இலங்கையில் இந்திய தலையீடு

In போரும் சமாதானமும்

அத்தியாயம் : 2

இலங்கையில் இந்திய தலையீடு

கருப்பு ஜுலை கலவரமானது, இலங்கையில் இந்திய அரசு தலையீடு செய்தவற்குத் தேவையான இடைவெளியையும் பொருத்தமான புறநிலையையும், தகுந்த நியாயப்பாட்டையும் உருவாக்கிக் கொடுத்தது எனலாம்.

1983 ஜுலை இனக் கலவரத்தோடு ஆரம்பமாகிய இந்தியத் தலையீடு, 1990 மார்ச் மாத இறுதியில், இந்திய அமைதி காக்கும் படையின் விலகலுடன் முடிவுக்கு வந்தது. இத்தலையீடு, இந்திய-இலங்கை உறவில் மிகவும் நெருக்கடியான சர்ச்சைக்குரிய காலகட்டமாக அமைகிறது. ஏழு ஆண்டு கால நீட்சியைக் கொண்ட இந்தியத் தலையீடானது, வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுத்து, அரசியல், இராணுவ, கேந்திரப் பரிமாணங்களைக் கொண்ட மிகவும் சிக்கலான விவகாரமாக மாறியது..

அரசியல் மட்டத்தில் பார்க்கப் போனால், பாதுகாப்பற்ற அப்பாவித் தமிழ் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு வன்முறையைத் தடை செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானத் தலையீடாக இது அமைந்தது. இந்த அரசியல்-இராஜதந்திர முயற்சியானது, நான்கு ஆண்டு காலமாக நீடித்த ஒரு மத்தியஸ்த விவகாரமாக மாறி, ஈற்றில் இந்திய-இலங்கை உடன்படிக்கையாக முடிவுற்றது. தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரப் பரவலாக்கத் திட்டம் ஒன்றையும் இந்த உடன்படிக்கை கொண்டிருந்தது.

இராணுவ மட்டத்தில் நோக்குமிடத்து, சிங்கள அரசுக்கு எதிரான தமிழரின் ஆயுதப் போராட்ட இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கு இரகசியமாக உதவி புரிந்தமையும் இந்தியத் தலையீட்டின் ஒரு அம்சமாக அமைந்தது. தமிழரின் தேசிய இனப் பிரச்சனைக்குச் சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தீர்வுகாண வழிவகை செய்யுமாறு ஜெயவர்த்தனா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடனேயே தமிழ்ப் போராளி அமைப்புகளுக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியையும் ஆயுத தளபாடங்கைளயும் வழங்கியது.

பின்னைய காலகட்டத்தில், விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையவும், இந்திய-இலங்கை ஒப்பந்த விதிகளை நிறைவு செய்யவும் இந்திய அமைதிப் படைகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்தியத் தலையீடு நேரடியான இராணுவ மோதலாக வடிவம் எடுத்தது.
புவியியல்-கேந்திர மட்டத்தில் பார்த்தால், இந்தியத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், அந்நிய நாசகாரச் சக்திகள், அவ்வேளை இலங்கையில் ஊடுருவி நின்றதாக இந்திய அரசு அஞ்சியது.

இந்தியாவின் புவியியல்-கேந்திர உறுதிநிலைக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய இந்த அந்நியச் சக்திகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும் இந்திய தலையீட்டின் ஒரு முக்கிய நோக்கமாக இருந்தது. இந்திய-இலங்கை உடன்பாட்டுடன் இணைந்ததான கடிதப் பரிமாற்றத்தில் இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் விதிகளை உள்ளடக்கியதன் மூலமாக இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.

பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாகப் பெரிய எடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இத்தலையீடானது இறுதியில் இந்திய வெளிவிவகாரக் கொள்கைக்கும், இராஜதந்திர முயற்சிக்கும், ஏற்பட்ட பெரியதொரு தோல்வியாகவே முடிந்தது. இந்திய-இலங்கை உடன்பாடும் சரி, இந்திய அமைதிப் படைகளின் செயற்பாடும் சரி, தமிழரின் இனப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கவில்லை. வெவ்வேறு காரணங்களின் நிமித்தம், இந்திய-இலங்கை உடன்பாட்டையும், தமிழர் தாயகத்தில் இந்தியப் படைகளின் இருத்தலையும் தமிழர்களும் சிங்களவர்களும் விரும்பவில்லை.

இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைவதற்கு எடுத்த முயற்சி ஒரு கெரில்லாப் போராக வெடித்தது. இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்கள் காரணமாகப் பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தமிழரின் சொத்துக்கள் பெருமளவு அழிக்கப்பட்டன. இந்திய அமைதிப் படைகள் ஆக்கிரமிப்பு, இராணுவமாக மாறி, கொடிய போர்க்குற்றங்களைத் தமிழர்மீது இழைத்தது. இந்தியாவைத் தமது இரட்சகராகவும் பாதுகாவலராகவும் பூசித்து வந்த தமிழீழ மக்களுக்கு இந்திய இராணுவம் இழைத்த கொடுமைகள் ஆழ்ந்த அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் கொடுத்தது.

இந்திய-இலங்கை உடன்பாடு செய்யப்பட்டதையும் தமிழர் தாயகத்தில் இந்தியப் படைகள் தரித்து நின்றதையும் எதிர்த்துத் தென்னிலங்கையில் ஒரு கொந்தளிப்பான நிலைமை உருவானது. இலங்கை மண்ணில் இந்தியப் படைகள் ஆக்கிரமித்து நின்றதை எதிர்த்துத் தீவிரவாதக் கம்யூனிஸ்ட் இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் குதித்தது. 1988இல் ஜனாதிபதி பிரேமதாசா ஆட்சிப்பீடம் ஏறியதை அடுத்து, அவர் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இந்தியப் படைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டினார்.

இதனால் இந்திய-இலங்கை உறவில் பகைமையும் முறிவும் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. இறுதியில், திரு.வி.பி.சிங் அவர்கள் இந்தியப் பிரதமராகிய வேளையில் இந்தியப் படைகளைத் திருப்பி அழைக்க இந்திய அரசு முடிவெடுத்தது. 1990 மார்ச் மாதம் இந்திய இராணுவத்தின் கடைசிப் படையணிகள் இலங்கை மண்ணைவிட்டு வெளியேறின. அத்துடன் மிகவும் சர்ச்சைக்கு ஆளாகியிருந்த இந்தியத் தலையீட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்தது. இந்தக் கசப்பான, அவமானத்திற்குரிய வரலாற்று அனுபவம் காரணமாக இலங்கையின் இனப் பிரச்சனையில் நீண்ட காலமாகவே ஒரு தலையிடாக் கொள்கையை இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.

இலங்கையில் இந்தியத் தலையீடு குறித்து, பல்வேறு வட்டாரங்களிலிருந்து பல்வேறு வகையான கண்டன ஆய்வுகள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவில் இருந்தே மிகவும் மோசமான கண்டனக் குரல்கள் எழுந்தன. அயல் நாட்டினது உள்நாட்டு விவகாரத்தில் அவசியமின்றித் தலையிட்டு, உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரைப் பெற்றுக் கொடுத்ததாகவும், இதனால் பாரத நாட்டின் அணிசேராக் கொள்கைக்குப் பாரதூரமான பங்கம் ஏற்பட்டதாகவும் பல இந்திய அரசியல் ஆய்வாளர்களும், கல்விமான்களும் ஊடகவியலாரும் கண்டன விமர்சனங்களை முன்வைத்தனர்.

இன அழிப்பை நோக்காகக் கொண்ட கலவரத்தை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதால் இந்தியத் தலையீடு தவிர்க்க முடியாதது எனச் சிலர் வாதிட்டனர். எனினும் இத்தலையீடு அரசியல், இராஜதந்திர மட்டத்தில் அமைந்திருக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.

அமைதி காக்கும் பணி என்ற சாக்கில் இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டதை இவர்கள் வன்மையாகக் கண்டித்தனர். இந்திய மத்தியஸ்துவ முயற்சி தோல்வியில் முடிந்தமைக்கு விடுதலைப் புலிகளின் விட்டுக்கொடாத கடும்போக்கையும் பிரேமதாசா அரசின் நன்றி கெட்டதுரோகத்தையும் மூலகாரணமாகச் சுட்டிக் காட்டின இந்திப் பத்திரிகைகள். நட்புறவுடைய ஒரு மக்கள் சமூகத்துடன் நல்லுறவு பேணி, அமைதி காக்க வேண்டிய இந்தியப் படைகள் எதற்காக ஒரு போரை நடத்தி தமது தரப்பில் பெரும் உயிரிழப்பைத் தேடிக் கொண்டார்கள் எனத் தமது ஆய்வுகளில் சுயவிசாரணை செய்தார்கள் இந்தியத் தளபதிகள்.

