முள்ளிவாய்க்கால் – தமிழினம் விதைக்கப்பட்ட பலிக்களம்!

In முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் – தமிழினம் விதைக்கப்பட்ட பலிக்களம்!

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் மே 17, 18 ஆகிய தேதிகளில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர்.

உயிர்போகும் வேளையில், உதிரம் வழிந்தோட அவர்கள் அலறிய சத்தம் இன்னும் தங்கள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருப்பதாக, இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, தற்போது வீடு, நிலம், உறவுகளை இழந்து, எதிர்காலம் சூனியமாகிவிட்ட நிலையில் உள்ள மக்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த கொடூரத் தாக்குதலில் பலர் காணாமல் போயினர். பல நூறு பேர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர். இவ்வாறு 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தமிழ் மக்களின் ரத்தத்தை ஆறாக ஓட விட்ட மண்தான் முள்ளிவாய்க்கால். அதன் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பௌத்த-சிங்களப் பேரினவாதத்தால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கையில் உச்சம் தொட்ட நாட்கள் 2009, மே 17, 18, 19 ஆகும்.

2008-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கத்தின் பதிவேடுகளின்படி மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் வன்னியில் வாழ்ந்து வந்தனர். போர் முடிந்த பிறகு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள 2 லட்சத்து 70 ஆயிரம் பேர். ஆக, மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் காணவில்லை. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டவர்கள். மூன்றில் ஒரு பங்கு அதாவது 30% தமிழ் மக்கள் ஒராண்டு காலத்திற்குள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். வியட்நாமில் மொத்தம் 15 இலட்சம் பேர் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இது பத்தாண்டு காலத்தில் நடந்தது. வியட்நாம் மக்கள் தொகையில் 6% பேர் படுகொலையானார்கள். பத்தாண்டு காலத்தில் 6% பேர் படுகொலை செய்யப்பட்டதையும் ஒராண்டு காலத்தில் 30% பேர் படுகொலை செய்யட்டதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஈழத்தில் தமிழ் மக்கள் சந்தித்துள்ள மனித உயிரிழப்புகளின் கொடூரத்தை உணர முடியும். முள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு தமிழனுக்கும் இதயத்துடிப்பு அதிகரிக்கும், நெஞ்சம் கனக்கும். தமிழீழம் என்ற இலட்சியக்கனவு உயிர் பெற்று வழிநடத்தும்.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போரும் ஒவ்வொரு வகையான செய்திகளை இந்த உலகிற்கு சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறி பிடித்த மங்கோலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்தது. நவீன உலகின் நாசி ஹிட்லர் யூதர்கள் மீது ஏவிய போர் பல லட்சம் யூதர்களை இரையாக்கியது, ஆனால் இவற்றையெல்லாவற்றையும் தாண்டி புதிய உலக ஒழுங்கிலும் ஆர்மேனிய, கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் 21ம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித இனத்திற்கெதிரான இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்தது.

தனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். தங்களின் உரிமைக்குப் போராடியத் தமிழினத்தை முற்றாக அழித்திட இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. அது வார்த்தையால் விவரிக்க முடியாது வலி நிறைந்த வரலாறு…

கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் மட்டுமல்ல. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளையவர்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள், நோயற்றவர்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். சாவின் விளிம்பில் முள்ளிவாய்க்காலை நோக்கி இடம் பெயர்ந்த நாட்களின் நினைவுகளையும் துப்பாக்கிகள் ஏந்திய சிங்கள இராணுவத்திடம் தன் சொந்தங்கள் நிர்வாணம் ஆக்கபட்டு, சாரை சாரையாக சரணடைந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட நினைவுகளையும் சுமந்தபடி ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒட்டுமொத்த மனித குலத்தின் மாண்புகளையும், நாகரிகத்தையும் கேள்வி கேட்டப்படி அவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இன அழிப்பு என்பது, மனிதக் குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிக மோசமான அல்லது கொடூரமான குற்றச் செயலாகும். அரசியல், அதிகாரம் உட்பட ஓர் இனத்தின் ஆளுமையும் அதிகாரமும் மேலோங்கும் நிலையில், அங்கு வாழும் சிறுப்பான்மை இனத்திற்கு எதிரான கொடூரங்களும் கொடுமைகளும் அரங்கேறுவது இயல்பாகிப் போனது. அவ்வாறு தன் இனத்தைக் கொடூரமாக அழிக்கும் இனத்திற்கு எதிராக கிளர்ந்து எழும்போது, புரட்சி வெடிக்கிறது. அது உள்நாட்டுப் போராகவோ அல்லது உள்நாட்டு பிரச்சனையாகவோ உருவெடுக்கிறது. அம்மாதிரியான சூழலில் சிறுப்பான்மை மற்றும் அதிகாரமற்ற நிலையில் இருக்கும் இனத்திற்கு எதிராக அதிகாரமும் ஆளுமையும் கொண்டிருக்கும் இனம் புரியும் அட்டூழியங்கள் எழுத்துகளில் விவரிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது.

