விடுதலைப் புலிகளின் போராட்டக்களம் – பாகம் -02

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:01

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

விடுதலைப் புலிகளின் போராட்டக்களம் பாகம் -02

பிரிகேடியர் வீரத்துங்கவின் தலைமையில் கூடுதலான இராணுவப் படையணிகளைத் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பியது. ஆறு மாதத்தில் “பயங்கரவாதத்தை” வேரோடு சாய்க்க வேண்டும் என்றும் அவருக்குக் காலக்கெடு விதித்தது. சட்டம் தந்த அதிகாரமும் அரசு கொடுத்த உற்சாகமும் கூடி வர, வன்முறையின் உச்ச கட்டமாக இராணுவ பயங்கரவாதத்தைத் தமிழ் மக்கள் மீது பிரிகேடியர் வீரதுங்க ஏவி விட்டார்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மிருகத்தனமான சித்திரவதைக்கு ஆளானார்கள். பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய உடலங்கள் வீதியோரம் வீசப்பட்டன. இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இதயங்களில் பலத்த குமுறலைத் தோற்றுவித்தது. அனைத்துலகச் சட்ட வல்லுநர் ஆணைக்குழுவும் அனைத்துலக மன்னிப்புச் சபையும் பயங்கரவாதச் சட்டம் தொடர்பாகப் பலத்த கண்டனங்களைத் தெரிவித்தன. பிரிகேடியர் வீத்துங்கவுக்கு வழங்கப்பட்ட ஆறு மாத காலக்கெடு முடிவடைந்தபோது, அரச பயங்கரவாதத்தின் பெறுபேறாக விடுதலைப் புலிகளின் படைபலம் வெகுவாகப் பெருகியது. கொதிப்படைந்த தமிழ் மக்களின் தேசிய விடுதலை உணர்வும் வெகுவாகப் பொங்கி எழுந்தது.

தமிழ்த் தாயக மண்ணிலே சிறீலங்கா அரசு தனது இராணுவ மேலாண்மையையும் ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்க, விடுதலைப் புலிகளின் தலைமை, தனது இயக்கத்தை விரிவுபடுத்திப் பலப்படுத்தும் நடவடிக்கைத் திட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. கிளர்ச்சியை நசுக்கும் அரசின் திட்டத்தை முறியடிப்பதற்கு, மாற்று நடவடிக்கையாகத் தமது கெரில்லாப் படைக் கட்டமைப்பைப் பலப்படுத்தவும் தமது அரசியல் பிரிவை விரிவுபடுத்தவும் புலிகள் இயக்க தலைமை தீர்மானித்தது. ஆகவே, அரசுக்கு எதிரான ஆயுதம் தரித்த இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் 1979-1980 காலப் பகுதியில் தவிர்த்துக் கொண்டு, விடுதலை அமைப்பைப் பலப்படுத்துவதிலும் முழுமையாகக் கவனம் செலுத்தியது.

இந்தக் கால கட்டத்திலேயே சாதாரண மக்களுக்கு அரசியல் அறிவையும் தேசிய விழிப்புணர்வையும் ஊட்டி வளர்த்தது. அவர்களை இயக்க அமைப்புடன் அணிசேர்த்து ஒழுங்கமைத்து, தேச விடுதலைப் போராட்டத்தை வெகுசன அரங்கில் முன்னெடுக்கும் நோக்குடன் ஒரு செயற்திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் புலம்பெயர்ந்து ஈழத்தமிழ் மக்கள் வாழும் வெளிநாடுகளில் கிளை அமைப்புகளை நிறுவி, அனைத்துலகக் கட்டமைப்பை விரிவுபடுத்திப் பலப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எழுபதுகளின் இறுதிக் கட்டத்தில்தான் லண்டனிலிருந்து இயக்க அரசியல் பரப்புரை வேலைகளில் பங்களிக்க எனக்கும் வாய்ப்புக்கிட்டியது.

1978இன் ஆரம்பத்தில், லண்டனில் கலாநிதி பட்டப் படிப்புக்கான ஆய்வில் நான் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், முதன் முதலாக விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவ்வேளை விடுதலைப் புலிகளின் லண்டன் கிளைப்பிரதிநிதிகளுடன் சேர்ந்து பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். இயக்கத்தின் அரசியல் வேலைத் திட்டத்திற்கு அமைவாக, கொள்கை பரப்புரை எழுத்துகளாகப் பிரசுரங்களையும் சிறு நூல்களையும் எழுதினேன். அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும், சோசலிச தத்துவமும் கெரில்லா யுத்தமும், சோசலிசத் தமிழீழம் நோக்கி, தமிழர் தேசிய இனப்பிரச்சனை (ஆங்கிலம்), ஆகிய சிறு நூல்களும் இவற்றில் அடங்கும். தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளுக்கு அமைய, சே குவாரா, மாசே துங், ஆகியோரது போரியல் அனுபவப் படைப்புகளில் இருந்து முக்கிய பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து அனுப்பி வைத்தேன். 1979இல் முதன்முதலாகப் பிரபாகரனை சென்னையில் சந்தித்தது. இயக்கப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தியது போன்ற எமது ஆரம்பகால இயக்க ஈடுபாடுகளை எனது மனைவி திருமதி. அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை என்ற தனது நூலில் விபரமாக விளக்கியிருக்கிறார்.

