லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)

In வீரத்தளபதிகள்

லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)

அவன் ஒரு புதுமையான மனிதன்

24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது? போராளிகளின் முகங்கள் இருண்டு கிடந்தன. சுட்டா அப்பா வீரச்சாவாம். அந்த வார்த்தைகள் உள்நுழையும் முன்னரே அடுத்து எதுவும் செய்யத் தோன்றவில்லை. அப்பாவைப் பிரிந்த பிள்ளைகளைப்போல எல்லோரும் தவித்துப்போனோம். ஏனென்றால் எங்களுக் கெல்லாம் அப்பாவாகவே அவன் இருந்தான். அந்த நினைவுகளைத்தான் இந்தக் குறிப்பு சொல்ல முனைகின்றது.

சுட்டாவின் தொடக்ககால வாழ்க்கையே துயரமானது. திருகோணமலை சாம்பல்தீவிலே அவனது குடும்பம் வாழ்ந்து வந்தது. அது சிங்களம் எங்கள் ஊர்களை வல்வளைத்த காலம். சிறிலங்கா படைகளால் தமிழ் உயிர்கள் காரணமில்லாமல் சித்திரவதை செய்து பறிக்கப்பட்ட காலம். இந்த கொடூரத்திற்குள் சுட்டாவின் மூத்த சகோதரனும் பலியாக நேர்ந்தது. சுட்டாவிற்கு மூன்று பெண் சகோதரிகளும் ஒரு தம்பியும் இருந்தனர். தந்தையின் உழைப்பில் இயங்கியது குடும்பம். கொஞ்ச நாளில் தந்தையும் ஊர்தி விபத்தொன்றில் காயமடைந்து வேலைசெய்ய முடியாமற்போக குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு சுட்டாவிற்கு. சின்ன வயதிலேயே தச்சுத்தொழில் பழகி குடும்பத்தை பராமரித்தான் சுட்டா.

இந்த நாட்களில்தான் சுட்டா திருகோணமலையிலிருந்து வேலையின் காரணமாக யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தான். அவனுக்கு தையல் வேலையிலும் நாட்டமிருந்தது. இதனால் இம்ரான் பாண்டியன் படையணியின் தையல் பகுதியில் அவனுக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைக்க அதை ஏற்றுக்கொண்டு ஒரு தையலாளனாகச் செயற்பட்டான். இந்த வேலையின் போது சுட்டாவிற்கு பல போராளிகளின் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் இந்தத் தேசவிடுதலைப் போராட்டத்தில் தானும் ஒரு போராளியாக வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு 1992இல் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டான் சுட்டா.

சரத்பாபு-7 என்ற பயிற்சி அணியில் பயிற்சி பெற்ற சுட்டா ஒரு விடுதலைப்போராளி ஆகியபோது தையல் பணியில் அவனிற்கிருந்த திறமையின் நிமிர்த்தம் இம்ரான் பாண்டியன் தையல்கூடப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். இயக்கத்தின் கட்டளையை ஏற்றுச் செயற்பட்ட சுட்டா, பயிற்சிபெற்ற பின்பும் ஏனைய போராளிகளைப்போல் சண்டைக்களம் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு படையணியில் சிறப்புத் தளபதியின் அனுமதியுடன் சண்டைக் களங்களுக்கு புறப்பட்டான்.

1993இல் தவளை நடவடிக்கை, 1995இல் புலிப்பாய்ச்சல், 1996ல் ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை, அளம்பிலில் தரையிறங்கிய படையினருக்கெதிரான நடவடிக்கை, சத்ஜெய நடவடிக்கைக்கெதிரான தாக்குதல் என படிப்படியாக பல களங்களையும் கண்டு சண்டைகளிலும் ஒரு தேர்ச்சியாளனாக சுட்டா மாறியிருந்தான். இதற்குச் சாட்சிகளாக பல விழுப்புண்களை தன் உடலில் தாங்கியிருந்தான். அதன் தளும்புகள் அவன் உடலெங் கும் இருந்தன.

