உயிரை தின்ற நாட்கள்

In முள்ளிவாய்க்கால்

உயிரை தின்ற நாட்கள்

மனமும் உயிரும் நினைக்கவே கூடாது என்று நினைக்கும் அந்த நாட்கள் என்றும் எங்கள் மனங்களை விட்டு வெளியே போவதில்லை. மரணத்தில் வாழ்ந்த போதும் மானத்தை பெரிதாக மதித்த தமிழன் இன்று தனது அத்தனையையும் இழந்து எதிலியாகி கிடக்கிறான் என்பதை யார் ஏற்று கொள்ளவார்? குருதி பெருகும் அந்த வலியின் உச்சங்கள் நிறைந்து கிடந்த நாள் ஒன்றை தான் இன்று எனது மனது மீண்டும் மீண்டும் நினைத்து கொள்கிறது. நான் நினைக்கிறேன் அது 2009 இன் சித்திரை மாத ஆரம்ப நாட்களில் ஒன்று.

முல்லைத்தீவு கப்பலடி என்று சொல்லப்படுகின்ற பகுதி. தினமும் கிபிராலும், எறிகணையாலும் அந்த பிரதேசமே திணறிக் கொண்டிருந்த நாட்கள் இவை. காயப்பட்ட போராளிகள் இருவரை அழைத்து கொண்டு அந்த இருட்டுக்கள் நானும் தணியரசனும் கடற்கரையை நோக்கி செல்கின்றோம். கும்மென்ற இருட்டு. முன் பின் நிற்பவரை தெரியவில்லை. அந்த பிரதேசமே மயான அமைதியாக இருந்தது. விளக்கொளிகள் கூட இல்லை. திடீர் என்று வானத்தில் எழும் வெளிச்சக் குண்டுகளே நிலத்தில் வெளிச்சத்தைத் தந்தது.

அவ்வாறான நிலையில் வன்னப் பெருநிலப்பரப்பெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்த மக்கள் குறித்த சில கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டு கிடந்தார்கள் இந்த நிலையில் அங்கே தங்குமிடங்கள் அமைப்பதற்கே வசதி இல்லை இதற்குள் இயற்கை உபாதைகளை அகற்ற கழிவுக் கிடங்குகளை எப்படி அமைப்பது?

அந்த கடற்கரையே கழிவகற்றவும், உணவுண்ணவும், உறங்கவும், சுற்றி சுழலும் வான்கலங்களுக்கும் பாய்ந்துவரும் எறிகணைகளைக்குள்ளும் பாதுகாப்பரணாகவும் இருந்தது. இந்த கடற்கரையே எங்கள் வாழ்வின் இறுதி குரல் ஓங்கி ஒலித்த இடமாகவும் இருந்தது. நாங்கள் துடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு வினாடிகளும் எமக்கான சாவின் கதவுகள் திறந்து கொண்டே இறந்தன நாங்கள் அத்தனைக்குள்ளும் எங்கள் உணர்வுகள் செத்து போகாது வாழ்ந்து கொண்டிருந்தோம்.

இயற்கை கழிவகற்ற வேண்டும் என்றால் இருட்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலை… சிலர் தங்களுடன் கொண்டுவரும் துணியாலான ஒரு மறைப்பை சாத்தி வைத்து அதிகாலை விடியும் முன்னே தமது இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவார். அல்லது இயற்கையின் இருட்டே மறைப்பாக கொள்வர். நாமும் அன்று தேசத்தில் அடிமை இருட்டினால் சூழப்பட இருந்த நிலையில் இயற்கை இருட்டை மறைப்பாக கொண்டு இயற்கை கழிவகற்ற வேண்டிய நிலை.

