடவை அந்த தேநீரை சுவைத்த மகிழினி முகத்தில் பிரகாசம். தாயை இழந்து பேத்தியாரை இழந்து உதவியென இருந்த தந்தை கூட நடப்பிணமாக இருந்த போது அவளுக்கு ஒரு துணை கிடைத்ததை அவள் மகிழ்வாக ஏற்றுக் கொண்ட தருணத்தில் இன்று முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் அவர்களையும் எங்கே எனத் தெரியாத நிலையை சிங்கள தேசம் எமக்கு உருவாக்கி விட்டதன் கொடுமை நெஞ்சைப் பற்றிக் கொள்கிறது.

கவிமகன்.இ
11.05.2021

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.