வன்முறைப் புயல் வீசிய ‘கறுப்பு ஜுலை’

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:01

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

வன்முறைப் புயல் வீசிய ‘கறுப்பு ஜுலை’

கொந்தளிப்பு மிக்க இனப் போராட்ட வரலாற்றிலே 1983 ஆம் ஆண்டானது வன்முறைப் புயல் தாண்டவமாடிய ஒரு காலகட்டம் எனலாம். ஒருபுறம் அரச அடக்குமுறை தீவிரமடைய, மறுபுறம் போராளிளின் எதிர்த் தாக்குதல்களும் உக்கிரமடைந்தன. வன்முறையும் அதற்கு எதிரான வன்முறையுமாக வன்செயல்கள் சுழல் வேகம் பெற்று ஈற்றில் பிரளயம் போன்ற இனக்கலவரம் வெடித்தது. இந்தக் கொடு நிகழ்வை ‘கறுப்பு ஜுலை’ என வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். பல ஆயிரம் தமிழர்கள் ஈவிரக்கமின்றிக் கொன்றொழிக்கப்பட்ட கொடிய மாதம் இது.

1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் சிங்கள அரசை அச்சுறுத்தும் சவாலாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இராணுவ அரசியல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. வடக்கில் தரித்திருந்த சிங்கள காவல்துறையினர் மீதும் ஆயுதப் படையினர்மீதும் தொடர்ச்சியான பல கெரில்லாத் தாக்குதல்கள் ஏவிவிடப்பட்டன. பெப்ரவரி 18ஆம் நாள், காவல்துறை ரோந்து அணி ஒன்று மீது பருத்தித்துறையில், நிகழ்ந்த பதுங்குத் தாக்குதலில் காவல்துறை அதிகாரி விஜேவர்த்தனாவும் அவரது வாகனச் சாரதியான ராஜபக்ஷவும் கொல்லப்பட்டனர். பரந்தன் உமையாள்புரத்தில், மார்ச் 4 அன்று இராணுவத் தொடர் வண்டிகள்மீது விடுதலைப் புலிப் பேராளிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் கவசப் பீரங்கி வண்டி ஒன்று சிதைந்து அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

இதே சமயம் அரசியல் அரங்கில் விடுதலைப் புலிகள் ஒரு சிறப்பான பரப்புரை முயற்சியை முடுக்கிவிட்டனர். அரசின் ஒடுக்குமுறைக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மே 18 அன்று நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சிறீலங்கா அரசின் நிர்வாகத்தைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேசிய விடுதலைக்காகத் தமிழ்ப் புலிகள் நடத்தும் ஆயுதப் போராட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டி நின்றார். விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பரப்புரைக்கு இசைந்து வடக்கிலுள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் இதுவரை இடம்பெறாத தேர்தல் புறக்கணிப்பாக இது அமைந்தது. விடுதலைப் புலிகளுக்கு இது மிகப்பெரும் அரசியல் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின் வேண்டுகோளைப் புறக்கணித்து தேர்தலில் நின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அவமானத்தைச் சந்தித்தது. 95 விழுக்காடு வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் கட்சியின் நம்பகத்தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

தேர்தல் நாளன்று, வாக்களிப்பு முடிய ஒரு மணிநேரம் இருக்கும்போது, யாழ்ப்பாணம் நல்லூரில் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஒன்றைக் காவல் புரிந்த இராணுவத்தினர், காவல்துறையினர் மீது விடுதலைப் புலிப் போராளிகள் தாக்குதலை நடத்தினார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சமரில் சிங்களப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவருக்குக் கடுங்காயம் ஏற்பட்டது. வேறு இரண்டு காவல்துறையினர் கடும்காயம் அடைந்தார்கள். அன்று, தேர்தல் தொடர்பாகவும் புலிகள் வெற்றியீட்டினர்.

