பிரித்தானிய குடியேற்ற ஆட்சியும் தமிழ் மக்களும்

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:1

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

பிரித்தானிய குடியேற்ற ஆட்சியும் தமிழ்மக்களும்

பிரித்தானிய குடியேற்ற ஆதிக்கத்தால் ஏற்பட்ட ஆழமான தாக்கங்களுடன் ஒப்புநோக்குகையில் போர்த்துக்கேய, ஒல்லாந்த குடியேற்ற ஆட்சிகளால் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் விளைந்த தாக்கம் குறைவானவை என்று சொல்லலாம். பிரித்தானிய குடியேற்ற ஆட்சியின் முக்கிய நிகழ்வாக, மக்களைச் சுரண்டும் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை ஆங்கிலேயர் இலங்கையில் திணித்தனர்.

பிரித்தானியரால் கண்டி இராச்சியம் தோற்கடிக்கப்பட்ட 1815 இல் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளரின் துயர வரலாறும் வித்தூன்று கிறது. அந்த நாட்களிலேயே பெருந்தோட்டப் பொருளாதாரத்தை நாட்டிலே நடைமுறைப் படுத்த பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர் தீர்மானித்தனர். உயர்ந்த மலைகளிற் செழித்து வளரும் கோப்பிச் செடி, 1820ஐ அடுத்து வந்த ஆண்டுகளில் பெருந்தோட்டங்களாகப் பயிரிடப்பட்டது. முதலீட்டாளர்களும் தொழில் உரிமையாளர்களும் இங்கிலாந்திலிருந்து, இலங்கையில் புதிதாகக் கைப்பற்றப்பட்ட மலைப்பகுதிகளுக்கு விரைந்து வந்தனர்.

கண்டி விவசாயிகளிடமிருந்து பெருமளவு நிலங்களை ஏமாற்றி அபகரித்தனர். காலாகாலமாகத் தமக்கு வாழ்வளித்த தங்கள் நிலபுலன்களைக் கைநெகிழ்ந்து, புதிய முதலாளித்துவ பெருந்தோட்டங்களில் கூலிக்கு வேலை செய்யக் கண்டிய விவசாயிகள் மறுத்தனர். சுதேசசிங்கள விவசாயிகள் மத்தியிலிருந்து தமக்கு வேண்டிய தொழிலாளர் அணியைப் பெறக் குடியேற்ற ஆட்சியாளர் மேற்கொண்ட நெருக்கு வார முயற்சி வெற்றியளிக்கவில்லை. எனவே, இந்தியாவிலே குவிந்து கிடந்த கூலித் தொழிலாளர் வர்க்கத்தைப் பயன்படுத்த பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மிகவும் மலிவான கூலியாட்கள் அடங்கிய பெரும் பட்டாளம் ஒன்று தென்னிந்தியாவில் பணிக்கமர்த்தப்பட்டது.

ஒருபுறம் தாங்கொணா வறுமையும், மறுபுறம் ஆட்சியாளரின் மிரட்டலுமாக இந்த ஏழைத் தொழிலாள மக்களைப் பணியவைத்தன. சுவர்க்க பூமியென ஆசைகாட்டி இத்தீவுக்கு கொண்டுவரப்பட்ட இம்மக்கள் மிகக் கொடூரமான அடிமை வாழ்விற்குள் நிரந்தரமாகத் தள்ளப்பட்டார்கள். அநீதியான, அறநெறிகளுக்கு விரோதமான தொழிலாளர் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது. இது பல்லாயிரக்கணக்கான தமிழகத் தொழிலாளர்களை இலங்கையின் பெருந்தோட்டங்களுக்கு இடம்பெயர நிர்ப்பந்தித்தது.

1840ஆம் ஆண்டிலிருந்து 1850 வரையிலான பத்து வருடங்களில் பத்து லட்சம் தமிழ்ப் பாட்டாளிகள் இலங்கையில் இறக்குமதி’ செய்யப்பட்டார்கள். தமிழ் நாட்டின் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையால் வாடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே முதலில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். இவர்கள் தத்தம் கிராமங்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் கால் நடையாக நடந்து ராமேஸ்வரம் சென்றடைந்தனர். பின்னர் சிறு மீன்பிடி வள்ளங்களில் மன்னார் கரையோரமாக இறக்கப்பட்டனர். அங்கிருந்த அடர்ந்த காடுகளூடாக நடந்து சென்று மலையகப் பகுதிகளையடைந்தனர்.