இந்த காலகட்டத்தில்தான் சிங்களதேசம் எங்கள் பகுதிகள் மீது பாரிய படை நகர்வுக்கு தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது. இந்தப் படைநகர்விற்கு கவசப் படைக்கலங்களையே பெரிதும் நம்பி திட்டம் வகுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சம காலத்தில் சிங்களத்தின் இந்த சூழ்ச்சிகரமான திட்டங்களை முறியடிக்க எமது தலைவரும் போராளிகளைத் தயார்ப்படுத்தினார். சிங்களம் பெரிதும் நம்பிய கவசங்களை தகர்த்தழிக்கவென புதிய படையணி ஒன்றை உருவாக்கி அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. பயிற்சிகள் மிகக் கடுமையானவையாக இருந்தன. ஆயுதங்களுடன் நீண்டதூர ஓட்டம், தடை தாண்டும் பயிற்சிகள், மதியவேளையில் கொழுத்தும் வெயிலில் உடற்பயிற்சி என எல்லா கடின பயிற்சிகளையும் சுட்டா மேற்கொண்டான். ஏற்கனவே சண்டைக் களங்களில் விழும்புண் தாங்கிய உடல். இதனால் பயிற்சிகளைச் செய்ய சிரமமாக இருந்த போதும் இனிவரும் சமர்களில் தானும் ஆயுதமேந்தி சமர்புரியவேண்டும் என்ற உந்துதல் அவன் இந்தப் பயிற்சிகளில் சித்தியடையக் காரணமாய் இருந்தது.

எல்லாப் பயிற்சிகளும் முடிந்து லெப். கேணல் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணி என்ற பெயரில் எதிரியின் கவசப்படையை எதிர் கொள்ளும் அணி தயாராகவிருந்தது. வவுனியா, ஓமந்தைப் பகுதிகளில் அமைந்திருந்த எங்களின் தடுப்பரண் பகுதிகளுக்குச் சென்று அணிகள் நிலை கொண்டன. இவற்றில் ஒரு அணிக்குப் பொறுப்பாக சுட்டாவும் களமிறங்கினான். எதிரியின் வருகைக்காகக் காத்திருந்ததோடு எதிரியின் முன்னரங்க நிலைகள் அவதானிக்கப்பட்டு எதிரியின் காவலரண் ஒன்றை R.P.G எறிகணை மூலம் தாக்கி அழிப்பதென முடிவு செய்யப்பட்டது.

08.03.1997 அன்றைய நாளின் பகற் பொழுதில், சுட்டாவின் தலைமையிலான அணி வேவு வீரரின் வழிகாட்டலுடன் எதிரியின் காவலரணை அண்மித்து நிலைகொள்கிறது. R.P.G எறிகணைகள் அனலைக் கக்கியபடி எதிரியின் காப்பரணை நோக்கிச்சென்று மோதி வெடிக்கிறது. அடுத்தடுத்த இரு எறிகணைகள் வெடித்துச்சிதறி அடங்க, அந்தக் காப்பரண் முற்றாக அழிந்துபோய்க் கிடந்தது. போராளிகள் அவ்விடத்திலிருந்து பின்வாங்கினர். ஏழு படையினர் பலியாகியும் சில படையினர் காயமடைந்ததுமான இத்தாக்குதலில் எமது தரப்பில் இழப்பு எதுவுமிருக்கவில்லை . புதிய அணியின் உருவாக்கத்தின் முதலாவது தாக்குதல் சுட்டாவின் தலைமையில் வெற்றிகரமாக நடந்தேறியது.

13.05.1997 அன்று எதிர்பார்த்தபடி “ஜெயசிக்குறு” என்ற பெயரில் பாரிய படைநகர்வை தொடங்கியது சிங்கள படை. பெரும் மோதல் வெடித்தது. அந்த ஊரெங்கும் போர்ச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிலங்கா படைகள் முன்னேற முன்னேற போராளிகள் புதிய புதிய வியூகங்களில் எதிரியை எதிர்கொண்டு சண்டையிட்டனர். முன்னேறிவந்த கவச ஊர்திகள் சிறப்பு அணியால் தாக்கி அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் இருந்தன. சண்டை நீண்ட நாட்களாகத் தொடர்ந்தது. ஓமந்தை, தாண்டிக்குளம், இறம்பைக்குளம், பெரியமடு, புளியங்குளம் என சமர்க்களம் விரிந்துகொண்டு சென்றது. இந்த நீண்ட சமர்களுக்குள் போராளிகளுக்கு ஓய்வு கிடைப்பதென்பது மிகக் குறைவாகவே இருந்தது. கிடைக்கும் ஓய்விலும் எதைச் செய்வது? சுட்டா வைப் பொறுத்தவரை போராளிகள் எப்போதும் மகழ்ச்சியாகவே இருக்கவேண்டும். அவர்களின் மகிழ்ச்சிக்காக எதைச் செய்யவும் அவன் தயாராகவே இருப்பான். கிடைக்கும் நேரங்களில் தனது அணியி லுள்ள போராளிகளுக்குக் கதை சொல்லுவான். பழைய சண்டைகளை எடுத்துச்சொல்லி போராளிகளுக்கு அறிவூட்டுவான். போராளிகளுக்கு கிடைப்பவற்றைக் கொண்டு ஏதாவது உண்பதற்கு செய்து கொடுக்க முடியுமானால் அதையும் தானே நின்று செய்துகொடுப்பான். அவன் எதைக் கதைத்தாலும் அதில் நகைச்சுவை இருக்கும், நல்ல அறிவுரையிருக்கும். அதுமட்டுமல்ல போராளிகளுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்க வேண்டியிருந்தால் யாருடனாவது கதைத்து அவற்றை பெற்றுக் கொடுப்பான். சுட்டாவுடன் இருந்தால் தாங்கள் சண்டைக்களத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு கொஞ்சநேரம் மறந்துபோகும். அவன் வார்த்தைகள் உடலுக்கும் மனதுக்கும் உற்சாக மூட்டுபவையாக இருக்கும். இதனால் சுட்டா இருக் கும் காப்பரண் தேடி போராளிகள் ஒன்றுகூடுவார்கள்.

