தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 45

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!

(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 45)

புலிகளின் போர் தொடர்பாடல் உத்தியும் – தினறிய இந்திய அதிகாரிகளும்!

இந்த சிறப்புத்தொடரில் மறைக்கப்பட்டதும் அல்லது நாம் மறுந்துபோனதுமான பல வரலாற்று சம்வங்களை ஆதாரத்தோடு பார்த்து வருகின்றோம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இருண்ட பக்கமாக வரலாற்றில் படிந்திருக்கும் இந்திய தமிழீழப்போர் பற்றி இத்தொடரில் விரிவாக ஆராய்ந்து வருகின்றோம். கடந்த பாகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலால் தடுமாறிய இந்திய அரசு மிக முக்கியமான ஐந்து உயரதிகாரிகளை தமிழீழ மன்னிற்கு அனுப்பி வைத்தது பற்றி பார்த்திருந்த அதேவேளை இன்றைய பதிவில் புலிகளின் தொடர்பாடல் உத்தியும் தினறி திகைத்து நின்ற இந்திய படைகள் பற்றியும் சற்று விரிவாக பார்ப்போம்.

உலகில் உள்ள நாடுகளிடையே காணப்படுகின்ற இராணுவச் சமநிலை (Military Balance) தொடர்பாக அக்காலகட்டத்தில் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. லன்டனில் உள்ள International Institute of Strategic Studies அந்த வெளியீட்டை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாட்டினதும் சனத்தொகையும், அந்த நாடுகளின் இராணுவக் கட்டமைப்பையும், ஆளணி வலு மற்றும் சராசரி உள்ளூர் இராணுவ உபகரன உற்பத்திகளையும் (Gross Domestic Product -GDP) ஒப்பிட்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த ஆய்வின் அடிப்படையில் உலகில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் சிறந்த இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படிச் சர்வதேச அரங்கில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட இந்தியா ஒரு சிறு கெரில்லாக் குழு என்று சர்வதேச சமூகம் நினைத்துக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளிடம் மரண அடி வாங்கிக்கட்டிக்கொண்டிருப்பது, இந்தியாவின் அரசியல் தலைமையைப் பொறுத்தவரை மிகவும் அவமானகரமான ஒரு விடயமாகவே தோன்றியது. அதனாலேயே இந்திய இராணுவத்திலேயே மிகவும் முக்கிய இராணுவ அதிகாரிகளை அவசரஅவசரமாக இலங்கைக்கு அனுப்பிவைக்க இந்தியத் தலைமை தீர்மாணித்தது. அத்தோடு அந்த அதிகாரிகளின் பிரத்தியோகப் படை அணிகளையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

இவ்வாறு அவசரக் கோலத்தில் யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்தியப் படை அணிகள், ஏற்கனவே இலங்கையில் நிலைகொண்டு செயற்பட்டுக்கொண்டிருந்த படையணிகளுடன் இணைந்து செயற்படவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள். இது வேறு பல சிக்கல்களை இந்தியப் படையினருக்கு ஏற்படுத்தியிருந்தது.ஒரு பிரதேசத்தைச் சுற்றிவழைக்க அல்லது ஒரு பிரதேசத்தில் தாக்குதல் நடாத்த இரண்டு வெவ்வேறு அணிகள் செல்லும் ஒரு வித்தியாசமான சூழ்நிலை ஏற்பட்டது. அதுவும் இரண்டு வள்வேறு அதிகாரிகளின் தலைமையில் இரண்டு படையணிகள் ஒரே பிரதேசத்தில் நடவடிக்கையில் ஈடுபடுவது வேடிக்கையாக இருந்தது.

இது பல சிக்கல்களை இந்தியப் படையினருக்கு ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் மறுதரப்பைக் குற்றம் சுமத்துவதும், ஒரு தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ளும் இடங்களில் அவர்களுக்கு பின்னடைவு ஏற்படவேண்டும் என்று மற்றய தரப்பினர் விரும்பும் நிலையும் இந்தியப்

படையினர் மத்தியில் தவிர்கமுடியாமல் ஏற்பட்டது.இப்படியான ஒரு சூழலை விடுதலைப் புலிகளும் தமது நடவடிக்கைகளுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.

பல சந்தர்ப்பங்களில் இந்திய இராணுவத்தினரிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவும், ஆயுதங்களைக் கைப்பற்றவும் இந்தியப் படைகளிடையே காணப்பட்ட இதுபோன்ற ஓட்டைகளை விடுதலைப் புலிகள் மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கெண்டார்கள்.
ஆனாலும் இந்தியப் படைக் கட்டமைப்பில் காணப்பட்ட இந்த ஓட்டைகள் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. வெகு விரைவில் இதுபோன்ற பிரச்சினைகளை நிவர்த்திசெய்துகொண்ட இந்தியப் படையினர், முழு வேகத்தில் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். இருந்தபோதிலும் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த கெரில்லா உத்திகள் இந்தியப் படையினருக்கு புதிதான விடயங்களாகவே இருந்தன. இந்தியப் படையினர் பெற்றிருந்த பயிற்சிகளினுள் உள்ளடங்காதவைகளாகவே காணப்பட்டன.

புலிகளின் ஒவ்வொரு தாக்குதலும் இந்தியப் படையினருக்கு ஒவ்வொரு அதிர்ச்சி வைத்தியங்களாகவே இருந்தன. புலிகளின் தாக்குதல் யுக்திகள், அவர்களின் தொடர்பாடல் முறைகள், சகல மட்ட மக்களும் புலிகளுக்கு வழங்கிவந்த ஆதரவுகள் என்பன இந்தியப் படையினரை ஆச்சரியங்களின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருந்தன.