வாக்களிப்பு, நிலையம் மீதும் வெற்றிகரத் தாக்குதல் நடத்தினர். இதனால் சீற்றமடைந்த அரசு புதிய அவசரகால ஒழுங்குப் பிரமாணங்களை நடைமுறைப் படுத்தியது. தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயுதப் படைகளின் கரங்களைப் புதிய சட்டங்கள் வலுப்படுத்தின. அன்றிரவு யாழ்ப்பாண நகர எல்லைக்குள் பணியில் இருந்த 600 இராணுவத்தினர், வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். கடைகள். வீடுகள், எரிபொருள் நிலையங்கள், வாகனங்கள் ஆகியவை தீயில் எரிக்கப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பொதுமக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். இரண்டு ஆண்டுக்குள் இரண்டாவது தடவையாக, தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்துக்கு இலக்கான யாழ்ப்பாண நகரம் தீப்பற்றி எரிந்தது.

அரச பயங்கரவாத வன்முறை உச்சத்தை தொட்ட காலப்பகுதியாக 1983 ஜூன் மாதப் பகுதியைக் குறிப்பிடலாம். அவரச காலச் சட்டங்கள் வழங்கிய அதிகாரத்தோடு சிங்கள ஆயுதப் படையினர், வவுனியா, திருகோணமலை நகரங்களில் கண்மூடித்தனமான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்ப் பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதுடன், கடைகள், வீடுகள், பள்ளிகள், கோவில்கள் ஆகியவற்றுக்குத் தீ வைத்தனர். திருகோணமலையில் ஆயுதப் படையினருடன் சிங்களக் காடையரும் கூட்டுச்சேர்ந்து புரிந்த கலவரத்தில் 19 தமிழர் வெட்டிச் சரிக்கப்பட்டார்கள். அங்கு 200 வீடுகள், 24 கடைகள், 8 இந்துக்கோவில்கள் எரித்துச் சாம்பல் ஆக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அரசின் உந்துதலோடு, தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொலை ஆரம்பமானது. அரசுத்தலைவர் ஜெயவர்த்தனா வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று அதை உறுதிப்படுத்தியது.

“யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவர்களைப் பற்றி நாம் இப்போது சிந்திக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ அவர்கள் எம்மைப் பற்றி எத்தகைய கருத்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியோ சிந்திக்க முடியாது” என்று ஜெயவர்த்தனா பிரித்தானிய நாளிதழான “டெய்லி டெலிகிராப்” பத்திரிகைக்கு 1983 ஜுலை 11 ஆம் நாள் அன்று பேட்டி அளித்திருந்தார். சிங்கள ஆயுதப் படைகள் திட்டமிட்டுத் தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கு சிறீலங்கா அரசு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஜெயவர்த்தனாவின் கூற்று, ஐயந்திரிபற உறுதிப்படுத்தியது.

இது இவ்வாறிருக்க, ஜுலை மாதம் நடுப்பகுதியில் நிகழ்ந்த சோக சம்பவம் ஒன்று விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பேரிடியாக அமைந்தது. 1983 ஜுலை 15 அன்று மாலை யாழ்ப்பாண நகரிலிருந்து 15 மைல் தொலைவிலுள்ள மீசாலைக் கிராமத்தில் இந்தத் துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.

ஒரு மினி பஸ், இரண்டு ஜீப் வண்டிகள் ஒரு இராணுவ ட்ரக் ஆகியனவற்றில் மீசாலை கிராமத்திற்குள் நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அங்கிருந்த விடுதலைப் புலிப்போராளிகளின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தனர். இராணுவத்தினரின் இந்தச் சுற்றிவளைப்பில் விடுதலைப் புலிகளின் தாக்குதற் தளபதியான சார்ள்ஸ் அன்ரனி (சீலன்) மற்றும் மூன்று போராளிகளும் மாட்டிக் கொள்கின்றனர். சுற்றி வளைத்த படையினருடன் புலி வீரர்கள் துப்பாக்கிச் சமரில் குதிக்கின்றனர். இராணுவத்தினர் பனைமரங்கள் சூழ்ந்த பாதுகாப்பான இடங்களில் நிலையெடுத்து நின்று சரமாரியாகச்சுட, பொட்டல் வெளியில் மாட்டிக்கொண்ட போராளிகள் திருப்பித் தாக்குகின்றனர்.

இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் மார்பைத் துளைக்க, இரத்தம் சிந்தியவாறு நிலத்தில் சரிகிறான் சீலன். தப்ப முடியாத நிலை, எனினும் உயிருடன் எதிரியிடம் சிக்கக்கூடாது என்ற உறுதிப்பாடு உந்த தன்னைச் சுட்டுக் கொன்றுவிடுமாறு சக போராளியிடம் பணிக்கிறான் சீலன். தனது தளபதியைச் சுடத் தயங்குகிறான் தோழன், அப்பொழுது கண்டிப்பான கட்டளையிடுகிறான் சீலன். வேறு வழி தெரியாது கதறி அழுதபடி சீலனின் கட்டளையை நிறைவேற்றுகிறான் அந்தப்போராளி. அவ்வேளை ஆனந் என்ற மற்றொரு போராளியும் எதிரியின் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயங்களுடன் சாய்கிறான். தன்னையும் சுட்டுக் கொன்றுவிடும்படி மன்றாடுகிறான் ஆனந். அவனது வேண்டுகோளும் நிறைவேற்றப்படுகிறது.

உயிருக்கும் மேலாக நேசித்த சக போராளிகளை உயிருடன் எதிரியிடம் விட்டு விடாது செய்து, அவர்களது ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, முற்றுகையிலிருந்து தப்பிச் சென்றனர் மற்றும் இரு போராளிகள்.
மாவீரன் சீலனின் சாவு எமது விடுதலை இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பாக அமைந்தது. அபாரமான துணிவும், தமிழீழ இலட்சியப் பற்றுறுதியும் மிக்க சீலன் பல களங்களைக் கண்ட வீரன், ஆற்றல் படைத்த கட்டளைத் தளபதி. தலைவர் பிரபாகரனின் மிகவும் நெருங்கிய தோழன். அந்த மாவீரனின் மறைவு பிரபாகரனின் ஆன்மாவை உலுப்பியது. ஒருபுறம் கடும் துயரும், மறுபுறம் கடும் சீற்றமும் அடைந்த பிரபாகரன் சிங்களப் படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுக்கத் தீர்மானித்தார். அதற்கான தாக்குதல் திட்டத்தையும் அவரே வகுத்தார். விடுதலைப் புலிகள் மீதும் பொதுமக்கள் மீதும் அரச பயங்கரவாத வன்செயல்களை ஏவிவிடும் ஆயுதப் படையினர் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவர் என்பதை எதிரிக்கு உணர்த்த வேண்டும் எனவும் பிரபாகரன் எண்ணினார். யாழ்ப்பாண நகரப் பகுதிக்குள் இராணுவ வண்டிச் தொடர்கள் இரவிலே கிரமமாக நடமாடும் வழித்தடங்கள் பற்றிய விபரங்களைப் புலனாய்வு மூலம் திரட்டி, பிரசித்தி பெற்ற திருநெல்வேலிக் கெரில்லாத் தாக்குதலைப் புலிகளின் தலைவர் திட்டமிட்டார். இந்தத் தாக்குதலுக்குச் செல்லக்கிளி அம்மான் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் தாக்குதல் நடவடிக்கை முழுவதையும் பிரபாகரனே நெறிப்படுத்தினார்.

ஜுலை மாதம் 23ஆம் நாள், நள்ளிரவு தலைவர் பிரபாகரனுடன் அன்றைய மூத்த தாக்குதற் தளபதிகளான செல்லக்கிளி, கிட்டு, புலேந்திரன், விக்டர், சந்தோசம் ஆகியோருடன் பதினான்கு விடுதலைப்புலி அதிரடி வீரர்கள், ஆயுத பாணிகளாக இயக்கச் சீருடை அணிந்து, யாழ்ப்பாண நகரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள திருநெல்வேலியில் பலாலி-யாழ்ப்பாணம் வீதியோரமாக தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். பொது வாகனங்களும் பாதசாரிகளும் வீதியில் செல்லாதபடி தடை ஒழுங்குகள் செய்து கேந்திர நிலைகளில் கண்ணி வெடிகளைப் புதைத்துவிட்டு, புலி வீரர்கள் நிலையெடுத்துக் காத்து நிற்கின்றனர்.
மாதகல் இராணுவ முகாமிலிருந்து சிறீலங்காவின் முதலாவது காலாட் படைப்பிரிவைச் சேர்ந்த பதினைந்து பேர்கொண்ட அணி ஒன்று இராணுவ வண்டித் தொடராக திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தது.

