வன்முறைப் புயல் வீசிய ‘கறுப்பு ஜுலை’ பாகம் – 02

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:01

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

வன்முறைப் புயல் வீசிய ‘கறுப்பு ஜுலை’ பாகம் – 02

தமிழர் போராட்டத்தை இராணுவ அடக்குமுறையால் நசுக்க வேண்டும் என்ற கொடிய கொள்கையைப் பலமாகப் பற்றிக்கொண்டிருந்தவர்கள், இத்தகைய தலைமையைக் கொண்டிருந்த ஆட்சி பீடத்துக்கு, தமிழருடைய ஆயுதக் கிளர்ச்சி வளர்ந்து சிங்களப் படையினரின் உயிர்களைப் பறிப்பது தாங்க முடியாத அவமானமாகப்பட்டது. இராணுவத்திடம் இருந்து கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை மின்னல் வேகத்தில் வரலாம் என்ற பதற்ற, அங்கலாய்ப்போடு யாழ்ப்பாண மக்கள் எதிர்பார்த்து நின்றார்கள்.

எதிர்பார்த்தபடியே, மறுநாள் திருநெல்வேலியிலும் கந்தர் மடத்திலும் சீற்றச் சன்னதம் ஆடிய அரச படையினரால் 60 தமிழ்ப் பொதுமக்கள் ஈவிரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற இனக்கலவரத் தாக்குதல்களோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவ வெறியாட்டம் சிறு அளவிலானது என்றே கூறலாம். தலைநகரில் தொடங்கிய இனக்கலவரத் தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவி, இதுகாறும் நடைபெறாத அளவுக்குத் தமிழ் உயிர்களையும் உடமைகளையும் அழித்து ஒழித்தன.

கடந்த காலங்களில்கூட, இனக்கலவர வன்முறைத் தாக்குதல்களுக்குத் தமிழ் மக்கள் அவ்வப்போது முகம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால். 83 ஜுலையில் இடம்பெற்ற இன அழிவு முன்பு நிகழ்ந்த எதனுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு கொடுமையானதாக, குரூரமானதாக, மிகப் பெரியதாக அமைந்தது. விடுதலைப் புலிகளால் சிங்களப் படையினர் கொல்லப்பட்டதை ஒட்டி, திடீரென எழுந்த பழிவாங்கும் உணர்ச்சியாக இந்த இனக் கலவரம் காணப்படவில்லை. மாறாக இனக்கொலை என்று வர்ணிக்கும் அளவுக்கு, அரசினால் ஏற்கனவே திட்டம் வகுக்கப்பட்டு, தருணம் பார்த்து நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாக 83 ஜுலை வெறியாட்டம் காணப்பட்டது.

திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பின்பு உருவான பதற்ற நிலையை அரசு முடிச்சுப்போட்டுக் கையாண்ட விதம், அதன் விஷப் போக்கைக் கோடிட்டுக் காட்டியது. இன வெறியைத் தூண்டும் செய்தி அறிக்கைகள் மறுநாள் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக தடித்த எழுத்தில் வெளிவந்தன. இவை சிங்கள மக்களிடையே கொதிப்புணர்வைக் கிளறிவிட்டன. “வீழ்ந்த வீரர்கள்” பதின்மூன்று பேரும், கொழும்பு பிரதான மயானமான களத்தையில் பூரண இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவர் என்று அரசு அறிவித்தது. எண்ணுக்கணக்கற்ற சிங்களவர், தலைநகருக்குத் திரண்டு வர இது வழிவகுத்தது. ஆனாலும் அறிவித்தபடி மரணச் சடங்குகள் நடக்கவில்லை .

இறந்த இராணுவத்தினரின் உடலங்கள் மயானத்துக்கு வந்து சேர்வது தாமதம் ஆயிற்று. இதன் பின், சம்பந்தப்பட்ட படையினரின் உடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப் போவதாக அரசு அறிவித்தது. அடக்கத்துக்கு வந்து சேர்ந்த மக்களிடையே இது மனக் குழப்பத்தையும் பொறுமையின்மையையும் தோற்றுவித்தது. நேரம் செல்லச் செல்ல, பொறுமை எல்லை மீறத் தொடங்கியது. மாலையில் இருளத் தொடங்கியதும் சனக் கும்பல் கொதித்தெழுந்து வன்செயலில் இறங்கியது, கலவரம் இரத்தப் பிரளயமாக வளர்ந்தது. தமிழர்களைப் படுகொலை செய்வதும், சொத்துக்களை நிர்மூலமாக்குவதுமாகக் கொடும் செயல்கள் தொடர்ந்தன.

