தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 48

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!

(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 48)

-இந்திய படைகளின் பாலியல் தொல்லைகள்!-

ஈழப்பிரச்சினையில் இந்தியா மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் தொடர்பாக பிற்காலத்தில் எந்த ஒரு சமாதானத்திற்கும், அல்லது எந்த ஒரு உடன்பாட்டிற்கும்கூட ஈழத்தமிழர்களால் வரமுடியாமல் போனதற்கு, இந்தியப் படைகள் ஈழத்தில் மேற்கொண்ட பாலியல் வன்முறைகளும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. எனவே இந்த விடயம் பற்றி ஓரளவாவது விபரித்தே ஆகவேண்டிய தேவையும் இந்தத் தொடருக்கு இருக்கின்றது. ஆதலால் ஈழத்தில் இந்தியப் படையினரின் மேற்கொண்ட பாலியல் வன்முறைகள் பற்றி அக்காலத்தில் ‘முறிந்த பனை’ உட்பட பல்வேறு ஊடகங்களில் வெளியான ஒரு சில விடயங்களை மட்டும் மேலோட்டமாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னதாக பிரபல தமிழீழ எழுத்தாளர் அவர்களின் நினைவு பகிர்வை பார்த்து விட்டு தொடர்ந்து பதிவுக்குள் செல்வோம்.

“இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில், இந்தியப் படையினர் மீது மிகவும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடியதான அனுபவம் ஒன்று எனக்கு ஏற்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்க ஒரு பாரிய சம்பவமாக அது இல்லாவிட்டாலும் கூட, எனது அடி மனதில் இந்தியப் படையினர் மீது முதன்முதலில் ஒரு வெறுப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக அது அமைந்திருந்தது. இந்தியாவே எமது தாய்நாடு, இந்தியத் தலைவர்களே எமது தலைவர்கள், இந்திய ஹீரோக்களே எமக்கும் ஹீரோக்கள், இந்தியக் கிறிக்கெட் அணியே எமது அபிமான கிறிக்கட் அணி, இந்திய அமைதிகாக்கும் படையினரே ஈழத்தின் அசைக்க முடியாத மீட்பர்கள் என்று பெரும்பாண்மையான ஈழத்தமிழர்களைப் போன்று நானும் நினைத்துக்கொண்டிருந்த காலத்தில், முதன் முதலில் எனது மனதில் எதிர்மறையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு சந்தர்ப்பம் அன்று எனது காண் முன் நிகழ்ந்தது. அன்றைய தினம் எனக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தைத் தொடர்ந்துதான் நான் இந்தியப் படையினரையும், ரஜீவ்காந்தி தலைமையிலான இந்திய அரசையும் மிகவும் அதிமாக வெறுக்க ஆரம்பித்திருந்தேன்.

இந்தியாவில் கல்விகற்றுக் கொண்டிருந்த நான் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்திருந்தேன்.
1988ம் ஆண்டின் நடுப்பகுதியில் மட்டக்களப்பில் இருந்து செங்கலடி-பதுளை வீதி வழியாக கொழும்புக்குப் பயணம் செய்யவேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. பேரூந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது இந்தியப் படையினரின் கொடுவாமடு சோதனைச் சாவடியில் பஸ்வண்டி பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டது. பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் இறங்கிச் செல்லவேண்டும் என்று இந்தியப் படையினர் உத்திரவிட்டார்கள். பெண்கள் மாத்திரம் இறங்கவேண்டியதில்லை என்று அவர்கள் கூறியிருந்தார்கள். (அக்காலத்தில் பெண்களை மதிக்கும் ஒரு நாடாக இந்தியா தன்னை வெளிக்காண்பித்துக்கொண்டிருந்த வேடிக்கையும், பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வினோதமும் இலங்கையிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சோதனைச் சாவடிகளில் பெண்கள் வாகனத்தை விட்டு இறங்கவேண்டியதில்லை என்ற சலுகைள் சில சோதனைச் சாவடிகளில் வழங்கப்பட்டிருந்தது.)

