டில்லியில் புதிய நிர்வாக ஆட்சி

In போரும் சமாதானமும்

இலங்கையில் இந்திய தலையீடு

அத்தியாயம் : 2

டில்லியில் புதிய நிர்வாக ஆட்சி

உலகத்தின் மிகப்பெரிய சனநாயக நாடும் தென்னாசியாவின் வல்லரசுமாகிய இந்தியாவின் அதியுயர் அதிகார பீடத்தில் அமர்த்தப்பட்ட ராஜீவ் காந்தி, தனது புதிய ஆலோசகர்கள், நண்பர்களின் கருத்துகளுக்கு வசப்பட்டு இந்திய வெளியுறவுக் கொள்கையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினார். தனது தாயாரான இந்திரா காந்தி அம்மையார் இந்தியாவின் அயல் நாடுகளுடன் மேலாண்மைவாதக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தார் என்பது ராஜீவின் கருத்து. இந்திரா காந்தியுடன் நெருங்கிய உறவை வைத்திருந்து அவரது வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொடுத்த மூத்த அரசியல்வாதிகள், இராஜதந்திரிகளையும் ராஜீவ் வெறுத்தார். மிகவும் நிதானமாக மதிநுட்பமாகக் காய் நகர்த்தும் பார்த்தசாரதியின் இராஜதந்திர அணுகுமுறையும் ராஜீவுக்குப் பிடிக்கவில்லை. இளைஞர் என்பதால் பொறுமையிழந்து அவசரப்படும் குணவியல்பு அவரிடமிருந்தது, உடனடியான பெறுபேறுகள் கிட்டும் அவசர முடிவுகள் எடுக்கும் உணர்ச்சிப் பாங்கு உள்ளவராகவும் அவர் விளங்கினார். ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட ஆளுமையும் அணுகுமுறையும் கொண்டு விளங்கியதால் பார்த்தசாரதிக்கும் ராஜீவ் காந்திக்கும் மத்தியலான உறவில் முறிவு ஏற்பட்டது. 1985 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில்

இலங்கை விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை, தனக்கு மிகவும் நெருங்கியவரான ரொமேஸ் பண்டாரியிடம் பிரதமர் ராஜீவ் கையளித்தார். இலங்கை விவகாரத்தில் ஒரு அடிப்படையான கொள்கை மாற்றத்தையே ராஜீவ் விரும்பினார்.

