தமிழ் இளைஞரின் அரசியல் வன்முறை

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:01

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

தமிழ் இளைஞரின் அரசியல் வன்முறை

நடைமுறைச் சாத்தியமான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று பட்டுச் செயற்பட வேண்டிய அவசியத்தைத் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைமைப்பீடம் உணர்ந்திருந்தது. ஆனால் தலைவர்களிடையே நிலவிய கருத்து பேதம், நடைமுறைச் செயற்திட்டம் ஒன்றை உருவாக்குவதற்குத் தடையாக நின்றது. தமிழினத்தின சார்பாக யாப்பமைப்பு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதப்பரைகள் எடுத்த எடுப்பிலேயே தூக்கி வீசப்பட்டமை, தமிழ்த் தலைவர்கள் மத்தியில் ஆழமான ஏமாற்றத்தைத் தோற்றுவித்தது.

அரச ஆட்சியில் தமிழ் மக்கள் அர்த்தபூர்வமாகப் பங்கெடுப்பதற்கு முற்றுமுழுதான தடை ஒன்று உருவாகி இருப்பதை இது அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியது. அரசியலில் தமிழர் முற்று முழுதாக ஓரம் கட்டப்படுவதையும் அது முகத்தில் அறைந்தாற்போல் உணர்த்தியது. எனவே தமிழினத்தின் அரசியல் எதிர்காலம் பேராபத்துக்கு உள்ளாகி இருப்பதைத் தமிழ்த் தலைவர்கள உணரவே செய்தார்கள். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வல்ல நடைமுறைச் செயற்திட்டம் ஒன்றை வகுக்க அவர்களால் இயலவில்லை. திருகோணமலை மாநாட்டிலே ஆறு அம்சத் திட்டம் ஒன்றை அவர்கள் வகுத்தார்கள். ஆனால் தமிழர் ஐக்கிய முன்னணி தலைமைப் பீடத்தினரிடம் அரசியல் தூரநோக்கு வரண்டுபோய் விட்டதையே அந்த ஆறு அம்சத்திட்டம் அம்பலப்படுத்தியது.

1. தமிழ் மொழிக்கு உரிய திட்டவட்டமான இடம்
2. சிறீலங்கா ஒரு மதசார்பற்ற அரசாக இருத்தல்
3. சிறுபான்மை இனத்தவரின் அடிப்படை உரிமைகள்
அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படுவதோடு, சட்ட மூலம் செயற்படுத்தப்படுவதற்கான உறுதிப்பாடு.
4. மனுப் பண்ணும் அனைவருக்கும் குடியுரிமை
5. நிர்வாகப் பரவலாக்கம்
6. சாதி முறை ஒழிப்பு

ஒருபுறம் சிங்கள அரசியல் கட்சிகள் தமது கொள்கை வேறுபாடுகளை மறந்து, ஒரே அணியில் ஒன்றிணைந்து ஒரு கட்டிறுக்கமான சிங்கள – பௌத்த ஏதேச்சாதிகார அரசவடிவமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்க, மறுபுறம் தமிழ்த் தலைவர்கள், தமது அரம்பகால அரசியல் இலட்சியத்தை கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்காத, அர்த்தமற்ற பூடகமான கோரிக்கைகளை முன்வைக்க முனைந்து கொண்டிருந்தனர்.

தெளிவான அரசியல் தரிசனமும் உருப்படியான செயற்திட்டமும் இல்லாத காரணத்தினால் தமிழ்த் தலைவர்கள் மீது தீவிரவாதத் தமிழ் இளம் சமுதாயம் நம்பிக்கை இழந்தது. எவ்வித பயனுமின்றி, முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தலைவர்கள் கடைப்பிடித்து வந்த சாத்வீக அரசியல் அணுகுமுறை மீது, அரசியல் விழிப்புணர்வு பெற்ற இளைஞர் சமூகத்திற்கு நம்பிக்கை இடிந்தது. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணும் வகையில் நடைமுறைச் செயற்திட்டங்களைக் கொண்ட புரட்சிகரமான அரசியல் அணுகுமுறையையே இளை தலைமுறை விரும்பியது.

