தங்கையை கண்முன்னே பறிகொடுத்த அண்ணன்

In முள்ளிவாய்க்கால்

தங்கையை கண்முன்னே பறிகொடுத்த அண்ணன்

2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசமே எங்களைக் கைவிட்டு விட சிங்கள இனவெறிப் படைகளின் இனவழிப்பின் உச்சம் நடந்து கொண்டிருந்த நாள். நாம் எமது இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று. பல வல்லரசுகள் எம்மை ஒன்றிணைந்து அழித்தொழித்த நாட்களில் ஒன்று.

வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. செல்லும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறி வைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்தன. அதற்குள் பதுங்ககழிகளை அமைக்க நாங்கள் முனைந்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நந்திக் கழிப் பகுதியில் பதுங்ககழி அமைப்பது என்பது நினைக்க முடியாத காரியமாக இருந்தது அந்த பிரதேசம் வறட்டிக்கழி மண்ணால் ஆனது அதனால் மண்வெட்டியை எம்மால் பயன்படுத்த முடியவில்லை ஆனாலும் தீவிரமான முயற்சியின் பின் ஒரு சிறிய
” I ” வடிவ பதுங்குகுழியை அமைத்தோம்.

அப்போது அம்மாவின் குரல் ஒலிக்கிறது. “எல்லோரும் சாப்பிடுவம் வாங்கோ”… சாப்பாடு என்றம் அப்போதெல்லாம் மனசு அறுசுவை உணவைத் தேடுவதில்லை. கிடந்த சிறிய அளவு அரிசியில் கிடைத்த உப்பை இட்டு காச்சப்பட்ட கஞ்சி தான் அன்றைய உணவு. அதிலும் அளவு சாப்பாட்டு தான் ஒரு குவளை கஞ்சி தான் அன்றைய எமது உணவு.

அதை குடிக்க என்று தலை நிமிர்த்தி நடக்க முடியவில்லை. தூக்கினால் உயிர் பிரியும் அபாயம் இருந்தது. பதுங்கி சுடும் குறியாளர்களின் தாக்குதல் நிட்சயமாக எம்முயிரை பறிக்கும். அதனால் குனிந்து கொண்டு பற்றை மறைவுகளுக்கால் அம்மா இருந்த பற்றைக்கு பக்கமாக செல்கிறோம்.

அப்போது என் சித்தப்பாவின் மகள் என்னை அழைத்து தூதுவளை சம்பல் தாறதா என வினவுகிறாள். எப்பிடி அதை தயார் செய்தாள் என்பது யாரும் அறியாதது. புன்னகையோடு அவள் வினவிய போது வெறும் உப்புக் கஞ்சிக்கு அந்த சம்பல் சுவையாக இருக்கும் என்று நம்பினேன். அவளோ அங்கே பற்றைக்குள் படர்ந்திருந்த தூதுவளை இலைகளை பறித்து உப்பிட்டு தரமான சம்பல் ஒன்றை செய்திருந்தாள்.

எனது தங்கை செய்த தூதுவளை சம்பலை சுவைத்துக் கொண்டு கஞ்சியை குடித்த போது உண்மையில் அந்த நேர மரண அச்சம் கூட காணாமல் போயிருந்தது. எமக்கு சாவுக்கான மணித்துளி எண்ணப்பட்டு கொண்டிருந்த போதும் கஞ்சிக்கு சுவையாக அதை தயார் செய்ய அவளுக்கு எப்படி எண்ணம் வந்தது யாரும் அறியா நியம். பல வேளைகள் உண்ணாதிருந்த எமக்கு அது உண்மையில் அமிர்தமாகவே இருந்தது.

அன்றைய பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்த அந்த மணிப்பொழுதில் வெற்று அமைதியாக கழிந்தது நடுச்சாமம். கேட்டுக் கொண்டிருந்த அல்லது பாய்ந்து வந்து கொண்டிருந்த உயிர் குடிக்கும் இரும்புத்துண்டுகளின் வரவில் அப்போது சிறு ஓய்வு வந்தது. பத்து பதினைந்து நிமிடங்கள் அது நீடித்திருக்கும். அதுவே எங்கள் மேல் விழப்போகும் சாவுக்கான குறியீடு என்று எமக்கும் புரியவில்லை. அதனால் சிறிது நேரம் விழி அயர்ந்து போனோம்.

எங்கள் இருப்பிடத்துக்கு மேல் “வண்டு ” என்று எம்மால் குறியிடப்படும் வேவு விமானம் (beech craft ) ஒன்று சுற்றிச் சுழல்கிறது. வேகமாக அந்த ஒலி இரைகிறது. என் மனது நடக்க இருக்கும் அசம்பாவிதத்தை உணராமல் இல்லை. தூங்கிய அனைவரையும் எழுந்து பாதுகாப்பு தேட சொல்லி உத்தரவிடுகிறேன். அனைவரும் தம்மால் முடிந்த பாதுகாப்பு நிலையை எடுப்பதற்காக குப்பற படுத்து கொள்கிறனர்.

