இந்திய – தமிழீழ போர் அத்தியாய முடிவு – பாகம் 77

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!

(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 77)

இந்திய – தமிழீழ போர் அத்தியாய முடிவு!

எதற்காக இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்துவருகின்றது.

ஸ்ரீலங்காப் படைகள் 1987ம் ஆண்டில் மேற்கொண்டிருந்த ஒப்பரரேசன் லிபரேசன் நடவடிக்கையினால் யாழ்ப்பாணம் சிங்களப் படைகளிடம் வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காகவே இந்தியா தனது படைகளை யாழ்பாணத்திற்கு அனுப்பிவைத்ததாக சிலர் கூறுகின்றார்கள். ஸ்ரீலங்காப் படைகளிடம் இருந்து யாழ்ப்பாணத்தையும், தமிழர் வாழும் மற்றப்பகுதிகளையும் விடுவித்து தமிழ் அமைப்புக்களிடம் வழங்குவதற்கே இந்தியப்படைகள் இலங்கை வந்ததாக வேறு சிலர் கருதிக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கைப்படைகளுக்கு பயிற்சி அளிக்கவென்று இலங்கைக்குள் நுழைந்திருந்த இஸ்ரேலிய ‘மொஸாட்’ மற்றும் பாக்கிஸ்தான் இராணுவத்தினரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், திருகோணமலைத் துறைமுகம் அமெரிக்காவின் கைகளில் விழுந்துவிடாமல் தடுக்கவுமே இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது. இலங்கையின் தென்பகுதியில் எழுந்த புரட்சியை அடக்குவதற்கு இந்தியப்படைகளின் உதவியை ஸ்ரீலங்காவின் ஜணாதிபதி ஜே.ஆர். கோரி இருந்ததன் காரணமாகவே இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பபட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேற்கூறப்படுகின்ற கருத்துக்களில் காணப்படுகின்ற உண்மைத்தன்மை, அல்லது இவை பற்றி எழுப்பப்படுகின்ற சந்தேகங்கள் போன்றன எல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தியப் படைகளின் இலங்கை வருகைக்கான காரணங்களில், ‘இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அழுல்படுத்துவது’ என்பதும் பிரதானமாக இருந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமாக அமைந்திருந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதுடன், இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக இருந்த புலிகளைப் பலவீனப்படுத்துவதும் இந்தியப்படைகளது இலங்கை வருகையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு முக்கியமான அம்சமாக இருந்த ‘புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவது’ என்கின்ற சரத்தை அழுல்படுத்தவே இந்தியப்படைகள் அவசரஅவசரமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

ஏனெனில், தமிழர்களின் நலன்களை சிறிதும் கருத்திலெடுக்காது, அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடியதான ஒரு ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா அரசுடன் இந்தியா கைச்சாத்திட்டுவிட்டு, ‘தமிழர்களைக் காப்பாற்ற’ தனது படைகளை அது அனுப்பிவைத்ததாக கூறுவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

அதேபோன்று, இலங்கையின் தென் பகுதியில் ஏற்பட்டிருந்த சிங்கள இளைஞர்களின் புரட்சியை அடக்குவதற்குத்தான் இந்தியப்படைகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டன என்று அப்பொழுது ஜே.ஆர் தெரிவித்திருந்தது உண்மையானால், இந்தியப்படைகள் இலங்கையின் தென்பகுதிக்குத்தான்; வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். எதற்காக தமிழ் பிரதேசங்களுக்கு அவை வரவழைக்கப்பட்டிருந்தன என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது.

‘ஒப்பந்தத்தை அமுல்படுத்துகின்றோம் பேர்வழிகள்’ என்று கூறிக்கொண்டு, புலிகளை நிராயுதயாணிகள் ஆக்கவே இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது. பின்னர் புலிகள் மீது இந்தியப்படைகள் தொடுத்திருந்த யுத்தம் இதனை உறுதிப்படுத்தியது. இவற்றை விட, இலங்கை வந்த இந்தியப்படைகளின் சில உயர் அதிகாரிகளும், இந்தியப்படைகளின் வருகையுடன் சம்பந்தப்பட்ட சில இந்திய இராஜதந்திரிகளும், பின்நாட்களில் வெளியிட்ட சில கருத்துக்களும், இவற்றை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருந்தன.
இலங்கைக்கு உதவவே இந்தியப் படைகள்

இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொறுப்பாக இருந்த லேப்டினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் அவர்கள் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியின்போது, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கம் இந்தியப்படைகளுக்கு என்றுமே இருந்தது கிடையாது என்பதை தெளிவுபடுத்தியிருந்தார். ” ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக இந்தியப்படைகளின் பலத்தை பிரயோகிக்கும் நோக்கம் எங்களுக்கு என்றுமே இருந்ததில்லை. அத்தோடு இலங்கையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோகூட கைப்பற்றும் எண்ணம் இந்தியப்படைகளுக்கு இருந்தது கிடையாது. அப்படியான ஒரு செயலை இந்தயாவில் உள்ள எவருமே விரும்பியிருக்கமாட்டார்கள் என்பதும் நிச்சயம்” என்று அந்த இந்திய இராணுவ உயரதிகாரி அண்மையில் வழங்கியிருந்த அந்தச் செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அப்பொழுது கடமையாற்றியவரும், புலிகள் மீது இந்தியப்படைகளை ஏவிவிடுவதில் முதன்மையானவராக புலிகளாலும், இந்திய இராணுவ அதிகாரிகளாலும் குற்றம்சாட்டப்பட்டவருமான ஜே.என்.தீட்ஷித் அவர்கள் மிக அண்மையில் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், ‘ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அழைப்பின் பெயரிலேயே இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக’ குறிப்பிட்டிருந்தார்.

ஜோஷி ஜோசப் என்ற பிரபல இந்தியப் பத்திரிகையாளருக்கு அவர் வழங்கியிருந்த அந்தச் செவ்வியில், “இலங்கைக்கு எமது படைகளை அனுப்புவதற்கு உண்மையிலேயே நாங்கள் விரும்பவில்லை. இலங்கைக்குப் படைகளை அனுப்புவது என்பது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு அம்சமும் அல்ல. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தினமான 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி காலைவரை இந்தியப்படைகளை இலங்கைக்கு அணுப்பும் எண்ணம் எமக்கு இருக்கவேயில்லை.

இந்தியப்படைகளை இலங்கைக்கு அனுப்புவது இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த மிகவும் அவசியம் என்று ஜே.ஆர். தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால்தான், படைகளை அனுப்ப ராஜீவ் காந்தி சம்மதம் தெரிவித்தார். இதற்கான எழுத்து மூல கோரிக்கையையும் ஜே.ஆர்.எமக்கு அனுப்பிவைத்தார் என்று தீட்ஷித் தெரிவித்தார்.

மேற்கூறப்பட்ட இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டவர்கள் வேறு யாரும் அல்ல இந்தியப்படைகள் இலங்கையில் மேற்கொண்ட பல நடவடிக்கைகளிலும் பிரதான பங்குவகித்த அதி உயர் அதிகாரிகளே இவர்கள். இவர்களின் கூற்றுக்களில் இருந்து ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, ஸ்ரீலங்கா அரசு மீதோ அல்லது ஸ்ரீலங்காப் படைகள் மீதோ நிர்ப்பந்தம் செலுத்தும் நோக்கத்துடன் இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை – என்ற விடயம் மட்டும் உறுதியாகத் தெரிகின்றது.

அப்படியானால் எதற்காக இந்தியப்படைகள் ஈழமண்ணில் வந்திறங்கின?

இதற்கான பதிலையும் இந்தியப் படைகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதி உயர் அதிகாரிகளே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். இந்தியப்படைகள் ஈழ மண்ணில் கால்பதிக்கும் முன்னதாகவே, அங்கு புலிகளை இராணுவரீதியாக எதிர்கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பும், திட்டமும் அவர்களிடம் இருந்தன என்பதை அந்த இந்திய அதிகாரிகளே பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

தலைவர் பிரபாகரனை கைப்பற்றிவிடுவோம்.
இலங்கையில் இந்தியப் படைகளின் நடவடிக்கைகளில் ஆரம்பம் முதல் பங்குபற்றிய கேணல் ஜோன் டெய்லர் என்ற முதன்மை நிலை அதிகாரி பின்நாட்களில் இவ்வாறு நினைவுகூர்ந்திருந்தார்: “IPKF ஐ இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை முழுக்க முழுக்க இந்திய புலனாய்வு அமைப்பான ‘றோ’ இனது திட்டமிடலிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கையில் அமைதிப் படையின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி இராணுவ உயரதிகாரிகளுடன் ராஜீவ் காந்தி திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது, புலிகளின் பலம் பற்றி அவர் கேள்வியெழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ‘றோ’ உயரதிகாரி ஒருவர், நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் பிரபாகரனை நாங்கள் கைப்பற்றிவிடுவோம்’ என்று அடித்துக் கூறியிருந்தார், என்று கேணல் ஜோன் டெய்லர் நினைவுகூர்ந்திருந்தார்.

இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில், இந்தியப்படைகள் இலங்கையில் புலிகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்று ஆராய்ந்ததாகவும், அப்பொழுது இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் “புலிகள் 1977ம் ஆண்டு முதல் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்வர்கள். அவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்துமே எங்களுக்கு அத்துபடி. அவர்களில் பலர் எங்கள் சொல்லை மீறமாட்டார்கள் என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் பற்றி ஜே.என்.தீட்ஷித் எழுதி வெளியிட்டிருந்த புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் தனது புத்தகத்தில்ளூ ‘ஒருவேளை இந்திய இராணுவம் இலங்கையில் புலிகளுடன் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று இந்தியத் ராணுவத் தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தேன். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி முன்நிலையிலேயே நான் இதனைக்; கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, ‘ஒரு இராவிற்குள் நாங்கள் அவர்கள் கதையை முடித்துவிடுவோம்’ என்று தெரிவித்தார். இதே கேள்வியை இந்தியப் புலனாய்வு பிரிவின் உயரதிகாரி ஆணந்வர்மாவிடம் ராஜீவ் காந்தி கேட்டபோது, அதற்கு அவர், ‘அவர்கள் எங்களுடைய பையன்கள். அவர்கள் எங்களுடன் உடன்படுவதற்கு மாறாக எதுவும் செய்யமாட்டார்கள்’ என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக தீட்ஷித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்தபோது, இங்கு புலிகளை எதிர்கொள்ளும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. புலிகளே அவர்களை சண்டைக்கு வலிந்திழுத்துக்கொண்டார்கள்.’ என்பது போன்ற ஒரு தவறான கருத்து தற்பொழுதும் இங்குள்ள சிலரிடம் காணப்படவே செய்கின்றது.

ஆனால், உண்மையிலேயே இந்திய இராணுவம் ஈழமண்ணில் கால் பதித்தபோது புலிகளை எதிர்கொள்ளும் நோக்கம் அதற்கு இருந்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. புலிகளை நீராயுதபாணிகளாக்கி, அவர்களது கட்டுக்கோப்புக்களை சிதறடித்து, முடியுமானால் அந்த இயக்கத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவே இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அல்லது புலிகளைப் பலவீனப்படுத்திவிட்டு தனது செல்லப்பிள்ளைகளான தமிழின துரோக அமைப்புக்களை முதன்மைப்படுத்தி, வடக்குக் கிழக்கின் மீது ஆதிக்கும் செலுத்தும் திட்டமே இந்தியாவிற்கு இருந்தது.

ஆனால், அக்காலத்தில் புலிகள் பெற்றிருந்த பலம், அவர்கள் புரிந்திருந்த தியாகங்கள், அவர்கள் தமது குறிக்கோளில் கொண்டிருந்த உறுதி என்பன, இந்தியாவின் தனது இந்த நோக்கத்தை அடைவதற்கு பலத்த சவாலாக இருந்தன.

இந்திய தமிழீழ போர் பற்றி கடந்த வரங்கள் அல்ல கடந்த பல மாதங்களாக விரிவாக பர்த்து வந்திருந்தோம். இந்த தொடரில் மறைக்கப்பட்ட அல்லது மறைந்த பல சம்பவங்களையும் விரிவாகவே பாத்திருந்தோம் எனவே எந்தமிழ் உறவுகளே இந்த வரலாற்றை முழுமையாக படியுங்கள் வரலாற்றின் உண்மை தன்மையை விளங்கி கொள்ளுங்கள். மேலும் தமிழீழத் தேசியத்தலைவரும் – தமிழீழ விடுதலைப்போராட்டம் எனும் இத்தொடரில் இந்திய தமிழீழ போர் பற்றிய பார்வை இத்தோடு முடிவு பெற்று 3ஆம் கட்ட தமிழீழ போர் பற்றிய போரியல் வரலாற்றுக்குள் பயனிக்க இருக்கின்றோம்.

தொடரும்…
ஈழம் புகழ் மாறன்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.