விடுதலைப் புலிகளின் போராட்டக்களம்

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:01

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

விடுதலைப் புலிகளின் போராட்டக்களம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் அரசியல் இராணுவ முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், பல்வேறு கால கட்டங்களில் அது பெற்ற வரலாற்று ரீதியான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் புரிந்து கொள்வது அவசியம். தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி அழிக்கும் நோக்கத்தோடு மிகவும் நுட்பமான கட்டமைப்பைக் கொண்ட அரச புலனாய்வுத்துறை இயங்கி வந்தது.

அதில் தமிழ் இரகசியக் காவல்துறை அதிகாரிகள் முக்கிய பங்கை வகித்தார்கள். பணத்திற்காக காட்டிக் கொடுக்கின்ற குடிமக்கள் சிலரும் உளவாளிகளாகச் செயற்பட்டனர். இந்தப் புலனாய்வுக் கட்டமைப்பானது தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு, குறிப்பாக புதிதாகத் தோற்றமெடுத்து வளர்ந்து வரும் விடுதலை அமைப்பான புலிகள் இயக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது. சிங்கள அரசின் கிளர்ச்சி முறியடிப்பு இயக்கத்தை முன்னின்று நடத்தி வந்த புலனாய்வுத் துறையினர் நூற்றுக்கணக்கான தீவிரவாதத் தமிழ் இளைஞர்களையும் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்ட மாணவர்களையும் வேட்டையாடிச் சிறைபிடித்து தாங்கொணாச் சித்திரவதைக்கு ஆளாக்கி வந்தனர்.

இதனால் புதிதாக ஆயுதமேந்திப் போர்க்களத்தில் புகுந்த புலி வீரர்களுக்கு அரச புலனாய்வுப் பிரிவு ஒரு ஆபத்தான சவாலாக அமைந்தது. ஆகவே, இந்தச் சவாலை எதிர்கொண்டு போராட நிர்ப்பந்திக்கப்பட்ட விடுதலைப் புலிகள் புலனாய்வுத் துறையின் கட்டமைப்புக்கு எதிராக தமது ஆயுதப்போரை முடுக்கிவிட்டனர். வெற்றிகரமாகப் புலிகள் நிகழ்த்திய தாக்குதல்கள் காரணமாக அரச புலனாய்வுத் துறையின் கட்டமைப்பும் செயற்பாடும் தமிழர் தாயகத்தில் செயலிழந்து சிதைவுற்றது.
விடுதலைப் புலிகளின் ஆரம்பகால கெரில்லாத் தாக்குதல்களின் விளைவாக பல காவல்துறைப் புலனாய்வு அதிகாரிகளும், உளவாளிகளும், காட்டிக் கொடுக்கும் துரோகிகளும் கொன்றழிக்கப்பட்டன.
ஆயினும், ஒரு குறிப்பிட்ட அதிரடித் தாக்குதலே சிங்கள ஆட்சிபீடத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இச்சம்பவம் 1978 ஏப்ரல் 7 அன்று நிகழ்ந்தது.

வன்னியில், முருங்கனுக்கு அருகாமையிலுள்ள அடர்ந்த காட்டினுள் விடுதலைப் புலிகளின் ஒரு சிறிய பயிற்சிப் பாசறை இருந்தது. இங்குச் சில போராளிகள் ஆயுதப் பயிற்சி எடுத்து வந்தனர். இந்தப் பயிற்சிப் பாசறை அமைந்துள்ள தளம் பற்றிய தகவல், ஒரு உளவாளி வாயிலாகப் புலனாய்வுத் துறையினருக்குத் தெரிய வந்தது. அதனைச் சுற்றி வளைத்து தாக்கியழிக்கும் நோக்குடன் காவல்துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான அணி ஒன்று முருங்கன் காட்டினுள் புலிகளின் தளம் நோக்கி நகர்ந்தது. ஒரு சில போராளிகளே, அவ்வேளை அம்முகாமில் தரித்திருந்தனர்.