நான் நினைத்ததைப் போலவே முல்லைத்தீவில் அமைந்திருந்த பிரதான ஆட்லறித்தளத்தில் இருந்து எறிகணை ஏவப்படுகிறது. பராஜ்ச் என்று கூறப்படும் பல்முனைத் தொடர் தாக்குதலுக்கு நந்திக்களிப் பகுதி இலக்காகிறது. அப்போது தான் ஒரு எறிகணை எம் இருப்பிடம் தாண்டி ஐந்து மீற்றர் தூரத்தில் மரம் ஒன்றின் அடியில் விழுந்து வெடிக்கிறது. அதன் கீழே அமைக்கப்பட்டிருந்த ஒரு பனங்குற்றிகளால் மூடிய பதுங்ககழி எறிகணைத் தாக்குதலால் முழுமையாக சிதைந்து கிடந்தது. அதற்குள் சிறு நேரத்துக்கு முன்னால் எதோ வன்றுக்காக தாயிடம் அழுது கொண்டிருந்த குழந்தையின் சத்தத்தை காணவில்லை. கிட்டத்தட்ட பத்துக்கும் அதிகமான ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதற்குள் இருந்தார்கள். இப்போது அவர்கள் எவரின் சத்தமும் கேட்கவில்லை. அத்தனை பேரும் இறந்திருப்பர் என்றே நான் நம்பினேன்.

அது ஒரு புறம் இருக்க எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலர் அந்த தாக்குதலில் படுகாயமடைகிறார்கள். அந்த இடத்தில் 25 பேருக்கு மேலாக நாம் ஒரே இடத்தில் தங்கி இருந்தோம். அதனால் அங்கே படுத்திருந்த என்னையும் ஒரு சகோதரனையும் தவிர மற்ற எல்லோர் உடல்களையும் எறிகணைச் சிதறல்கள் கீறி சென்றன. என் தந்தை தலையிலும் சிறிய தந்தை முதுகிலும் என காயமடைகிறார்கள். சிறிய தந்தையின் இரு மகள்களும் இன்னும் ஒரு சித்தியின் மகளும் பலத்த காயங்களுக்குள்ளாகிறார்கள். ஏற்கனவே காலில் 8 இஞ்சி அளவுக்கு எலும்பை இழந்து காயப்பட்டிருந்த மூத்த போராளியும் எனது மைத்துனனுமான தயா என்ற போராளி அவரது குடும்பத்தோடு பாரிய காயங்களுக்குள்ளானார்கள். திரும்பும் இடமெங்கும் இரத்த வெள்ளம். நான் நிதானித்து எழுந்திருக்க முதல் ஒவ்வொருவரும் என்னை அழைக்கிறார்கள். கவி என்றும் அண்ணா என்றும் தம்பி என்றும் அழைத்த குரல்களுக்குள் நான் தடுமாறத் தொடங்கி விட்டேன். ஆனாலும் நிதானமாக செயற்பட்டேன்.

அனைவரின் காயங்களுக்கும் கட்டு போட முடியவில்லை யாருமே யாரையும் பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு அந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்திருந்தது.
அழுகுரல்கள் வானளவு எழுந்தது. முதலில் பலமான காயமடைந்தவர்களின் காயங்களுக்கு முதலுதவி செய்கிறோம். சிறு காயமடைந்த மற்றவர்கள் தாமே தமக்கு கட்டுப் போடுகிறார்கள். அப்போது தான் என் தங்கை ஒருத்தி குப்புறப் படுத்தபடியே எந்த சத்தமும் இல்லாது இருந்ததைக் கண்டு தூக்குகிறேன். அவளின் வாயில் இருந்து இரத்தம் வெளிவந்துகொண்டிருந்தது. முதுகுப் பக்கத்தால் உட்புகுந்த எறிகணைத்துண்டு இதயத்தின் அருகே கீறலை உருவாக்கி தங்கிக் கொண்டது. அவள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தாள். உடனடியாக அவளைத் தூக்கிக் கொண்டு இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்குச் செல்கிறேன்.

அங்கே நிறைந்து கிடந்த காயக்காறருள் அவளை மண்டும் அவசரமாக மருத்துவர் பரிசோதிக்கிறார். அவள் இறந்து விடுவதற்கான சாத்தியமே அதிகம் எனத் தெரிந்தும் சிகிச்சை கொடுக்கிறார். ஆனால் சிகிச்சை பலன்ற்றுப் போகிறது. சிகிச்சை முடித்து வெளியில் கொண்டு வந்து பாயில் கிடத்திய போது அவள் தலை சரிந்து தொங்கியது. நாடியைப்பிடித்துப் பார்க்கிறேன். அவள் துடிப்பு அடங்கி விட்டது. என் கண்முன்னே ஆசையாக அண்ணாவுக்கு தூதுவளைச்சம்பல் செய்து தந்த எனது தங்கை சுலக்‌ஷனா சிங்களத்தின் கொடூரமான இனவழிப்புத் தாக்குதலில் சாவடைந்த கணம் எப்படி மறக்கக் கூடியது…?

கவிமகன்.இ
11.05.2018

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.