அவன் முகாமில் நிற்கும் நாட்களில்கூட அப்படித்தான். சுட்டாவின் விடுதி எப்போதும் கலகலப் பாகவே இருக்கும். பக்கத்து விடுதியில் உள்ள போராளிகள்கூட அவனுடன் இருப்பார்கள். சுட்டாவின் இந்தத் திறமையை யாராலும் மிஞ்சிவிட முடியாது. அது அவனுக்கே உரியது. இனி போராளிகளுக்கு சுவையான உணவு செய்து கொடுப்பதில் சுட்டா முன்னணியில் நிற்பான். இவற்றோடு மற்றப் போராளிகள் எடுக்கும் அத்தனை பயிற்சிக்கும் தானும் செல்வான். இரவு பயிற்சிகள் முடிந்து போராளிகள் படுக்கைக்குப் போவார்கள். சுட்டாவின் விடுதியில் மட்டும் வெளிச்சம் தெரியும். சுட்டாவிற்கு நன்றாக தைக்கத் தெரியும் என்பதால் போராளிகள் சுட்டாவை சூழ்ந்துகொள்வார்கள். அந்த வேளையில் அவர்கள் சுட்டாவை பொறுப்பாளனாகப் பார்ப்பதில்லை. சுட்டாவும் அப்படித்தான். தனக்கேன் இந்த வேலை என ஒதுங்கிக்கொள்வதுமில்லை. முழு மனதோடு ஆசையாக கண் தூங்கத்தூங்க விழித்திருந்து ஆயுதங்களுக்கான ‘கோல்சர்கள்’ தைத்துக் கொடுப்பான். போராளிகளுக்கு இதற்கென தனியிடமிருந்தாலும் சுட்டாவின் தையலில் அவர்களுக்கு விருப்பம்.

சண்டைக் களத்திலிருந்து சுட்டா முகாம் திரும்பிவிட்டால் அங்கு நிற்கும் பொறுப்பாளரை போராளிகள் கரைச்சல் படுத்துவார்கள். சுட்டா அண்ணை எப்ப வருவார்? சுட்டாண்ண வந்திட்டாராம் என்றால் போராளிகள் மீண்டும் கூடிவிடுவார்கள்.

