லெப்.கேணல் டேவிட்…!

In வீரத்தளபதிகள்

லெப்.கேணல் டேவிட்
கிறிஸ்தோபர் அன்ரனி மரியதாஸ்
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
வீரப்பிறப்பு :29.01.1966
வீரச்சாவு : 09.06.1991

தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல்.

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன்.

தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம் , எல்லாக் காலங்களிலும் , கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின் , தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில் , கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின் , அதே அளவு இடத்தை , எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான்.

அவனது இளமையிலேயே கடல் அவனை அழைத்தது. அவனது குடும்ப நிலை அவனை கடலுக்கு அனுப்பியது.

” இயக்கம் கடலிலும் பிரயாணம் செய்ய வேண்டிவரும் ” என்ரகாலம் போய் , ” இயக்கத்தின் பிரயாணம் கடலில்தான் ” என்று வந்துவிட்ட 83ல் , இயக்கத்திற்க்காய் கடலில் இறங்கினான்.

தமிழீழத்தின் ஒவ்வொரு கரையிலும் கால் பதித்தான். நீண்ட பெரும் கடற்பரப்பு , கடற்பரப்பில் புள்ளியாய் நகரும் படகு , படகினைப் போல் பலமடங்கு விரிந்து , எழுந்து , விழுங்கவரும் அலைகள். சமுத்திர ராட்சதனின் அலைவாய் மூடமுதல் , விரைந்து , தத்திப்பாய்ந்து வெளியேறி , திரும்பிப்பார்க்கும் லாவசம். திரும்பிப்பார்வை நேரே நோக்க அடுத்த பெரும் அலை.

படகினை பலமடங்கு வேகத்துடன் துரத்தி உமிழும் பீரங்கிவாய்கள். அவற்றின் பல்முக நகர்வுகளிலும் தப்பி , தத்திச் செல்லும் வேகம். பின்னால் வரும் எதிரியின் கை அதிகமாய் நெருங்கின் , நின்று – நிதானித்து இயந்திரத்துப்பாக்கியை இயக்க ஆணையிடும் உறுதி , அந்தக் கணத்தில் எதிரி அடையும் அதிர்ச்சி டேவிட்டை பல தடவைகள் கரை சேர்த்துள்ளது.

அவனது கடல் பயணங்கள் மெய்சிலிர்க்கும் பல அனுபவங்களைக் கொண்டது. அவனது ஆசான்களும் , நல்ல நண்பர்களும் கடலிலேயே கலந்து விட்டனர். அப்போதெல்லாம் கூட , அவன் கடலில் நிலைத்து நின்றான். அவனது தப்பியோடும் லாவகமும் , தேவையின் போது எதிர்த்து நின்று எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுமே அவனை நிற்க வைத்தது.

இன்று இயக்கத்தின் வசமுள்ள பெருமளவு ஆயுதங்களுக்கு டேவிட்டைத் தெரியும்.

ஆம்…! அவை எமது கைகளுக்கு கிடைப்பதற்கு கிடையில் டேவிட் இருந்திருப்பான்.

அனேகமாக எப்போதுமே நாம் கரையில் காணும் டேவிட்டைக் கடலில் சந்திக்க முடியாது. ஒருங்கிணைந்த சிந்தையுடன் , தன்னை நம்பி படகில் ஏறிய ” நீந்தத் தெரியாத சுமைகளுக்கு ” உத்தரவிடும் டேவிட் , கடுமையான வசைகளால் ஓட்டிமாரை கட்டுப்படுத்தும் மாலுமி. கடலில் டேவிட்டை , டேவிட்டாகப் பார்ப்பது கடினம்.

எப்போதாவது மிக அபூர்வமாக , சீரான , நேவியில்லாத , ஒதுக்குப்புறக்கடலில் , நல்ல நிலவும் சேர்ந்தால் அவனது படகு நிற்கும். இயந்திரச் சத்தத்தை மேவி அவன் குரல் ஒலிக்கும், ” கடல் மேல் பிறக்க வைத்தான்…. ” அவனது குரல் இனிய சங்கீதம் இல்லை தான் , ஆனாலும் அவன் பாடினால் நின்று , நிதானித்துக் கேட்கவைக்கும் வசீகரம். அந்த வசீகரம் அவனது குரலுக்கா…? அல்லது அவன் பாடும் பாடல்களுக்கா…?