இந்திய படையில் முதன்முதலில் அனுப்பப்பட்ட முக்கிய அதிகாரிகளுள் ஒருவர்தான் கேணல் ஜோன் டெயிலர். இந்தியப் படையினருடனான சண்டைக் காலங்களில் விடுதலைப் புலிகள் கையாண்ட தொடர்பாடல் முறைகள் தன்னை மிகவும் அதிசயிக்க வைத்ததாக அவர் தெரிவித்திருந்தார். பின்னாளில் இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

“விடுதலைப் புலிகள் தம்மிடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்வதற்கு மேற்கொண்ட தந்திரங்கள் உண்மையிலேயே எங்களை அதிசயிக்க வைத்திருந்தன. இந்தியப் படையினரின் நடமாட்டம் பற்றி மற்றய உறுப்பினர்களை எச்சரிக்கும் நோக்குடன் அவர்கள் செயற்பட்ட விதம் மிகவும் மெச்சத்தக்கது. இந்தியப் படையினர் ரோந்து நடவடிக்கைகளுக்காக ஒரு முகாமில் இருந்து புறப்பட ஆரம்பித்ததும், இந்தியப் படையினர் செல்லும் திசையில் இருக்கும் கோயில் அல்லது தேவாலயத்தில் மணி ஒலிக்கும். அதுவும் அந்த ரோந்து அணியில் குறிப்பாக எத்தனை இந்தியப் படையினர் செல்லுகின்றார்களோ அத்தனை மணி ஒலிகள் எழுப்பப்படும். உதாரணத்திற்கு ஆறு படையினர் சென்றால் ஆறுதடவைகள் மணி ஒலிக்கும். பத்து படையினர் சென்றால் பத்து தடவைகள் மணி ஒலிக்கும். ஆரம்பத்தில் இதனை நாங்கள் விளங்கிக்கொள்ளவில்லை. ஆனால் இந்த விடயத்தை நாங்கள் புரிந்துகொண்டபோது எங்கள் படையினரில் பலரை நாங்கள் இழந்துவிட்டிருந்தோம்.

இதேபோன்று விடுதலைப் புலிகள் தம்மிடையேயான செய்திப் பரிமாற்றத்திற்கு அவர்களது சக்தி வாய்ந்ததும், சிறந்த வலையமைப்பைக் கொண்டதுமான தொலைத்தொடர்பு கருவிகளுக்கு மேலாக, பொதுமக்களைப் பயன்படுத்திய விதமும் மிகவும் வியக்கத்தக்கது. இந்தியப் படையினர் ஒரு கிராமம் அல்லது ஒரு நகரத்தினூடாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, அந்த விபரங்களை ஒரு சிறு துண்டில் எழுதி ஒரு சிறுவனிடம் அல்லது சிறுமியிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அந்தச் சிறுவனும் ரோந்து சென்றுகொண்டிருக்கும் படையினருக்கு கையசைத்து விட்டு அவர்களைக் கடந்து சென்று அந்த வீதியில் உள்ள மற்றொரு சிறுவனிடம் அல்லது சிறுமியிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிடுவார். பின்னர் அந்த நபர் அந்தக் கடிதத்தை அடுத்த தெருவிலுள்ள இன்னொருவரிடம் ஒப்படைப்பார். இவ்வாறு கைமாறும் கடிதம் கடைசியில் உரிய இடத்தை அடைந்துவிடும். ஒவ்வொரு 150 மீற்றருக்கும் ஒவ்வொரு சிறுவன்

பணிக்கமர்த்தப்பட்டிருப்பான். ஒருவேளை இந்தச் சிறுவர்களில் ஒருவரை படையினர் கைப்பற்றினால் கூட, அந்தச் சிறுவனுக்கு அந்த வீதியின் எல்லையில் உள்ள மற்றச் சிறுவன் பற்றிய விபரம் மட்டுமே தெரிந்திருக்கும். வேறு விடயம் எதுவுமே தெரிந்திருக்கமாட்டாது.

அந்த அளவிற்கு புலிகள் திட்டமிட்டு தமது நடவடிக்கைகளை வகுத்துக் கொண்டிருந்தார்கள். இதேபோன்று தொலைத்தொடர்புக் கருவிகள் மூலமாகப் புலிகள் செய்திகளைப் பரிமாறும்போது கூட, பல புதிய யுக்திகளைக் கையாண்டார்கள். தொலைத் தொடர்புக் கருவிகளின் அலைவரிசைகளை அடிக்கடி மாற்றியபடியே அவர்கள் முக்கியமான செய்திகளைப் பரிமாறுவார்கள். ஒருவேளை அந்தத் தொலைத்தொடர்பு சம்பாசனையை நாங்கள் இடைமறித்துக் கேட்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் கூட, சங்கேத பாஷையில் அமைந்த ஒரு வரியை மட்டுமே எங்களால் கேட்கக்கூடியதாக இருக்கும். மிகுதி செய்திகள் வெவ்வேறு அலைவரிசைகளிலேயே பரிமாறப்பட்டிருக்கும். புலிகளின் இதுபோன்ற யுக்திகள் எங்களுக்கு புதிதாகவும், புதிராகவுமே இருந்தன என்று கேணல் ஜோன் டெயிலர் இணையத்தளத்திற்கு வழங்கியிருந்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

தொடரும்…
ஈழம் புகழ் மாறன்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.