சுட்டாவின் இந்த அற்புதமான இயல்பு தான் சமர்க்களத்தில் நின்ற அவனை தொடக்க பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்ப வழிவகுத்தது. அது புதிதாக போராட்டத்தில் தங்களை இணைத்தவர்கள் பயிற்சிபெறும் இடம். அவர்கள் இந்தத் தேசத்தின் தேவையை உணர்ந்து போராளியானாலும் நீண்டகாலம் குடும்பச் சூழலுக்குள் வாழ்ந்ததால் அந்தப் பிரிவும் புதிய வாழ்க்கை முறையும் தொடக்கத்தில் மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். இது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த நாட்களில் இவர்களை வழிநடத்தும் போராளிகள்தான் இதை சரிவரப் புரிந்து செயற்படவேண்டும். சுட்டா இதற்கு மிகவும் பொருத்தமானவன். அவனிற்கு இதைப்பற்றி சொல்லிக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. அவன் இயல்பே அப்படித்தான். போராளிகளுக்குத் தாய் தந்தையரைப் பிரிந்திருந்த இடைவெளி சுட்டாவினால் இல்லாமல் போனது. சுட்டா போராளிகள் தங்கும் ஒவ்வொரு விடுதியாகச் சென்று போராளிகளுடன் கதைத்து அவர்களின் தேவையைக் கேட்டறிந்து நிறைவு செய்வான். புதிய போராளிகளுக்கு இயக்கம் பற்றிய பழைய வரலாற்றுச் சம்பவங்களை சொல்லிக் கொடுப்பான். எங்காவது ஒரு விடுதியில் கலகலப்புச் சத்தம் கேட்டால் சுட்டா அங்கேதான் நிற்கிறான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த நாட்களில்தான் சுட்டாவிற்கு திருமணம் நடந்தது. ஆனால் சுட்டா வீட்டில் நிற்பது குறைவு. சுட்டாவிடம் குடும்பம் என்ற அன்பு உணர்வு நிறையவே இருந்தபோதும், அவன் தன் குடும்பமான போராளிகளுடனேயே அதிக நேரத்தை செலவிடுவான். எப்போதும் தனக்குக் கீழ் இருக்கும் போராளிகளுக்காக, இந்தத் தேசத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் அவனிடம் மேலோங்கியிருந்தது. இதனால் சுட்டாவிற்கும் போராளிகளிற்குமான உறவு மிக நெருக்கமானதாக இருந்தது.

தொடக்கத்தில் ஒரு பயிற்சி முகாமின் பொறுப்பாளனாக இருந்து செயற்பட்ட சுட்டா பின்னர் தொடக்க படைய பயிற்சி முகாம்கள் அனைத்திற்கும் நிர்வாகப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான்.

இந்தக்காலம் வன்னியின் சமர்களமெங்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். சுட்டாவிற்கு ஊர்திகூட இருக்கவில்லை . அவன் எதையும் எதிர்பார்க்கவுமில்லை. அப்போது அவனிற்கு கொடுக்கக்கூடியவாறு இயக்கத்திடம் ஒரு பச்சைநிற மதிவண்டியே இருந்தது. அவன் மகிழ்ச்சியாகவே அந்த மதிவண்டியில் வன்னியில் வெவ்வேறு இடங்களில் இருந்த முகாம்களுக் கெல்லாம் சென்றுவருவான். சிலவேளை மதிவண்டி பழுதென்றால் நடையில் கூட போய்விடுவான். எப்போதும் இயல்பாகவே இருக்க விரும்புபவன். இயக்கத்திடம் இருந்து தனக்காக எதிர்பார்ப்பதை விட எங்கள் தலைவர் எதிர்பார்ப்பதைச் செய்ய வேண்டும் என்பதே அவனது கொள்கையாக இருந்தது. அதனால் மிகுந்த ஆர்வத்தோடு சண்டைக் களங்களில் நின்று ஈடுபட்ட அவன் இயக்கத்தின் வேண்டுதலை ஏற்று மனப்பூர்வமாகவே இந்தப் பணியை மேற்கொண்டான்.
சுட்டாவின் இந்த அரவணைப்பான வளர்ப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் உருவாகினார்கள். சுட்டா நின்ற பயிற்சி முகாம்களில் போராளிகள் விலகுவதென்பது மிகவும் குறைவாகவே இருந்தது. ஏனென்றால் போராளிகள் அவனுடன் ஒன்றித்துப் போனார்கள்.

இப்போது சண்டை நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது. இந்த நாட்களில்தான் சுட்டாவிற்கு புதிய பணிக்கான அழைப்பு வந்தது. அது லெப்.கேணல் நவம் அறிவுக் கூடம். சமராடி விழுப்புண்பட்ட போராளிகளுக்கான கல்விக்கூடம். அவர்களிற்கு முக்கியம் தேவையானது அன்பும் அரவணைப்பும்தான். சுட்டா இதில் நன்கு கைதேர்ந்தவன். ஏற்கனவே சமர்க்களத்தில் விழுப்புண் பட்டவன். அதைவிட தனக்கு மிச்சமாயிருந்த ஒரு ஆண் சகோதரனையும் சண்டைக்களத்திலே பிரிந்தவன். தன் சகோதரனான கப்டன் இனியவனின் நினைவுகளும், அந்த இழப்பின் வேதனையும் அவனிடம் இருந்தது. அவனால் இவர்களின் மனதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவனுக்கும் இந்தப் பணி விருப்பமானதாக இருந்தது.