அவனது குரலில் ; பாடல் கம்பீரம் பெறுவதும் தெரியும். அந்தக் குரலுக்கு , அவன் தெரிவு செய்யும் பாடல்களை விட , வேறுபாடல் எடுபடாதென்பதும் புரியும்.

அவனைத் தெரிந்த , அவனுடைய பழகாத எல்லோராலும் கூறப்படும் , எண்ணப்படும் , எண்ண வடிவங்களுக்கு அப்பாற்ப்பட்ட போராளி. அநேக போராளிகளைப் போல் அவனுக்கும் ” பழஞ்சோறு குழைத்துக்கையில கொடுக்கும் அம்மா “ ” ஆமியின் வெடி கேட்டும் சிறுபற்றை சரசரக்காமல் தேத்தண்ணி செம்புடன் அண்ணனை , அண்ணனின் தோழர்களை தேடும் தங்கைகள். “ வீட்டின் நிலையை எண்ணுவதா ? நாடா ? என்ற கேள்விக்கு எப்போதுமே குழப்பமிலாத பதிலைத் தன்வசம் வைத்திருந்த போராளி. மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் ” தங்கச்சியவை ” என்று கூறிக் கண்கலங்கும் அண்ணன்.

எப்பேற்பட்ட வேலையாக இருந்தாலும் அவ் வேலையின் முக்கியத்துவம் விளங்க வைக்கப்பட்டால் , அந்த வேலையை செய்து முடிக்கும்வரை அவன் ஓய்வதும் அபூர்வம். அவனது நினைவுகள் மீட்டப்படும் போது திரும்பத்திரும்ப அவனது அக்குணநலனே எவருக்கும் முன்னிற்கும்.

தமிழீழத்தின் கடற்பரப்பில் மட்டுமல்ல , தமிழீழத்தின் தரைப்போர் வாழ்க்கையிலும் அவன் சாதித்தவை அதிகம். அதிலும் வடமராட்சியில் நடைபெற்ற அநேகமான சண்டைகளில் அவனது சுவடுகள் பதிந்திருந்தன.

இந்திய இராணுவத்திற்கு முந்தைய போர்வாழ்வில் , ஒப்பரேஷன் லிபறேசனுக்கு முன்பும் பின்பும் வடமராட்சியில் அவன் பங்கு அதிகம்.
ஒப்பரேஷன் லிபறேசனுகென ஆமி புறப்பட்டதிலிருந்து , நெல்லியடி முகாமிற்குள் மில்லர் புகுந்தது வரை அவன் ஓயவில்லை.

இந்திய இராணுவ யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்தவன். யுத்தம் ஆரம்பித்து , கொழுந்துவிட்ட நேரத்தில் தள்ளியிருக்க முடியாமல் , ஒரு கட்டுமரத்தில் வந்து சேர்ந்தான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வடமராட்சியில் இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்ததில் , அவன் பங்கு மிகப் பெரியது.

அனேகமாக இயக்கத்தின் எல்லாத் துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவன். அரசியல் ? அவன் அரசியல் வித்தகன் இல்லை தான் எனினும் , தான் ஏந்திய துப்பாக்கி எதற்காக என்பதில் குழப்பமில்லாதவன். மக்களுடன் பழகும் போதினில் அந்த மக்களில் ஒருவனாக நின்று சிந்திக்கத் தெரிந்தவன்.

எல்லாத் தலைமறைவுக்கால வாழ்க்கையிலும் , மக்களால் பாதுகாக்கப்பட்டவன். டேவிட் நின்றால் ஆமி பார்த்துச் சொல்வதற்க்கென ஒரு முதியோர் படையே திரளும்.

அவன் உலவும் ஊர்களில் சிறுகுழந்தைக்கும் அறிமுகமாகிவிடும் முகராசி. சிறுவர்களை ஒரு தடவை சந்தித்தால் , மறுதடவை சந்திக்கும்போது அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் நட்புணர்வு அல்லது அவர்கள் வெட்கத்தில் முகம் சிவக்க இவன் ஒரு பெயர் வைத்திருப்பான். சிறுவர்கள் என்றல்ல எவருடனுமே நட்பைப் பேணுவதில் தனித்துவமானவன் , பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் தனிமையான ஆர்வமுள்ளவன்.

