தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 24

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!

(சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 24)

ராஜிவ் காந்தியின் நயவஞ்சக உத்தரவும் – இந்திய படைகளின் நாசகாரிய நடவடிக்கைகளும்!.

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கென்று இந்தியப் படையினர் மேற்கொண்ட பவான் இராணுவ நடவடிக்கை (Operation Pavan) 45 நாட்கள் வரை தொடர்ந்தது. பலாலி, காங்கேசன் துறை, பண்டத்தரிப்பு, யாழ் கோட்டை போன்ற இடங்களில் இருந்தும், மற்றும் விமானத் தரையிறக்கம், கடல் மூலமான தரையிறக்கம் என்று பல முனைகளில் இருந்தும், யாழ் குடாவைக் கைப்பற்றும் அந்த நடவடிக்கை மிகவும் மூர்க்கமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நான்கு நாட்களில் நிறைவு பெற்றுவிடும் என்று எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக 45 நாட்கள் வரை நீடித்தது.
இலங்கையின் சரித்திரத்திலேயே இடம்பெற்றிராதவாறு 35 நாட்டகள் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து விட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த 35 நாட்டகளும் மக்கள் வெளியே நடமாடுவதற்கு இந்தியப்படையினர் அனுமதிக்கவில்லை. தமது வீடுகளை விட்டு வெளியே வந்த அனைத்துப் பொது மக்களும், போராளிகளாகவே இந்தியப் படையினரின் கண்களுக்கு தென்பட்டார்கள். அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, மூதாட்டியாக இருந்தாலும், சிறு குழந்தையாக இருந்தாலும் சரி, வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டியவர்களே என்ற எண்ணத்தில்தான் இந்தியப்படையினர் செயற்பட்டார்கள். கண்களில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் சுட்டுத்தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

இந்தியப் படையினக்கு ஏற்பட்ட இழப்புக்களும், விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான வெற்றிகளும் இப்படியான ஒரு மனநிலையை இந்தியப் படையினரிடம் ஏற்படுத்தியிருந்தாலும், வெளியில் நடமாடுபவர்கள் சட்டத்தை மீறியவர்கள் என்ற ஒரு எண்ணமும் இந்தியப் படையினரது மனங்களில் விதைக்கப்பட்டிருந்தது. வெளியில் நடமாடுபவர்கள் சுடப்படவேண்டியவர்கள் என்றே இந்தியப் படையினர் நினைத்தார்கள். அவ்வாறு வெளியில் நடமாடுபவர்களைக் கொலை செய்யலாம் என்ற உத்தரவும் மேலதிகாரிகளினால் சாதாரண இந்தியப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ச்சியான 35 நாள் ஊரடங்குச் சட்டத்தை அப்பாவிப் பொதுமக்கள் எவ்வாறு தாங்கிக்கொள்வது என்றோ, அவர்கள் உணவிற்கு எங்கே போவார்கள் என்றோ, வருத்தம் வாதை ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வது என்றோ இந்தியப் படையினர் துஞ்சற சிந்திக்கவில்லை.
அவர்கள் சிந்திக்கும் நிலையிலும் விடப்படவில்லை. உத்தரவுகளை கண்களை மூடிக்கொண்டு கடைப்பிடிக்கும் வகையில்தான் இந்தியப் படையினர் பயிற்றப்பட்டிருந்தார்கள். இந்தியப்படையினரின் பயிற்சிகளின் போது மேலதிகாரிகளின் உத்தரவுகளை இயந்திரத்தனமாக பின்பற்றும் பயிற்சிகளையே இந்தியப்படையினர் அடிப்படையில் பெற்றிருந்தார்கள்.

இந்தியாவில் ஈழத்தின் எழுத்தாளர் கல்விகற்றுக்கொண்டிருந்த போது, அவர் தங்கியிருந்த வீட்டின் முன்பாக இந்திய இராணுவத்தின் ஒரு பயிற்சி மையம் இருந்தது. இந்தியப் படையினர் இலங்கைக்கு வருவதற்கு முந்திய காலம் அது. கடைசியில் இந்தியப் படையினரே இலங்கைக்கு வந்து ஈழத்தை மீட்டுத் தருவார்கள் என்று அவரைப்போன்ற அனேகமானவர்கள் நினைத்துக்கொண்டிருந்த காலம். அதனால் இந்தியப் படையினர் அந்த பயிற்சி மையத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவர்கள் சிரிப்புக்கள், அவர்களது விளையாட்டுக்கள் அனைத்துமே புளகாங்கிதத்தை ஏற்படுத்துவனவாகவே இருந்தன. அங்கு இடம்பெறுகின்ற பயிற்சி நடவடிக்கைகளை குறித்த எழுத்தாளரும் அவருடன் தங்கியிருந்த மானவர்கள் சிலரும் ஆவலுடன் அவதானித்து வந்தனர். பயிற்சியில் ஈடுபடும் இந்திய இராணுவத்தினர் ஒரு நிலத்தை பண்படுத்தி அழகான பூக்கன்றுகளை நட்டு சிறிது காலம் பராமரிப்பார்கள். திடீரென்று ஒரு நாள் அந்தப் பூக்கன்றுகளை முற்றாக அகற்றிவிட்டு அந்த இடத்தை இறுக்கமாக்கி தார் ஊற்றி ஒரு தளமாக மாற்றுவர்கள். இரண்டு மூன்று நாட்களின் பின்னர் மறுபடியும் அந்த தளத்தை உடைத்து பதப்படுத்தி மீண்டும் பூக்கன்றுகளை நடுவார்கள். இவ்வாறு மாறிமாறி ஒரே இடத்தை வெவ்வேறு நிலைகளுக்கு கொண்டு செல்வார்கள். அதுவும் ஒரே குழுவினரே இந்தக் காரியங்களைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள். இது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருவாதகவே இருந்தது. தாரிலும், சீமேந்திலும் தளம் அமைப்பதானால் பின்னர் எதற்காகப் பூக்கன்றுகளை நடவேண்டும்?. பூக்கன்றுகளை நடுவதானால் எதற்காக தரையை கெட்டியாக்கவேண்டும்? இதுபோன்ற பல கேள்விகள் அவர்களிடையே உலாவந்தவண்ணமே இருந்தது.