துப்பாக்கி முனையில் காவல்துறையினரால் திடீரெனச் சுற்றி வளைக்கப்பட்டபொழுது எமது போராளிகள் பதட்டமடையாது அமைதியாக இருந்தனர். அவ்வேளை புலிகளின் தாக்குதல் தளபதிகளில் ஒருவரான லெப். செல்லக்கிளி அம்மான் மிக லாவகமாக காவல்துறை அதிகாரி ஒருவர் மீது பாய்ந்து, அவருடைய சிறிய யந்திரத் துப்பாக்கியைப் பறித்தெடுத்து, கண்மூடித் திறப்பதற்குள் சுற்றிவளைத்த காவல்துறைக் குழுவினரைச் சுட்டு வீழ்த்தினார். இந்தச் சம்பவத்தில் காவல்துறைப் புலனாய்வு அதிகாரிகளான பஸ்தியாம்பிள்ளை, பேரம்பலம், பாலசிங்கம் ஆகியோரும் வண்டிச் சாரதியான சிறிவர்த்தனாவும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

-காவல்துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை சிங்கள ஆட்சியாளரின் கையாள். மிகக் கொடுமையான மனிதர். தமிழ் இளைஞரின் புரட்சி அரசியலைப் பூண்டோடு அழிக்கச் சபதமெடுத்தவர். ஈவிரக்கமற்ற சித்திரவதைக்குப் புகழ்போனவர். தீவிரவாத இளைஞருக்கு அவர் சிம்ம சொப்பனம். புலிகள் இயக்கப் போராளிகளால் இவர் கொன்றழிக்கப்பட்டது தமிழ் இனம் சமூகம் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது. ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அரச புலனாய்வுத் துறையினருக்கு விழுந்த பலத்த அடியாக இந்நிகழ்வைக் கொள்ளலாம். இதனால் அரசாங்கம் கலங்கிப் போயிருந்தது.

பஸ்தியாம்பிள்ளையின் காவல்துறை அணி அழிக்கப்பட்டதற்கும், அதற்கு முன்னராகப் பல புலனாய்வுக் காவல்துறை அதிகாரிகள் காட்டிக் கொடுத்த துரோகிகள் கொன்று ஒழிக்கப்பட்டதற்கும், முதற்தடவையாக அதிகாரப்பூர்வமாக உரிமைகோரி, 1978 ஏப்ரல் 25 அன்று விடுதலைப் புலிகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் அறிக்கையை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன. ஆயுதப் போராட்டம் மூலமாக தமிழரின் அரங்கில் தன்னைப் பகிரங்கப்படுத்தியது. உரிமை கோரும் புலிகளின் பட்டியலில், யாழ்ப்பாண நகர முதல்வரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வடபிராந்திய ஏற்பாட்டாளருமான அல்பிரட் துரையப்பா, பொத்துவில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கனகரெத்தினம் வேறும் பல பிரபல்யம் பெற்ற காவல்துறை, புலனாய்வு அதிகாரிகளும் அடங்கியிருந்தனர்.

தமிழர்களின் ஆயுதம் தரித்த எதிர்ப்பியக்கம் ஒன்று தலைமறைவாக இயங்கி வருவதை அறிந்து அதிர்வடைந்த சிங்கள அரசு, உடனடியாகவே 1978 மே மாதத்தில் பாராளுமன்றச் சட்டமூலமாக புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தடைச் சட்டம் தமிழரின் ஆயுதக் கிளர்ச்சியை முற்றாக நசுக்கிவிடும் நோக்குடன் அரச ஆயுதப் படைகளுக்குச் சர்வ அதிகாரங்களை வழங்கியது. எவரையும் கைது செய்தல், நீதிமன்ற விசாரணையின்றி நீண்ட காலம் சிறை வைத்தல், சித்திரவதை செய்தல், சட்ட விரோதமாகக் கொலை செய்தல் போன்ற கொடும் செயல்கள் புரிய இச்சட்டம் படையினருக்கு அதிகாரமளித்தது. இக்கொடிய தடைச்சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து, பெருமளவிலான படை அணிகளைப் புலி வேட்டையில் இறக்கித் தமிழர் தாயகத்தை முழுமையான இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது சிங்கள அரசு.