படகு வழமைபோல் வலப்புறமாய் வட்டமிட்டு , நிழலாய் நகர்கிறது. ” எப்போதும் போல் , ‘ தேவையும் கடலும் தவிர ‘ மற்ற எல்லாம் வழமைபோல் ”

நீரைக்கிழித்து , வெண்நுரை கிளப்ப , அலையில் எழும்பிப்பாய்ந்தது….. படகு புறப்பட்டுவிட்டது. அதிகரித்த சத்தமும். கரையில் கூடிய கூட்டமும் , சிறிது சிறிதாய் மறைய, கடல் தெரியாதவர்களின் திருப்திப் பெருமூச்சுடன் “ கலந்தபோது , ” வண்டி வெளிகிட்டு விட்டது. ”

இயந்திர சத்தம் கரை வடக்கு முன்னரே கரையிலுள்ள வோக்கி.

அல்பா…… அல்பா….. என அழைத்தது.

” தண்ணியடிக்குது தானே வோக்கியை அது தான் லோக் ரியூப்பிலை வைத்திட்டினம் போல ” எனக் கூறிவிட்டு , முயற்சியைக் கைவிடும் போதும் கூட , இயந்திர சத்தம் கேட்டுக்கொண்டுதானிருக்கிறது.

நேரம் கரைய , முகாமுக்குத் திரும்ப நினைக்கும் வேளையில் , துரத்து முகாம் வோக்கியில் ஒரு அவசர அழைப்பு. ” வோக்கியில் அல்பா தொடர்பெடுத்து….. ”

” என்னவாம் “…..

” கிளியரில்லை , சரியாக விளங்கேல்லை பிறபோ…… பிறபோ…… என்று அவியல் கூப்பிட்டமாதிரியிருந்தது…..

” சொல்லு “….

” போட்வெடித்திட்டு , வண்டி அனுப்புங்கோ , ஏன்டா மாதிரிக் கிடந்தது. அவையளின்ர கிளியரில்லை , ஒண்டும் விளங்கேல்லை “……

” ஆர் கதைச்சது…..”

” டேவிட் அண்ணை மாதிரித்தான் கிடந்தது , ஒண்டும் விளங்கேல்லை ….. ”

அடுத்த படகினை ஆயத்தம் செய்தவேளை , இயந்திரம் எடுக்க பிக்க விரைந்த வேளை , உறுதியற்ற வோக்கிச் செய்தியை நம்புவதா , இல்லையா என்று யோசித்தவேளை , நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அலை விரித்துக் கொண்டிருந்தது.

” சன்னதம் கொண்டு நின்றது கடல். தேடபோகும் படகினை , தேடப்போகவென மற்ற படகை , தயாராக வைக்கக் , வைக்கும் கடல்…!

நேரம் செல்லச்செல்ல ” வேக்கிச் செய்தி பிரமையோ ? “ எனநினைக்க வைக்கும் , வெறுமையுடன் காத்திருக்கும் வேளையில் , தேடப்போன படகின் வோக்கி அழைக்கிறது.

அரியை கண்டிட்டம் , தூரத்தின் இன்னொமொரு ஆள் தெரியுது….

என்னமாதிரி….. என்னமாதிரி என்ற வோக்கிக்கு பதில் சொல்லாமல் தேடும் படகு கரைநோக்கி வர. ” படகில் அரியுடன் ரட்ணா ”

” என்ன நடந்தது ? ”

” போட பிரிஞ்சிட்டுது , நடுவாலை முறிஞ்சு அணியம்தனிய , கடயார்தனிய ரெண்டாகப் போச்சு ”

” மற்றாக்கள் என்ன மாதிரி ? டேவிட் அண்ணை என்ன மாதிரி ? ”

” இருட்டுக்குள் எல்லோரையும் கூபிட்டு டேவிட் அண்ணை ஒன்றாக்கினவர் , எல்லோரையும் நீந்தச்சொல்லிவிட்டுப்போட்டு , அவர் கரிகாலனைக் கூப்பிட்டு தன்னட்டை எடுத்தவர்.

