விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி

In போரும் சமாதானமும்
போரும் சமாதானமும்

இலங்கையில் இந்திய தலையீடு

அத்தியாயம் : 2

விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி

1983 ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதி, வன்னிக் கெரில்லாப் பயிற்சிப் பாசறையிலிருந்து தலைவர் பிரபாகரன் லண்டனில் அவ்வேளை விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். என்னையும் எனது மனைவி அடேலையும், உடனடியாகச் சென்னைக்கு வருமாறு பணித்திருந்தார். தமிழ்ப் போராளிகளுக்கென இராணுவப் பயிற்சி திட்டம் ஒன்றை இந்திய மத்திய அரசு செயற்படுத்தப் போவதாகத் தமிழீழத்தில் வதந்திகள் அடிபடுவதாகவும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏராளமான இளைஞர்களை அணிசேர்த்துக் கடல் மார்க்கமாகத் தமிழ் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதாகவும், உடனடியாகத் | தமிழ்நாடு சென்று நிலையை அறிந்து தன்னுடன் தொடர்பு | கொள்ளுமாறும் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழரின் இனப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு பெரும் எடுப்பில் தலையிட முடிவு செய்திருப்பதால் விடுதலைப் போராட்டம் புதிய வரலாற்றுத் திருப்பத்தை அடையப் போவதாகக் குறிப்பிட்ட பிரபாகரன், இம்முறை தமிழ்நாட்டில் | நாம் நிரந்தரமாக நீண்ட காலம் தங்கியிருந்து பணிபுரிய நேரிடும் என்றும் சூசகமாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.

நானும் எனது மனைவி அடேலும் 1979லும் பின்பு 1981லும் தமிழ்நாடு வந்து தலைவர் பிரபாகரனுடனும் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் போராளிகளுடனும் இரு தடவைகளும் பல மாதங்கள் வரை தங்கியிருந்து பணி புரிந்தோம். போராளிகளுடன் சேர்ந்து சமைப்பது தொடங்கி அவர்களுக்கு அரசியல் வகுப்புகள் நடத்துவதுவரை இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு சுவரஸ்யமான நிகழ்வுகளை ‘சுதந்திர வேட்கை’ என்ற தனது சுயசரித நூலில் எனது மனைவி விபரமாக எழுதியிருக்கிறார். 1983 ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாம் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களும் அவரது நூலில் தரப்படுகிறது. எனவே, ஏற்கனவே சொல்லப்பட்ட விடயங்களை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, இந்தியத் தலையீட்டால் எழுந்த பிரச்சினைகளையும், குறிப்பாக இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் மத்தியிலான உறவுகள் பற்றியுமே இப்பகுதியில் நான் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

