இலங்கையில் அந்நிய ஊடுருவல்

In போரும் சமாதானமும்

இலங்கையில் இந்திய தலையீடு

அத்தியாயம் : 2

இலங்கையில் அந்நிய ஊடுருவல்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளின் ஆரம்ப காலம். பழைய உலக ஒழுங்கில் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரம் இறுதிக் கட்டம். இரு உலக வல்லரசுகள் மத்தியில் பகைமை கூர்மையடைந்திருந்த கொந்தளிப்பான கால கட்டம். ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதால் அமெரிக்காவில் ரேகனின் நிர்வாக ஆட்சி ஆத்திரமும் அச்சமும் அடைந்திருந்தது. மத்திய ஆசிய பிராந்தியத்தில் சோவியத் யூனியனின் வல்லாதிக்க ஊடுருவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க வல்லரசு பாகிஸ்தானுடன் இராணுவக் கூட்டுறவு உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.

அமெரிக்காவின் நல்லுறவும் இராணுவ பக்கபலமும் பெற்றுக்கொண்ட பாகிஸ்தான், தனது வரலாற்று எதிரியான இந்தியாவை எதிர்கொள்ளும் வகையில் தனது இராணுவ கேந்திர வலுவைக் கட்டி எழுப்பியது. இதே சமயம், சோவியத் யூனியனின் வல்லாதிக்க விரிவாக்கத்திற்கு அஞ்சிய சீனா, பாகிஸ்தானுக்கு இராணுவ தொழில்நுட்ப உதவிகளை வழங்கி, ஆப்கானிஸ்தானில் ரஷ்யர்களுக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் நிகழ்த்தி வந்த இரகசிய நிழல் யுத்தத்திற்கு உதவியது. இந்த வளர்ச்சிப் போக்குகள் இந்தியாவுக்கு கலக்கத்தைக் கொடுத்தன. சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து சோவியத் யூனியனுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட இந்தியா தன்னை ஒரு அணிசேரா வல்லரசு என உரிமைகோர முடியவில்லை.

அத்தோடு ஆப்கானிஸ்தான் பிரச்சினை வல்லரசுகள் மத்தியிலான போட்டியைக் கூர்மைப்படுத்தி, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் மத்தியில் நெருங்கிய இராணுவ உறவை உருவாக்கியமை இந்தியாவுக்கு மேலும் அச்சத்தைக் கொடுத்தது. இப்படியான வரலாற்றுப் புறநிலையில்தான், சிறீலங்கா அரசானது, இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நியச் சக்திகளை இலங்கையில் ஊடுருவி நிலைகொள்ள அனுமதித்தது. இந்திய அரசின் வல்லாதிகக உள் நோக்குகளுக்கு அஞ்சிய ஜெயவர்த்தனாவின் ஆட்சிப்பீடம், அந்நியச் சக்திகளின் உதவியை நாடியது. தமிழரின் ஆயுதக் கிளர்ச்சியை நசுக்கிவிடுவதற்கு அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்கா, சீனா போன்ற நாடுகளிடமிருந்து ஆயுத உதவியையும் இராணுவப் பயிற்சியையும் வேண்டியது.

இஸ்ரேல் அரசுடன் கூட்டுச்சேர்ந்து, யூத நாட்டின் வாயிலாகவே அமெரிக்க வல்லரசு சிறீலங்காவுக்கு, இராணுவத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ‘இஸ்ரேலிய நலன்புரிப் பிரிவு’ ஒன்று திறக்கப்பட்டது. இதனையடுத்து, இலங்கையில் இஸ்ரேலியர்களின் படைத்துறைச் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டன. இஸ்ரேலின் உதவியுடன் சிறீலங்காவின் கடற்படை நவீனமயமாக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்டது. இஸ்ரேலின் உள்நாட்டுப் புலனாய்வுப் பிரிவு (சின்பெற்) நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்து எதிர்ப்புரட்சி போரியல் நுட்பங்கள் பற்றிச் சிங்கள ஆயுதப் படையினருக்கு, குறிப்பாக விசேட அதிரடிப் படையினருக்குப் பயிற்சிகளை அளித்தார்கள்.