இந்திரா காந்தியின் ஈமச் சடங்கின்போது இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடும் வாய்ப்பு ராஜீவுக்கு கிட்டியது. அந்த முதற் சந்திப்பின்போது பரிமாறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் ஜெயவர்த்தனா மீது ராஜீவுக்கு மதிப்பும் கவர்ச்சியும் ஏற்பட்டது. முதற் சந்திப்பின்போது தனது சாதுரியமான சாணக்கியத்தைப் பயன்படுத்தி ஜெயவர்த்தனா அன்பும், பண்பும் ஆழமான அரசியல் ஞானமும் கொண்ட ஒரு உண்மையான பௌத்தராகத் தன்னை இனம் காட்டிக் கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே ராஜீவ் தந்தையான திரு நேருவுடனும் மகாத்மா காந்தியுடனும் நட்புறவு வைத்திருந்ததாகத் தன்னை ராஜீவுக்கு அறிமுகம் செய்துகொண்ட இலங்கை அதிபர் இந்தியாவுடன் ஒத்திசைவான நட்புறவை வளர்த்துக் கொள்வதே தனது அரசியல் இலட்சியம் என எடுத்துரைத்தார். ஒரு முதிர்ந்த அரசியல் மெய்ஞ்ஞானி என்ற பாத்திரத்தில் தன்னை நிறுத்தி, ராஜீவுக்கு ஆலோசனை வழங்கவும் அவர் தயங்கவில்லை. ஒரு பழம்பெரும் நாட்டின் இளம் பெரும் தலைவராக விளங்கும் ராஜீவ் காந்தி, தனது அயல்நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து, தென்னாசியப் பிராந்தியத்தில் அமைதியையும் உறுதி நிலையையும் நிலைநாட்டும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்பதாகவும் சுட்டிக் காட்டினார். ஜெயவர்த்தனாவின் புத்திசாலித்தனமான கருத்தாடலால் கவரப்பட்ட ராஜீவ் காந்தி, இலங்கையுடனான தனது ஆட்சிப்பீடத்தின் அணுகுமுறையானது தனது தாயாரது ஒருதலைப்பட்சமான கொள்கையை விட வேறுபட்டதாக அமையுமென உறுதியளித்தார். தனது ஆட்சிப்பீடத்தினது மத்தியஸ்துவ முயற்சி நேர்மையானதாகவும் பாரபட்சமற்றதாகவும் அமையப்பெறும் என்றும் ராஜீவ் எடுத்துரைத்தார். இலங்கையின் இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு, ஐக்கியம் ஆகியனவற்றிற்குப் பங்கம் ஏற்படாத வகையில் தனது மத்தியஸ்துவ அணுகுமுறை அமையுமென ராஜீவ் உறுதியளித்ததை அடுத்து, இதுவரை காலமும் இந்திய வல்லாதிக்கம் குறித்து ஜெயவர்த்தனா கொண்டிருந்த அச்சம் முழுமையாக நீங்கியது. இப்படியாக இந்த முதற் சந்திப்பின்போது, இந்திய இலங்கை உறவில் ஒரு புதிய அணுகுமுறைக்கான அத்திவாரம் இடப்பட்டது. அத்தோடு தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்திரா காந்தி அம்மையார் கடைப்பிடித்து வந்த நட்புறவுக் கொள்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1985 ஜனவரி முதற்பகுதியில் நான் திரு. பார்த்தசாரதியைப் புதுடில்லியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் விரக்தியுடன் இடிந்துபோய்க் காணப்பட்டார். திருமதி. காந்தியின் திடீர் மறைவும், ராஜீவ் காந்தியின் புறக்கணிப்பும் அவரை ஆழமாகப் பாதித்திருந்தன. ராஜீவ் காந்தியின் ஆட்சிப்பீடம் எத்தகைய புதிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகின்றது என்பது குறித்து அவர் எனக்கு ஒரு விளக்கம் கொடுத்தார். அழுத்தம் கொடுக்கும் கடும்போக்கை விடுத்து மென்மையான, நட்புறவான இராஜதந்திர அணுகுமுறையையே புதிய ராஜீவ் அரசு கடைப்பிடிக்கும் என்றார் பார்த்தசாரதி. ஜெயவர்த்தனா நல்லெண்ணம் கொண்டவர் எனத் தவறாகப் புரிந்திருக்கும் ராஜீவ் காந்தி, ஈழத் தமிழரின் பிரச்சினையைச் சமாதானப் பேச்சுக்கள் மூலமாகத் தீர்த்து வைக்கலாம் என நம்புகிறார் என்றார். தமிழ் விடுதலை அமைப்புகள் பங்குபற்றும் சமாதானப் பேச்சுக்கள் விரைவில் ஆரம்பமாகலாம் எனத் தெரிவித்த அவர் இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பிற்குள் தமிழரின் இனப் பிரச்சினைக்குத்தீர்வு காணும் முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் விளக்கினார். திருமதி இந்திரா காந்தியின் இரகசிய இராணுவ உதவித்திட்டம் கைவிடப்படலாம் எனச் சூசகமாகத்தெரிவித்த அவர் பேச்சுக்கள ஆரம்பமாவதற்கு முன்னராகப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொள்ளப்படலாம் எனவும் கூறினார். ஜெயவர்த்தனாவின் ஏமாற்றுகிற சூழ்ச்சி மிக்க வஞ்சகக் குணவியல்பு பற்றி எவ்வளவோ சொல்லியும் ராஜீவ் காந்தியைத் தம்மால் நம்ப வைக்க முடியவில்லை என்றார் பார்த்தசாரதி. ஒரு பொதுவான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்ப் போராளி அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டும் என்றும் சிறீலங்கா அரசுடன் மிகவும் கடினமான சிக்கலான பேச்சுக்களில் பங்குகொள்ள தமிழர் தரப்புத் தயாராக வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார். ராஜீவ் காந்தியின் புதிய நிர்வாகம் கடைப்பிடிக்கவிருக்கும் கொள்கை பற்றியும், அணுகுமுறை பற்றியும் இந்தியப் புலனாய்வுத் துறையினர் விரைவில் எமக்கு எடுத்து விளக்குவார்கள் என்றும் திரு. பார்த்தசாரதி சொன்னார்.