1983 ஆகஸ்ட் நடுப்பகுதியில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் வந்திறங்கிய போது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்) எம்மை வரவேற்றார். சென்னை நகரில் வூட்லண்ட்ஸ் எனப்படும் நடுத்தரமான சைவ விடுதியில் நாம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேசன் (ரவி பரமநாதன்) மற்றும் சில மூத்த உறுப்பினர்கள் அந்த விடுதியில் எம்மைச் சந்தித்தனர். அவ்வேளையில் சென்னையில் எமது இயக்கத்திற்கெனச் செயலகமோ அல்லது இரகசிய வீடுகளோ இருக்கவில்லை. எமது அறைக்குப் பக்கமாக இன்னொரு அறையும் எடுத்து அவ்விரு அறைகளையும் அரசியற் செயலகமாக மாற்றிச் சிறிது காலமாக அவ்விடுதியிலிருந்தே செயற்பட்டோம். பேபி சுப்ரமணியத்தின் நண்பரும் அ.தி.மு.க கட்சியில் மூத்த அமைச்சருமான திரு.காளிமுத்து நாம் ஒரு செயலகம் அமைக்கும் வரை விடுதியின் செலவினங்கள் அனைத்தையும் பொறுப் பெடுத்தார். அந்த விடுதியில் இருந்தபடியே இந்திய இராணுவப் பயிற்சித் திட்டம் பற்றித் தகவல் அறிய முனைந்தோம்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு விபரம் எதுவும் தெரியவில்லை. அவ்வேளை எனக்கு முன்பு அறிமுகமான தமிழ்நாட்டுப் பத்திரிக்கையாளர் ஒருவரைச் சந்தித்தபோது அவரிடம் இந்தியப் பயிற்சித் திட்டம் பற்றிக் கேட்டேன். இந்தியப் புலனாய்வுத் துறையினரே (றோ) இப்பயிற்சித் திட்டத்தைப் பொறுப்பேற்று நடத்துவதாகக் கூறிய அந்தப் பத்திரிக்கையாளர், என்னை றோ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை கூறினார். அவ்வேளை, சென்னையில் றோ அதிகாரிகளின் செயற்பாடுகள் மிகவும் இரகசியமானதாக இருந்ததால் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது சிரமமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையில்தான் எனக்கு முன்பு அறிமுகமான கலாநிதி ராஜேந்திரனைச் சந்தித்தேன். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜேந்திரன் எமது இயக்கத்தின் ஆதரவாளர். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்திய இராணுவப் பயிற்சி திட்டத்தின் முழு விபரங்களுடன் வூட்லண்ட்ஸ் விடுதிக்கு வந்து என்னைச் சந்தித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஈழப் புரட்சி இயக்கம் (ஈரோஸ்) ஆகிய முன்று அமைப்புகளுக்கும் இந்திய இராணுவப் பயிற்சி திட்டத்தில் அனுமதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்த ராஜேந்திரன், இந்த அமைப்புகளைச் சார்ந்த போராளிகள் ஏற்கனவே வட இந்தியாவிலுள்ள இராணுவப் பயிற்சி முகாமுக்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். இந்தியப் புலனாய்வுத் துறையினரே (றோ) இந்தப் பயிற்சித் திட்டத்திற்குப் பொறுப்பானவர்கள் என்றும் கூறினார். காலம் சென்ற திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் மகனான திரு. சி. சந்திரகாசனே இப்பயிற்சித் திட்டத்திற்கு இணைப்பாளராக முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் அவர் கூறினார்.

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் திரு. சந்திரகாசனுக்கு முக்கிய தலைமைப்பீடப் பொறுப்பைப் பெற்றுக் கொடுப்பதே இந்திய புலனாய்வுத் துறையினரது இரகசியத் திட்டம் என்பதையும் திரு. ராஜேந்திரன் வெளியிட்டார். இந்திய இராணுவப் பயிற்சித்திட்டத்திற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சிபாரிசு செய்யச் சந்திரகாசன் தயாராக இருக்கிறார் எனக் கூறிய ராஜேந்திரன் அதற்கு ஒரு முக்கிய நிபந்தனை உண்டு என்றார். அந்த நிபந்தனை என்னவென்று கேட்டேன. அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு ஒருபுறம் ஆச்சரியத்தையும் மறுபுறம் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதாவது தமிழீழத் தேசிய விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவராகச் சந்திரகாசனை திரு.பிரபாகரன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்திய இராணுவப் பயிற்சி முடிவு பெற்றதும் எல்லாத் தமிழ் போராளி அமைப்புகளும் தமிழ்த் தேசிய இராணுவம் ஆக மாற்றப்படுமென்றும், அந்த தமிழர் இராணுவம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் வேளை, தமிழர் தேசத்தின் அரசியல் போராட்டத்தைச் சந்திரகாசன் தலைமை தாங்கி நடத்துவார் என்றும் ராஜேந்திரன் விளக்கினார்.எமது கலந்துரையாடலை மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக கொண்டிருந்த எனது மனைவி அடேல், சந்திரகாசனின் நிபந்தனையை அறிந்ததும் பொறுமையிழந்து ராஜேந்திரன் மீது சீறி விழுந்தார்.

எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் பிரபாகரனோ அல்லது எமது போராளிகளோ சந்திரகாசனைத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இதுதான் நிபந்தனை என்றால் எமது இயக்கத்திற்கு இந்திய இராணுவப் பயிற்சி அவசியமில்லை என்று கடிந்து கொண்டார் அடேல். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரனுக்கும் எமக்கும் மத்தியில் சூடான விவாதம் எழுந்தது. அடேலின் கருத்தை ஆதரித்து நான் வாதிட்டேன். சந்திரகாசனின் ஆசியைப் பெறாமல் ‘றோ’ அதிகாரிகளை நெருங்க முடியாது

என்றும் ‘றோ’ அதிகாரிகளின் சிபாரிசு இன்றி விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி கிடைக்கப்போவதில்லை என்றும் இந்தப் பயிற்சி கிடையாது போனால் புலிகள் இயக்கம் பின்னடைவை எதிர்நோக்க ஏனைய அமைப்புகள் வளர்ந்து முன்னேற்றம் அடையும் என்றும் ராஜேந்திரன் பூச்சாண்டி காட்டினார். சந்திரகாசனின் உதவியின்றி இந்தியப் பயிற்சியை நாம் எப்படியோ பெற்றே தீருவோம் என நான் எதிர்த்து வாதாட, தனது முயற்சி பலிக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட ராஜேந்திரன் ஆத்திரத்துடன் எமது அறையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். அதற்கப்புறம் நான் அவரைக் கண்டதேயில்லை.

ராஜேந்திரனுடன் நிகழ்ந்த சந்திப்புப் பற்றியும் இந்திய இராணுவப் பயிற்சியை ஒழுங்கு செய்வதில் சந்திரகாசன் வகிக்கும் பங்கு பற்றியும், பயிற்சித் திட்டத்தில் இடம்பெற அவர் விதிக்கும் நிபந்தனை பற்றியும் சகல விபரங்களையும் நான் உடனடியாகப் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்திரகாசனின் உதவியை நாடவேண்டாம் எனத் தெரிவித்த பிரபாகரன், எப்படியாவது முயன்று இந்தியப் புலனாய்வுத் துறையினருடன் என்னை நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இது எனக்கு ஒரு சிக்கலான சவாலாக அமைந்தது. சந்திரகாசனை வெட்டியோடி, தலைமறைவாக இயங்கும் றோ அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவது எங்ஙனம்? இப்படியாக நான் இடர்பட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் எனக்குத் தமிழக உள்நாட்டுப் புலனாய்வுத் துறையினரது தொடர்பு கிடைத்தது. அப்பொழுது நாம் சென்னை நகரப் புறத்திலுள்ள சன்தோம் என்னுமிடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருந்தோம்.

நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் என அறிந்ததும் தமிழகப் புலனாய்வுத்துறை (கியூ பிரிவு) உதவிப்பொலிஸ் மா அதிபர் திரு. அலெக்ஸ்சாந்தர் என்னைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து ஈழத் தமிழர் பிரச்சினை பற்றியும் விடுதலைப் புலிகளின் போராட்டம் பற்றியும் விசாரித்தார். மாறி மாறி நிகழ்ந்த சந்திப்புகள் நட்புறவாகப் பரிணமித்தன. அன்பும் பண்பும் ஆழமான அரசியற் தெளிவும் கொண்டவராக விளங்கினார் திரு. அலெக்ஸ்சாந்தர். இலங்கை அரசியல் பற்றியும் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றியும் நிறைய அறிந்து வைத்திருந்தார். இந்திய இராணுவ பயிற்சித் திட்டம் பற்றியும் றோ அதிகாரிகளுக்கும் சந்திரகாசனுக்கும் இடையிலான இரகசிய உறவு பற்றியும் எந்தெந்த அமைப்புகளுக்கு எங்கெல்லாம் பயிற்சிகள் வழங்கப் படுகிறது பற்றியும் சகல விபரங்களையும் நான் அலெக்ஸ்சாந்தர் வாயிலாக அறிந்து கொண்டேன்.

