தமிழருக்கு எதிரான அரச ஒடுக்குமுறை..!

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:01

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

தமிழருக்கு எதிரான அரச ஒடுக்குமுறை..!

சிங்கள பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்துச் சிங்களப் பேரினவாதம், மேலாண்மை பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவம் எடுத்தது. இந்த அரச அடக்குமுறையானது அரை நூற்றாண்டுக் காலத்திற்கு மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்ததை அடுத்து மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய சகல சிங்கள அரசுகளும் இந்த ஒடுக்குமுறைக் கொள்கையையே கடைப்பிடித்தன.

இந்த ஒடுக்குமுறைக் கொள்கையில் தமிழின ஒழிப்புத் திட்டமும் அடங்கியுள்ளது. அதாவது, தமிழரின் தேசிய வாழ்விற்கு ஆதாரமான அத்தியாவசிய அடித்தளங்களைப் படிப்படியாகத் தகர்த்துவிடும் நாசகாரத் திட்டமாகவும் இந்த ஒடுக்குமுறை அமையப் பெற்றது. ஒன்று பட்ட ஒரு தேசிய இனக் கட்டமைப்பாகத் தமிழ் மக்கள் தழைத்து நிற்பதற்கு என்னென்ன அவசியமோ அவற்றை எல்லாம் பல்வேறு மட்டங்களில் தாக்கியழிப்பதை இவ்வொடுக்குமுறை இலக்காகக் கொண்டது. எனவே, இந்த இனவழிப்பு அடக்குமுறை பல்முனைத் தாக்குதலாக வடிவெடுத்தது.

தமிழரின் இருப்புக்கே ஆதாரமான மொழி உரிமை முதலில் பறித்தெடுக்கப்பட்டது. அதனையடுத்துக் கல்வி உரிமைக்கும், வேலைவாய்ப்பு உரிமைக்கும் ஆப்பு வைக்கப்பட்டது. அவர்களுடைய பாரம்பரிய நிலங்கள் மீதான சொத்துரிமையையும் இழக்கச்செய்தது. அவர்களது சமய, பண்பாட்டு வாழ்விற்கும் ஊறுவிளைத்தது. இறுதியாகத் தமிழர்களது உயிர்வாழும் உரிமைக்கே பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. தமிழ் மக்கள் ஓர் இனமாக ஒருங்கிணைந்து வாழ்தற்கும், ஓர் இனமாகத் தம்மை அடையாளப்படுத்துவதற்கும் அவசியமான அடித்தளத்தையே அரச ஒடுக்குமுறை தாக்கியது.

இத்தமிழின ஒழிப்புத் திட்டத்தின் முக்கிய அங்கமாக சிங்கள அரசால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட இனக் கலவரங்கள் காலத்திற்குக் காலம் தலைதூக்கின. இதன் விளைவாகப் பெருந்தொகையான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். பெருந்தொகைத் தமிழ்ச் சொத்துக்கள் நிர்மூலமாக்கப்பட்டன. நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் சிறீலங்கா நாடாளுமன்றம் பெரும்பான்மைக் கொடுங்கோன்மையின் கருவியாகியது. அங்கு இனவாதம் அரசோச்சியது.

சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்கள் அங்கு யாக்கப்பட்டன. கொடிய சிங்கள இனவாதத் தாக்குதலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே முதல் பலியாகி வீழ்ந்தார்கள். இந்தத் தீவின் சுபீட்சத்துக்காக ஒரு நூற்றாண்டுக்கு மேலாகப் பாடுபட்ட பத்து லட்சம் தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் அநீதியாகக் கருதப்படும் குடியுரிமைச் சட்டம் அந்தக் கொடுமையைப் புரிந்தது. இதன் மூலம், மலையகத் தமிழ் மக்களது அடிப்படை மனித உரிமை பறிக்கப்பட்டது.

நாடற்றோர் என்ற இழி நிலைக்கு இவர்கள் தரம் இறக்கப்பட்டார்கள். அரசியலில் பங்கெடுக்கும் உரிமை பறிக்கப்பட்ட நிலையில், பெருந்தொகைத் தமிழ்த் தொழிலாளர்களுக்கு அரச நாடாளுமன்றக் கதவுகள் மூடப்பட்டன. குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்படுமுன், பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்த ஏழு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள். அடுத்து வந்த பொதுத்தேர்தல் 1952இல் நடந்தபோது இந்தக் குடியுரிமைச் சட்டத்தின் விளைவாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக்கூட இந்த மக்களால் தெரிவு செய்ய இயலவில்லை.