இது இவ்வாறிருக்க, அமெரிக்கா கொழும்புக்கு வடக்கேயுள்ள சிலாபத்தில், மின்னியக்கத் தகவல் பரிமாற்ற வசதிகளுடன் ‘அமெரிக்காவின் குரல்’ வானொலிச் சேவையை விரிவாக்கம் செய்தது. அத்துடன் சிங்கப்பூரிலுள்ள தனது வர்த்தக நிறுவனம் ஒன்றினூடாக, திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களையும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்ளவும் முயற்சித்தது. இதற்கிடையில் 1983 அக்டோபரில் அமெரிக்கப்பாதுகாப்பு, புலனாய்வுத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரியான ஜெனரல் வேர்னன் வால்டரும், அவரைத் தொடர்ந்து அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரான காஸ்பர் வின் பேகரும் கொழும்புக்கு விஜயம் செய்து, சிங்கள ஆட்சியாளர்களுடன் மந்திராலோசனை நடத்தினார்கள்.

இரு உயர்தர அமெரிக்க அதிகாரிகளின் கொழும்பு விஜயம் இந்திய அரசுக்குச் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இலங்கையில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்து வருவதாகக் கருதிய டெல்லி ஆட்சியாளர், அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும் மத்தியில் ஒரு இரகசிய இராணுவ ஒப்பந்தம் ஏற்படும் சாத்தியம் பற்றியும் அச்சம் கொண்டனர்.

ஜுலை கலவரத்தை அடுத்து, பிரித்தானியாவிலுள்ள சனல் தீவிலிருந்து இயங்கிய ‘கினி மனி சேவை’ என்ற அமைப்பின் கூலிப்படை நிபுணர்களை இலங்கைக்கு அழைத்தார் ஜெயவர்த்தனா. ஆயுதப் புரட்சிக்கு எதிரான போரியல்தந்திரங்களில் நிபுணத்துவம் பெற்ற இந்த ஆங்கிலக் கூலிப் படையினர் இலங்கையில் தங்கியிருந்து சிங்களக் காவல்துறையின் அதிரடிப் படையினருக்கு விசேட பயிற்சிகளை அளித்தனர். இதேவேளை, சிறீலங்கா அரசு பாகிஸ்தானிடமிருந்து இராணுவப் பயிற்சிக்கான உதவிகளை நாடியது. ஜுலை கலவரத்தின் பின்னர் பாகிஸ்தானிய இராணுவப் பயிற்சி நிழிணர்களைக் கொண்ட விசேட பரிவு ஒன்று இலங்கைக்கு வருகை தந்து சிங்களப் படையினருக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது.

இவர்களது பயிற்சியில் உருவாக்கப்பட்டதே, ‘கரும் சிறுத்தைகள்’ எனப்படும் அதிரடிப்படைப்பிரிவு. கருப்புச் சீருடை அணிந்த இப்படையின் ‘கரும் பிசாசுகள்’ என்று தமிழ் மக்கள் அழைப்பதுண்டு. கிழக்கில், குறிப்பாக திருகோணமலைப் பிரதேசத்தில் தமிழர்களைக் கொன்றொழிக்கும் கொடும் செயல்களில் இக்‘கரும் பிசாசுகள்’ ஈடுபட்டனர்.

இலங்கையில் அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலையீடு அதிரித்து வந்ததுடன் அந்நியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் எதிர்ப்புரட்சிப் போரியல் நியுணர்களும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அயல் நாடான இலங்கையில் நிலைகொண்டு சிங்கள ஆயுதப் படைகளுக்குப் பயிற்சியளித்தமை இந்தியாவுக்கு ஒருபுறம் சினத்தையும், மறுபுறம் அச்சத்தையும் ஏற்படுத்தியது. அத்தோடு சீனாவும் சிறீலங்கா அரசுக்குப் பெருந்தொகையில் நவீன ஆயுதங்களை வழங்கியது. இப்படியாக இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நியச் சக்திகளின் ஊடுருவல் இலங்கையில் அதிகரித்து வருவது தனது தேசியப் பாதுகாப்புக்கும், புவியியல்-கேந்திர சூழலுக்கும் அச்சுறுத்தலை விளைவிப்பதாக இந்தியா கருதியது.

இந்தியாவை ஒரேயடியாக ஓரம் கட்டிவிட்டு, இராணுவப் பயிற்சிக்கும் ஆயுத உதவிக்கும் சிறீலங்கா அரசு அந்நிய நாடுகளை நாடி நிற்பது, அவ்வேளை இந்தியாவின் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த இந்திராகாந்தி அம்மையாருக்குக் கடும் சினத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு உணர்வுகளை உதாசீனம் செய்து, இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நிய சக்திகளை இலங்கைக்குள் ஊடுருவ அனுமதித்தது குறித்து ஜெயவர்த்தனா மீது டில்லி அரசு சினமுற்றது.