சென்னை மாநகரில் பிரபல்யமான Blue Diamond விடுதியில் ஒருமாடிக் கட்டிடத்தை வாடகைக்கு அமர்த்தி அதனைத் தனது தலைமைச் செயலகமாகக் கொண்டு, றோ அதிகாரிகளுடன் இணைந்து சந்திரகாசன் செயற்பட்டு வருகிறார் என்ற தகவலையும் அலெக்ஸ்சாந்தர் எனக்குத் தெரிவித்தார். அந்த விடுதியில், சந்திரகாசனின் மாடியில் தனது புலனாய்வு உளவாளி ஒருவர் உணவு பரிமாறுபவராகப் பணிபுரிகிறார் என்றும் ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தி அங்கு நடைபெறும் திருவிளையாடல்களை எல்லாம் தான் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். சந்திரகாசனுடன் இணைந்து செயற்படும் றோ அதிகாரிகளில் சிலர் ஊழல் பேர்வழிகள் என்றும் அவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதே நன்று என்றும் அலெக்ஸ்சாந்தர் அறிவுரை சொன்னார். அலெக்ஸ்சாந்தர் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் சந்திரகாசன் அப்பொழுது நெருங்கிய தொடர்பு வைத்திருந்த உன்னிக்கிருஷ்ணன் எனப்படும் றோ அதிகாரி பின்னர் கைது செய்யப்பட்டு, இந்திய இராணுவப் பயிற்சி சம்பந்தப்பட்ட இரகசியத் தகவல்களை அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏக்கு கையளித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு நீண்ட காலக் கடூழியச் சிறையில் தள்ளப்பட்டார்.

விடுதலைப் புலிகள் இயக்கமும் இந்திய இராணுவப் பயிற்சியையும் ஆயுத தளபாடங்களையும் பெற்றுக் கொள்வதன அவசியத்தை அலெக்ஸ்சாந்தருக்கு எடுத்து விளக்கிய நான், அதற்கான வழிமுறை பற்றியும் கேட்டேன். தமிழீழ மக்களின் நல்லாதரவு பெற்ற விடுதலை அமைப்பாக நீண்ட கால ஆயுதப் போராட்ட அனுபவத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கமே களத்தில் நின்று இயங்கி வருகிறது என்ற உண்மையைத் திருமதி. இந்திராகாந்தி அம்மையாருக்கு விபரமாக எழுதி, இந்தியாவின் இராணுவப் பயிற்சித்திட்டத்தில் புலிகளுக்கும் இடமளிக்குமாறுவேண்டுகோள் விடுக்கும்படியும் அலெக்ஸ்சாந்தர் ஆலோசனை வழங்கினார். திருமதி. காந்திக்கு எழுதிய கடிதத்தின் பிரதி ஒன்றே றோ புலனாய்வு அமைப்பின் அதிபர் திரு.சக்சேனாவுக்கும் அனுப்பி வைக்குமாறு அவர் சொன்னார்.

அவர் கூறியபடியே திருமதி காந்திக்கு நான் ஒரு விபரமான கடிதம் எழுதினேன். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கை, கருத்தியல், போராட்ட வரலாறு என்ற ரீதியில் விளக்கத்தைக் கொடுத்து, இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தில் எமது இயக்கத்தை இணைத்துக் கொள்ளும் அவசியத்தையும் வலியுறுத்தினேன். அத்தோடு அக்கடிதத்தின் பிரதி ஒன்றை றோ அதிபர் திரு. சக்சேனாவுக்கும் அனுப்பிவைத்தேன். புது டெல்லியிலிருந்து பதில் வர நீண்ட காலம் பிடிக்கவில்லை.