இன வெறியாட்டம் தட்டிக் கேட்பாரின்றி நாள் கணக்கில் இழுபட்டது. தலைநகரில் தொடங்கிய இந்தக் குரூர வெறியாட்டம் அதே வடிவங்களில் தென்னிலங்கை மாவட்ட நகரங்களுக்கும் அலையாகப் பரவியது. தமிழர் மரணமும் தமிழர் சொத்துடமை அழிப்பும் எங்கும் தலைவிரித்தாடியது. பாதுகாப்பு எதுவுமற்ற நிலையில் மூவாயிரம் தமிழ் மக்கள் காட்டுமிராண்டித் தனமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். பெரும்பாலான தமிழர்கள் சிங்களக் காடையர் கும்பல்களினால் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள், அல்லது அடித்துக் கொல்லப்பட்டார்கள். பல தமிழ்க் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப்பட்டன. தமிழருக்குச் சொந்தமாயிருந்த ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், கட்டிடங்கள், கைத்தொழில் வளாகங்கள், சினிமாக்கள், எரிபொருள் நிலையங்கள்- எரித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன.

கொழும்பு நகரில் 150,000 தமிழர்கள் இரவோடிரவாக வீடு வாசல் இழந்து அகதிகள் ஆனார்கள்.
கலகக்காரர்கள், கண்மூடித்தனமாகவோ தறிகெட்டோ தாக்கவில்லை. அவர்களது தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டவையாக அமையப் பெற்றிருந்ததாகப் பார்வையாளர்கள் தெரிவித்தனர். கலவரக் கும்பல்களுக்குத் தமிழரின் வதிவிடங்கள், சொத்துக்கள், உடமைகள் தொடர்பான அச்செட்டான விபரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த இனக் கலவரத்தில் அரச அதிகாரிகளின் கறைபட்ட கை கலந்திருந்தது என்பது தெட்டத் தெளிவாகியது. தலைநகரில் மட்டும், நூற்றுக்கும் அதிகமான தமிழரின் தொழிற்சாலைகளும் வர்த்தக நிலையங்களும் சாம்பல் மேடாக்கப்பட்டிருந்தன.

கொழும்பில் இனவெறிக் கலவரத்தை நேரில் கண்காணித்த பிரித்தானிய ‘பைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையாளர் நிலைமையைப் பின்வருமாறு வர்ணித்தார்.

“வன்செயல், கொடியதாகவும் இரத்தக் களரியாகவும் தோற்றமளித்தது. ஏனைய ஆசிய நாடுகளின் கலவரங்களில் இருந்து இந்தக் கலவரத்தில் காணப்பட்ட தெளிவான வேறுபாடு என்னவென்றால், குறித்த வர்த்தகத் தலங்களை, கலகக் கும்பல்கள் அச்செட்டாகக் கண்டு பிடித்தமையே. கொழும்பிலே வீதிக்கு வீதி சென்ற கலகக்கும்பல்கள், தமிழருக்குச் சொந்தமான தொழிற்சாலைகளையும் வீடுகளையும் மட்டுமே தாக்கியமை யாகும்.

அவர்கள் கவனமாக தேடித்தேடித் திரிந்தது ஏனென்றும் இப்போது புரிகிறது. ஒவ்வொரு வீதியிலும் குறித்த வர்த்தக வளாகம் தீ மூட்டப்பட்டிருக்கும். அடுத்து அமைந்திருக்கும் வளாகம் எந்தப் பாதிப்பும் இன்றி அப்படியே பத்திரமாக இருக்கும். அரச படைகளும் காவல்துறையினரும் ஒன்றில் கலகக்காரருடன் சேர்ந்து கொண்டார்கள், அல்லது பராக்குப் பார்த்த வண்ணம் வாளா நின்றார்கள்” (பைனான்சியல் டைம்ஸ், 1983 ஆகஸ்ட் 12).

