இனப்பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி

In போரும் சமாதானமும்

அத்தியாயம்:1

தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!

இனப்பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி

இலங்கைத் தீவானது, தொன்மைவாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்குகின்றது. இத்தீவில் வதியும் தமிழ் மக்களது வரலாறானது பண்டைய யுகம்வரை வேரோடிச் செல்கிறது. சிங்கள மக்களின் மூதாதையர், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்திலிருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத்தீவை வந்தடைந்த போது தொன்மை வாய்ந்த திராவிட (தமிழ்) குடியிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள். இலங்கைத் தீவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்வதற்கு முந்திய காலத்தில், நாகர் இயக்கர் என்ற திராவிடத் தமிழ் இராச்சியங்கள் நிலை பெற்றிருந்ததாகச் சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன.

இந்த வரலாற்றுப் பதிவேடுகளை எழுதிய பௌத்த பிக்குகள் இலங்கையின் பூர்வீக குடிகளது வரலாற்றைத் திரித்துக்கூற முற்பட்டனர். புராதனத் தமிழர்களை மானிடரல்லாதோர் என்றும், அமானுஷ்ய சக்தி வாய்ந்த அரக்கர்கள் என்றும் வர்ணித்திருக்கிறார்கள். இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளது உண்மை வரலாறானது புராணங்கள் கட்டுக்கதைகளால் மூடிமறைக்கப்பட்டபோதும், காலத்தால் முந்திய ஆதிவாசிகள் தமிழர்களே என்று தற்கால ஆய்வாளர்கள் கருது கிறார்கள்.

புவியமைப்பின்படி, இத்தீவானது தென்னிந்தியாவை அண்டியதாக அமையப்பெற்றிருப்பதை நோக்குமிடத்து, வடஇந்தியப் பிரதேசமான வங்காளத்திலிருந்து விஜயனும் அவனது தோழர்களும் கடல்மார்க்கமாக வந்து இங்குத் தரையிறங்குமுன்னர் இத்தீவின் பூர்வீகக் குடிகளாகத் திராவிடத் தமிழர்களே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிபு.

கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இத் தீவில் நிகழ்ந்த கொந்தளிப்பான அரசியல் வரலாற்றைப் பௌத்த வரலாற்றுப் பதிவேடுகள் பொறித்திருக்கின்றன. தமிழ், சிங்கள மன்னர்களிடையே நிகழ்ந்த கொடும் போர்கள் பற்றியும், தென்னிந்திய தமிழ் சாம்ராஜ்யங்களின் படையெடுப்புகள் பற்றியும், மேலாண்மையை நிறுவுவதற்காகத் தமிழ் சிங்கள இராச்சியங்கள் மத்தியில் வெடித்த கோரமான யுத்தங்கள் பற்றியும் இவ்வரலாற்று ஏடுகள் விபரிக்கின்றன. வரலாற்று ரீதியாக, இலங்கைத் தீவானது வெவ்வேறு காலகட்டங்களில் சிங்கள மன்னர்களாலும் தமிழ் மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. இடையிடையே, காலத்திற்குக் காலம் நிகழ்ந்த போர்கள் காரணமாகத் தமது தலைநகர்களை தெற்கு நோக்கி நகர்த்த சிங்கள அரசர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, இலங்கையில் அந்நிய குடியேற்ற ஆதிக்கம் தலையிடுவதற்கு இடைப்பட்ட காலத்தில், தமிழ் மக்கள் தமது சொந்த இராச்சியத்தில், வடகிழக்கு மாகாணங்கள் அடங்கியதான தமது சொந்தப் பாரம்பரிய நிலத்தில், ஒரு நிலைபெற்ற தேசிய இனக்கட்டமைப்பாகத் தமது சொந்த அரசர்களால் ஆளப்பட்டு வந்தனர்.