தமிழ்ப் பகுதிகளில் சிங்கள இராணுவ அடக்குமுறையைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, 1978 செப்டெம்பர் 7 அன்று, புதிய அரசியல் யாப்பு ஒன்றை ஜெயவர்த்தனா நடைமுறைப்படுத்தினார். இந்தப் புதிய யாப்பு ஜெயவர்த்தனாவுக்கு முழுமையான சர்வாதிகார அதிகாரங்களை வழங்கியது. அத்துடன் சிங்கள

மொழிக்கும் பௌத்த மதத்திற்கும் சிறப்புரிமைகளையும் உயர் தகமைகளையும் வழங்கியதோடு, தமிழ் மொழியை இரண்டாந்தர நிலைக்கு தரம் இறக்கியது. புதிய யாப்பானது ஜனாதிபதியை அரச அதிபராகவும், நிறைவேற்று அதிகாரமுடைய அரசாங்கத் தலைவராகவும், முப்படைகளதும் பிரதம தளபதியாகவும்’ பதவி ஏற்றியது. அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்கவும், பதவி நீக்கவும், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் அவருக்கு அதிகாரம் பொறுப்பித்தது.

சிங்கள அரசின் ஒற்றையாட்சித் தன்மையை உறுதிப்படுத்திய புதிய யாப்பிலே திருத்தம் கொண்டு வருவதானால், அல்லது அதைக் கைவிடுவதானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகப்பெரும்பான்மை வாக்குகளும், வாக்காளர்களின் கருத்துக் கணிப்பு ஆதரவும் பெற்றாக வேண்டும் என்று விதித்தது. தமிழ்ப் பிரதிநிதிகள் 1978 இன் புதிய யாப்பை அல்லது அதற்கு முந்திய 1972 ஆம் ஆண்டு யாப்பைத் தயாரிப்பதிலோ பிரகடனப்படுத்துவதிலோ பங்குபற்றவில்லை. புதிய யாப்புக்கு எதிராகத் தமிழ் நாடாளுமன்றக் கட்சி, தமிழ் மக்களை அணிதிரட்டி பெரும் எதிர்ப்பைத் தெரிவிக்கக் தவறிவிட்டது.

ஆனால், தமிழ் மக்களின் அதிருப்தியை அனைத்துலக சமுதாயத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பிய விடுதலைப் புலிகள், புதிய அரசியல் யாப்பு நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட அன்று, இலங்கை பயணி விமானத்துறைக்குச் சொந்தமாக ஒரேயொரு ‘அவ்ரோ’ விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தது.

விரிவாக்கம் கண்டு வரும் ஆயுதப் போராட்டத்தைப் பூண்டோடு அழிப்பதற்காக அடக்குமுறை வழிகளை அரசு கைக்கொண்டது. விடுதலைப் புலிகள் மீதான தடைச் சட்டத்தை 1979 ஜுலை 20 அன்று நீக்கிவிட்டு, அதனிடமாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசு அமுலாக்கியது. இதில் அடங்கிய விதிகள், சட்ட ஆட்சியின் நீதி நியமங்களை உதாசீனப்படுத்துவனவாக அமைந்தன. பதினெட்டு மாத காலம் எவரையும் தடுப்புக் காவலில் வைக்க இடமளித்தது. சித்திரவதை மூலம் பெறப்படும் ஒப்புதல்களை வழக்கில் வாக்குமூலமாக ஏற்க அனுமதித்தது.

இந்தச் சட்டம் நிறைவேறியதும் வடபுல தலைநகரான யாழ்ப்பாணத்தில் அவசர காலச் சட்டத்தை அரசுநடைமுறைப்படுத்தியது.

அடுத்து வரும் பதிவு : விடுதலைப் புலிகளின் போராட்டக்களம் பாகம் -2

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.