இன அழிப்பு என்பது ஓர் இனத்தைப் போரில் கொல்வதிலும் அவர்களை அடித்து துரத்துவதிலும் சித்திரவதை செய்வதிலும் மட்டும் அடங்கிவிடவில்லை. மாறாய், அவ்வினத்திற்கு எதிராக உடல் மற்றும் உளரீதியாக புரியப்படும் கொடூரமான அல்லது கொடுமையான செயல்களும், இனப் படுகொலைதான். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்களை உலகம் அறிந்திருந்தும், தட்டிக் கேட்கவும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன் வரவில்லை. ஓர் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பிற்கு உலகமே வாய்மூடி கிடப்பது எவ்வளது அவமானம். இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்பு, அராஜகம், கொடுமைக்கு எப்போது நீதி கிடைக்கும் எனும் கேள்வி இன்னமும் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.

உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து, உடல் பாகங்களையும் இழந்து நடைபிணம் போல் உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு பிற நாடுகளில் நாடோடிகளாகவும் சொந்த நாட்டில் அகதிகளாகவும் வாழும் தமிழர்களுக்கு இந்த உலகம் காட்டும் மனிதாபிமானம் தான் என்ன? பாதிக்கப்பட்டவன் தமிழன் தானே என அலட்சியம் தொடர்ந்தால் மீண்டுமொரு விடுதலை போர் கிளர்ந்தெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம். ஆனால் அது ஆயுதமேந்திய போராக இருக்காது மாறாக நவீன உலகின் அரசியல் அதிகாரத்துக்கான, உரிமைக்கான போராக இருக்கும்.

“விடுதலைக்கான போராட்டங்கள் ஒரே நாளில் தொடங்குவதும் இல்லை, ஒரே தலைமுறையோடு முடிந்து விடுவதும் இல்லை”

முள்ளிவாய்க்கால் இனபேரழிவுகளுக்கான நீதியைப் பெறுவதும், இதுபோன்ற அழிவுகள் இனிமேல் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவம் தற்போதை அவசியம். போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற கொடூரங்களுக்கும் குற்றங்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் இன்னமும் வெற்றி பெறவில்லை. அன்று போருக்கு ஆயுதம் கொடுத்து, ஆலோசனை தந்து, சர்வதேச நாடுகளிடையே ஆதரவு திரட்டி இனப்படுகொலைக்கு துணை நின்ற இந்திய அரசு இன்றுவரை சிங்கள அரசை இனப்படுகொலைக் குற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வேலையைதான் செய்து வருகிறது. இலங்கை அரசு மீது இனப்படுகொலைக்கானப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும், அரசியல் தீர்வுகான ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கிழித்து இந்தியப் பெருங்கடலில் வீசியபடி இலங்கைக்கு பயணம் போனார் இந்தியப் பிரதமர் மோடி. சீனாவின் துறைமுகத்தை இடைக்காலமாக நிறுத்தச் செய்துவிட்டு, இந்திய புலனாய்வு அதிகாரிகள் தங்கு தடையின்றி இலங்கைக்கு போய் வர ஏற்பாடு செய்துவிட்டு இலங்கைத் தீவில் இந்தியச் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை முடித்து வந்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி தவறியும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றிப் பேசவில்லை. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைக் குற்றமென்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றி இருந்தும் தமிழர்களின் குரலை எதிரொலிக்கவில்லை. இலங்கை மீதானப் பன்னாட்டுப் புலனாய்வைத் தடுத்து நிறுத்தியதைத்தான் தனது நூறு நாள் ஆட்சிக் காலத்தில் ஆற்றிய மாபெரும் சாதனையாக இலங்கை அதிபர் அறிவித்தார்.

சர்வதேச சமூகம் காட்டுகின்ற மாற்றான்தாய் மனப்பாங்கினால், முள்ளிவாய்க்கால் பேரவலங்களுக்கு நீதியை வழங்கும் செயல்பாட்டில் இருந்து இலங்கை இனவாத அரசு தப்பித்துக் கொண்டு வருகிறது.

“போர் முடிந்தாலும் போருக்கான காரணங்கள் அப்படியே உள்ளது”

■ இனப்படுகொலைக்குப் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும். உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது.
■ அரசியல் தீர்வு காணப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 13-ஆவது சட்டத் திருத்தம் ஓர் அரசியல் மோசடி.
■ தமிழர் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். தமிழர் பகுதிகளைக் சிங்களக் காலனியாக்குவதைத் தடுத்திட வேண்டும்.

இம்மாதிரியான கோரிக்கைகளை வலியுறுத்தி இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக செயல்படுவதும்கூட முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தோருக்காக செலுத்தப்படும் அஞ்சலிதான்.

மானிடம் போற்ற மறுக்கும் – ஒரு
மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும் – கவிஞர் பாரதிதாசன்.

-சிவசுப்ரமணியன்

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.