– 1981 ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ தாயகத்தில் சிங்கள இராணுவத்தினதும் காவல்துறையினதும் அடக்குமுறை தீவிரமாகியது. அதற்கு எதிர்விளைவாக விடுதலைப் புலிகளது கெரில்லாத் தாக்குதல்களும் முனைப்புற்றன.
1981 மே 31 அன்று நள்ளிரவில் சிங்களக் காவல்துறையினர் வெறியாட்டமாடி யாழ்ப்பாண நகரை தீ வைத்துக் கொழுத்தினர்.

தீ வைத்தல், கொள்ளையடித்தல், கொலைபுரிதலாக அரச பயங்கரவாதம் யாழ்ப்பாணத்தில் தலை விரித்தாடியது. நூற்றுக்கணக்கான கடைகள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகின. யாழ்ப்பாணச் சந்தைச் சதுக்கம் தீயிடப்பட்டது. தமிழ்ப் பத்திரிகைப் பணிமனை ஒன்றும், யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரது வீடும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த இனவாத வன்செயல் வெறியாட்டத்தில் என்றுமே மன்னிக்க முடியாத படுபாதக நிகழ்வொன்றும் இடம்பெற்றது. தமிழினத்திற்கு எதிரான கொடூரப் பண்பாட்டுப் படுகொலையாக யாழ்ப்பாணப் பொதுநூல் நிலையம் தீமூட்டி அழிக்கப்பட்டது. 90,000க்கும் அதிகமான, விலை மதிக்க முடியாத இலக்கிய, வரலாற்றுப் பதிவேடுகள் தீயில் எரிந்து நாசமாகின.

இந்தக் கொடூரமான நிகழ்வானது உலகத் தமிழ் மக்களின் இதயங்களைக் கொதிப்புறச் செய்தது. ஜெயவர்த்தனாவின் ஆட்சிப்பீடத்திலிருந்த இரு அமைச்சர்களான, சிறில் மத்தியூவும். காமினி திசநாயக்காவும் அவ்வேளை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து சிங்களக் காவல்துறைக் காடையரின் இப்பயங்கரவாதச் செயல்களை நெறிப்படுத்தி வழிநடத்திக் கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணம் தீயிடப்பட்டதை அடுத்து, மூன்று மாதங்களில், நாடளாவிய இனவெறிக் கலவரம் மீண்டும் தலைவிரித்து ஆடியது. அரசின் முன்னணி உறுப்பினர்கள் திட்டமிட, ஆயுத படைகள் உதவி புரிய, சிங்களக் காடையரும் அடாவடிக்காரரும் கலவரத்தில் ஈடுபட்டனர், இக்கொடிய சிங்கள இனவெறிக் காட்டு மிராண்டித்தனத்துக்குத் தமிழ் மக்கள் மீண்டும் பலிக்கடா ஆனார்கள். இக்கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆயிரமாயிரம் பேர் வீடு வாசல்களை இழந்தார்கள்.

பலகோடி பெறுமதியான சொத்துக்களை அழிவிலே பறி கொடுத்தார்கள். திட்டமிட்ட வன்செயல் மீண்டும் மீண்டும் தலை தூக்குவதும், தமிழ் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் அழிவு இழைக்கப்படுவதும், ஒரு திட்டமிட்ட இனப் படுகொலையின் குரூர முகத்தையே அது புலப்படுத்திக்காட்டியது.

தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தீவிரம் அடைந்து செல்ல விடுதலைப் புலிகள் கெரில்லாத் தாக்குதல்களும் முனைப்படைந்து தமிழ்ப் பிரதேசத்து அரச நிர்வாகக் கட்டமைப்பை நிலைகுலையச் செய்தன. அரச காவல்துறையின் நிர்வாகத்தைச் சீர்குலைப்பதே அக்கால கட்டத்தில் விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரோபாயமாக அமைந்திருந்தது. காவல்துறை நிலையங்கள் மீதும் சுற்றுக் காவல் அணிகள் மீதும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு விடுதலைப் புலிகள் நிழ்த்திய வெற்றிகரமான தாக்குதல்களின் விளைவாக அரச பயங்கரவாதத்தின் சக்திவாய்ந்த கருவியாகச் செயற்பட்ட சட்ட ஒழுங்கு அமைப்பானது படிப்படியாகச் சீர்குலைந்து சிதைவுற்றது.

