தனியரசு நிறுவ தமிழ் மக்கள் கொடுத்த ஆணை

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:01

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

தனியரசு நிறுவ தமிழ் மக்கள் கொடுத்த ஆணை

விடுதலைப் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவக் கட்டமைப்பை நிறுவி, அவற்றை வலுப்படுத்தி விரிவாக்கம் செய்வதில் ஒருபுறம் ஈடுபட்டிருக்க மறுபுறம் தமிழ் அரசியல் அரங்கில் முன்னெப்பொழுதும் நிகழாத மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் இடம் பெற்றன. 

தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை தாங்கொணா அளவிற்கு உக்கிரமடைந்த காலகட்டம் அது. தமிழ் சிங்கள தேசங்கள் மத்தியில் முரண்பாடு முற்றி, இன இணக்கப்பாடும் சகவாழ்வும் சாத்தியமற்றது என்ற நிலைமை உருவாகியிருந்தது. இக்கால கட்டத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் வலுமிக்க இயக்கமாக உருவாகி, உருப்படியான செயற்திட்டத்தை முன்வைக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகள் மீது அழுத்தம் செலுத்தியது. இப்படியான வரலாற்றுச் சூழ்நிலையில், 1976 மே மாதம் தமிழர் ஐக்கிய முன்னணி யாழ்ப்பாண் வட்டுக் கோட்டையில் தேசிய மாநாடு ஒன்றைக் கூட்டியது. அம்மாநாட்டில் தமிழினத்திற்குத் தேசிய விடுதலை கோரும் வரலாற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முக்கிய கூட்ட அமர்விற்கு, எஸ். ஜே.வி செல்வநாயகம் தலைமை தாங்கினார். தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரை மாற்றித் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்று அழைக்கும் தீர்மானமும் இம்மாநாட்டில் நிறைவேறியது. தமிழீழத் தனிணுரைச நிறுவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமும் இங்கு நிறைவேறியது. அந்தத் தீர்மானம் வருமாறு:

“தமிழர் விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள பண்ணாகத்தில் 1976 மே 14 ஆம் நாள் நடைபெற்ற போது கீழ்க்கண்ட பிரகடனம் செய்யப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத பலத்தால் வெற்றி கொள்ளப்படும் வரை, சிறப்பு வாய்ந்த பழம்பெரும் மொழி, மதங்கள், தனித்துவமான பண்பாடு, பாரம்பரியம் ஆகியனவற்றைக் கொண்டிருந்ததோடு பல நூற்றாண்டுகளாக ஒரு தனித்துவமான பிரதேசத்தில் தனியரசை அமைத்துச் சுதந்திரமாக வாழ்ந்த வரலாறும் உடையவர்கள். இவற்றிற்கு மேலாக, தங்களது சொந்த மண்ணில் தனி இனமாக தங்களைத் தாங்களே ஆட்சிபுரிந்து வாழவேண்டும் என்ற உறுதிப்பாடும் உடையவர்கள். இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள் என்பதால் தமிழர்கள் சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட தனித்துவமான தேச அமைப்பைக் கொண்டவர்கள். இலங்கையின் 1972ஆம் ஆண்டின் குடியரசுக்கான அரசியல் யாப்பு, புதிய குடியேற்ற எஜமான்களாகிய சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் தமிழர்களை ஓர் அடிமை இனமாக மாற்றியுள்ளது. 

தவறான வழியில் பெற்றெடுத்த ஆட்சியதிகாரத்தைக்கொண்டு சிங்களவர்கள் தமிழ் மக்களின் நிலவுரிமை, மொழியுரிமை, குடியுரிமை, பொருளாதார வாழ்வுரிமை, கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமை ஆகியனவற்றை மறுத்து, அவர்களது தேசியக் கட்டமைப்பின் அடிப்படைகளையே அழித்துள்ளனர். ஆகவே, தமிழீழத் தனியரசு நிறுவுவது குறித்து வடகிழக்கிற்கு வெளியே வாழும் பெருந்தோட்டத் தொழிற்சங்கமாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தத் தயக்கத்தை கருத்தில் எடுக்கும் அதேவேளை, தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு தேசத்திற்கும் உரித்தான சுயநிர்யண உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறையாண்மையுடைய, மத சார்பற்ற, சோஷலிச தமிழீழ அரசு மீளப்பட்டு மீள்நிர்மானம் செய்யப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது”.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் முன்வைத்த தனியரசுக் கோரிக்கையின் பரீட்சார்த்த களமாக 1977 ஜுலை பொதுத்தேர்தல் அமைந்தது. அரசியல் சுதந்திரம் கோரி தேசியப் போராட்டம் ஒன்றைத் தொடுப்பதற்குத் தெளிவான மனு ஒன்றைத் தமிழ் மக்களிடம் கேட்டு கூட்டணியனர் தேர்தலில் போட்டியிட்டனர். அதற்கேற்ப அவர்களது தேர்தல் விஞ்ஞாபனமும் பின்வருமாறு அமைந்தது.

“தமிழ் இனம் சுயநிர்ணய அடிப்படையில் தனது தாயகப் பூமியில் இறையாண்மையை நிறுவத் தீர்மானம் எடுத்தாக வேண்டும். சிங்கள அரசுக்கும் உலகத்துக்கும் இந்தத் தீர்மானத்தைப் பிரகடனம் செய்வதற்கு ஒரே வழி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிப்பதேயாகும். இவ்வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் பேசும் பிரதிநிதிகள், இலங்கைத் தேசிய அரச மன்ற உறுப்பினர்களாக இயங்கும் அதேவேளை, தமிழீழத் தேசிய மன்றமாகவும் தம்மை வரித்துக்கொண்டு தமிழீழ அரசுக்கான அரசியல் யாப்பு ஒன்றை வரைந்து, அந்த யாப்பை அமைதி வழிகளாலோ, நேரடி நடவடிக்கையாலோ, போராட்டத்தாலோ நடைமுறைக்குக் கொண்டு வந்து தமிழீழத்தின் சுதந்திரத்தை நிறுவவேண்டும்”.