ஈழத் தமிழர்கள் மீது இந்திரா காந்தி அம்மையாருக்கு இரக்கமும் அனுதாபமும் இருந்தது. தமிழர்களது பரிதாப நிலை குறித்து ஆழமான புரிந்துணர்வும் இருந்தது. ஈழத்தமிழ் மக்கள் எத்தகைய கொடூரமான அரச ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்து நிற்கின்றார்கள் என்பது பற்றி எண்பதுகளின் ஆரம்ப காலம் தொட்டே இந்திரா காந்தி அம்மையாருக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது. இந்திய இராஜதந்திர, புலனய்வுத்துறை வட்டாரங்களில் இருந்து மட்டுமின்றி, தமிழீழ, தமிழக அரசியல் தலைவர்கள் ஊடாகவும் இலங்கை வாழ் தமிழ் மக்களின அவல நிலைப்பற்றி அவர் அறிந்திருந்தார்.

இந்திரா காந்தி அம்மையார் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்ற பழுத்த அரசியல்வாதி என்பதால் ஜெயவர்த்தனாவின் சூத்திரதார குணவியல்பு பற்றியும், அவரது இனவாதக்கொள்கை பற்றியும் நன்கு அறிந்திருந்தார். தமிழரின் இனப்பிரச்சினை காரணமாக இரு நாடுகளது தலைவர்களின் உறவில் வெறுப்பும் பகைமையும் நிலவியது. ஈழத் தமிழரின் அவலநிலை குறித்துத் தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் எத்தகைய ஆழமான உணர்வலைகளைக் கொண்டிருந்தனர் என்பதையும் இந்திரா காந்தி அம்மையார் நன்கறிவார். இன உணர்வாலும், பண்பாட்டு உறவாலும், வரலாற்று வேர்களாலும் பின்னப்பட்டிருந்த தமிழீழ மக்கள் மீது தமிழ் நாட்டுத் தமிழர்களும் அவர்களது தலைவர்களும் ஆழமான அனுதாபம் கொண்டிருந்ததுடன் ஈழத் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் முழு மனதோடு ஆதரித்தார்கள்.

தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட ஜுலை இனக் கலவரப் பேரழிவானது தமிழ் நாட்டில் தேசிய எழுச்சியைக் கிளறிவிட்டு தமிழகத் தமிழர்களை உணர்வு பொங்கச் செய்தது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பல ஆயிரம் மக்களை அணிதிரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் நடத்துவதில் திராவிட அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இந்திரா காந்தி அம்மையாரின் அரசுடன் அணி சேர்ந்து நின்ற தமிழக முதல்வர் திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் இலங்கைத்தமிழர் பிரச்சனையில் இந்தியா அவசரமாகத் தலையிட வேண்டும் என வற்புறுத்தினார்.

ஈழத் தமிழரின் இனப் படுகொலையைத் தவிர்ப்பதற்கு அமைதி காக்கும் படைகளை அனுப்புமாறு இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார். தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியம் எழுச்சிப் பிரவாகமெடுத்து பிரிவினைவாதமாகப் பரிணாமம் பெற்றுவிடுமோ என டில்லி ஆட்சிப்பீடம் அச்சம் கொண்டது. ஜுலை இனக் கலவரத்தின் விளைவாக, பெருந்தொகையில் ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்தனர்.

இந்திரா காந்தி அம்மையார் இலங்கை விவகாரத்தில் தலையிட்டுத் தூண்டியதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இனக்கலவரத்தின் விளைவாகப் புலம் பெயர்ந்த ஐந்து லட்சம் மக்களில் இரண்டு லட்சம் பேர் இந்தியாவிலும் மிகுதியானோர் மேற்கு ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். ஆகவே, இனக் கலவரத்தால் எழுந்த பாரதூரமான விளைவுகளின் நிமித்தம் தமிழ் நாட்டில் உருவாகிய கொந்தளிப்பான நிலைமை காரணமாகவே ஈழத்தமிழர் பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியா நிர்ப்பந்திக்கப் பட்டது. உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள் ஒருபுறமிருக்க, தனது தென்பிராந்திய அயல்நாடான இலங்கைத் தீவில் அந்நியப் பகைமை சக்திகள் காலூன்றி வருவதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இந்தியா கருதியது. இத்தகைய சூழ்நிலையானது இலங்கையில் இந்தியா தலையிடுவதைத் தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாக மாற்றியது.