லெப்.கேணல் நவம் அறிவுக்கூடத்தின் நிர்வாகப் பொறுப்பாளனாக சுட்டா நியமிக்கப்பட்டான். இங்கு சுட்டாவிற்கு நிறையப்பணிகள் இருந்தன. ஒவ்வொரு விழுப்புண்பட்ட போராளியும் ஒவ்வொரு விதமான தாக்கங்களுக்கு உள்ளானவர்கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகள், மருத்துவம், உணவு என எந்த விடயத்திலும் கண்ணும் கருத்து மாகச் செயற்படவேண்டும். சுட்டாவிற்கு இது புதுமையான விடயமல்ல. தன் நீண்டகால பட்டறிவு வாழ்வினை வைத்துக்கொண்டு இந்த விழுப்புண் பட்ட போராளிகளுக்காக கடினப்பட்டு உழைத்தான். எல்லா வேலைகளிலும் அவனும் ஒருவனாகவே நின்று செயற்படுவான். போராளிகளின் தேவைகளை நிறைவு செய்வதிலிருந்து அவர்களுக்கு நல்ல உணவு வழங்குவது, அவர்களுடன் சென்றிருந்து கதைப்பது என அவன் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிருப்பான். முகாமில் சுட்டாவிற்கென்று ஒரு இடமே இருக்காது. ஒன்றில் சமயற்கூடத்தில் நிற்பான் அல்லது போராளிகளுடன் நிற்பான் அல்லது போராளி களின் உணவுத் தேவைக்காக போடப்பட்டிருந்த பண்ணையில் நிற்பான். இப்படி எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பான்.

அவனது முகம் எப்போதும் கலகலப் பாகவே இருக்கும். அவனது முகத்தில் கடுமையைக் காணமுடியாது. அதனால் போராளிகள் அவனுடன் ஒன்றித்துப் போனார்கள். ஆண், பெண் என்ற பேதமின்றி எல்லோரும் அவனை செல்லமாக ‘சுட்டா அப்பா’ என்றே அழைப்பார்கள். சுட்டா போராளிகள் யாராவது தவறிழைத்து பேசினால்கூட அவனது பேச்சைக்கேட்டு திருந்துவார்களே தவிர, அவனில் யாருக்குமே கோபம் வராது. அவனது அன்பான அரவணைப்பில் அவனது தண்டிப்பு மறந்துபோகும். எந்தப் போராளிகளும் மனம் தயங்காது சுட்டாவிடம் எதுவானாலும் கேட்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அவன் அப்பாதானே. இப்படி எதையும் பார்க்காது செயற்படும் அவன், கொஞ்ச நாளாய் சுகயீனமுற்றிருந்தான். மருத்துவமனையில் அவனை உடலை ஆய்வு செய்ததில் அவனது சிறு நீரகங்கள் செயலற்றுக்கொண்டிருந்தன. எல்லோர் மனதிலும் ஏக்கம். சுட்டா அண்ணை எப்ப சுகப்பட்டு வருவார்? அவரின் சிறுநீரகங்கள் மாற்றப்பட வேண்டும். அவரின் மூத்த சகோதரி முன்வந்தார். தன் ஒரு சிறுநீரகத்தை தன் சகோதர னுக்கு கொடுத்தார்.
அறுவை பண்டுவம் (அறுவைச் சிகிச்சை)வெற்றிகரமாக முடிந்தது.

சுட்டாவிற்கு ஓய்வு தேவைப் பட்டது. சுட்டா இனி முன்னர்போல் வேலைசெய்ய முடியாது. அவன் ஓய்வாக இருக்கவேண்டும். அவனுக்கென்று குடும்பம் இருந்தது. பிள்ளை இருந்தது. அவன் முன்னர்கூட வீட்டில் நிற்பது மிகவும் அரிது. அப்படி அரிதாக அங்கு நிற்கும் நாட்களில்கூட சும்மா இருந்ததில்லை. தனது வீட்டுவளவைப் பண்படுத்தி பயன்தரும் கன்றுகள் வைப்பான், நிலத்திற்கு சீமெந்து போடுவான், கதிரை பின்னுவான். எஞ்சிய நேரத்தில் பிள்ளையையும் பார்த்துக்கொள்வான். சுட்டா வீட்டில் நிற்கும் நாட்களில் குழந்தைக்கு உணவு ஊட்டுவது சுட்டாதான். ஏனென்றால் அவனுக்கு அவ்வளவு பொறுமையிருந்தது.
அயலவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால்கூட நிற்கும் நேரங்களில் தன்னால் தீர்க்கக் கூடியவற்றை தீர்த்து வைப்பான். தனது வீட்டிற்கு அயலில் இருந்த சிறுவர் பள்ளியின் நிலம் சீமெந்து போடப்படாமல் உள்ளதை அறிந்து அங்கு கற்கும் சிறுவர்களுக்காக, ஒருநாள் அந்த சிறுவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களுக்கு அதைப்பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை நிதி சேர்க்கவைத்து தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து அந்த சிறுவர் பள்ளியின் நிலத்திற்கு சீமெந்து போட்டுக் கொடுக்கவும் சுட்டா காரணமாய் இருந்தான்.