முதலில் ஒரு ஜீப் வண்டி, அதற்குப் பின்னால் ஒரு இராணுவ ட்ரக் வண்டியாக, படையினர் பதுங்கி நிற்கும் புலி வீரர்களின் நிலையை அண்மிக்கின்றனர். புலிகளின் பதுங்கு காவல் நிலையை இராணுவ வாகனங்கள் கடந்தபோது, நிலக் கண்ணித் தகர்ப்பி அமுக்கப்படுகிறது. திருநெல்வேலியை அதிரவைத்த பயங்கர வெடியோசை, இராணுவ ஜீப் வண்டி காற்றில் உயர எகிறி, துண்டம் துண்டமாகச் சிதறி தரையில் விழுகிறது. பின்னே வந்த ட்ரக் வண்டி திடீரென நிற்கிறது. பீதியடைந்த படையினர் அச்சத்தோடு வெளியே பாய, புலிகளின் துப்பாக்கிச் சல்லடை அவர்களைப் பதம் பார்க்கிறது. ட்ரக் வண்டியால் அவர்கள் வெளியே வர வர, அச்செட்டாகக் சுடுவதில் பெயர் பெற்ற பிரபாகரனின் துப்பாக்கி அவர்களிற் பலரை அடுத்தடுத்து வீழ்த்துகிறது. சில இராணுவத்தினர் வானகத்துக்குக் கீழே தவழ்ந்து சென்று படுத்திருந்தபடி சிலாவிச் சுடுகிறார்கள். ஆனால் புலிகளின் எறிகுண்டுகள், அவர்களைச் செயலிழக்கச் செய்கின்றன.

துல்லியமான, இசையும் பிசகாத புலிகளின் போரியல் தேர்ச்சியை இத்தாக்குதல் பறைசாற்றியது. பதின்மூன்று சிங்களப் படையினர் அதே இடத்தில் கொல்லப்பட்டார்கள். இரண்டு பேருக்குப் படுகாயம், அந்த நாட்களில், சிங்கள இராணுவத்துக்கு இது ஒரு பெரும் உயிரிழப்பாக அமைந்தது. விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

செல்லக்கிளி அம்மான் (செல்வநாயகம்) அஞ்சா நெஞ்சம் படைத்த ஒரு வீரன். தலைசிறந்த தாக்குதற் தளபதி, தலைவர் பிரபாகரனின் இளம்பிராயத் தோழன். ஆரம்ப காலப் போராட்ட வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்தவன். அந்நாளில் சிங்கள தேசத்தையே கிலிகொள்ளச் செய்த ஒரு வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி, அத்தாக்குதலிலேயே களப்பலியாகிய அந்த வீரனின் மறைவு எமது இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பாகியது.
தமிழரின் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வே ஒரே வழி என்று உறுதியாக நம்பியிருந்த ஆட்சியாளருக்குத் தமிழ்ப் புலிகளின் கெரில்லா படையினரால் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டமை, ஒரு பலத்த அடியாகப்பட்டது. ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஒரு கொடுங் கோலர். இரும்புப்பிடியோடு நாட்டை அண்டு கொண்டிருந்தார். அவருடைய மூத்த அமைச்சர்களான லலித் அத்துலத் முதலி, பிலிப் குணவர்த்தனா, சிறில் மத்தியூ, காமினி திஸாநாயக்கா ஆகியோர், பெயர் பெற்ற இனவாதிகளாவர்.

அடுத்து வரும் பதிவு : வன்முறைப் புயல் வீசிய ‘கறுப்பு ஜுலை’ பாகம் – 02

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.