சிங்கள தேசத்திலிருந்தும் பல கண்டன விமர்சனங்கள் பெரும்பாலும் சிங்களப் பத்திரிகையாளர்களால் எழுதப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரைகள் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவையாக அமைந்ததுடன் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டத் தவறியதற்காக இந்திய இராணுவத்தைக் கடிந்து கொண்டன. ‘இலங்கையில் இந்தியத் தலையீடு’ என்ற தலைப்பில் ரோகன் குணரத்தினா எழுதிய புத்தகத்தை ஒரு கனமான வரலாற்று ஆய்வு நூலாகக் கொள்ள முடியாது. இந்தியப் புலனாய்வுத் துறையினர் இலங்கை அரசுக்கு எதிராக நிகழ்த்திய நிழல் யுத்தம் பற்றியே அவரது நூல் விபரிக்கிறது.

தமிழர் தரப்பில் வெளியாகிய விடுதலைப் புலிகளின் விமர்சன எழுத்துக்கள் இரு அம்சங்களைக் கண்டித்தன. இவை இரண்டும் தமிழீழ மக்களின் வாழ்வையும் அவர்களது அரசியல் எதிர்காலத்தையும் வெகுவாகப் பாதித்த விடயங்களாகும். ஒன்று தமிழ் மக்களுக்கு எதிராக இந்திய இராணுவம் புரிந்த கொடுமைகளைக் கண்டித்தது. இரண்டாவது, தமிழரின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வாக இந்திய-இலங்கை உடன்பாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டம். இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் இயக்கம் பல ரகமான விமர்சன எழுத்துக்களை வெளியிட்டது. ‘சாத்தானின் படைகள்’ என்ற தலைப்பில், தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவம் புரிந்த அட்டூழியங்களை விபரித்து எமது அமைப்பு நூல் ஒன்றை வெளியிட்டது.

ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களையுடைய இப்பெரிய நூலில், இந்தியத் தலையீட்டைக் கண்டிக்கும் ஆய்வுக்கட்டுரைகள், இந்தியப் படைகள் புரிந்த கொடுமைகள், அந்தக் கொடுமைகளை நேரில் கண்டவர்களின் சாட்சி விபரணைகள், பாலியல் வன்முறைக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளானோரின் வாக்குமூலங்கள், பாதிக்கப்பட்டோரின் உறுதி ஆணைப் பத்திரங்கள், கொடுமைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் ஆகியன அடங்கிய இந்த நூலுக்கு நான் நீண்டதொரு முன்னுரை எழுதினேன். இந்திய அமைதிப் படையினரின கொடிய போர்க்குற்றங்களையும், பாரதூரமான மனித உரிமை மீறல்களையும் இந்தத் தகவல் களஞ்சிய நூல் அம்பலப்படுத்தியது.

இந்திய – இலங்கை உடன்பாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தையும் திறனாய்வு செய்து, அத்திட்டத்திலுள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி, விடுதலைப்புலிகள் அமைப்பு கட்டுரைகளையும் பிரசுரங்களையும் வெளியிட்டது. இந்திய அமைதிப் படைகளின் அட்டூழியங்களைத் தகுந்த சான்றுகளுடன் எமது இயக்கம் அம்பலப்படுத்திய போதும், இந்தியத்தரப்பு அதனை நிராகரித்தது, ‘சாத்தானின் படைகள்’ என்ற நூலை விமர்சித்த ஒரு இந்திய இராஜதந்திரி, அதனை இந்திய இராணுவத்திற்கு எதிரான விடுதலைப் புலிகளின் விசமப்பிரச்சாரம் என்று வர்ணித்திருக்கிறார்.

புதிர்கள் நிறைந்த சிக்கலான வரலாற்றைக் கொண்ட இந்திய தலையீட்டில் விடுதலைப் புலிகளின் பங்கு முக்கியமானதாகும். திருநெல்வேலியில் சிங்களப் படையினர்மீது கெரில்லா தாக்குதல் நடத்தியதன் விளைவாகவே இனக்கலவரம் வெடித்ததென்றும் அக்கலவரத்தைச் சாக்காக வைத்து இந்தியா இலங்கையில் தலையிட்டது என்றும் கூறி முழுப்பழியையும் விடுதலைப்புலிகள் மீது சுமத்த சிறீலங்கா அரசு முனைந்தது. இது முற்றிலும் தவறான கண்ணோட்டம். பேரழிவாக வெளிப்பாடு கண்ட ஒரு இனப் படுகொலைக் கலவரத்தை விடுதலைப்புலிகளின் ஒரு கெரில்லாத் தாக்குதலுக்குள் மூடிமறைத்துவிட முனைவது தவறான மதிப்பீடாகும்.