பிரபல கடல் யாத்திரீகளான மார்க்கோ போலோ இலங்கைத் தீவை இப்பூமியின் சுவர்க்கம் என வர்ணித்திருக்கிறார். “இந்து மாகடலின் முத்து” எனப் புகழ்ந்துரைத்தனர் ஆங்கில குடியேற்ற ஆட்சியாளர். இந்தியாவின் தென்கரையிலிருந்து இருபத்தொரு மைல் நீர் இடைவெளியால் பிரிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தீவு 25,332 சதுர மைல் பரப்புடையது. அந்நிய குடியேற்றம் ஊடுருவுவதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாகத் தன்னிறைவுகொண்ட பொருளாதார வளம்பெற்றதாக இத்தீவு விளங்கியது. அத்தோடு, கீழைத் தேயக் களஞ்சியமாகவும் புகழீட்டியிருந்தது.

அந்நிய குடியேற்ற ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் இத் தீவின் பொருளாதார உற்பத்தி வடிவமானது நிலமானிய சமூக அமைப்பைக் கொண்டதாக அமையப் பெற்றிருந்தது. தமிழர் தேசத்தின் பொருளாதார வடிவமானது நிலமானிய சமூகத்தன்மையைக் கொண்டிருந்த போதும், தனக்கே உரித்தான தனிப் பண்புகளுடைய உற்பத்தி உறவுகளில் கட்டப்பட்டிருந்தது. பல்வேறு சமூகப் பணிகளின்

அடிப்படையில், பல படிநிலைகளாக வகுக்கப்பட்ட சாதியக் கட்டமைப்பை அடித்தளமாகக் கொண்டு இப் பொருளாதார உற்பத்தி வடிவம் இயங்கியது. பெரும் குளங்களையும் கால்வாய்களையும் பரவலாகக் கொண்டமைந்த நீர்ப்பாசன விவசாய முறைமைக்காகவே மத்திய கால இலங்கை புகழ்பெற்று விளங்கியது. ஆயினும், காலப்போக்கில், வடக்கிலும் வடமத்திய மாநிலத்திலும் அமையப்பெற்றிருந்த இந்நீர்ப்பாசன உற்பத்தி வடிவம் பராமரிப்பற்று, பழுதடைந்து, படிப்படியாகச் சீரழிந்து அடர்ந்த காட்டினுள் அமுங்கியது. இக்காலகட்டத்தில், சிங்கள நிலமானிய பிரபுக்கள் மத்திய மலைப்பிரதேசங்களை நோக்கி நகர்ந்து, கண்டியை தலைநகராக வரித்துக் கொண்டனர்.

போர்த்துக்கேயர் 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இந்தத்தீவில் முதல் காலடி வைத்தபோது, இரண்டு புராதன அரசுகள் இங்கே அரசோச்சக் கண்டார்கள். வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் தமிழ் மக்களும் தெற்கே சிங்கள மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டனர். வெவ்வேறான பண்பாடுகளோடு, முற்றிலும் வேறுபட்ட இரண்டு சமூகங்களாக அவர்கள் இயங்குவதையும், தனித்தனி இனங்களாகத் தத்தமக்கென்ற தனியான அரசாட்சி அமைப்போடு பிரிந்து வாழ்வதையும் அவர்கள் கண்ணுற்றனர்.

முதலில் ஒப்பந்தங்களிலும் பின்னர் போர்களிலும் ஈடுபட்ட போர்த்துக்கேயர், 1619ல் இறுதிப் போர் நடத்தி, தமிழ் இராச்சியத்தைத் தோற்கடித்து, தமிழ் மன்னன் சங்கிலி குமாரனைத் தூக்கிலிட்டார்கள். ஆயினும் போர்த்துக்கேயரும் சரி, அவர்களுக்குப்பின் வந்த ஒல்லாந்தரும் சரி, தமிழர் தேசத்தைத் தனி இராச்சியமாக ஆண்டு, தமிழர் தாயகத்தினது பிரதேச ஒருமைப்பாட்டையும், தமிழ் மக்களின் இன அடையாளத்தையும் அங்கீகரித்தாரகள்.