கொஞ்சநாள் ஓய்வில் இருந்த சுட்டா தன்னால் இயங்கக்கூடிய நிலை வந்ததும் மீண்டும் நவம் அறிவுக்கூடம் வந்துவிட்டான். போராளிகள் எல்லோருடைய மனதிலும் மகிழ்ச்சி. ஆனால் சுட்டா முன்புபோல் இயங்கமுடியாது. அவன் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அவனை கடினவேலைகள் செய்யவேண்டாமென பொறுப்பாளர் சொல்லியிருந்தார்.

ஆனால் கொஞ்சம் கொஞ்ச மாகவே சுட்டா முன்புபோல இயங்கத் தொடங்கினான். எப்போதுமே போராளிகளுள் ஒருவனாக நின்று தன்னை மறந்து வேலைகள் செய்தவன், அவனால் ஏனைய விழுப்புண்பட்ட போராளிகள் வேலை செய்யும்போது பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை . போராளிகள் அவனைத் தடுப்பார்கள். ஆனால் “எனக்குப் பிரச்சினையில்லை என்னால செய்யமுடியும்” என்ற வார்த்தைதான் அவன் வாயிலிருந்து வரும். அவன் மீண்டும் பழைய சுட்டா வாகவே மாறியிருந்தான். அவன் எப்போதுமே தன் உடலின் வேதனையை மற்றவர் களுக்குக் காட்டியதில்லை. தான் இந்தத் தேசத்திற்காக நிறையச் செய்யவேண்டும் என்றே சொல்லிக்கொண்டிருப்பான்.

24.09.2005 அன்றய நாளின் காலைப்பொழுதில் லெப்.கேணல் நவம் அறிவுக்கூடத்தின் அப்பா எங்களை விட்டுப் பிரிந்த நாள். எல்லோரும் துடி துடித்துப் போனோம். சுட்டா அப்பா இனி வரமாட்டாரா என்று எல்லாப் போராளிகளும் அழுதார்கள். அவனது வித்துடல் நவம் அறிவுக்கூடத்தில் வைக்கப்பட்டது. சுட்டா அப்பா, சுட்டா அப்பா என்று எல்லோர் வாய்களும் அவன் பெயரை உச்சரித்தபடி அழுதது. அவன் இல்லாதபோதுதான் அவனின் பெருமை புரிந்தது.
அதனால்தான் அவன் பத்து ஆண்டு காலமாகப் பணிபுரிந்த இம்ரான் பாண்டியன் படையணியின் அன்றைய நாள் சிறப்புத் தளபதியாக இருந்த கேணல் ஆதவன் அவரது நினைவுகளைச் சொல்லும்போது “இக்கட்டான சூழ்நிலைகளில் கடும் கஸ்ரங்களை எதிர்நோக்கி திறமையாக உழைத்த நல்லதொரு அணித்தலைவன்” என்று குறிப்பிட்டார்.

உண்மையும் அதுவே. அவன் நல்லதொரு வழிநடத்துனன், போராளிகளை மகிழ்விக்கும் திறன் வாய்ந்த கலைஞன், வீரம்மிக்க போர்வீரன், நல்ல தையலாளன், சிறந்த சமையலாளன், அன்பு செலுத்துவதில் வல்லவன். நிச்சயமாக அவன் ஒரு புதுமையான மனிதன். சாவு அவனது உயிரைப்பறித்தது உண்மைதான். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் அவன் உணர்வாய் என்றைக்குமே வாழ்ந்துகொண்டிருப்பான்.

ச.புரட்சிமாறன்

மூலம்: விடுதலைப் புலிகள் (புரட்டாதி – ஐப்பசி 2005)

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.