சென்னை திரும்பியதும் திரு. பார்த்தசாரதி கூறிய விடயங்களைப் பிரபாகரனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தேன். திருமதி காந்தியின் மறைவை அடுத்து ஆட்சிப்பீடம் ஏறிய ராஜீவ் காந்தி புதிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கலாம் என எதிர்பார்த்திருந்த பிரபாகரனுக்குப் பார்த்தசாரதி தெரிவித்த விடயங்கள் ஆச்சரியத்தையோ ஏமாற்றத்தையோ கொடுக்க வில்லை. ஆயினும் கெரில்லாப் போராட்டத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி சிங்கள ஆயுதப் படைகளைப் பலவீனப்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு, அச்சூழ்நிலையில் போர்நிறுத்தம் செய்வது உகந்த தந்திரோ பாயமாகத் தெரியவில்லை .

1985 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தமிழீழத்தில் வன்முறைச் சூறாவளி தீவிரம் பெறத் தொடங்கியது. அவ்வாண்டு ஜனவரி 9ஆம் நாள், யாழ்ப்பாணம் அச்சுவேலியில் நிகழ்ந்த சுற்றிவளைப்புச் சண்டையில் எமது இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

ஒரு உளவாளி கொடுத்த தகவலின் பேரில் ஐநூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அச்சுவேலியில் அமையப் பெற்றிருந்த எமது கொரில்லாப் படைத்தளம் ஒன்றைத் திடீரெனச் சுற்றிவளைத்தனர். முற்றுகைக்கு ஆளான தளத்திலிருந்த 15 புலிப்படை வீரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் மத்தியில் உக்கிரமான சண்டை மூண்டது. பெருந்தொகையான இராணுவத்தினரை எதிர்த்து எமது போராளிகள் வீரமுடன் களமாடினர். இச்சண்டையில் கப்டன் ரவீந்திரனும் நான்கு இளம்புலி வீரர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். பத்துப் புலி வீரர்கள் வீரமுடன் போராடி சிங்கள இராணுவத்தின் முற்றுகை அரணை உடைத்தெறிந்து தப்பிச் சென்றனர்.

பெரியதொரு இராணுவ முற்றுகையைச் சிறிய குழுவாக முகம் கொடுத்து, பலமணி நேரம் போராடி ஈற்றில் பெரும்பாலானோர் முற்றுகையை உடைத்துத் தப்பியதே பெரும் இராணுவச் சாதனை எனலாம்.

அக்காலகட்டத்தில் கப்டன் ரவீந்திரனின் சாவு எமது இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பாக அமைந்தது. பண்டிதர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ரவீந்திரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராவார். அத்துடன் புலிகள் இயக்கத்தின் நிதிக்கும் ஆயுதப் பராமரிப்புக்கும் பொறுப்பாக இருந்தவர். அரசியற் பரப்புரைப் பணிகளிலும் தீவிரமாகச் செயற்பட்டு வந்தவர். வல்வெட்டித்துறைக்கு அருகாமையிலுள்ள கம்பர் மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பண்டிதர், எமது இயக்கத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர். ஆஸ்மா நோயினால் அவலப்பட்டபோதும் கடமை உணர்வுடன், இலட்சியப் பற்றுடன், கடுமையாக உழைத்து சக போராளிகள் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமாக விளங்கினார். பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளைச் சுமந்தபோதும் களத்தில் இறங்கிப் போராடவும் அவர் தயங்கவில்லை . தலைவர் பிரபாகரனால் பெரிதும் மதிக்கப்பட்டவர். மிகவும் நெருங்கிய தோழனாகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் செயற்பட்டார். அவரது சாவு எல்லோரது இதயங்களையும் கலக்கிய ஒரு சோக நிகழ்வு.