கொழும்புத் தலைநகரில் தமிழர்களது பொருளாதார அடித்தளத்தை நாசம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகவே இந்த இனக்கலவரம் அமைந்தது எனலாம். இக்கலவரம் தமிழின அழிப்பையும் இலக்காகக் கொண்டிருந்தது. ஏனென்றால், தமிழர் என்ற தேசிய இன அடையாளத்தைக் குறிவைத்தே தமிழர்களின் உயிர், உடமைகள் அவர்களது பொருளாதார வாழ்வு ஆகியன அழிக்கப்பட்டன.
நாடு அடங்கிலும் தலைவிரித்தாடிய இனக் கலவர வன்செயல்கள் ஆறு நாட்கள் வரை தொடர்ச்சியாக நீடித்தன. ஊரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் அதனைச் செயற்படுத்த சிங்கள ஆயுதப் படைகள் மறுப்புத் தெரிவித்தன.

தமிழர் வரலாற்றின் இந்த இருள் படிந்த காலத்தில், மிகவும் அருவருக்கத்தக்க சம்பவம் ஒன்று ஜுலை 25 அன்று வெலிக்கடைச் சிறையில் இடம் பெற்றது. சிங்களக் கைதிகள் சிறை அதிகாரிகளுடனும், சிறைக் காவலருடனும் கூட்டுச் சேர்ந்து, சிறைக்கூண்டுகளைத் தாக்கி உடைத்து 35 தமிழ்க் கைதிகளைக் கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றனர். சிங்களத் சிறைக் குற்றவாளிகளால் குத்திக் கிழிக்கப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டு மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் நால்வர் முக்கியமானவர்கள். தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோர் ஒப்பற்ற விடுதலைப் போராளிகள், மாவீரர்கள். தமிழீழ விடுதலை அமைப்பின் (ரெலோ) மூலபிதாக்கள். இன்னொருவர் கலாநிதி ராஜசுந்தரம். காந்தியம் அமைப்பை உருவாக்கியவர் இவர்.
இனக் கலவரம் ஒருவாறு ஓய்ந்து அடங்கியது.

பாரிய குண்டுவீச்சினால் சிதைந்து போய், தீயினால் எரிந்து கருகிய நகரமாகக் கொழும்பு கோரக் காட்சியளித்தது. எலும்புக்கூடு போலக் கருகிய கட்டிடங்களின் மீதங்களில் இருந்து புகை மண்டலம் எழுந்து கொண்டிருந்தது. கலவர காலத்தில் வாய்மூடி மௌனியாக இருந்த சிங்கள அரசியல்வாதிகள் வாய் திறக்கத் தொடங்கியபோது, பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காக அனுதாபமான ஒரு வார்த்தைகூடத் தெரிவிக்கவில்லை. நேர்மாறாக, அரச அதிபர் ஜெயவர்த்தனா சிங்கள தேசத்திற்கு விடுத்த செய்தியில், திருநெல்வேலியில் வீழ்த்தப்பட்ட சிங்கள வீரர்களுக்காகக் கொடுக்கப்பட்ட நியாயபூர்வமான நஷ்ட ஈடாக தமிழருக்கு எதிரான கலவரக் கொடுமையை நியாயப்படுத்த முனைந்தார். தமிழ்த் தேசிய ஆன்மாவில் ஆழமான வடுவை ஏற்படுத்திய மாபெரும் துன்பியல் நிகழ்வாக இனக்கலவரம் முடிவுற்றது. என்றுமே சீர்செய்ய முடியாத அளவுக்கு இரு இனங்கள் மத்தியிலான உறவை, இக்கலவரம் நிரந்தரமாகப் பாதித்தது.