இலங்கையின் முன்னாள் இந்தியத் தூதுவர் திரு.ஜே.என். டிக்சிட், ‘கொழும்பில் ஆற்றிய பணி’ என்ற தனது நூலில் இந்தியத் தலையீடு சம்பந்தமாகக் கீழ்க்கண்ட கருத்தை வெளியிட்டார்.
“தனது தமிழ்க் குடிமக்களுக்கு எதிராகக் கொழும்பு அரசு கடைப்பிடித்த பாரபட்சமான ஒடுக்குமுறைக் கொள்கைகளால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் ஒருபுறமும், அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் இலங்கை கொண்டிருந்த உறவுகளால் ஏற்பட்ட தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மறுபுறமாக, சிறீலங்காவில் இந்தியா, தலையிடுவது தவிர்க்க முடியாத விடயமாகச் செய்தது”.

அந்தக் காலகட்டத்தில், இந்திய வெளிவிவகாரக் கொள்கையை நெறிப்படுத்தும் பொறுப்பிலிருந்த இந்திரா காந்தி அம்மையார் இலங்கையில் தலையிடுவதென்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்தார். இரண்டு குறிக்கோள்களை அடையும் நோக்கில் இருமுனைச் செயற்திட்டத்தை அவரது ஆலோசகர்கள் வகுத்துக் கொடுத்தனர். ஒன்று வெளிப்படையானது, மற்றது மறைமுகமானது. வெளிப்படையாக சிறீலங்கா அரசுடன் இராஜதந்திர மத்தியஸ்துவ முயற்சிகளை மேற்கொள்வது. மறைமுகமாக தமிழரின் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கத்திற்கு உதவி செய்து அதனைக் கட்டி எழுப்புவது. ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டதாக இத்திட்டம் அமையப் பெற்ற போதும், வஞ்சகக் குணமுடைய கிழட்டு நரி ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டு வருவதற்கு இதுவே சிறந்த வழியென இந்திய அரசு கருதியது.

இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நியச் சக்திகளை வெளியேற்றி, இலங்கையை இந்தியாவின் ஆதிக்க வியூகத்திற்குள் கொண்டுவருவது முதலாவது

குறிக்கோள். சிறீலங்கா மீது தமிழ்ப்புரட்சி இயக்கங்களின் | இராணுவ அழுத்தத்தை அதிகரித்து அதன் வாயிலாகத் தமிழரின் இனப் பிரச்சினைக்குப் பேச்சுக்கள் மூலம் தீர்வு காணுமாறு ஜெயவர்த்தனா அரசை நெருக்குவது இரண்டாவது குறிக்கோள்.

1983 ஜுலை 24ஆம் நாள், தமிழருக்கு எதிரான இனக்கலவரம் தலைதூக்கிய அன்றே திருமதி. இந்திரா காந்தியின் அரசியல் இராஜதந்திர முயற்சிகள் ஆரம்பமாகின. தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட வன்முறையின் கோரத்தாண்டவம் இந்திரா அம்மையாரை ஆழமாகப் பாதித்தது. நிலைமையை அறிந்ததும் உடனடியாகவே ஜெயவர்த்தனாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியைத் தெரிவித்துக்கொண்டார். அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சு ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது.

தனது கொல்லைப்புறத்தில் இத்தகைய கொடுமைகள் நீடித்தால் இந்தியாவால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அந்த அறிக்கையில் ஒரு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஜுலை 26 அன்று இனக்கலவரம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்தபோது இந்திரா அம்மையார் இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு. நரசிம்மராவ் அவர்களைத் தனது விசேட தூதுவராகக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். இந்திய அமைச்சரை வெகு மரியாதையுடன் வரவேற்ற ஜெயவர்த்தனா தனது இனவாதப் பார்வையில் நிலைமையை திரிவுபடுத்தி விளங்கப்படுத்தினார். இந்த இனக் கலவரத்தை எவ்வாறு சிங்கள அரசு முன்னின்று நடத்தியது என்ற உண்மையை அவர்மூடி மறைத்தார். எனினும் இந்திய அரசின் அதிருப்தியையும் அங்கலாய்ப்பையும் திரு நரசிம்மராவ் தெரிவிக்கத் தவறவில்லை.