1985 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிங்கள ஆயுதப் படைகளுக்கு எதிராக ரெலோ அமைப்பும் விடுதலைப் புலிகள் இயக்கமும் இரு பெரும் தாக்குதல்களை நடத்தின. 1985 ஜனவரி 19 ஆம் நாள் வன்னியிலுள்ள முறிகண்டியில் கொழும்பு சென்றுகொண்டிருந்த யாழ்தேவிப் புகையிரதத்தை ரெலோ அமைப்பைச் சேர்ந்த போராளிகள் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர். அந்தப் புகையிரத்தில் சிங்கள இராணுவப் படையணி ஒன்று பயணம் செய்து கொண்டிருந்தது. வெடிகுண்டில் சிக்கி பல வண்டிகள் சிதறின. இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 22 இராணுவத்தினரும் 10 பொதுமக்களும் கொல்லப்பட்டதுடன் ஏராளமான படையினர் படுகாயமடைந்தனர். சம்பவத்தை அடுத்து உதவிக்குச் சென்ற இராணுவத்தினருடனும் ரெலோ போராளிகள் துப்பாக்கிச்சமரில் ஈடுபட்டனர்.

1985 பிப்ரவரி 13 ஆம் நாள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கரையோரப் பட்டினமாகிய கொக்கிளாயில் அமைந்துள்ள இராணுவ முகாம்மீது விடுதலைப் புலிப்போராளிகள் துணிகரத் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தினர். இந்தத் தாக்குதல் ஐந்து மணிநேரம்வரை நீடித்தது. மிகவும் உக்கிரமாக நிகழ்ந்த இச்சண்டையில் நூற்று ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அக்காலகட்டத்தில் சிங்கள இராணுவம் சந்தித்த மிகப்பெரிய உயிரிழப்பு இதுவாகும். எமது தரப்பில் பதினாறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். சிங்களப் படைத்துறைக்கு மிகவும் அவமானமான பின்னடைவாக இத்தாக்குதல் அமைந்தது. இதனால் ஆவேசமடைந்த படையினர் முல்லைத்தீவுப் பட்டினத்திற்கு அண்மையிலிருந்த அகதிமுகாம் மீது மிருகத்தனமான தாக்குதலை நிகழ்த்தி ஐம்பத்து இரண்டு அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தனர். இந்தியா தலையிட்டு இந்த இனக்கொலையைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் குரல் எழுப்பினர். ஆயினும், இந்நிகழ்வு குறித்து இந்திய அரசு மௌனம் கடைப்பிடித்தது. இந்திய அரசின் இப்பாராமுகப்போக்கு ஒரு உண்மையைப் புலப்படுத்தியது. ராஜீவ் காந்தியின் புதிய நிர்வாகம் இலங்கை சம்பந்தப்பட்ட மட்டில் ஒரு மென்மையான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்திருக்கிறது என்ற உண்மையை இது எடுத்துக்காட்டியது. 1985 மார்ச் மாதம் இந்தியாவின் வெளிவிவகார உள்விவகாரப் புலனாய்வுத் துறைகளின் அதிபர்கள் விடுதலைப் புலிகளையும் ஏனைய தமிழ்ப் போராளி அமைப்புகளையும் தனித்தனியே சந்தித்து, இலங்கை விவகாரத்தில் ராஜீவ் அரசு கடைப்பிடிக்கவிருக்கும் புதிய நடுநிலையான அணுகுமுறையைப் பற்றி விரிவான விளக்கம் கொடுத்தனர். |

