விடுதலைப் போரின் விரிவாக்கம்

In போரும் சமாதானமும்

இலங்கையில் இந்திய தலையீடு

அத்தியாயம் : 2

விடுதலைப் போரின் விரிவாக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உறுதியான ஆதரவு தெரிவித்து ஈழத் தமிழரின் தேசியப் போராட்ட அரங்கில் எம். ஜி. ஆர் அவர்கள் பிரவேசித்தமை ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. தமிழக முதல்வரின் ஆசியுடனும் நிதி உதவியுடனும் பிரபாகரனது இலட்சியக் கனவுகள் நிஜமாக மாறின. 1984இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் துரிதமான வளர்ச்சியும் விரிவாக்கமும் கண்டு செம்மையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு விடுதலை சக்தியாக உருவாக்கம் பெற்றது. தமிழ் நாட்டிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் புதிதாகப் பயிற்சிப் பாசறைகள் நிறுவப்பட்டன. பெரும் தொகையில் புதிய போராளிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டுத் தமிழகத்திற்குப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தியப் பயிற்சி பெற்ற மூத்த தளபதிகள் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுச் செயற்பட்டனர். இந்த மூத்த தளபதிகளில் முக்கியமானவர் பொன்னம்மான் என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்பட்ட லெப். கேணல் அற்புதன். இவரது இயற்பெயர் யோகரெத்தினம் குகன். இவர் யோகரெத்தினம் யோகியின் சகோதரர். தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருங்கிய தோழர். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் பல களங்களைக் கண்ட வீரர். தமிழக இராணுவப் பயிற்சி முகாம்களுக்குப் பிரதம பயிற்சியாளராகப் பணிபுரிந்த பொன்னம்மான் புலிப் போராளிகளின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர். 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள நாவற்குழியில் சிங்கள இராணுவ முகாம் ஒன்றைத் தாக்கி அழிக்க தயாராகிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பொன்னம்மான் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இராணுவக் கட்டமைப்பைக் கட்டிவளர்த்து விரிவாக்கம் செய்த அதேவேளை, பெரும் தொகையில் நிதி ஒதுக்கி அரசியல் பிரிவையும் விரிவுபடுத்தினார் பிரபாகரன். சென்னை அடையாறில் அரசியல் தலைமைச் செயலகம் நிறுவப்பட்டது. அரசியல் பிரிவுக்கெனத் தெரிவு செய்யப்பட்ட போராளிகளுக்கு அரசியல், சித்தாந்த வகுப்புகளை நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இயக்கத்தின் அதிகாரபூர்வ கொள்கை பரப்பு ஏடாக ‘விடுதலைப் புலிகள்’ மாதாந்த பத்திரிகையையும் ‘Voice of Tigers’ என்ற ஆங்கில இதழையும் வெளியிட்டோம். Liberation Tigers and Tamil Eelam Freedom Struggle, Towards Liberation, Diary of Combat என்ற ஆங்கிலப் பிரசுரங்களையும் அக்காலப் பகுதியில் எழுதி வெளியிட்டேன்.

தமிழகத்தில் எமது பயிற்சிப் பாசறைகளில் பயிற்சியை முடித்துக்கொண்டு, புலிப்படை வீரர்கள் தமிழீழத் தாயகம் திரும்பியதைத் தொடர்ந்து சிங்கள ஆயுதப் படையினருக்கு எதிரான கொரில்லாப்போர் தீவிரமடைந்தது. 1984ஆம் ஆண்டு ஆரம்ப காலத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வன்னி மாநிலத்திலும், எமது போராளிகள் நன்கு திட்டமிடப்பட்ட கெரில்லாத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். அவ்வரலாற்றுக் கால கட்டத்தில், யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் துணிகரத் தாக்குதல் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியவர் எமது முதுபெரும் தளபதி கேணல் கிருஷ்ணகுமார் கிட்டுவாகும். இந்திய இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு தமிழீழம் திரும்பிய கேணல் கிட்டு சிங்கள இராணுவத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் திகைப்பூட்டும் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தினார். 1984 பெப்ரவரி 24ஆம் திகதி, கேணல் கிட்டுவின் தலைமையில் சென்ற புலிகளின் கெரில்லா அணி, யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கோட்டையாக விளங்கிய குருநகர் இராணுவ முகாமிற்குள் ஊடுருவி, வெடிகுண்டுகள் வைத்து முகாமைத் தகர்த்தது. இக்குண்டுவெடிப்பால் இராணுவக் கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. புதிய கட்டிடங்களை நிறுவி இம்முகாமை மேலும் பலப்படுத்தி விஸ்தரிக்க சிங்கள இராணுவத்தலைமை திட்டமிட்டிருந்த வேளையில் இப்படை முகாமின் கட்டுமாணம் நாசமாக்கப்பட்டது சிங்கள அரசுக்குத் திகிலை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இவ்வாண்டு காலத்தில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குகொண்ட கிட்டு தனது அபாரமான திறமையினாலும் துணிவாலும் சிங்கள இராணுவத்திற்குச் சிம்ம சொப்பணமாக விளங்கினான். 1984 ஏப்ரல் மாதம் 9 நாள், பிற்பகல் 2 மணி அளவில், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வைத்து சிங்கள இராணுவ அணிமீது விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தினர். இத்தாக்குதலில் ஒரு இராணுவ ட்ரக் வண்டி முற்றாகச் சிதைக்கப்பட்டுப் பதினைந்து அரச படையினர் தளத்திலேயே கொல்லப்பட்டதுடன் இருபது பேர் வரை படுகாயமடைந்தனர்.