தமிழரின் இனப்பிரச்சினை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திய இந்திய அமைச்சர், இவ்விவகாரத்தில் இந்தியா மத்தியஸ்துவம் வகிப்பதைத் திருமதி காந்தி விரும்புவதாகவும் கூறினார். இந்திய அரசுடன் பகைத்துக் கொள்வதை விரும்பாத ஜெயவர்த்தனா இந்திய விஜயத்தை அடுத்து, இந்தியாவின் மத்தியஸ்துவராக திரு. கோபாலசாமி பார்த்தசாரதி அவர்கள் திருமதி காந்தியால் நியமிக்கப்பட்டார்.

திரு. ஜி. பார்த்தசாரதி ஒரு தமிழ்ப் பிராமணர். நேரு குடும்பத்துடன் நெருக்கமானவர். இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் திருமதி காந்திக்கு மூத்த ஆலோசகராக விளங்கியவர். சாணக்கியம் மிக்க தலைசிறந்த இராஜதந்திரி. இந்தியக் கொள்கைத் திட்டமிடும் கவுன்சிலின் அதிபராகப் பணிபுரிந்த திரு பார்த்தசாரதி அமைச்சரவை அந்தஸ்தையும் பெற்றவர். புதுடெல்லி, தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பிரபல்யம் பெற்றவர். திரு பார்த்தசாரதியிடம் பரந்த உலகப் பார்வையும், தெளிந்த அரசியல் ஞானமும் இருந்தது. ஈழத்தமிழரின் நலனிலும் அரசியல் அபிலாசையிலும் அவர் அக்கறை கொண்டவர். இப்படியான சிறந்த பண்புளுடைய ஒரு மனிதரை இந்தியாவின் மத்தியஸ்தராக நியமித்ததன் மூலம் தமிழீழத்திலும், தமிழ்நாட்டிலும் குமுறிக் கொண்டிருந்த தமிழ் மக்களை ஓரளவுக்கேனும் திருப்திப்படுத்தலாம் என இந்திரா காந்தி அம்மையார் எண்ணினார். 1983 ஆகஸ்ட் 25 அன்று இலங்கைக்கு விஜயம் செய்த திரு.பார்த்தசாரதி தனது கடினமான மத்தியஸ்துவ முயற்சியை ஆரம்பித்தார்.

எனினும், ஒரு தமிழ்ப் பிராமணர் இந்தியாவின் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டதைச் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் விரும்பவில்லை. சினம் கொண்ட பௌத்த பிக்குகள் பார்த்தசாரதியின் சமரச முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முனைந்தனர். இருப்பினும் தனது மத்தியஸ்த முயற்சியில் சளைக்காத பார்த்தசாரதி சிங்கள-தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து, நீண்ட கலந்துரையாடல்களை நிகழ்த்தி அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்தார். அத்தோடு தமிழரின் இனப்பிரச்சினையின் அடிப்படைகளை ஆழமாகப் படித்தறிந்தார். இறுதியாக மாகாண அடிப்படையில் பிரதேச வாரியான நிர்வாக கட்டமைப்புகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் வழங்கும் ‘Annexure C’ என்ற தீர்வுத் திட்டத்தை உருவாக்கினார்.

அரச அதிபர் ஜெயவர்த்தனாவும் அவரது மூத்த அமைச்சர்களும் பார்த்தசாரதியின் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தனர். ஆயினும் இந்திய அரசின் அழுத்தம் காரணமாக சகல கட்சி மாநாட்டைக் கூட்டுவித்து தீர்வு யோசனைகளை விவாதிப்பதற்கு இணங்கினார்கள். இது ஒரு அர்த்தமற்ற அரசியல் நாடகமாகவே முடியும் எனத் தெரிந்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் சகல கட்சி மாநாட்டில் பங்குபற்றத் தயக்கத்துடன் இணங்கினர். 1984 ஜனவரி 10 அன்று ஆரம்பமாகிய அனைத்துக் கட்சிகளின் மகாநாடு, 37 அமர்வுகளை நடத்தி, கிட்டத்தட்ட ஒரு ஆண்டுவரை நீடித்தது. இக்கூட்டத் தொடர்களின்போது, கட்சியோடு கட்சி மோதவிட்டு, தீவிரவாத புத்த பிக்குகளைத் தூண்டிவிட்டு இம்மாநாட்டை குழப்பிவிட ஜெயவர்த்தனா சதி முயற்சிகளில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், தமிழருக்கு அதிகாரப் பரவலாக்கம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தது. இதைச் சாக்காக வைத்து, அரசியற் கட்சிகளிடையே இணக்கப்படு தோன்றவில்லை எனக்கூறி சமரச முயற்சியிலிருந்து சறுக்க முனைந்தார் ஜெயவர்த்தனா. 1984 டிசம்பர் மாதம் 26 ஆம் நாள் பார்த்தசாரதியின் தீர்வுத் திட்டத்தைக் கைவிடுவதென அமைச்சரவை முடிவெடுத்தது. அத்துடன் தமிழரின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திரா காந்தி அம்மையார் எடுத்த இராஜதந்திர மத்தியஸ்துவ முயற்சி தோல்வியில் முடிந்தது.