முழுவிடயங்களையும் சொல்லமுடியாது அறியும் – ரட்னாவும் மயங்கிவிட்டார்கள்.

மீட்க்கப்பட்ட இருவரும் உப்பு நீரால் உதடுகள் வெடித்து. , முகம் புண்ணாக்கி , ” கோலம் கெட்டுப்போய் ” இருந்தார்கள்,

படகுகள் போயின , வந்தன. செய்தி கேள்விப்பட்ட சனமெல்லாம் கரைமுழுக்கக் கூடி நின்று தேடினர். படகுகளின் தேடுதலுக்கு மேலாக , டேவிட்டின் திறமையில் எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

” முதலும் இரண்டு நாள் கடலுக்கு கிடந்தது , வந்து சேர்ந்தவன் தானே ”

” மன்னாரிலை ஒருக்கா இரண்டு பொம்பிளைப் பிள்ளையளைத் , தனியக் கொண்டுவந்து சேர்த்தவனெல்லெ…”

டேவிட்டின் நீச்சல் திறமையில் எலோருக்கும் நம்பிக்கை இருந்தது.

” உந்த மட்டு மட்டு நீச்சல் பொடியல் வந்து சேர்ந்திட்டாங்களாம் டேவிட் ஏன் வரமாட்டான் ? ”

எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போதும் , அரி வைத்தியசாலியில் கூறிக்கொண்டிருந்தான். ” எங்களை நீந்தச்சொல்லிப்போட்டு கரிகாலனைத் தான் , இழுத்துக் கொண்டு நீண்டவர் ”

படகில் சென்றவர்களில் ” கடலுடன் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத , நீச்சல் தெரியாதவன் ” கரிகாலன் மட்டும் தான்.

எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த போதும் , அரியையும் – ரட்னாவையும் தவிர வேறு எவரும் வரவில்லை…..

கரிகாலன் வரவில்லை…..

டேவிட்டும் வரவில்லை …..

டேவிட் பங்குகொண்ட தாக்குதல்கள்…

* 1985ம் ஆண்டு மன்னார் போலிஸ் நிலையத்தாக்குதல் நடைபெற்றபோது , தாக்குதற் குழுவை படகில் ஏற்றி மறுகரைக்கு ( மன்னார் தீவுக்குள் ) கொண்டு சேர்க்கும் கடற்புலிகள் குழுவின் உதவிப்பொறுப்பாளராக இருந்தார். படகில் சென்று பாதுகாப்பாக இறங்குவதே தாக்குதலின் முதல் வெற்றி எனக் கருதப்பட்டது. இத்தாக்குதல் முடிந்த பின்பு அப்போதைய மன்னார்த் தளபதி லெப் கேணல் விக்ரர் அவர்களார் டேவிட் பாராட்டப்பட்டார்.

* 1987ம் ஆண்டில் ஆனையிறவு முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சிறிலங்கா இராணுவம் முன்னேற முயன்றபோது கிட்டு அண்ணா தலைமைதாங்கிய தாக்குதலின் பொது வீரமரணமடைந்த லெப் அங்கிளின் குழுவில் ஒருவராக சண்டை செய்து தோளில் காயமடைந்தார்.

* 1987ம் ஆண்டு யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தாக்குதலில் ( 8 இராணுவத்தினரைக் கைது செய்தபோது ) ” 50 கலிபர் ” குழு ஒன்றுடன் சென்று சண்டையில் ஈடுபட்டார்.

* 1989க் ஆண்டு நெல்லியடியில் இந்திய இராணுவக் காவலரண் மீதான தாக்குதலின் போது அத்தாகுதற் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராகச் சென்றார்.

* 1990ம் ஆண்டு வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் தாய்க்கப்பல் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் ( கடற்கரும்புலிகள் : மேஜர் காந்தரூபன் – கப்டன் வினோத் – கப்டன் கொலின்ஸ் ) நடவடிக்கையினை தலைமை தாங்கியவர் இவரே.

 

– ச . பொட்டு

( புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் – தமிழீழ விடுதலைப்புலிகள். )

விடுதலைப்புலிகள் இதழ் ( ஐப்பசி – கார்த்திகை : 1991 )

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.