ஒருபுறம் ஆயுதப் படைகளின் அடக்குமுறையும் மறுபுறம் அரச இனவாத ஒடுக்குமுறையுமாக ஒரு புரட்சிகரமான புறநிலையை எதிர்கொண்டு நின்ற இளைஞர் சமூகம், காந்திய தத்துவத்தில் நெறிக்கப்பட்ட சாத்வீக அரசியல் வழிமுறையை கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டது. தாம் எதிர்கொண்டு நிற்கும் யதார்த்த சூழ்நிலைக்குச் சாத்வீகம் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதோடு புரட்சிகரமான அரசியல் அணுகுமுறைக்கு ஏற்றதாக அமையாது என்பதையும் இளைஞர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

எழுபதுகளின் முற்பகுதியில் தமிழ் அரசியல் அரங்கில் வெடித்த தமிழ் இளைஞர்களின் அரசியல் வன்முறை, பின்பு போக்கில் ஒழுங்கமைவான எதிர்ப்பு இயக்கமாக வடிவெடுத்தது. தீவிரவாத இளைஞரின் இந்த அரசியல் வன்முறையானது பழமைபேண் தமிழ்த் தலைமைக்கும் சரி சிங்கள ஒடுக்குமுறை ஆட்சியாளருக்கும் சரி சிம்ம சொப்பன அரசியல் யதார்த்தமாகத் தோற்றம் எடுத்தது.

மாறி மாறி ஆட்சிபீடம் அமர்ந்த சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு நேரடியாகப் பலிக்கடாவாக ஆக்கப்பட்ட காரணத்தாலேயே தமிழ் இளைஞர்களிடையே தீவிரவாதக் கடும் போக்கும், வளைந்து கொடாத எதிர்ப்புணர்வும், வன்முறையும் தலைதூக்கின. படித்த தமிழ் இளைஞர்களிடையே நிலவிய வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நிரந்தரமான விரக்தியையும் சூன்யமான எதிர்காலத்தையும் அவர்கள் எதிர்கொண்டு நின்றார்கள்.

அரசாங்கம் வகுத்த பாகுபாடான “தரப்படுத்தல்” திட்டமும் தனிச் சிங்களச் சட்டமும் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உயர்கல்விக்கான வாயில்களையும் நிரந்தரமாகவே மூடிவிட்டன.

ஒருபுறம் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்ட விரக்தி, மறுபுறம் உயர்கல்வி வாய்ப்பின்மையால் ஏற்பட்ட அங்கலாய்ப்பு, இன்னொரு புறம் அந்நிய மொழித் திணிப்பால் ஏற்பட்ட ஆத்திரம் ஆகியன தமிழ் இளம் சமூகத்திற்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்தப் பாழான நிலையிலிருந்து மீட்சி பெறுவதானால் தமது வாழ்க்கையை முற்றாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு புரட்சிகரமான அரசியல் நடைமுறையை தாம் தழுவ வேண்டுமென அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அரச ஒடுக்குமுறை தீவிரமடைந்து வந்த அந்நெருக்கடியான காலகட்டத்தில் ஆயுதப் போராட்டம் வாயிலாக தமிழ்த் தேசத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்பதே தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த ஒரே வழியென அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

எனவே, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகம் பிரிந்து சென்று தனி அரசை நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர்கள் முன்வைக்க வேண்டுமென அவர்களுக்கு நெருக்குவாரம் கொடுத்த புரட்சிகரத் தமிழ் இளைஞர்கள், தமது தீவிரவாதப் போராட்ட உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் வன்முறையில் குதித்தார்கள். எழுபதுகளின் முற்பகுதியில் வெளிப்பாடு கண்ட தமிழ் இளைஞரின் அரசியல் வன்முறையை அரச ஒடுக்குமுறைப் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிரவாதக் கிளர்ச்சியாகவும், தமிழரின் அரசியல் போராட்ட வடிவங்களில் ஒன்றாகவும் பார்க்க வேண்டும். தமிழ் இளம் சமூகத்தினரிடையே வளர்ச்சி கண்ட தீவிரவாதமும், பொறுமையிழந்த ஆவேசமும், கிளர்ச்சிப் போக்குமே தமிழர் விடுதலை முன்னணியின் அரசியல் சுதந்திரம் என்ற இலட்சியப் பயணத்தை துரிதப்படுத்தியது எனலாம்.

தமிழ் அரசியல் வானில் தலைதூக்கிய இளைஞர் வன்முறையின் வரலாற்று மூலத்தைப் பதிவு செய்யும் போது போராட்ட உணர்வுடைய பெரும்பாலான தீவிரவாத இளைஞர்களை ஊக்குவித்து வளர்த்து, தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கம் தோன்றுவதற்கான புறநிலையை உருவாக்கிக் கொடுத்த ஒரு அமைப்பைப் பாராட்டியாக வேண்டும். தமிழ் மாணவர் பேரவையே இந்த அமைப்பாகும். மிகவும் உறுதிப்பாடும் அர்ப்பணிப்புமுடைய புரட்சிவாத இளைஞர்களை அது உருவாக்கியது. தேச விடுதலை என்ற இலட்சியத்தில் இந்த
இளைஞர்கள் கொண்டிருந்த உருக்கையொத்த உறுதிப்பாடு ஏனையோருக்கும் ஊக்கத்தைக் கொடுத்து முன்மாதிரியாக அமைந்தது. இந்தப் புரட்சிகரமான மரபிலே தோன்றி, ஒப்பற்ற விடுதலை வீரனாக திகழ்ந்து, இறுதியில் தனது உயிரையே தியாகம் செய்த இளைஞர் சிவகுமாரன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர். சிங்கள அரசின் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து, அரச அடக்குமுறையின் இயந்திரமாகச் செயற்பட்ட காவற்துறையைத் துணிச்சலோடு எதிர்த்துப் போராடிய இந்த இளைஞன் ஒரு வீரகாவியத்தைப் படைத்தான். புரட்சிகர வன்முறை மூலம் சிவகுமாரன் ஏற்றிவைத்த சுதந்திர தீபம் தமிழீழம் எங்கும் அணையாத தீயாகப் பரவியது.

குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு, வங்கிக் கொள்ளை, அரசுச் சொத்துடமை மீது தாக்குதல் போன்ற அரசியல் வன்முறைகள் தமிழ்ப் பகுதிகளில் பரவின. வடக்கே வருகை புரிந்த சிங்கள அமைச்சர் ஒருவரின் வாகனம் மீது குண்டு வீசப்பட்டது. குடியரசு அரசியல் யாப்புக்கு ஆதரவு வழங்கி, தமிழ் மக்களின் அபிலாசைக்கு விரோதமாகச் செயற்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். தியாகராஜா மீது படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசுக்குப் பேராதரவு வழங்கிக் கொண்டிருந்த குமாரகுலசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்ட அன்று, தமிழீழம் எங்கும் வன்செயல் சம்பவங்கள் வெடித்தன. பேருந்துகள் தீக்கிரையாக்கப் பட்டன. அரச கட்டடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன.

அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியாக எழுந்த வன்முறை அலைகளை நசுக்கி விட முனைந்த அரசாங்கம் காவற் துறையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கிப் பயங்கரவாத ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. சட்டம் வழங்கிய அதிகாரத்தாலும் அரசு வழங்கிய உற்சாகத்தாலும் வீறு கொண்ட காவல்துறையினர், அப்பாவிகளான பொது மக்கள் மீதும், குறிப்பாகத் தமிழ் இளைஞர் மீதும் கொடூரமான வன்செயலைக் கட்டவிழ்த்து விட்டனர். சித்திரவதை, சிறை, படுகொலை ஆகிய பயங்கரங்களில் காவல்துறைக் கொடுங்கோன்மை தாண்டவமாடியது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று (1974 ஜனவரி 10 அன்று) இரவு, காவல்துறையினர் நடத்திய மிருகத்தனமான தாக்குதலே மிகவும் அருவருப்பான ஆத்திரமூட்டும் செயல் எனக் குறிப்பிடலாம். இந்த மாபெரும் கலாச்சார நிகழ்வின்போது, தென்னிந்தியாவிலிருந்து வருகை புரிந்த பெருங்கல்விமான் பேராசிரியர் நைனா முகம்மது அவர்களுடைய பேருரையை ஏறத்தாழ ஒரு லட்சம் தமிழ் மக்கள் வாய் பிளந்து கேட்டிருக்கும் தருணத்தில், இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டது.

நன்கு ஆயுதம் தரித்த நூற்றுக்கணக்கான சிங்கள காவல்துறையினர், நன்கு வகுக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தோடு, கண்ணீர்ப் புகைக்குண்டு, குண்டாந்தடி, துப்பாக்கிக் கூர்முனை ஆகியவை சகிதம், பார்வையாளர் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். சிதறியோடிய மக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில், எட்டு உயிர்கள் பலியாகின. பெண்கள், பிள்ளைகள் அடங்குவதாக, நூற்றுக்கணக்கானோர் கடும் காயமடைந்தனர்.

இந்நிகழ்வு தமிழ் இனத்தின் இதயத்தில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது. மக்களின் தேசியப் பெருமைக்குப் பெரும் தலைகுனிவை உண்டு பண்ணியது. காவல்துறையின் இழிமையான பண்பை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. அரச ஒடுக்குமுறையின் பயங்கரவாதக் கருவியாகவே காவல்துறையினர் தமிழ் மக்களின் கண்ணில் படிந்தனர்.
சிங்கள இனவாத அரசின் இந்தப் பயங்கரவாத வன்முறைக்கு எதிராக தமிழ் இளைஞரின் வன்முறைச் செயற்பாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சியுடன் ஒழுங்கமைவான ஆயுத எதிர்ப்பு இயக்கமாக பரிமாணம் பெற்றது.

அடுத்து வரும் பதிவு : விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.