பாரதப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து இரண்டு வாரத்திற்குள் புது டெல்லியிலுள்ள றோ புலனாய்வுத்துறைத் தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு உயர் அதிகாரி என்னைச் சந்திப்பதற்காக சென்னை வந்தார். எஸ். சந்திரசேகரன் என்ற பெயருடைய அவர் மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழர். சென்னை நகரப்புறத்திலுள்ள விடுதி ஒன்றில் மிகவும் இரகசியமான முறையில் சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சகல தொடர்புகளுக்கும் பெறுப்பதிகாரியாக தான் நியமிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார் அவர். முதற் சந்திப்பின்போதே விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றித் துருவி ஆராய்ந்து என்னைக்குடைந்து எடுத்தார். புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பு, ஒழுக்க விதிகள், தலைமைப்பீடம், அரசியல் கொள்கை, ஆயுதப் போராட்ட வரலாறு போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றி அவர் விடுத்த கேள்விக் கணைகளின் நுட்பத்திலிருந்து திரு. சந்திரசேகரன் ஒரு ஆழமான ஆளுமையுடைய மனிதர் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஆயுதப் போரியல் வடிவங்கள் பற்றியும், நிறைய அறிந்து வைத்திருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் ஆர்வமாக விசாரித்தார். பிரபாகரனின் ஆளுமை, அரசியல் நோக்கு, போராட்ட அனுபவமும் என அவர் எழுப்பிய கேள்விகளுக்கு விபரமான பதில் அளித்தேன். விடுதலைப்புலிப் போராளிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்காக பிரபாகரனை தான் நேரில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவில் பிரபாகரனின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றி நான் கேட்டபோது, அதற்கு தான் உத்திரவாதம் அளப்பதாகச் சொன்னார். திருமதி. காந்தியின் விசேட பணிப்பின்பேரில் இப்பயிற்சி திட்டம் ஒழுங்கு செய்யப்படுவதால் பிரபாகரனின் பாதுகாப்புக்குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். இறுதியாக, நாயர் என்ற பெயருடைய அதிகாரி ஒருவரை அறிமுகம் செய்து அவர்மூலம் தன்னுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். சந்திரகாசனுக்கும் ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் தெரியாதவாறு எமது போராளிகளுக்குப் பயிற்சி வழங்கப்படுமெனக் கூறிய சந்திரசேகரன், விடுதலைப் | புலிகள் இயக்கத்தை ஓரம் கட்டியது குறித்து சந்திரகாசன் மீது புதுடில்லி அதிருப்தி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சந்திரசேகரனுடன் நிகழ்ந்த சந்திப்பின் விபரங்களை உடனடியாகவே பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தியதுடன் எமது போராளிகளுக்கும் இந்தியாவில் இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்காக உடனடியாகத் தமிழ் நாட்டுக்கு வருகை தருமாறும் அவரைக் கேட்டுக்கொண்டேன். இந்தியா வருவதில் எழக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக இரு மூத்த உறுப்பினர்களான மாத்தையாவையும் ரகுவையும் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைத்தார் பிரபாகரன.

மதுரையில் ஒரு விடுதியில் மாத்தையாவும் ரகுவும் என்னைச் சந்தித்தனர். பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்பது மாத்தையாவின் கருத்து. பாண்டிபஜார் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நிபந்தனைப் பிணையிலிருந்து தமிழீழத்திற்குத் தப்பிச் சென்றவர் என்பதால் இந்தியச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகப் பிரபாகரனை இந்திய காவல்துறையினர் கைது செய்து சிறையில் தள்ளலாம் என்பது அவரது வாதம். திருமதி காந்தியின் ஆசியுடன் இந்திய அரசுதான் பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது என்று கூறியும் அவர்களை நம்பச்செய்ய முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி என்ற பொறிவைத்துப் புலிகளின் தலைவரை மடக்கிப் பிடிப்பதுதான் இந்திய புலனாய்வுத் துறையினரின் கபட நோக்கம் என்பது அவர்களது வாதம். இவர்களுடன் வாதிடுவதில் அர்த்தமில்லை என உணர்ந்த நான், இந்திய நிலைமைய விரிவாக விளக்கி, இந்தியப் பயிற்சி பெறுவதாயின் கட்டாயமாக இந்தியாவுக்கு வந்தாக வேண்டு மென்றும், பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் எழப்போவதில்லை என்றும் உறுதிகூறிப் பிரபாகரனுக்குக் கடிதம் எழுதி அவர்களிடம் கொடுத்தேன். இந்தியாவில் பிரபாகரனுக்கு ஏதாவது பிரச்சினை எழுந்தால் அதற்கான பொறுப்பையும் இயக்க நடவடிக்கையையும் நான்தான் ஏற்கவேண்டி வரும் என மிரட்டிவிட்டுச சென்றார் மாத்தையா. மறுநாள் எனது கடிதம் பிரபாகரன் கையில் கிடைத்ததும் தான் விரைவில் இந்தியாவுக்கு வரவிருப்பதாகப் பதில் அனுப்பியிருந்தார். எனது விளக்கத்திலும் உறுதிமொழியிலும் பிரபாகரன் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை அறிந்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