சிங்கள இனவாத அரசு அனைத்துலக சமூகத்தின் கண்டனத்திற்கு இலக்காகியது. காருண்ய மகான் புத்தரின் புண்ணிய பூமியில் மனிதத்துவமற்ற மிருகத்தனமான கொடுமைகள் எவ்வாறு சாத்தியமாயிற்று என உலகத்தின் மனச்சாட்சி திகைத்து நின்றது. இந்திய அரசு கடும் சினம் கொண்டது. இந்திரா காந்தி அம்மையார் தனது ஆழ்ந்த அங்கலாய்ப்பைத் தெரிவித்ததுடன், புதுடில்லி அரசின் ஆழ்ந்த அதிருப்தியை நேரில் எடுத்துக்கூறும் பொருட்டு வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவோ அவர்களையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாடு உணர்ச்சி வசப்பட்டுக் கொதித்து வெடித்தது. சென்னையிலும் தமிழ் நாட்டின் ஏனைய நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் குதித்தனர். இலங்கையிலுள்ள தங்களது தமிழ்ச் சகோதரர்களைக் காப்பாற்ற மத்திய அரசு இந்தியப் படைகளை அங்கு அனுப்ப வேண்டும் என தமிழ்நாட்டுத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

1983 ஜுலை மாத இனக் கலவரப் பேரழிவானது, மடைவாயை உடைத்தோடிய பெருவெள்ளம் போல, தமிழ் தேசிய உணர்வை எங்கும் பிரவாகம் எடுக்கச் செய்தது. நாடுகள்,கண்டங்களின் எல்லைகள் கடந்து இன உணர்வு ஈழத்தமிழர்கள் அனைவரையும் பற்றிக்கொண்டது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட தாங்கொணாக் கொடுமைகளை அறிந்து இரத்தம் கொதித்த தமிழ் இளம் சமூகம், ஆயுதம் தரித்த விடுதலைப் போரில் இணைந்து கொள்ள பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டனர். விடுதலைப் புலிகளின் படையணியில் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் இணைந்தனர். புலிகளின் தலைமையின் கீழ் ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்ற பல்லாயிரம் பேர் துடித்தார்கள்.

பிரபாகரன் இந்த நிலைமையை மிகச் சாதுரியமாகக் கையாண்டார். தமது அமைப்பின் நிதி வளத்தின் வரம்புக்கு அப்பால் தனது கெரில்லாப் படையின் எண்ணிக்கையைப் பெருப்பிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதேவேளை, தமிழ் நாட்டில் தலைமறைவாகச் செயலிழந்து ஒதுங்கியிருந்த போராளி அமைப்புகள், தங்கள் அணிக்கு ஆள் சேர்ப்பதற்கு இதை ஒரு பொன்னான வாய்ப்பாகக் கண்டன. செயற்படாதிருந்த இந்த அமைப்புகள் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களிடமிருந்து பெற்ற நிதி உதவியுடனும் புதிதாகச் சேர்ந்த உறுப்பினரோடும், திடீரெனப் புனர்வாழ்வு பெற்றுச் செயற்பட ஆரம்பித்தன.

கருப்பு ஜுலை இனக் கலவரத்தைக் கட்டவிழத்து விட்டதன் மூலம் சிங்கள இனவாத சக்திகள், தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்ததுடன், தனியரசுப் போராட்டத்திற்கான அக-புற சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுத்தன. இந்த இனக்கலவரம் தமிழீழ மக்களது அரசியல் வரலாற்றுப் பாதையை மாற்றி அமைத்தது மட்டுமன்றி, இந்தியத் தலையீட்டுக்கு வழி சமைக்கும் புறநிலையையும் ஏற்படுத்தியது.

மேற்கோள்கள் :
Arasaratnam. S. ‘Ceylon : The Modern Nation in Historical Perspective’, New Jersey, 1964. Basham.AL. ‘Prince Vijaya : Ariyanisation of Ceylon’ , Ceylon Historical Journal Vol. No.3.January 1952. De Silva. KM’A History of Sri Lanka’, Delhi 1981. Dharmapala, A.’History of an Ancient Civilization’ Colombo, 1902. Mendis.CC. ‘The Early History of Ceylon’, Colombo 1946. Pathmanathan. S. ‘The Kingdom of Jaffina’, Colombo 1978. Ponnambalam. S. ‘Sri Lanka: National Question and the Tamil Liberation Struggle’, Zed Books, London 1983. Thambiah. HW. ‘Sinhala Laws and Customs’, Colombo 1946.

அடுத்து வரும் பதிவு : இலங்கையில் இந்திய தலையீடு

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.