‘றோ’ புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.கிரிஷ் சக்சேனா தலைவர் பிரபாகரனையும் என்னையும் சென்னையில் ஒரு இரகசியமான இடத்தில் சந்தித்தார். றோ அதிகாரிகள் இந்த இரகசியச் சந்திப்பை ஒழுங்கு செய்தனர். உயர்ந்த கம்பீரமான தோற்றம், கனத்த குரல், ஒளிர்விடும் கண்கள். ஆங்கிலத்தில் ஆணித்தரமாகப் பேசினார் சக்சேனா. கலந்துரையாடல் நிகழவில்லை. அன்றும் இன்றுமான இந்தியப் வெளியுறவுக் கொள்கை பற்றி எமக்கு ஒரு விரிவுரை நிகழ்த்தினார் அவர். அவரது சொற்பொழிவின் சுருக்கம் இதுதான்:

அன்று திருமதி இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம்கொடுக்க வேண்டி இருந்தது. தமிழரின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிவிடும் நோக்கத்துடன் இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நிய சக்திகளை இலங்கையில் ஊடுருவ அனுமதித்தார் ஜெயவர்த்தனா. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்ததென இந்திரா காந்தி கருதினார். இவ்வேளை 1983 ஜுலை இனக்கலவரம் தமிழினப் படுகொலையாகக் கோரம் எடுத்தது. இதன் விளைவாகப் பல ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். தமிழர்களுக்கு எதிராக இனக்கொலைப் பரிமாணத்தில் தலைவிரித்தாடிய கலவரம் தமிழ்நாட்டில் தேசியவாத உணர்வுத் தீயைப் பற்றியெரியச் செய்தது. இத்தகைய சூழ்நிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எதிர்மறையான இந்தப் போக்குகள் காரணமாகவே இலங்கையில் இந்தியாவைத் தலையிட நிர்ப்பந்தித்தன. இலங்கையில் தமிழ்க் குடிமக்களுக்கு எதிரான அரச வன்முறைக்கு முற்றுப்புள்ளவைத்து, இனநெருக்கடி சமாதான வழியில் தீர்வுகண்டு, இலங்கையிலும் தென்னாசியப் பிராந்தியத்திலும் அமைதியையும் உறுதி நிலையையும் ஏற்படுத்துவதே இந்தியத் தலையீட்டின் பிரதான நோக்கமாக இருந்தது. சிங்கள இராணுவ அட்டூழியங்களுக்கு முடிவுகட்டி தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய போராளி அமைப்புகளுக்கும் ஆயுத உதவி வழங்கப்பட்டது.

இவ் விதமாக ஒரு விளக்கத்தை அளித்த திரு. சக்சேனா, இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் திருமதி. காந்திக்கு இருக்கவில்லை என்றார். இராணுவ அணுகுமுறையை ஜெயவர்த்தனா கைவிடவேண்டும் என்பதும், ஒன்றுபட்ட இலங்கையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு

அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்பதுமே திருமதி காந்தியின் குறிக்கோளாக இருந்தது என்றார். தமிழீழத் தனியரசு என்ற தமிழர்களின் அபிலாசைக்கு இந்தியா ஒருபொழுதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று உறுதிபடக்கூறிய அவர், பிரிவினைவாதக் கோரிக்கையை முன்வைத்துப் போராடும் இயக்கங்களை உள்நாட்டில் சமாளிக்க வேண்டியிருப்பதால் பிரிவினைக்கு இந்தியா ஆதரவு அளிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என விளக்கினார். இந்தியாவின் நிலைப்பாட்டை நீங்கள் சரிவரப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் என்று கனத்த தொனியில் கூறிக்கொண்டே பிரபாகரனை உறுத்துப் பார்த்தார் சக்சேனா.