1983 அக்டோபர் மாதம் பிரபாகரனும் அவரோடு சில மூத்த தளபதிகளும் இந்தியா வந்தனர். பாண்டிச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி அங்கு தங்கியிருந்தனர். திரு. சந்திரசேகரனும் மற்றும் சில றோ புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளும் பிரபாகரனைப் பாண்டிச்சேரியில் சந்திப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தேன். சந்திப்பு நிகழும் நாளன்று நானும், அடேலும் இரு போராளிகளுமாக சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்குப் பயணமாகினோம். பாண்டிச்சேரியில் பிரபாகரனைச் சந்தித்து சென்னையில் நம் வந்திறங்கியதிலிருந்து நடைபெற்ற சம்பவங்களை அவரிடம் விபரமாகக் கூறினேன். அன்று நள்ளிரவு திரு. சந்திரசேகரனும் மற்றும் சில . இந்தியப் புலனாய்வு அதிகாரிகளும் பாண்டிச்சேரியிலுள்ள எமது வீட்டுக்கு வந்தார்கள். பிரபாகரனும் நானும் சந்திரசேகரனும் தனி அறை ஒன்றில் மந்திராலோசனை நடத்தினோம். முதற் சந்திப்பின்போதே சந்திரசேகரனுக்குப் பிரபாகரனை நன்கு பிடித்துக்கொண்டது.

இருநூறு விடுதலைப் புலிப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்வதாகச் சந்திரசேகரன் உறுதியளித்தார். நூறு பேர் கொண்ட இரு அணிகளகப் பயிற்சி நடைபெறும் என்றும், முதல் அணியின் பயிற்சி நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் சொன்னார். புலிப் போராளிகள் சென்னையிலிருந்து டில்லி வரை புகையிரத வண்டியில் பயணம் செய்து, பின்பு டில்லியிலிருந்து இராணுவ டிரக் வண்டிகளில் உத்திரப்பிரதேச மலைப் பிராந்தியத்திலுள்ள டெக்ராடன் என்னு மிடத்தில் அமைந்திருக்கும் இந்திய இராணுவப் பயிற்சிப் பாசறைக்குக் கொண்டு செல்லப்படுவர் என்றும் சந்திரசேகரன் விளக்கினார். முதல் அணியில் பயிற்சி பெறுவோரின் பெயர் விபரப் பட்டியலைத் தமக்குச் சீக்கிரமாக அனுப்பி வைக்கும்படியும் அவர் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டார்.

தமது போராளிகளுக்கு எத்தகைய போரியற் பயிற்சி வழங்கப்படுமென்றும் எத்தகைய ஆயுதங்களைக் கையாளுவதற்கான பயிற்சி கொடுபடும் என்றும் பிரபாகரன் வினவினார். சகலவிதமான நவீன போரியல் உத்திகள், தந்திரோபாயங்கள் பற்றிய தேர்ச்சியும் அனுபவமும் பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி வழங்குவார்கள் என்றும், சிறுரக ஆயுதங்களிலிருந்து கனரக ஆயுதங்கள் வரை பலவிதமான ஆயுதங்களைக் கையாளுவது பற்றியும் பயிற்சி கொடுக்கப்படுமென்றும் சந்திரசேகரன் விளக்கினார். நிலப்படங்கள் வரைதல், கண்ணி வெடிகளைப் புதைத்தல், வெடிபொருட்களைப் பாவித்தல், டாங்க எதிர்ப்பு, விமான எதிர்ப்பு, ஆயுதங்களைக் கையாளுதல் போன்றவற்றிலும் பயிற்சி வழங்கப்படும் என்றார். ஆயுத உதவி சம்பந்தமாக சந்திரசேகரன் எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை. இவ்விவகாரம் குறித்துப் பின்பு பேசலாம் என்று மட்டும் சொன்னார். உத்திரப் பிரதேசத்திலுள்ள டெக்ராடன் இராணுவப் பயிற்சித் தளத்திற்கு வருகை தந்து விடுதலைப் புலிப்போராளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை நேரடியாக – மேற்பார்வை செய்யுமாறு அவர் பிரபாகரனுக்கு அழைப்பு விடுவித்தார்.

அன்ரன் பாலசிங்கம்

அடுத்து வரும் பதிவு : இந்தியத் தலையீட்டின் உள்நோக்கம்

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.