வீதியோரம், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளுடன் வான் ஒன்றை நிறுத்தி வைத்து இராணுவ வாகனங்கள் அதனைக் கடந்து செல்லும் போது வெடிக்க வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 1984 ஆகஸ்ட், செப்டெம்பர் மாத காலத்தில் ஆயுதப்போராட்டம் உக்கிரமடைந்து நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் சிங்களக் காவற்துறையினரும் கொல்லப்பட்டனர். கவச வண்டிகள் உட்பட பல இராணுவ வாகனங்கள் நாசமாக்கப்பட்டன. இக்காலப்பகுதியில், நன்கு பலப்படுத்தப்பட்டிருந்த காவல் நிலையங்கள் புலிப் போராளிகளின தாக்குதல்களுக்கு இலக்காகின. தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்த புலிகளின் கெரில்லாத் தாக்குதல்கள் காரணமாக சிங்கள ஆயுதப் படைகள் மத்தியிலும் திகிலும் குழப்பமும் மனமுறிவும் ஏற்படத் தொடங்கியது. 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டெம்பர் மாதக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல்கள் சிலவற்றைக் காலவரிசையின்படி இங்கு பதிவு செய்கிறேன்.

1984 ஆகஸ்ட் 4ஆம் நாள், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பருத்தித்துறைக்கு அண்மையிலுள்ள பொலிகண்டி எனப்படும் கரையோரக் கிராமத்தில் சுற்றுக்காவலில் சென்ற கடற்படை அணிக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் மத்தியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சமரில் ஆறு கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாயம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 5 ஆம் நாள், வல்வெட்டித்துறைக்கு அண்மையிலுள்ள நெடியகாடு என்னும் கிராமத்தில் சிங்களக் காவல்துறை அதிரடிப்படையினரின் தொடர் வாகன அணி விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதலுக்கு இலக்கானது. மூன்று கவச வாகனங்கள், ஒரு டிரக், ஒரு ஜீப் ஆகிய வாகன அணி விடுதலைப் புலிகளின் கண்ண வெடிக்குள் சிக்கின. கண்ணிவெடியின் முழுத் தாக்கத்திற்கும் இலக்கான ஜீப் வண்டி சுக்குநூறாகச் சிதறியது. இந்தத் தாக்குதலில் காவல்துறை உயர் அதிகாரி (ஏ.எஸ்.பி) ஜெயரத்தினா உட்பட ஒன்பது அதிரடிப் படையினர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

ஆகஸ்ட் 5 ஆம் நாள், வன்னியில், ஒட்டுசுட்டான் எனப்படும் சிறு பட்டினத்தில் அமையப்பெற்றிருந்த காவல் நிலையம் விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலுக்கு இலக்காகியது. இத்தாக்குதலில் எட்டு சிங்களக் காவல்துறையினர் கொல்லப்பட ஏனையோர் சிதறியோடித் தப்பித்துக் கொண்டனர்.
ஆகஸ்ட் 11 ஆம் நாள், மன்னார் மாவட்டத்தில் வெள்ளாம் குளத்திற்கு அண்மையில், மன்னார் – பூநகரி வீதியில் இராணுவ சுற்று அணி ஒன்று விடுதலைப்புலிகளின் கெரில்லாத் தாக்குதலுக்கு ஆளானது. இத்தாக்குதலில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் 14 ஆம் நாள், வல்வெட்டித்துறை காவல் நிலையம்மீது விடுதலைப் புலிக் கெரில்லாப் போராளிகள் துணிச்சலான திடீர் தாக்குதலை நிகழ்த்தினர். ஒரு மணி நேரம் வரை நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் பல காவல்துறையினரும் இராணுவத்தினரும் படுகாயமடைந்தனர்.
ஆகஸ்ட் 24 ஆம் நாள், வடமராட்சியில் கரவெட்டி என்னுமிடத்தில், விடுதலைப் புலிப் போராளிகளின் பதுங்கியிருந்து நிகழ்த்திய தாக்குதலில் இராணுவ வாகனம் ஒன்று சிதறி எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதே நாளன்று அச்சுவேலியில் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் பலியாகினர்.
செப்டெம்பர் 1 ஆம் நாள், படமராட்சிக் கரையோரக் கிராமமாகிய திக்கத்தில், காவல்துறை சுற்றுக்காவல் அணிமீது விடுதலைப் புலி கெரில்லா வீரர்கள் பதுங்கியிருந்து நிகழ்த்திய தாக்குதலில் இருபது அதிரடிப் படையினர் தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