இன்று ஆட்சிப்பீடம் ஏறியிருக்கும் ராஜீவ் காந்தி சிறீலங்கா அரசுடன் நட்புறவில் கட்டப்பட்ட நல்லுறவைப் பேண விரும்புகிறார் எனக்கூறிய சக்சேனா, தமிழ்ப் போராட்ட அமைப்புகளை உள்ளடக்கிய சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் நோக்குடன் ஒரு புதிய, முற்போக்கான மத்தியஸ்துவ முயற்சியை ஆரம்பிக்கவுள்ளார் எனத்தெரிவித்தார். தமிழ்ப்போராளி அமைப்புகள் தமது ஆயுதப் போராட்டத்திற்கு ஓய்வு கொடுத்து, அமைதி பேணி சமாதானப் பேச்சுக்குத் தங்களைத் தயார்படுத்தும் காலம் அண்மித்து வருகிறது என்று கூறித் தனது உரையை முடித்தார். தனது உரையை முடித்ததும், எமது அபிப்பிராயம், கருத்துகள் எதையுமே கேட்காது அங்கிருந்து அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார். ஏனைய தமிழ் அமைப்புகளுடன் இன்னொரு கூட்டம் இருப்பதால் அவர் அவசரமாகச் செல்ல வேண்டியிருந்ததாக றோ அதிகாரிகள் எமக்கு விளக்கம் தந்தார்கள்.

இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் அன்றைய வெளியுறவுக் கொள்கை பற்றி திரு சக்சேனா அளித்த விளக்கம் பிரபாகரனுக்கும் எனக்கும் ஆச்சரியத்தையோ அல்லது ஏமாற்றத்தையோ தரவில்லை. விரைவில் ஒரு போர்நிறுத்தம் செய்யப்படும் என சக்சேனா தெரிவித்த கருத்தைப் பிரபாகரனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆயுதப் போராட்டம் அப்பொழுதுதான் சூடுபிடித்து வந்தது. சிங்களப் படைத்துறைக்கு மேலும் பின்னடைவுகளை ஏற்படுத்தி, அதனைப் பலவீனப்படுத்துவதற்கு முன்னராகப் போர்நிறுத்தம் செய்தால் ஜெயவர்த்தனா அரசை வழிக்குக் கொண்டு வருவது சிரமம் என்பது பிரபாகரன் கருத்து. ஆகவே ராஜீவ் காந்தியின் புதிய இராஜதந்திர மத்தியஸ்துவ அணுகு முறை மூலமாகத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரமான தீர்வு கிட்டப்போவதில்லை என எண்ணினார் பிரபாகரன். அத்துடன் ஜெயவர்த்தனாவின் வஞ்சகமான உள்நோக்கத்தை ராஜீவ் காந்தி சரியாக எடைபோடத் தவறிவிட்டார் என்பதும் பிரபாகரனின் கருத்து.

திரு. சக்சேனாவைச் சந்தித்ததை அடுத்து ஒரு சில நாட்களில், இந்தியாவின் உள்நாட்டுப் புலனாய்வுத் துறையின் அதிபரான திரு.எம். கே. நாராயணனைப் பிரபாகரனும் நானும் சந்தித்தோம். இந்தச் சந்திப்பு சென்னைக்கு வெளியே திருப்பதியிலுள்ள ஒரு இரகசிய இடத்தில் நிகழ்ந்தது. சக்சேனாவுக்கு முற்றிலும் முரணான வித்தியாசமான ஆளுமையைக் கொண்டவர் நாராயணன். அன்பும், பண்பும், மனம் திறந்து பழகும் நல்லியல்பும் கொண்ட உத்தமமான மனிதர். எமது கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினார். ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசுமாறு எம்மை வேண்டினார். முதலில் அவரது கருத்துக்களைக் கேட்டறிய நாம் விரும்பினோம். அயல் நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் ராஜீவ் காந்தியின் நிர்வாக பீடம் புதிய உபாயங்களையும் வித்தியாசமான அணுகு முறைகளையும் கையாள விரும்புகிறது என்றார் நாராயணன். தேசிய இன முரண்பாடுகளையும் நெருக்கடிகளையும் தீர்த்து வைப்பதிலும் புதிய நடைமுறைகளை ராஜீவ் அரசு செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றார். தென்னாசியாவை அரசியல் உறுதிவாய்ந்த, ஒரு சமாதானப் பிரதேசமாக உருவாக்குவதே புதிய இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிரதான நோக்கம் எனக்கூறிய அவர், இப்பிராந்தியத்திலிருந்து இந்தியாவுக்கு விரோதமான அந்நிய நாசகாரச் சக்திகள் அகற்றப்படுதல் அவசியம் என்றார். தென்னாசியாவின் பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் அயல்நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து, உறுதி நிலையும் அமைதியும் நிலவும் ஒரு புதிய அரசியல் ஒழுங்கைக் கட்டி எழுப்புவது இந்தியாவின் பெரும் பொறுப்பாகியுள்ளது. எனவே, இந்தத் தரிசனத்தின் அடிப்படையில், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்குடன் ஒரு சமாதான வழிமுறையைத் தொடங்கி வைக்க ராஜீவ் அரசு விரும்புகிறது. தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யும் ஒரு தீர்வை எட்டும் நோக்கில் இந்திய அரசு முன்னெடுக்கவிருக்கும் மத்தியஸ்த்துவ முயற்சிகளுக்குத் தமிழ் அரசியல் சக்திகள், குறிப்பாகத் தமிழ் விடுதலை அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் திரு. நாராயணன். இதனையடுத்து, இந்திய அரசின் புதிய அணுகுமுறை குறித்து எமது கருத்துக்களை அறிய விரும்பினார் அவர்.