1982 ஜுலை 2 அன்று யாழ்ப்பாண நகரிலிருந்து 16 மைல் தொலைவிலுள்ள நெல்லியடி பட்டினத்தில் காவல் துறையினரின் சுற்றக்காவல் அணி ஒன்றின் மீது விடுதலைப் புலிப்போராளிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினார்கள். இந்த மின்னல் வேகத் தாக்குதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் தலத்திலேயே கொல்லப்பட்டனர். மூன்று பேர் கடும் காயமடைந்தார்கள். காவல் துறையினரின் ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றிய புலி வீரர்கள் காயம் எதுவுமின்றித் தப்பிச் சென்றனர். வெற்றிகரமாக நிகழ்ந்த இவ்வதிரடித் தாக்குதலுக்குத் தலைமை வகித்த போராளி லெப்ரினன்ட் சத்தியநாதன் (சங்கர்) ஆவார்.

1982 அக்டோபர் 27 அன்று சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதலுக்கு இலக்காகியது. அரண்காப்புகளால் வலுப்படுத்தப்பட்டிருந்த இம் முக்கிய காவல் நிலையம் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டு அங்கிருந்த பெரும் தொகையான ஆயுதங்கள் புலி வீரர்களால் கைப்பற்றப்பட்டமை ஜெயவர்த்தனா ஆட்சி பீடத்திற்குப் கிலியைக் கொடுத்தது.

அன்றைய தினம் அதிகாலை விடுதலைப் புலிகளின் கெரில்லா அணி, கடத்தப்பட்ட பேரூந்து வண்டி ஒன்றில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் வந்தடைந்தது. அதிலிருந்து இறங்கிய புலிப்போராளிகள் சிலர், பொது மக்களின் பாதுகாப்புக்காகக் கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் போக்குவரத்தைத் தடைசெய்து, நிலையெடுத்தனர்.

இதனையடுத்து, நன்கு ஆயுதம் தரித்த தாக்குதல் அணியொன்று மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் காவல் நிலைய வளாகத்திற்குள் நுழைந்து, தாக்கும் நிலை எடுத்தது. காப்பரணில் கடமையிலிருந்த காவல்துறையினர் தமது நகர்வைக் கண்ணுற்றனர் எனத் தெரிந்து கொண்ட மறுகணமே. புலிப் படையினரின் இயந்திரத் துப்பாக்கிகள் அனல் கக்கத் தொடங்கியது.

காப்பரணில் பதுங்கியிருந்த ஒருவர் அதிலேயே இறந்துவிழ, ஏனோயார் காயங்களுடன் தப்பியோடினர். இதனையடுத்து, புலிகளின் அதிரடிப்படை வீரர்கள் சரமாரியாகச் சுட்டபடியே பிரதான கட்டடத்துக்குள் புயலென நுழைந்தனர். முதலில் ஆயுத தளவாடங்கள் வைக்கப்பட்டிருந்த அறை தாக்குதலுக்கு இலக்காகியது. அங்கே பணியிலிருந்த இரு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயுதக் களஞ்சியம் உடைத்து திறக்கப்பட்டது. அங்கிருந்து 28 துப்பாக்கிகள் 2 உப-இயந்திரத் துப்பாக்கிகள், 1 ரிவோல்வர் ஏராளமான ரவைகள் புலி வீரர்களிடம் சிக்கியது. ஒரு கெரில்லா அணி கீழ்மாடியிலிருந்து ஆயுத அறையைச் சூறையாடிய வேளை, இன்னொரு அணிதுப்பாக்கிக் குண்டுகளைப் பொழிந்தவாறு மேல் மாடிக்குள் பாய்ந்து சென்றது. அங்கு நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட ஒருவர் மாடியிலிருந்து குதித்துத் தப்பியோடினார்.

சாவகச்சேரி காவல் நிலையம் மீதான தாக்குதலை தலைமை வகித்து நடத்தியவர் லெப்டினண்ட் சார்ள்ஸ் அன்ரனி (ஆசிர், சீலன்). இவர் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு தலைசிறந்த தாக்குதல் தளபதியாக விளங்கியவர். துணிச்சலும் நிகரற்ற திறமையுமுடைய இவர் பிரபாகரனது நெருங்கிய நண்பர். இத்தாக்குதலின்போது சீலன், புலேந்திரன், ரகு ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் மூவரும் தமிழகம் அனுப்பப்பட்டு, அங்குச் சிகிச்சை பெற்றுத் தேறினார்கள்.
சாவகச்சேரி காவல்நிலையத் தாக்கி அழிப்பில் சங்கர் (சத்தியநாதன்) முக்கிய பங்குவகித்தார். சண்டையில் தனது துணிச்சலையும் திறனாற்றலையும் காண்பித்தது மட்டுமின்றி, காயமடைந்த போராளிகளையும் கைப்பற்றப்பட்ட ஆயுத தளவாடங்களையும் பாதுகாப்பாகச் குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு சேர்த்தவர் சங்கர்.

அடுத்து வரும் பதிவு : விடுதலைப் புலிகளின் போராட்டக்களம் பாகம் -03

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.