செப்டெம்பர் 10 ஆம் நாள், முல்லைத்தீவுப் பட்டினத்திற்குச் சமீபமாகவுள்ள செம்மலை என்னுமிடத்தில் ஒரு வாகனத் தொடர் அணிமீது புலி வீரர்கள் மேற்கொண்ட துணிகர கெரில்லாத் தாக்குதலில் பதினைந்து இராணுவத்தினர் உயிரிழந்தனர்.
ஒருபுறம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது கெரில்லாத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, சிங்கள ஆயுதப் படைகள் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்த அதேவேளை மறுபுறம் ஏனைய தமிழ் அமைப்புகளும் 1984 இறுதிப் பகுதியில் தாக்குதல்களை முடுக்கிவிட்டதால் தமிழரின் புரட்சிப்போர் உக்கிரமும் விரிவாக்கமும் கண்டது. 1984 அக்டோபர் 21ஆம் நாள் கொழும்பில் தொடர்ச்சியாகப் பல குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததால் தலைநகர் அல்லோல கல்லோலப்பட்டது. தலைநகரில், முக்கிய அரச நிறுவனங்களுக்கு அருகாமையில், பத்துக் குண்டுவெடிப்புகள பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்தன. இதனால் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் பெருந்தொகையானோர் படுகாயம் அடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு ஈரோஸ் இயக்கம் உரிமை கோரியது. இதற்கிடையில் 1984 நவம்பர் 19 ஆம் நாள், யாழ்ப்பாணத்தில தெல்லிப்பாளையில் விடுதலைப் புலிகள் நடத்திய கெரில்லா அதிரடித் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் வட பிராந்தியத் தளபதி பிரிகேடியர் ஏ. ஆரியப் பெருமாவும், எட்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். கட்டுவன் – தெல்லிப்பளை வீதியில் கண்ணிவெடிகளைப் புதைத்து எமது வீரர்கள் தயாரெடுத்துக் காத்து நின்ற வேளையில், ஒரு ஜீப் வண்டி, இரண்டு கவச வண்டிகள் சகிதம் இராணுவ வாகன அணி அங்கு வந்த போது நிலக் கண்ணி வெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. அக்குண்டு வெடிப்பில் பிரிகேடியர் ஆரியப்பெருமா பயணித்த ஜீப் வண்டி சிதறி நொறுங்கியதால் அவர் தலத்திலேயே கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச சண்டையில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இவ்வாறிருக்க 1984 நவம்பர் 20 ஆம் நாள், சாவகச்சேரி காவல் நிலையம்மீது ரெலோ அமைப்பைச் சார்ந்த போராளிகள் துணிகரத் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தினர். இதில் இருபத்து நான்கு காவல்துறையினர் பலியாகினர். காவல்நிலையக் கட்டிடம் குண்டுவைத்துத் தகர்த்து அழிக்கப்பட்டது. தமிழ்ப் போராளி அமைப்புகளின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தாலும், தலைநகர் வரையும் தாக்குதல்கள் விரிவாக்கம் பெற்றதாலும் சிங்கள அரசு பீதியும் பதட்டமும் அடைந்தது.

