தமிழீழ போர்க்களத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் – 08

In பகிரப்படாத பக்கங்கள்

மென்மையின் நிறமும் வீரம்தான். புலிகளின் வீரமும் மென்மைதான்..!

2000 ஆண்டின் இடைக்கால நாள் ஒன்றில் வான் வெளியெங்கும் வெண்மை பூசிக் கொண்டிருந்த அழகான முழுநிலவு பொழுது ஒன்றில் நாகர் கோவில் களமுனை மக்கள் படை கட்டமைப்பான எல்லைப்படை வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது. இராணுவம் எப்போது தாக்குதல் நடாத்தும் எப்போது முன்னேறும் என்று தெரியாத ஒரு நெருக்கடியான காலப்பகுதி அது. ஆனாலும் அமைதியாக இருளை தின்று கொண்டிருந்தது நிலவின் ஒளி. வெண்ணிற மணல் கடற்கரைக்கு தனியழகை கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.நிலவொளியில் தம் தேசத்துக்கான பாதுகாப்பு கடமையில் எல்லைப்படை வீரர்கள் இருந்தார்கள் தன்னை பெற்றவரை, தான் பெற்றவரை, தன்னை துணையாக கொண்டவளை என உறவுகளை தனியே அல்லது குடும்ப உறுப்பினர்களின் துணையோடு விட்டு வந்திருந்த அவர்களுக்கு களமுனை புதியது எனிலும் பழகி விட்டது. ஆனாலும் அவர்களுக்கு தெரியவில்லை

களமுனை என்பது வெடி
பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் படுக்கை என்பது. அது எப்போது வெடிக்கும் எப்போது உறங்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய கள அனுபவம் அவர்களுக்கு இல்லை. அதனால் அவர்கள் தனித்து இருப்பதை விட கூடி கூட்டமாக இருப்பதையே விரும்பினார்கள்.

அதனால் களமுனையும் தமது வீடு போன்றே அவர்கள் உணரத் தொடங்கினர். கூடி பணிக்கு வந்த உறவுக்காறர்கள் அனைவரும் சேர்ந்திருந்து உணவருந்துவதும் காவல் நிலைகளில் கூட இணைந்திருப்பதும் வழமையாகியது. பொறுப்பாக நின்ற போராளிகளின் எச்சரிக்கைகளை மீறி அவர்கள் ஒன்றாக இருப்பார்கள். அன்றும் அவ்வாறுதான் அவர்கள் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களுக்கான இரவுச் சாப்பாட்டை சுமந்து கொண்டு உழவு இயந்திரம் வந்து சென்றது. உணவு எடுக்கும் வீரன் அதில் இருந்து உணவை பெற்றுக் கொண்டு அந்த மரத்தடிக்கு வந்து சேர்கிறான். உணவை கண்ட அனைவருக்கும் பசியாற்ற வேண்டிய தேவையை உணர்ந்து கைகளைக் கழுவிக் கொள்கிறார்கள். அங்கே பொறுப்பாக நின்ற போராளி இவர்களை எச்சரித்து பிரிந்து செல்ல கட்டளை இடுகிறான் ஆனால் அவர்கள் பிரிந்து சென்று பாதுகாப்பான காவலரண்களுக்குள் செல்வதை போல சென்று விட்டு மீண்டும் அந்த போராளி அடுத்த காவலரணுக்கு சென்ற பின் அதே இடத்துக்கு வருகிறார்கள். இரவு நேரம் இராணுவம் முன்னேற மட்டான், தூரவீச்சு ஆயுதத்தால் அல்லது சினைப்பர் எனப்படும் குறிகாட்டி ஆயுதத்தால் சுடமாட்டான் என்ற அலட்சியம் அங்கு அவர்களை ஆட்கொண்டிருந்தது.

ஆனால் எதிரி உணவு நேரம் என்பதை உணர்ந்து கொண்டான் அவனது வேவுபிரிவு இவர்களின் காவலரணையும் அவர்கள் கூடி இருந்து உண்பதையும் அவர்களின் அலட்சிய போக்கையும் அவதானித்துக் கொண்டிருந்தான். இதை அறியாதவர்கள் வட்டமாக சுற்றியிருந்து உணவு உண்டனர். எந்த எச்சரிக்கை உணர்வுமற்று எவ்வித பாதுகாப்பு நிலைகளுமற்று அந்த எல்லைப்படை வீரர்கள் இருந்தார்கள். போராளிகள் அடிக்கடி தரும் எச்சரிக்கைகளை கூட மறந்தவர்களாக கூடி இருந்து உணவருந்தினார்கள்.