அனைத்து ஆண்களும் பஸ்வண்டியை விட்டு இறங்கி சோதனைக்காக கொட்டும் வெயிலில் காத்திருக்க ஆரம்பித்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் மனமகிழ்ந்து பஸ் வண்டியை விட்டு இறங்கவில்லை.இந்தியாவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த எனக்கு ஓரளவு ஹிந்தி தெரியும். பிரபல்யமான இந்திய கல்வி நிறுவனம் ஒன்றின் மாணவ அடையாள அட்டையும், இந்தியப் போக்குவரத்து பாஸ் உம் என்வசம் இருந்ததால், அவற்றை வைத்துக் கொண்டு இந்தியப் படையினரின் சோதனைச் சாவடிக் கொடுமைகளில் இருந்து அனேகமாக நான் தப்பித்து விடுவேன்.

பஸ்வண்டியைப் பரிசோதிப்பதற்கென்று இரண்டு இந்தியச் சிப்பாய்கள் நான் அமர்ந்திருந்த பஸ்ஸினுள் ஏறினார்கள். முதலில் அவர்கள் என்னைப் பார்த்து முறைக்க ஆரம்பிக்க நான் எனக்குத்தெரிந்த ஹிந்தியில் என்னை அடையாளம் காண்பித்து இந்தியாவில் நான் கல்வி கற்பது பற்றி தெரிவித்து சமாளித்து விட்டேன். தொடர்ந்து அந்தச் சிப்பாய்கள் பஸ் வண்டியில் அமர்ந்திருந்த பெண்களைப் பரிசோதிக்கச் சென்றார்கள்.

அவர்கள் அந்தப் பெண்கள் கொண்டு வந்திருந்த பொதிகளைப் பற்றி அக்கறை காண்பிக்கவில்லை. “உங்களிடம் ‘பொம்’ இருக்கின்றதா?” என்று கேட்டு அந்தப் பெண் பிள்ளைகளின் ஆடைகளுக்குள் கைகளை விட்டு சோதனை செய்தார்கள்.

“இங்கும் குண்டுகள் ஏதாவது மறைத்து வைத்திருக்கின்றீhகளா?” என்று கேட்டபடி அந்தப் பெண்களின் கால்களுக்கிடையேயும் சோதனை செய்து வேதனை கொடுத்தார்கள்.

இந்திய இராணுவத்தின் கைகளைத் தட்டிவிட முயன்ற ஒரு இளம் பெண்ணுக்கு கன்னத்தில் ‘பளார்’ என்று பலமான அடி விழுந்தது. இதனால் மற்றவர்கள் எதுவும் முரண்டு பிடிக்கவில்லை.
இதில் வேதனை என்னவென்றால் பஸ்ஸினுள் ஏறிய இரண்டு சிப்பாய்கள் இதபோன்ற சேஷ்டைகளைப் புரிவதை வெளியில் காவலுக்கு நின்ற மற்றய சில சிப்பாய்களும், ஒரு அதிகாரியும் வேடிக்கை பார்த்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

சோதனை முடிந்து பஸ்வண்டியை விட்டு இறங்கிய இந்தியச் சிப்பாய்கள் அடுத்த வண்டியைச் சோதனை இடுவதற்காகச் சென்றார்கள்.
அவர்கள் அவ்வாறு செல்லும் போது, பஸ்ஸினுள் இடம்பெற்ற நிகழ்வுகள் சம்பந்தமாகவும், பஸ்ஸில் இருந்த பெண்கள் சங்கோஜப்பட்டது தொடர்பாகவும் நடித்துக் காண்பித்து கேலிசெய்து கொண்டு சென்றார்கள். பின்னர் பஸ்சை விட்டு இறங்கியும் யன்னல் வழியாக அந்தப் பெண்களை எட்டிப்பார்த்து அவர்கள் அங்கங்கள் பற்றி மிகவும் கேவலமாக விமர்சித்து, கைகளால் சைகை காண்பித்து கேலி செய்தார்கள். இவர்களது சோதனைகளின் போது அந்தப் பெண்கள் நெளிந்து சங்கடப்பட்ட விதங்களை வெளியில் நின்ற மற்றச் சிப்பாய்களிடம் நடித்துக் காண்பித்து மகிழ்ந்தார்கள். எனக்கு ஹிந்தி ஓரளவு தெரிந்திருந்தால் அவர்கள் பேசிய அநாகரீமான வார்த்தைகளின் அர்த்தம் புரிந்திருந்தது. கோபம் கோபமாக வந்தது. எதுவும் செய்யமுடியாத எனது இயலாமையை நினைத்து வெட்கமாகவும் வேதனையாகவும் இருந்தது.