உண்ணுவதற்கு உணவில்லை இறுதி நேரத்தில் எப்போதாவது செல்களில் இறந்து கிடக்கும் மாடுகளும் கரைவலையில் இழுத்து எடுக்கப்படும் மீன்களும் சிறிய அளவில் அரிசியோடு நீர் நிறைந்து இருக்கும் ஒரு குவளை கஞ்சியும் தான் காயக்காரருக்கு கொடுக்கும் உணவு. பெரும்பாலான நாட்கள் அதுவும் கிடைக்காது. சில நாட்கள் கஞ்சி மட்டும் கிடைக்கும் அப்பிடியான உணவுகளோடு தான் அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தார்கள். கட்டுவதற்கு மருந்துகளோ உட்கொள்ள மாத்திரைகளோ இல்லாத கொடுமை. காயங்களின் வேதனை ஒருபுறம். இயற்கை உபாதைகள் மறுபுறம் இதனால் தான் இயற்கைகழிவகற்ற நாம் அவர்கள் இருவரையும் அழைத்து வந்தோம். அவர்களால் காலூன்றி நடக்க இயலாது அதனால் எங்கள் கரங்களால் அணைத்த படி அவர்கள் இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

கடற்கரை அண்மித்ததும் அடிப்பக்கம் வட்டமாக வெட்டப்பட்டிருந்த நாற்காலியில் அவர்கள் இருவரும் அமர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் இருவரும் கொஞ்சம் தள்ளி நின்று மௌனிக்க போகும் எங்கள் ஆயுதங்களை பற்றி கலந்துரையாடுகிறோம். அப்போது கும்மென்ற இருட்டு சூழ்ந்து கிடந்த அந்த இடம் நோக்கி முல்லைத்தீவு இராணுவ முகாமில் இருந்து, ஏவப்பட்ட பாரா குண்டு அந்த இடத்தையே பகலாக்கிகுறது… அந்த இடத்தை இருட்டு சூழ்ந்திருந்த போது எதுவுமே தெரியவில்லை. அருகில் நின்ற தணியரசனைக் கூட இனங்காண முடியாத இருட்டு ஆனால் பரா வெளிச்சம் அங்கிருந்த அனைவரையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. எங்கள் துயரை வெளிக் கொண்டு வந்தது.

கடற்கரையை பார்த்த நாம் மறுபக்கம் திரும்பி கொள்கிறோம். ஆண் பெண் குழந்தை என்ற பாகுபாடின்றி வரிசையில் இயற்கை கழிவகற்ற குந்தி இருந்தார்கள் எம் மக்கள். தமிழினம் தனது பேரவல கொலைவளையத்துக்குள் தன் உயிரை விட அதிகமாக நேசிக்கும் மானத்தை தொலைத்து கிடந்தது.

ஒரு பெண் பிள்ளை வளரும் வீட்டில் அவள் குளிப்பதற்காக, உடை மாற்றுவதற்காக அல்லது அவளின் மானத்தை காப்பதற்காக என்று குறைந்தது கிடுகால் அமைக்கப்பட்ட தட்டிகளையாவது அமைப்பார்கள். அவள் வாழும் வீட்டின் வேலியை கொஞ்சம் உயர அமைத்து அவளின் பாதுகாப்பை உயர்த்துவார்கள். பெண்ணுக்கான தனித்துவம்மிக்க பெறுமதியை கொடுப்பார்கள். அவளின் மானத்தைக் காக்க அரும்பாடுபடுவார்கள். பெண் எண்பள் கடவுளர்க்கு இணையானவளாக வாழ்ந்த இனம் எம் தமிழினம்.

இன்று கடற்கரையில் அருகில் ஒரு இளைஞன் அல்லது அருகில் கணவனல்லாத ஒரு புது மனிதன் நெருக்கமாக இருப்பதை கூட கண்டு கொள்ளாது மனித வாழ்க்கையில் உயிருடன் இருந்து அனுபவிக்க முடியாத அதி உச்ச வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடற்கரை முழுக்க பால் வேறுபாடற்று மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள் அதைக் கண்ட போது அந்த இடத்திலையே செத்துவிட தோன்றியது எமக்கு.