அந்நேரத்தில் சரியான இலக்கு எதிரியால் இனங்காணப்பட்டு முதலாவது எறிகணை ஏவப்படுகிறது. அது எந்த மறுதலிப்பும் இன்று ஏவப்பட்ட இலக்கில் வீழ்ந்து பாரிய சத்தத்துடன் வெடித்துச்சிதறியது. எதிரியின் முதலாவது எறிகணையே இலக்குப் பிசகாது வட்டவடிவில் சுற்றியிருந்து உணவருந்திக் கொண்டிருந்த வீரர்களின் நடுவில் வீழ்ந்தது. பத்து உறவுகள். அண்ணன், தம்பி, மச்சான், மாமன்,சித்தப்பா, பெரியப்பா என சந்தோசமாய் உணவருந்த அமர்ந்தவர்கள் உடல் சிதறிப் போனார்கள். யாரும் காயப்பட்டதாக தெரியவில்லை அனைவருமே உடல் சிதறி இருந்தார்கள்.

அடுத்தநாள் விடிந்த போது அப்பகுதியில் மருத்துவப்பணிக்காக கடமையிலிருந்த மாறன் அந்த இடத்திற்கு சென்றான். முதல் நாள் தான் கண்டு கதைத்து விட்டு சென்ற அந்த உறவுகள் சிதறிய இடத்தை பார்த்து விழிகலங்கியபடி தனது கரங்களில் இருந்த மருத்துவ உபகரணத்தையும் இடுப்பில் இருந்த பிஸ்டலையும் இறுக பற்றிக் கொள்கிறான். எதாவது செய்யவேணும் அந்த ஆமிக்கு எதாவது செய்து நாங்கள் யார் என்று காட்ட வேணும். சாப்பிட்டுக் கொண்டிருந்த உறவுகளை இனங்கண்டு அழித்த இவங்கள சும்மா விடக்கூடாது. மனது பொருமிக்கொள்ள, தளபதியிடம் சென்று அனுமதி கோருகிறான். அண்ண எதாவது செய்ய வேணும் அண்ண இதே போல அவங்களும் உணவருந்தும் நேரம் அவங்களையும் கொல்ல வேணும் அண்ண. நான் வேவு எடுக்கிறன் மணியண்ணயாக்கள நீங்கள் ஒழுங்கு படுத்துங்கண்ண… அவனது விழிகள் மட்டுமல்ல தளபதியின் விழிகளும் கோவத்தில் சிவந்து தான் கிடந்தது ஆனால் அவர் பொறுமையோடு சொன்னார்.

இல்ல மாறன் அவன் எங்களுக்கு செய்தான் என்பதற்காக அவனுக்கும் இப்பிடி செய்ய முடியாது எமக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் மனிதநேயம் செத்தவர்கள் அல்ல விடுதலைப்புலிகள். நாங்கள் கோழைகள் அல்ல நேருக்கு நேராக மோதுவம். இதுக்கு பதிலடி குடுப்பம் ஆனால் இதை போல் அல்ல ஆயுதத்தோடு எம்மை எதிர் பார்த்திருக்கும் இராணுவத்தை அடிப்பம் இதுக்கு விரைவில் நான் பதில் குடுக்கிறன் நீ மருத்துவ ஒழுங்க மட்டும் பார்…

நீதி நூல்களால் அதிகம் அதிகம் செதுக்கப்படட அவரது மூளை அந்தக் கோரிக்கையை உடனடியாகவே மறுத்துவிட்டது. அவன் மீண்டும் தன் மருத்துவ பையோடு களத்தில் உலவத் தொடங்கினான் அவரின் உறுதியான வார்த்தைகள் மெய்ப்படும் என்ற நம்பிக்கையோடு…

********************************************
தலைப்பை பார்த்தவுடன் இவன் என்ன புலிகளை பயங்கரவாதி என்கிறான் என்று நினைத்து கோவப்பட்டோரே ஆகா கவி புலியை பயங்கரவாதி என்கிறானே என்று மகிழ்ந்தவரே…, புலிகள் பயங்கரவாதிகள் என்போரே உணருங்கள் பூவிலும் வன்மை உண்டு புலிகளிடம் மென்மை மட்டும் உண்டு, எதிரியையும் மனிதனாக எண்ணும் பெரும் மனசு உண்டு… அவர்கள் மௌனித்து விட்டதால் என்பில்லா நாக்கால் எதையும் கதைக்க முன் கொஞ்சம் சிந்தியுங்கள். புலிகள் மனிதர்கள் என்று….

கவிமகன். இ
15.07.2017
தகவல் : அறத்தலைவன்
களமருத்துவர்

குறிப்பு : இந்தப் பதிவை பார்வையிடும் எம் உயிரிலும் மேலான எமது தளபதிகளே போராளிகளே மற்றும் எம் போராளிகளோடு இணைந்து பணியாற்றிய எமது மக்களே.. நீங்கள் நின்ற களங்களில் மறக்க முடியாத எமது மண்ணுக்காய் விதையாகிய எமது போராளிகளின் வீர வரலாறுகளை அழிய விடாது எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். மற்றும் நீங்கள் குரல் பதிவு செய்தும் எமக்கு அனுப்பி வைக்கலாம். எமக்காய் வித்தாகிய எமது வீரர்களின் வரலாறுகளை எமது சந்ததியிடம் கொடுப்பது எமது கடமை…

எமது மின்னஞ்சல் – eelapparavai@gmail.com

நன்றிகள்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.