பஸ் வண்டியில் இந்தியப் படையினரின் தொல்லைகளுக்கு உள்ளாகி இருந்த பெண்களின் கண்களில் கண்ணீர் மல்கியது. ஒரு இளம் பெண்னுடன் வந்திருந்த தாய் என்னருகில் வந்து, “தம்பி, இங்கு இந்தப் பெண் பிள்ளைகளுக்கு நடந்த அவமரியாதையை தயவுசெய்து ஊரில் எவரிடமும் சொல்லிவிட வேண்டாம்.. எனது பிள்ளையின் வாழ்க்கை பாதித்துவிடும்..” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

அதேபோன்று எனக்கு தெரிந்த அக்கா ஒருவரும் அந்த பஸ்ஸில் வந்திருந்தார். அவருடன் வந்த அவருடைய கணவன் சோதனைக்காக பஸ்சைவிட்டு இறங்கிச் சென்றிருந்தார். அந்த அக்கா என்னிடம், “நிராஜ்.., அண்ணணிடம் மட்டும் இது பற்றி ஒன்றும் சொல்லிவிடவேண்டம். அவர் மிகவும் கோபக்காரர். அவர் ஏதாவது செய்யவெளிக்கிட்டு, அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடலாம். தயவு செய்து அவருக்கு இதுபற்றி ஒன்றும் கூறவேண்டாம்” என்று என்னிடம் இரந்து கேட்டுக்கொண்டார்.

பஸ்ஸில் இருந்து இறங்கிய ஆண்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்து நின்று சோதனையை முடித்துக்கொண்டு வருவதற்கு அதிக நேரம் எடுத்தது. அதுவரை பஸ் வண்டியில் எவருமே பேசவில்லை. பயங்கர அமைதி நிலவியது. வெளியில் நின்ற இந்திய ஜவான்களினது கேலிப் பேச்சுக்களை விட வேறு எதுவுமே எங்களுக்கு கேட்கவில்லை.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இந்தியப் படையினரின் மிகக் கொடுரமான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுடன் ஒப்பிடும் போது, இங்கு நடந்தது ஒன்றும் பாரதூரமான விடயம் இல்லைதான் என்றாலும், அந்தச் சிறிய சம்பவம் என்னில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. கண்முன்னால் நடந்த அந்த அநீதியை எதிர்ப்பதற்கோ, அல்லது தட்டிக் கேட்பதற்கோ எனது வயதும், சந்தர்ப்ப சூழ்நிலையும் என்னை அன்று அனுமதிக்கவில்லை.
கையாலாகாதவர்களாக இதுபோன்ற கொடுமைகளை வெறுமனே நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு நிலைதான் என்னைப் போன்ற சாதாரண ஆண்களுக்கு அன்று ஏற்பட்டிருந்தது என தனது அனுபவ பகிர்வை நிராஜ் டேவிட் அவர்கள் அவலங்கள் எனும் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

கற்பிற்கு இலக்கனம் வகுத்த எமது தமிழ் பெண்களுக்கு இந்தியப் படையினர் இழைத்த கொடுமைகள் பற்றி அடுத்த வாரம் முதல் சற்று விரிவாகப் பர்ப்போம்.

தொடரும்..
ஈழம் புகழ் மாறன்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.