இந்தியாவின் தலையீடு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் பூலிகள் எத்தகைய பங்கு வகித்தார்கள் என்பதைப் பார்ப்போம். கருப்பு ஜுலை இனக்கலவரத்தை அடுத்து இந்திய அரசு ஏற்பாடு செய்த இரகசிய இராணுவப் பயிற்சித் திட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமும் பங்குபற்றியது. இதைத்தொடர்ந்து இந்தியா அரங்கேற்றிய அரசியல் இராஜதந்திர சதுர ஆட்டத்தில் எமது விடுதலை அமைப்பும் பங்குகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. ஈழத் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் இந்திய அரசு மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகள் அனைத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பு பங்குகொண்டது.

இந்தியத் தலையீட்டின் இறுதிக் கட்டத்தில் இந்தியா எமது விடுதலை அமைப்புமீது யுத்தப் பிரகடனம் செய்து ஆயுதங்களைக் களைய முற்பட்டபோது இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் போர் வெடித்தது. இந்தப் போர் தீவிரமடைந்து நீடித்துச் சென்றவேளை எமது அமைப்பு சிறீலங்கா அரசுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்திய இந்தியப் படைகளை தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்ற வழி சமைத்தது. இப்படியாக எமது விடுதலை இயக்கம், இந்தியத் தலையீடு நிகழ்ந்த கால விரிப்பில், பல்வேறு சிக்கலான பங்குகளை வகித்தது. எனினும், எமது இயக்கம் எத்தனையோ சவால்களுக்கும் ஆபத்துக்களுக்கும் முகம்கொடுத்து வெற்றிப் பாதையில் முன்னேறியது. அரசியல், இராஜதந்திர, இராணுவப் பரிமாணங்களைக் கொண்ட இந்தியத் தலையீடு இறுதியில் படுதோல்வியைத் தழுவிக்கொண்டாலும், இதில் விடுதலைப் புலிகள் இயக்கம் மையமான பங்கு வகித்திருப்பதாலும், இத்தலையீடு பற்றிய இந்திய தரப்பு ஆய்வுகள் எமது அமைப்புமீது கண்டன விமர்சனங்களை முன்வைத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றமில்லை.

இக்கண்டன ஆய்வுகளில் பெரும்பாலானவை நேர்மையற்றவை. பக்க சார்புடையவை. எமது விடுதலை அமைப்பின் அரசியற் குறிக்கோளையும் இலட்சிய உறுதியையும் சரிவரப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட விமர்சனங்கள் இவை. நெருக்கடிகள் மிகுந்த அந்த வரலாற்றுச் சூழலில், எமது இயக்கம் உறுதி தளராது எமது மக்களின் நலன்களுக்கும் அரசியல் அபிலாசைகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்தது. பல சந்தர்ப்பங்களில் பேரழிவை எதிர்கொண்ட போதும் எமது இயக்கம் தனது இலட்சியப் பாதையிலிருந்து விலகவில்லை .

இலங்கையில் இந்தியத் தலையீடு நிகழ்ந்த மிகக் கொந்தளிப்பான வரலாற்றுக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் எதிர்கொண்ட சம்பவங்களையும், முகம்கொடுத்த சவால்களையும், மேற்கொண்ட தீர்மானங்களையும் இப்பகுதியில் விபரித்துக் கூற விரும்புகிறேன். எமது இயக்கத்தின் பிரதிநிதியாகவும், ஆலோசகராகவும் முக்கிய நிகழ்வுகளில் நேரடியாகப் பங்குகொண்ட அனுபவத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை மறுத்துரைத்து, உண்மை நிலையை எடுத்து விளக்குவதே எனது குறிக்கோள். இந்திய புலிகள் உறவு பற்றிய உண்மைச் சம்பவங்களைக் கால வரிசையில் தொகுத்து, செம்மையான முறையில் வரலாற்றுப் பதிவு செய்வது அவசியமெனக் கருதுகிறேன்.

அன்ரன் பாலசிங்கம்

அடுத்து வரும் பதிவு : இலங்கையில் அந்நிய ஊடுருவல்

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.