மத்தியஸ்த முயற்சி மூலமாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது சாத்தியமா என்பதில் ஆரம்பத்திலிருந்தே திருமதி காந்திக்கு சந்தேகம் இருந்தது. ஜெயவர்த்தனா ஒரு கடும்போக்காளர் என்பதும், தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு அவர் அனுதாபம் காட்டவில்லை என்பதும் திருமதி காந்திக்குத் தெரியும். தமிழரின் இனப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வைத்தான் ஜெயவர்த்தனா விரும்புகிறார் என்பதும் அவருக்கு நன்கு தெரியும்.

ஜெயவர்த்தனாவால் தமக்குள்ள நம்பிக்கையீனம் பற்றி இந்திராகாந்தி அம்மையார் திரு பார்த்தசாரதிக்கு ஏற்கனவே விளக்கமாகக் கூறியிருந்தார். ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்போவதில்லை என்றும் ஆகவே, சமாதான மத்தியஸ்துவ முயற்சி தோல்வியில் முடியலாமென்றும் ஆரம்பத்திலிருந்தே பார்த்தசாரதிக்கு தெளிவுபடுத்தியிருந்தார். இப்படியான தூரநோக்குடனேயே இருமுனைச் செயற்திட்டத்தை வகுத்துத் தமிழ் விடுதலை அமைப்புகளின் ஆயுதப் போராட்ட பலத்தை வலுப்படுத்த தீர்மானித்தார்.

ஜெயவர்த்தனாவின் இராணுவ அணுகுமுறைப் போக்கை உடைத்தெறியவே தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்கு உதவ எண்ணினார். தமிழ் விடுதலை அமைப்புகளுக்கு இராணுவ உதவி வழங்கும் இரகசியத் திட்டத்திற்கு முவர் அடங்கிய குழு ஒன்றே பொறுப்பாகச் செயற்பட்டது. இவர்கள் மூவரும் திருமதி காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். இந்திய பாதுகாப்பு, புலனாய்வு நிறுவனங்களில் உயர் பதவிகள் வகிப்பவர்கள். இந்த இரகசியத் திட்டத்தின் மூலம் பிதாவாகக் கருதப்படுபவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான திரு. ஆர், என். ராவ். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு திரு. கிரிஷ் சக்சேனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர் இந்திய வெளியகப் புலனாய்வுத்துறையின் (ரோவின்) தலைவராகப் பணிபுரிந்தவர். மூன்றாவது முக்கிய நபர் திரு சங்கரன் நாயர் ஆவார். இவர் பிரதம மந்திரியின் செயலகத்தின் ஆணையாளராகப் பணி புரிந்தவர். திருமதி. காந்தியின்கீழ் செயற்பட்ட இம்மூவர் அடங்கிய குழுவை ‘மூன்றாவது எஜென்சி’ எனவும் அழைப்பதுண்டு. இந்தியத் தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் இந்தக் குழுவே முக்கிய முடிவுகளை எடுத்தது.

ஒருபுறம் திரு. பார்த்தசாரதியை பகிரங்கமான மத்தியஸ்துவ இராஜதந்திரப் பணியில் இறக்கிவிட்ட அதே சமயம், மூன்றாவது ஏஜென்சி மூலமாக இரகசியமான இராணுவப் பயிற்சித் திட்டத்தையும் முடுக்கிவிட்டார் இந்திரா அம்மையார். தமிழ் விடுதலை அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கும் மிகவும் சர்ச்சைக்குறிய பணியில் இந்தியப் புலனாய்வுத் துறையான ‘றோ’ இறங்கியது.

அன்ரன் பாலசிங்கம்

அடுத்து வரும் பதிவு : விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.