சீ என்ன வாழ்க்கைடா இது…

என்னோடு நின்ற தணியரசன் அலுத்து கொள்கிறான். காயப்பட்ட போராளிகள் பராவை திட்டி தீர்க்க தொடங்கினர்.

அப்போது ஒருவர் அவர்களுக்கு அருகில் வருகிறார். கிட்டத்தட்ட 40 வயதிருக்கும் திடகாத்திரமான உடலமைப்புக் கொண்டவர் அவர்.

தம்பி அறிவில்ல இதுல பொம்புள பிள்ள இருக்கிறது தெரியவில்லயா…?

அவரின் கேள்வி நியாயமானது தான் ஆனால் அந்த இடத்தில் எதுவுமே தெரியாத நிழல்களாகவே நாங்கள் நின்றோம் அதில் ஆண் யார் பெண் யார் என்பதை நாம் எப்படி அறிவோம். பரா வெளிச்சம் இனங்காட்டிய போது அவர் அவர்கள் மீது பாய்ந்து கொள்கிறார்.

“மன்னிச்சு கொள்ளுங்கோ அண்ணா இருட்டுக்க எமக்கு தெரியல்ல”

சீ கருமம் பேசாதீங்கடா என்ன பொண்ணுங்க…………. பார்க்க என்று வாறீங்களா?

அவர் உச்சகுரலில் காத்த நாங்கள் இருவரும் அருகில் செல்கிறோம்.

என்ன அண்ண என்ன பிரச்சனை…?

கொஞ்சம் அதட்டலாகவே கேட்கிறோம்… எங்கள் மக்கள் பாவம் அவர்கள் தங்களை இந்த கடற்கரையில்தொலைத்து விட்டு நடைப்பிணமாக கிடக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை கோவிப்பது தவறு என்றாலும் அவர் தப்பாக உரைத்த அந்த வார்த்தை எம்மை கொஞ்சம் கோவப்படுத்தி இருந்தது. தமக்காக தங்கள் உயிர்களை கூட துறக்க துணிந்தவர்கள் மீது தவறான கணிப்பை காட்டிய அவரிடம் சிரித்து கொண்டு அந்த போராளிகள் கூறுகிறார்கள்…

” அண்ண இந்த கோவத்தை ஆமில காட்டுங்கோ அப்ப இந்த நிலை வந்திருக்காது அண்ண…”

அவர் எதுவுமே பேசவில்லை

சொறி தம்பி… நீங்க,…

அவர் இழுத்து கொண்டு இருக்க

உங்களுக்காக சண்டையில நின்று உடம்பு முழுக்க காயப்பட்ட போராளிகள் அண்ண… அமைதியாக கூறிய அவர்கள் எங்களை பார்க்க நாமும் அவர்களை தூக்கி கொண்டு வந்த வழி நகர்கிறோம்…

சிங்களவன் எம் உயிரை மட்டுமா அழித்தான்? எம் உயிருக்கு மேலான மானத்தை பெண்மையை கௌரவத்தை மதிப்பை எம் மக்களின் உணர்வுகளை எல்லாமே தின்று ஏப்பம் விட்டான். கொன்று குவித்த பிண மலைக்கு நடுவே எங்கள் உணர்வுகளையும் அள்ளி குவித்தான் இன்றும் அந்த அவலத்தில் இருந்து வெளிவர மறுக்கிறது. எங்கள் உணர்வுகள் உறவுகள் எல்லாம் செத்து போய் கிடக்கிறது. மலவறையில் இருக்கும் போது பாட்டு பாடினாலே என்ன பழக்கம் இது சத்தம் போடாம இருடா என்று கட்டுப்படுத்தும் என் அம்மாக்கும் இந்த கடற்கரையில் அதே நிலைதான்…

இ.இ கவிமகன்.
11.05.2021

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.