தமிழீழ மக்கள் எதிர்கொண்ட அரச ஒடுக்குமுறையின் வரலாறு பற்றியும் அதன் நேரடி விளைவாகத் தோற்றமெடுத்த ஆயுதப் பேராட்டத்தின் பின்னணி பற்றியும் பிரபாகரனும் நானும் திரு. நாராயணனுக்கு விரிவாக எடுத்துரைத்தோம். மகாத்மா காந்தியின் அகிம்சை வழிதழுவி, பல தசாப்தங்களாக மென்முறைப் போராட்டங்களை நிகழ்த்திய பின்னரே தமிழ் மக்கள், இன அழிவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அரச வன்முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர் என்ற போராட்ட வரலாற்றையும் நாம் எடுத்து விளக்கினோம். வன்முறைப் போராட்டத்தைத் தமிழ்ப் புலிகள் வழிபடவில்லை எனக் கூறிய பிரபாகரன், தமிழ் இனத்தையும் தமிழ் இனத்தின் அடையாளத்தையும் பேணிப் பாதுகாக்கும் இறுதி நடவடிக்கையாகவே ஆயுதப் போராட்ட வடிவத்தை நாம் தழுவிக்கொள்ள நேர்ந்தது என்றார். சமாதான வழிமூலமாக இந்திய அரசு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுத்தால் தமிழ் மக்கள் என்றும் இந்தியாவுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று கூறிய பிரபாகரன், மேலாண்மைவாதக் கருத்தியலில் மூழ்கிப் போய்க் கிடக்கும் சிங்கள அரசியற் தலைமை தமிழர்களுக்கு நீதி வழங்கப்போவதில்லை என்றார். ஜெயவர்த்தனாவின் கபட நோக்கத்தைப் பிரதமர் ராஜீவ் சரியாக எடை போடத் தவறிவிட்டார் என்பதை நாம் எடுத்துக்கூறினோம். முதிர்ச்சியற்ற இளைஞரான ராஜீவ் காந்தியை நரிக்குணம் படைத்த ஜெயவர்த்தனா ஏமாற்றிவிடுவார் என்றும் இதனால் தமிழ் மக்களே பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நாம் எச்சரித்தோம்.

நாம் கூறிய கருத்துக்களை எல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் திரு. நாராயணன். எமது சந்தேகங்களையும் அச்சங்களையும் தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது எனக்கூறிய அவர், இறுதியில் சமாதானப் பேச்சுக்கு வழிகோலும் இந்தியாவின் சமரச முயற்சிக்கு எம்மை ஒத்துழைக்குமாறு வேண்டிக்கொண்டார்.

தொடரும்…

அன்ரன் பாலசிங்கம்

அடுத்து வரும் பதிவு : ஈழத் தேசிய விடுதலை முன்னணி

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.