தமிழரின் தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் இப்பொதுத் தேர்தலின் தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. சுதந்திரமான தமிழ் அரசை நிறுவுவதற்கான மக்கள் ஆணை கோரியே இத்தேர்தல் நடைபெற்றது. கூட்டணியினர் கோரிய மனுவுக்கு அமோக ஆதரவு தெரிவித்து தமிழ் மக்கள் வாக்களித்தனர். இத்தேர்தல் வாயிலாக வடகிழக்கில் கூட்டணியினர் 17 ஆசனங்களில் வெற்றி பெற்றனர். உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தனித் தமிழ் அரசை நிறுவும் பொறுப்பு, இத்தேர்தலின் தீர்ப்பு மூலம் கூட்டணித் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தாம் எதற்காகத் தெளிவு செய்யப்பட்டார்களே அந்த இலட்சியத்தை அடைவதற்கான அரசியல் தூர நோக்கோ, நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டமோ தமிழ் நாடாளுமன்றத் தலைவர்களிடம் இருக்கவில்லை. அரசியல் சுதந்திரம் நோக்கிய பாதையில் உருப்படியான நடவடிக்கைகள் எதையுமே எடுக்கத் தவறிய அவர்கள் பாராளுமன்ற இருக்கைகளில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் இயங்கிய வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி, 1977 பொதுத்தேர்தலில் மிகப்பெரும் வெற்றியீட்டி 85 விழுக்காடு இருக்கைகளை நாடாளுமன்றத்தில் கைப்பற்றியது. பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள், ஓர் இருக்கையையேனும் பெறாது முற்றாகத் தோற்கடிக்கப்பட்டன. வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்தின் முதல்நிலை எதிர்க்கட்சியாகத் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இடம் வகித்தது. இறையாண்மையுடைய தனித்தமிழ் அரசாக திகழ்வதற்கான கோரிக்கையோடு தமிழர் ஒரு புறமும், சுதந்திரமாக வாழ விரும்பும் தமிழினத்தை அடிமைப்படுத்தி மேலாண்மை செலுத்துவதற்கு முற்றுமுழுதான அரசதிகாரம் கொண்ட சிங்களக்  கட்சி மறுபுறமுமாகப் பாராளுமன்றம் மோதலுக்கான களமாகியது. தேர்தல் முடிந்த கையோடு, இன முரண்பாடு கூர்மை அடைந்தது. தமிழருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இனக் கலவரம் முன்பைவிட குரூரம் மிகுந்ததாகத் தோற்றம் எடுத்தது.

நாடெங்கும் பரவிய இனவெறிக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாயினர். பல கோடி பெறுமதியான தமிழர் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அரச காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் பகிரங்கமாகக் காடையருடன் இணைந்து தீ வைத்தல், கொள்ளையடித்தல், பாலியல் வல்லுறவாடல், கொலை புரிதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். நாடு முழுவதையும் உலுப்பிக் கொண்டிருந்த இனவெறி வன்செயல்களைக் கட்டுப் படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கத் தலைவர்கள் இனவெறியை மேலும் தூண்டும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த இனவெறிக் கலவரம் தமிழ் அரசியல் களத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. தனியரசை நிறுவும் தேசிய சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும் என்ற தீவிரவாத இளைஞரின் உறுதிப்பாட்டிற்கு இந்நிகழ்வானது மேலும் உரமேற்றியது. தமிழ்ப் பாராளுமன்றத் தலைமையின் கையாலாகாத்தனத்தையும் இது அம்பலப்படுத்தியது. தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய தமிழ் அரசியல் தலைவர்கள், தங்களது அரசியல் வாழ்வை நியாயப்படுத்த அரசுடன் இணைந்து போகவும் வழி தேடினார்கள். அரச அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனக்கேயுரிய சாணக்கிய தந்திரத்தோடு செயற்பட்டார். சுதந்திரத் தனித்தமிழ் அரசை நிறுவும் கொள்கையில் தமிழ்த் தலைவர்கள் உறுதியாக இருக்கவில்லை என்பதையும் மாற்று அரசியற் தீர்வுக்கு வழிதேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஜெயவர்த்தனா அறிந்து கொண்டார். ஆகவே, சிங்கள அரசுக்கு உண்மையான அச்சுறுத்தல், போராளி இளைஞரின் புரட்சிகர அரசியலே என்று அவர் உணர்ந்து கொண்டார். எனவே, விடுதலைக்கான போராளி எந்தத் தளத்திலிருந்து வருகிறதோ, அந்தப் புரட்சிகர இளைஞர் தளத்தை நசுக்குவதற்கு அனைத்து அடக்குமுறை வழிகளையும் புதிய அரசு கையாண்டது. ஈவிரக்கமற்ற ஒடுக்கு முறையைக் கைகொண்ட சிங்கள அரசு, தமிழ் இளைஞர்களை ஒடுக்குவதற்கு மேலதிக அதிகாரங்களைக் காவல்துறைக்கும் இராணுவத்திற்கும் வழங்கியது. அரச அடக்குமுறை ஒரு புறமும் அதற்குச் சவாலாக ஆயுத எதிர்ப்புமுறை மறுபுறமுமாக, ஆயுதப் போராட்டம் அனல் கக்கும் உக்கிரத்தில் தமிழர் தாயகம் எங்கும் பரவியது.

அடுத்து வரும் பதிவு : விடுதலைப் புலிகளின் போராட்டக்களம்

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.