பரிதாபத்துக்குரிய இந்த ஏழைப்பாட்டாளி மக்களிற் பல்லாயிரம் பேர், இந்தக் கொடூரமான நீண்ட பயணத்தின்போது நோயினாலும், களைப்பினாலும் மன விரக்தியாலும் வழி வழியே மடிந்து போனார்கள். இந்த நீண்ட மரண யாத்திரையில் தாக்குப் பிடித்தவர்கள் சோர்ந்து, களைத்து, மிகவும் பலவீனம் அடைந்திருந்தார்கள். இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் தோட்டப்பயிர்ச் செய்கைக்காகக் காடுகளை அழித்து நிலத்தைப் பதப்படுத்தும் ஆரம்ப கால முயற்சியின்போது அங்கு நிலவிய பயங்கரமான சுகாதாரச் சீர்கேட்டு நிலைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது இறந்து போயினர்.

பெருந்தோட்டக் கோப்பிப் பொருளாதாரம் 1840களில் வீழ்ச்சி அடைந்தது. கோப்பிச் செடியை இலை நோய்க் குருக்கனடித்ததே இந்த முறிவுக்குக் காரணமாயிற்று. ஆயினும், கோப்பியினிடமாகத் தேயிலைப் பயிர் அறிமுகப்படுத்தப் பட்டாலும், பொருளாதார அமைப்பு, பங்கமின்றித் தப்பிப் பிழைத்தது. தேயிலை, 1880களிலே மிகப் பரவலாகப் பயிரிடப்பட்டது. தேயிலைப் பெருந்தோட்டப் பொருளாதாரமும் விரிவடைந்தது. பிரித்தானிய தொழிற்துறை முதலீடுகளும் வெளிநாட்டுச் சந்தையும் உறுதியாக வடிவமைக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களும் விரிவடைந்தன. இவை, உற்பத்தி அமைப்பையே மாற்றி அமைத்தன. இதனால் முன்னைய நிலமானிய சமுதாயத்தின் அடித்தளங்கள் நிலையான மாற்றம் பெற்று, முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பு உருவாவதற்கு அடித்தளம் நிறுவப்படலாயிற்று.

பெருந்தோட்டப் பொருளாதாரமானது உற்பத்தி வடிவத்தில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தபோதும், ஆண், பெண், சிறுவர்கள் அடங்கிய தமிழ்த் தோட்டத் தொழிலாள வர்க்கமானது வெள்ளை எஜமான்களுக்கும் உள்ளூர் முதலாளிகளுக்கும் உழைத்து மாளும் நிரந்தர அடிமை வாழ்வுக்குத் தள்ளப்பட்டது. இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களை மலையகத்திற்குக் கொண்டுவந்த ஆங்கிலேய தோட்டத்துரைமார் வேண்டுமென்றே அவர்களைத் தோட்டங்களில் பரித்து ஒதுக்கி வேறுபடுத்தி வரிசை அறைகளாகக் கட்டப்பட்ட குடியிருப்புகளில் குடியமர்த்தினார்கள்.

மனிதர்களை வேறுபடுத்திப் பிரித்து ஒதுக்கும் இந்த அநீதியான நடைமுறையானது தமிழ் மக்களை நிரந்தரமாகவே குச்சறைக்குள் முடக்கி, இழிநிலையான வாழ்நிலைக்குள் தள்ளியது. சுதேசிய மக்களோடு கூடிவாழ முடியாது பிரித்தொதுக்கியது. சொந்தமாக நிலம் வாங்கவோ, தமக்கென வீடு கட்டவோ, சுதந்திரமான சமூக வாழ்வு வாழவோ இடமளிக்காது தடைசெய்தது. மலையகத் தமிழ்ச் சமூகத்தைக் கண்டிச் சிங்கள சமூகத்தின் மையப்பகுதிக்குள் தங்க வைத்த பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர், தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சிக்கொள்கைக்கு அமைவாக, இரண்டு சமூகங்களிடையேயும் பகைமை உணர்வு நிலவ வழி வகுத்தார்கள். குடியேற்ற ஆட்சி நிறுவிய அடிமை நிலையால் சிறுமைப்படுத்தப்பட்ட தமிழ்த் தோட்டத் தொழிலாளர் சொல்லொணாத் துயரை அனுபவித்தார்கள்.