1799ல் ஆங்கிலக் குடியேற்ற சாம்ராச்சியம், தீவின் ஆட்சிக் கட்டுப்பாட்டை ஒல்லாந்தரிடமிருந்து பற்றிக் கொண்டது. இரண்டு இனங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்த போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாத பிரித்தானியர், 1833ல் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்கி ஒற்றையாட்சி அமைப்பைத் திணித்தனர். இவ்வாறு அந்நிய குடியேற்றவாதம், இன்றைய தேசியப் போராட்டத்துக்கு அடித்தளமிட்டது. நிர்வாக நோக்கங்களுக்காக ஒற்றையாட்சி அரசைப் பிரித்தானியர் உருவாக்கியபோதும், இத்தீவு, வேறுபட்ட

இரு இனங்களின் தாயகமாக விளங்கியது என்பதை அவர்கள் அங்கீகரித்தார்கள். குடியேற்ற ஆட்சியின் முதல் செயலதிபராக 1799ல் பதவியேற்ற சேர் கிளகோண் அவர்கள் தமது ‘கிளகோண் அறிக்கை’ என்ற மிகப் பிரசித்தி பெற்ற குறிப்பேட்டில் பின்வருமாறு கூறுகிறார். ‘இரு வேறுபட்ட தேசிய இனங்கள், மிகப்புராதன காலத்திலிருந்தே தீவின் வளங்களைத் தம்மிடையே பிரித்து வைத்திருக்கிறார்கள்.

வளவை நதியிலிருந்து சிலாபம் நதி வரை, அதன் தெற்கிலும், மேற்கிலுமுள்ள உள்நாட்டுப்பகுதிகளைச் சிங்களவர் கொண்டிருக்க, மலபார்கள் (தமிழர்) வடக்குக் கிழக்கு மாவட்டங்களைத் தமதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரு தேசிய இனங்களும் தங்கள் சமயம், மொழி, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் முற்றாக வேறுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர்’.
சிங்களமக்களும் தமிழ் மக்களும் கிறிஸ்துவுக்கு முந்திய காலம்வரை தொடர்ந்து செல்லும் தொன்மைமிக்க ஆழமான வரலாற்று வேரோடல்களைக் கொண்டுள்ளன. தனித்தனி தேசிய இனங்களாகக் கணிக்கப்படும் தன்மைகளையும் கொண்டுள்ளனர்.

எனினும், வரலாற்று ஓட்டத்திலே இலங்கைத்தீவு வேறு பல்லின பண்பாட்டு வடிவங்களையும் உருவாக்கிக் கொண்டது. இத்தீவில் வேறு இனக் குழுக்களும் வாழ்கின்றன. அவற்றுள் முஸ்லிம்களும் மலையகத் தமிழரும் தமக்கெனத் தனித்தனியான பண்பாட்டு வாழ்வுடையவர்களாக விளங்குகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் மூலத்தை, பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவிலிருந்து வர்த்தகர்களாக இத் தீவுக்கு வந்தவர்களுடன் பொருத்திப் பார்க்கலாம். தமிழைத் தம் தாய் மொழியாக வரித்துக் கொண்ட இந்த முஸ்லிம்கள், தீவின் கிழக்கேயும் தெற்கேயும் பெருமளவாகக் குடியமர்ந்தார்கள்.

தமிழைத் தாய் மொழியாகத் தழுவி, கிழக்கிலே தமிழ் மக்களோடு கூடிக் குடியமர்ந்து, விவசாயிகளாக வாழுகின்ற இவர்கள், தாம் ஒரு தனித்துவமான இனக் குழுவினர் என்ற கூட்டுப் பண்பாட்டு உணர்வைத் தமது மதமான இஸ்லாமிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

நன்றி.

அடுத்து வரும் பதிவு :பிரித்தானிய குடியேற்ற ஆட்சியும் தமிழ் மக்களும்

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

 

 

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.