குடியுரிமைச் சட்டம் 1948இலும் இந்திய – பாக்கிஸ்தானிச் சட்டம் 1949இலும் நிறைவேற்றப்பட்டன. வழித்தோன்றல்களும் குறித்த காலம் வசித்தவர்களும் பெறக்கூடிய குடியுரிமை தொடர்பாக, மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பத்துலட்சத்திற்குக் கூடுதலானோரிடையேயிருந்து ஏறத்தாழ 130,000 மக்கள் மட்டுமே குடியுரிமை பெறத்தக்க வகையில் இந்தச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப் பட்டன.

கேடு கெட்ட இச் சட்டங்களின் மொத்த விளைவுகள் மிகப்பாதகமானவையாக அமைந்தன. அவை இத் தொழிலாள மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மோசமாக்கின. நாடற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள், உள்ளூராட்சித் தேர்தலிலோ, தேசியத் தேர்தலிலோ பங்கெடுக்க முடியவில்லை . அரசுத் துறைகளிலும் தனியார் துறையிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. நிலம் வாங்கும் உரிமை மறுக்கப்பட்டது. எவ்வகை வர்த்தகத்தில் ஈடுபடும்

உரிமையும் மறுக்கப்பட்டது. இத்தகைய நாடற்ற நிலை இந்தத் தொழிலாளர் சமுதாயத்தை, அதுவும் நாட்டின் முதன்மையான பாட்டாளி வர்க்கமாகத் திகழ்ந்த, ஒரு சமுதாயத்தை, உரிமை பறிக்கப்பட்ட, மனிதம் சாகடிக்கப்பட்ட மக்களாக ஆக்கியது. இதனால் இம் மக்கள் இழிவு படுத்தப்பட்டவர்களாக விரக்தியடைந்து, நம்பிக்கையிழந்து, தங்கள் பெருந்தோட்ட இருட்டறைக்குள் முடங்கிவாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

தமிழ் மக்களின் இன அடையாளத்தை அழித்து ஒழிப்பதற்குத் திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறையின் மிகக் கொடூர வடிவமாக, அரச உதவியோடு தீவிரமாக நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைக் குறிப்பிடலாம். சுதந்திரம் வழங்கப் பட்டவுடன் தொடக்கப்பட்ட இந்த முயற்சி, தமிழ்ப் பிரதேசத்தில் ஏறத்தாழ மூவாயிரம் சதுர மைல் பரப்பை ஏற்கனவே விழுங்கவிட்டது.

நிலமற்ற பெருந்தொகைத் தமிழ் விவசாயிகள், தாம் பயிரிடுவதற்கென ஒரு துண்டு காணிக்காக ஏங்கி நிற்கும் அதே தமிழ்ப் பிரதேச நிலப் பகுதிகளில் அரசின உதவியோடும் ஏவுதலோடும் ஆயிரமாயிரம் சிங்கள மக்கள் அடாத்தாகக் குடியமர்ந்தார்கள். தமிழ் மக்களை, அவர்களுடைய பாரம்பரிய நிலத்திலேயே சிறுபான்மையினராக்கி, சனத்தொகை விகிதாசாரத்தைச் சிதைப்பதாகவே இந்தக் குடியேற்ற முயற்சி அமைந்தது.

மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் கிழக்கு மாநிலத்திலேயே உள்ளன. கல் ஓயா, மதுறு ஓயா என்ற நதிகள் தொடர்பான பாரிய திட்டங்கள், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் பெருந்தொகைக் காணிகளைப் பிடுங்கிக் கொண்டன அல்லை, கந்தளாய் சிங்களக் குடியேற்றத் திட்டங்களும் யன் ஓயா நதித்திட்டமும் திருகோணமலைப் பகுதியை விழுங்கின. தமிழ்ப் பாரம்பரிய நிலத்தை வல்வந்தமாகப் பறித்தெடுக்கும் இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கை, சிங்கள ஆளும் வர்க்கத்தினருடைய இனவெறிக் கொள்கையின் குரூரத் தன்மையை அம்பலப்படுத்துகிறது.

அரச ஒடுக்குமுறையானது, மொழி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்குள்ளும் ஊடுருவியது. பண்டாரநாயக்கா அவர்கள் தலைமை தாங்கிய ‘சிங்கள மட்டும்’ இயக்கம், 1956இல் அவரை அரசியல் அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது.

நாடாளுமன்றத்தில் அவர் நிறைவேற்றிய முதல் சட்டம், தமிழ் மொழிக்கு இருந்த உத்தியோக தகைமையையும் சம அந்தஸ்து நிலையையும் முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டின் ஒரேயொரு உத்தியோக மொழியாகச் சிங்களத்தை நிலைப்படுத்தியது. அரச நிர்வாக சேவையில் பணிபுரிபவர்கள் சிங்களத்தில் தகைமை பெற்றிருக்கவேண்டும் என்று ‘சிங்கள மட்டும் சட்டம்’ நிர்ப்பந்தித்தது. தமிழ் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் மறுக்கப்பட்டு, சிங்கள மொழி கற்காவிட்டால் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பது விதியாயிற்று. அரச சேவை வேலைவாய்ப்பு வசதிகளுக்கான கதவுகள், தமிழரைப் பொறுத்தவரையில் அடைத்து மூடப்பட்டன.