அவர்களுடைய வியர்வையும் இரத்தமும் மிகக்கொடிய சுரண்டல் பொருளாதாரத்திற்கு முண்டு கொடுக்க அதிலிருந்து சுவறிய பயனை வெள்ளைத்துரைமாரும் சிங்கள நிலவுடைமை வகுப்பினரும் சுகித்தார்கள்.

பிரித்தானிய குடியேற்ற ஆதிக்கத்தின் தாக்கமானது வடகிழக்கு மாநிலங்களில் வாழும் சுதேசியத் தமிழர்கள் மீது பாரதூரமான வளைவுகளைச் சுமத்தியது. அரசியல் மட்டத்தில், பிரித்தானிய ஆட்சியானது ஒன்றிணைக்கப்பட்ட அரச நிர்வாகத்தையும் மையப்படுத்தப்பட்ட நிறுவகங்களையும் ஒற்றையாட்சி வடிவமைப்புக் கட்டுமானத்தையும் பளுவேற்றியது. இதனால், இரண்டு வேறுபட்ட இராச்சியங்கள் வல்வந்தமாக ஒன்றிணைக்கப்பட்டன.

இரண்டு தேசிய இனங்களின் கடந்தகால வரலாற்று வாழ்நிலை, அவர்களுடைய சமூகப் பொருளாதாரத்
தனித்தன்மைகள், அவர்களிடையே நிலவிய இன அடிப்படையிலான வேறுபாடுகள் ஆகியவை உதாசீனப்படுத்தப் பட்டன. இவையே தமிழ் – சிங்கள இனப் பகைமையின் மூல வேர்களாக அமைந்தன.
தமிழ்ச் சமூக வடிவமைப்பானது தனக்கே உரித்தான தனித்துவம் கொண்ட சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டதாக விளங்கிற்று. நிலமானிய சமுதாயக் கூறுகளும் சாதிய முறைமையும் ஒன்றோடொன்று இறுகப் பிணைக்கப்பட்டுப் பலமுகத் தன்மைகொண்ட ஒரு சிக்கலான சமுதாய வடிவமாக அது இயங்கியது.

சாதியப் பகுப்புமுறை என்ற அநீதியான அடக்குமுறை உயர்சாதித் தமிழர்களுக்குப் பிறப்பின் அடிப்படையில் சலுகைகளையும் தகைமைகளையும் வழங்கியது. தாழ்த்தப்பட்ட சாதியினராகக் கொள்ளப்பட்ட மக்கள், சமூகத்தில் வெகுவாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டனர். அடிமை நிலையிலிருந்த இம்மக்கள் அன்றாட சீவியத்திற்கே திண்டாடும் இழிநிலை வாழ்க்கையை வாழ்ந்தார்கள். சாதிய அமைப்பு வழங்கிய சலுகையாலும், வெளிநாட்டுச் சமய நிறுவனங்கள் நடத்திய கல்வி வசதிகளாலும் பயன்பெற்ற, உயர்சாதித் தமிழரில் ஒரு பிரிவினர் ஆங்கிலக் கல்விமுறையைத் தழுவினர்.

இதனால் தொழிலறிஞர்களும் பணிமனை அலுவலர்களும் உருவாகி, அரச சேவையின் நிர்வாக அமைப்பைக் கொண்டு நடத்தும் ஆங்கிலக் கல்வி கற்ற ஒரு புதிய வர்க்கம் தோற்றம் பெற்றது. தமிழ் மக்களை இதில் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்திய ஆங்கிலேய குடியேற்ற ஆட்சியாளர்கள், தம்முடைய பிரித்தாளும் சூழ்ச்சியின் சூட்சுமத்தோடு அரச நிர்வாகத்திலும் கணிசமான பங்கைத் தமிழருக்கு அளித்தனர். இதன் காரணமாகப் பின்னைய நாளில், சிங்களப் பேரினவாதம் வீறுடன் கிளர்ந்தெழ வழி கோலினார்கள்.