இந்திய அரசின் தீவிர ஆதரவுடன் தமிழ்ப் போராளி அமைப்புகள் தமது கெரில்லாப் போராட்டத்தை விரிவுபடுத்தி வருவதைக் கண்ட ஜெயவர்த்தனா அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். எனினும் அவர் தனது விட்டுக்கொடாத கடும் போக்கிலிருந்து தளரவில்லை. இராணுவ நெருக்குவாரம் தீவிரமடைந்தபோதும் அவர் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. தமிழர்களுக்கு எந்தவிதமான சலுகைகளையம் வழங்க அவர் தயாராக இல்லை. சிங்கள அரசியற் தலைமையின் கடும்போக்குக் காரணமாகப் பார்த்தசாரதியின் தீர்வுத் திட்டத்தை விவாதித்து வந்த சர்வகட்சி மாநாடு மாதக்கணக்கில் இழுபட்டு, முடிவெதுவுமின்றி முடங்கிப் போனது. சிங்கள இனவத ஆட்சியாளரைச் சமாதான வழியில் சமரசத் தீர்வு காண நிர்ப்பந்திக்கும் நோக்கத்துடன் இந்திராகாந்தி அம்மையாரால் முன்னெடுக்கப்பட்ட இருமுனைத் தந்திரோபாயமும்,ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சிகர அரசியலால் தோல்வியைத் தழுவியது. இந்தச் சிக்கலான சூழ்நிலையில்தான் எவருமே எதிர்பாராத அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சோக நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வானது இந்திய-இலங்கை உறவிலும், தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தியது. 1984 அக்டோபர் 31 ஆம் நாள் திருமதி இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

திருமதி காந்தியின் திடீர் மரணம் ஈழத் தமிழினத்தை ஆழமான சோகத்தில் ஆழ்த்தியது. தமிழரின் அரசியில் அபிலாசையும் நம்பிக்கையும் இடிந்து நொறுங்கின. கடைகள், பாடசாலைகளை மூடி, வீடுகள் எங்கும் கருப்புக் கொடிகள் பறக்கவிட்டுத் தமிழீழ மக்கள் துக்கம் கடைப்பிடித்தபோது, தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படையினர் வீதிகளில் நடனமாடி மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். தமிழரின் ஆயுதப் போராட்ட இயக்கத்தைப் பொறுத்தவரை திருமதி காந்தியின் திடீர் மறைவானது ஈடுசெய்ய முடியாத பெரியதொரு தார்மீக சக்தியைத் தமிழரின் சுதந்திர இயக்கம் இழந்து தவித்தது. இந்திரா காந்தி அம்மையார் ஆழமான ஆளுமையும் மதிநுட்பமும் மிகுந்தவர். இலங்கை அரசியலின் சிக்கலான பரிமாணங்களை நன்கு அறிந்தவர். தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினையில் ஆழமான அக்கறையும் அனுதாபமும் கொண்டவர். தமிழரின் உரிமைகளையும் அரசியல் அபிலாசைகளையும் வென்று கொடுக்க வேண்டும் என்பதில் உறுதி பூண்டிருந்தவர். சிங்கள அரசியல் தலைவர்களின் மனவியல்புகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்ததால் அவர்களை அச்சமூட்டிப் பணியவைக்கும் தந்திரங்களையும் கையாண்டு வந்தார். வங்காளதேசம் தனியரசாக உருப்பெற்றமைக்கு இந்திரா காந்தியின் பங்களிப்புக் காரணமாக இருந்த வரலாற்றை ஜெயவர்த்தனா நன்கு அறிந்திருந்தார்.

தமிழரின் இனப் பிரச்சினையிலும் “திருமதி. காந்தி தலையிட்டுத் தமிழருக்குத் தனியரசை உருவாக்கிக் கொடுக்கலாமென ஜெயவர்த்தனாவுக்கு அச்சம் இருந்து வந்தது. ஜெயவர்த்தனாவின் இந்த அச்சம் பற்றி திரு.டிக்சிட் குறிப்பிடுகையில், திருமதி காந்தி உயிரோடு இருந்திருப்பாராயின் 1985 ஆம் ஆண்டிலேயே இலங்கையை இரு நாடுகளாகப் பிளவுபடுத்தியிருப்பார் என்று ஜெயவர்த்தனா என்னிடம் அச்சம் தெரிவித்தார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

திருமதி காந்தியின் திடீர் மரணத்தை அடுத்து டில்லியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாகவே அமைந்தது. திருமதி காந்தி வகித்த உயர் பதவியில் அவரது புத்திரரான திரு. ராஜீவ் காந்தி அமர்த்தப்பட்டார். ஆழமான தரிசனமும் அரசியல் முதிர்ச்சியுமற்ற இளைஞரான ராஜீவ் காந்தி புதிய இந்தியப் பிரதமராகப் பதவியேற்றதை அடுத்து இந்திய-இலங்கை உறவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்கள் தமிழீழ மக்களின் நலன்களை ஆழமாகப் பாதித்தன.

தொடரும்…

அன்ரன் பாலசிங்கம்

அடுத்து வரும் பதிவு : டில்லியில் புதிய நிர்வாக ஆட்சி

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.