இந்தச் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு ஒரு நாள் கிடைத்தது. இந்தியப் படை வீரர்களைப் பயிற்றுவிக்கும் அந்த அதிகாரியுடன் கதைக்கும் சந்தர்ப்பம் திடீரென்று அவர்களுக்குக் கிடைத்தபோது அந்த பயிற்சியின் காரணம் பற்றி கேட்டனர். அதற்குப் பதிலளித்த அந்த அதிகாரி, ‘இது ஒரு முக்கியமான இராணுவப் பயிற்சி முறை. இராணுவத்தினர் விளைவுகள் பற்றி எதுவுமே யோசிக்காது, அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கட்டளைகளை மட்டுமே கடைப்பிடிக்கும் நிலைக்குத் தங்களை மாற்றிக்கொள்வதற்கான பயிற்சியே அது. இராணுவ வீரர்கள் தமது மேலதிகாரிகளினால் வழங்கப்படும் எந்த ஒரு உத்தரவிற்கும் எதற்கும் யோசிக்காது கீழ்ப்படியும் ஒரு கட்டுப்பாட்டை பயிற்றுவிப்பதற்கே இதுபோன்ற பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்திய இராணுவத்தினர் அவர்களது சப்பாத்துக்களின் அடிப்பாகங்களைக்கூட பாலிஸ் செய்து மினுக்கிவைக்கவேண்டும். இது உத்தரவு. அப்படிப் பாலிஸ் செய்யப்பட்ட சம்பாத்துக்களை அணிந்து ஒரு அடி வைத்தாலேயே அதன் அடிப்பாகத்தில் பூசப்பட்டிருக்கும் பாலிஸ் முற்றாக அழிந்துவிடும். ஆனால் அதுபற்றி அந்த இராணுவ வீரன் சிந்திக்கக்கூடாது. கட்டளைகள் எப்படியானதாக இருந்தாலும் அவன் கீழ்ப்படிந்தேயாகவேண்டும்’ என்று அங்கு மேற்கொள்ளப்பட்ட பயிற்சி முறைகளுக்கு அந்த உயரதிகாரி விளக்கம் அளித்தார்.

இந்திய சீன யுத்தத்தின் போது மேலிடத்தில் இருந்து சண்டை செய்யவேண்டாம் என்று கிடைத்த ஒரு தவறான உத்தரவிற்கு கீழ்ப்படிந்து நூற்றுக்கணக்கான இந்தியப்படை வீரர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்ட நிகழ்வையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
ஆக, இந்தியப் படைவீரர்கள் தமக்கு கிடைக்கும் கட்டளைகளின் அடிப்படையிலேயே எந்தக்காரியங்களையும் செய்யும் ஒரு தரப்பினர் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்படியானால் யாழில் 35 நாள் ஊரடங்குச் சட்ட காலத்தில் கண்களில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுத்தள்ளும் படியான நடவடிக்கையும், அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உத்தரவுகளுக்கு அமையவே நடைபெற்றிருக்கின்றன என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாக நெறிப்படுத்திக்கொண்டிருந்தவர் என்ற வகையில் இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியே ஈழத் தமிழர்கள் மீது இந்திய ஜவான்கள் மேற்கொண்ட அனைத்துக் கொலைகளுக்கு பொறுப்பேற்கவேண்டும்.

ஏனெனில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் ரீதியாக கிடைக்கப்பபெற்ற உத்தரவுகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டதாக லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் படைகளின் நடவடிக்கைள் அனைத்தையும் எந்தெந்த அரசியல்வாதிகள் மூலமாக ராஜீவ் காந்தி நெறிப்படுத்தினார் என்று திபீந்தர் சிங் வெளியிட்டிருந்த குறிப்புக்களை அடுத்தவாரம் பார்ப்போம்.

#தொடரும்….
ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.