அரச நிர்வாகக் கட்டமைப்பிலும் பெருந்தோட்டப் பொருளாதாரத் துறையிலும் தமிழரின் மேலாதிக்கம், ஆங்கிலக் கல்வி கற்ற வகுப்பினர் சுகித்த சலுகைகள், கிறிஸ்தவ மதப்பரம்பல் ஆகியவையே சிங்களத் தேசியவாதம் தோற்றம் பெறக் காலாயின. தொடக்க நிலையில், பௌத்த மறுமலர்ச்சியின் வடிவமாகவே சிங்கள தேசியவாதப்போக்கு காணப்பட்டது. இது பின்னர் படிப்படியாக வளர்ந்து அரசியலில் வலுமிக்க சக்தியாக ஆதிக்கம் பெற்றது.

பௌத்த மத மறுமலர்ச்சி என்ற சுலோகத்தின் கீழ் ஒரு தேசிய மேலாண்மைக் கருத்தியல் எழுந்தது. அது தமிழர் மீதான காழ்ப்புணர்வைப் பலமாக வெளிப்படுத்தியது. பௌத்த தேசியத் தலைமை, தமிழரையும் ஐரோப்பிய குடியேற்றவாதிகளையும் கடுமையாகச் சாடியது. சிங்கள ஆரிய இனப் பெருமையைப் புகழ்ந்துரைத்தது.
அநாகாரிக்க தர்மபாலா என்ற பௌத்த சிந்தனையாளர் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் பிதாவாகக் கருதப்பட்டார். ஒரு பண்டைய நாகரீகத்தின் வரலாறு என்ற பிரபல்யம் பெற்ற அவரது நூலில் சிங்கள இனத்தவர் பற்றி அவர் குறிப்பிடுவதாவது:

“மனித இனப் பகுப்பியல் ஆய்வின்படி சிங்களவர் ஒரு தனித்துவம் வாய்ந்த இனத்தவர். வேறு இனக் கலப்பில்லாதவர். அடிமைகளின் இரத்தம் அவர்களிடம் கலப்படவில்லை என்பதையிட்டு அவர்கள் பெருமை கொள்ளலாம். மூன்று நூற்றாண்டுகளாக எமது தாயக மண்ணை சீரழித்து , தொன்மைவாய்ந்த எமது தேவாலயங்களை இடித்தழித்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எமது இனத்தைப் பூண்டோடு அழிக்க முற்படும் காண்டுமிராண்டித் தமிழராலோ ஐரோப்பிய காடையராலோ என்றும் வெற்றிக்கொள்ள முடியாதவர்கள் என்பதையிட்டுச் சிங்கள மக்கள் பெருமை கொள்ளலாம்.

நாகரீகமற்ற காடையரால் சீரழிக்கப்படுமுன்னர், ஒளிமயமான இந்த அழகிய தீவு ஆரிய சிங்களவர்களால் ஒரு சுவர்க்க பூமியாக உருவாக்கப்பட்டிருந்தது”.
பௌத்த மத மறுமலர்ச்சியிலிருந்து தோற்றம் கொண்ட சிங்களப் பேரினவாதமானது அரச நிர்வாகக் கட்டமைப்பிலும், பெருந்தோட்டப் பொருளாதாரத்திலும் தமிழர்கள் ஆதிக்கம் பெற்றிருப்பதை ‘தேசிய அபிவிருத்திக்கு’ ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதியது. 1948ல் இலங்கை சுதந்திரமடைந்தபோது அரச அதிகாரம் சிங்கள ஆளும்வர்க்கத்திடம் கைமாறியதை அடுத்து அதுகாலவரை கருத்து நிலையில் நிலவிய தமிழர் விரோத காழ்ப்புணர்வு திண்ணியமான சமூக, அரசியல், பொருளாதார ஒடுக்குமுறையாக வடிவமெடுத்தது.

நன்றி.

அடுத்து வரும் பதிவு : தமிழருக்கு எதிரான அரச ஒடுக்குமுறை

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.