அரச ஒடுக்குமுறை மிக ஆழமாகத் தாக்கியது கல்வித்துறையையே ஆகும். இளம் தமிழ்ச் சமுதாயத்தில் பெரும்பாலானோருக்கு உயர் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கான கதவுகள் அடைக்கப்பட்டன. தனியாகப் பிரித்து ஒதுக்கும் கொடிய “தரப்படுத்தல்” முறை 1970இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்குச் சிங்கள மாணவரை விடத் தமிழ் மாணவர் கூடுதலான புள்ளிகளைப் பெறவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். குறைவான தேர்வுத் தரங்களோடு சிங்க மாணவர் எளிதாகப் பல்கலைக்கழகம் புகுந்தனர். இந்தப் பிரித்தெடுக்கும் முறை, பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைப் பாரதூரமாகக் குறைத்தது. அவர்களுடைய உயர்கல்வி வாய்ப்புகளையும் தடைப்படுத்தியது.

அரச ஒடுக்குமுறையின் இன்னொரு குரூரப் பரிமாணத்தைப் பொருளாதாரத் துறையில் காணலாம். தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி குரல்வளையிலேயே நெரிக்கப்பட்டது. சுதந்திரத்தை உடனடுத்த காலங்களில் கட்டப்பட்ட அரசுக்குச் சொந்தமான சில தொழிற்சாலைகளைத் தவிர ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக தேசிய அபிவிருத்தி திட்டங்களில் தமிழ்ப் பகுதிகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன. பாரிய அபிவிருத்தித் திட்டங்களோடு சிங்கள தேசம் செழித்துக் கொழிக்க, ‘வேண்டா நிலமாக’ தமிழ்த் தேசம் நிராகரிக்கப்பட்டுப் பொருளாதாரப் புறக்கணிப்பால் வரண்டு கிடந்தது.

நாட்டிலே அவ்வப்போது தமிழ் மக்களுக்கு எதிராக வெடித்த இனக் கலவரங்களை, இரண்டு இனங்களுக்கும் இடையே நிலவிய இனப் பகைமை உணர்வால் தாமாகத் கிளர்ந்த வன்செயல்களாகக் கருதக்கூடாது. தமிழ் மக்களுக்கு எதிரான வன்செயல் தாக்குதல்களில் மிகக்கொடிய வெறியாட்டங்கள் அனைத்துமே சிங்கள ஆட்சியாளர்களால் இன அழிப்பு இலக்கின் அங்கமாகத் திட்டம் தீட்டப்பட்டு ஏவப்பட்டவையாகும்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்கள் 1956, 1958, 1961, 1974, 1979, 1981 ஆகிய ஆண்டுகளிலும் 1983 ஜுலையிலும் நடத்தப்பட்டன. இவ் இனவெறித் தாண்டவங்களில் பெண்கள், பிள்ளைகள் அடங்கலாக ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் இரக்கமின்றி, மிகக் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய பலகோடி பெறுமான சொத்துக்கள் அழித்தொழிக்கப்பட்டன. ஆயிரமாயிரம் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டார்கள். தீயிடல், பாலியல் வன்தாக்குதல், கும்பல் கும்பலாக மக்களைப் படுகொலை செய்தல் போன்ற வன்முறை அடாவடி வெறியாட்டங்களில் ஈடுபட்ட காடையருடனும் பாதகருடனும் அரச ஆயுதப் படையினரும் ஒன்றுசேர்ந்து கொடுமை புரிந்தனர்.

இந்தப் பல்பரிமாண அரச ஒடுக்குமுறையின் ஒட்டுமொத்தப் பாதிப்புப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. இது தமிழ் மக்களின் உயிர்வாழ்விற்கே அச்சுறுத்தலாக அமைந்தது. இன முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியது. இரு தேசங்கள் மத்தியில் நல்லிணக்கமும், சமரச சகவாழ்வும் ஏற்படுவதைச் சாத்தியமற்றதாக ஆக்கியது. தமிழ் மக்களிடையே தீவிரப் போக்கையும் போராட்ட உணர்வையும் வலுப்படுத்தியது.

தமிழரின் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் தோற்றம் கொள்வதெற்கனப் புறநிலையையும் உருவாக்கியது. ஒட்டு மொத்தத்தில் அரச ஒடுக்குமுறையானது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு வழி சமைத்தது.

நன்றி.

அடுத்து வரும் பதிவு : தமிழ்த் தேசிய இயக்கமும் சமஷ்டிக் கட்சியும்

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.