மேஜர் துளசி

In வீரத்தளபதிகள்

மேஜர் துளசி

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் முதல்தர மாணவி, பின் நாட்களில் வேம்படி மகளிர் கல்லூரியின் க.பொ.த (உ/த) விஞ்ஞானபீட மாணவி, அந்த அமைதியான குகபாலிகா புலிகளோடு போனது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. வாய்திறந்து அதிகம் போசாத, ஆரவாரங்களில்லாத ‘றோசாக்கா’வினுள்ளிருந்த நாட்டுப்பற்றை எவராலுமே ஏற்கனவே அடையாளம் கண்டிருக்கமுடியவில்லை.

அவரது நெருங்கிய தோழியின் தங்கையொருவர் 1989 இல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட செய்தி காற்றில் பரவியது. செய்தியை கேள்வியுற்ற குகபாலிகா தோழியிடம் ஓடிவந்து, “எனக்கு ஒரு சொல்லுச் சொல்லியிருந்தா, நானும் சேர்ந்து போயிருப்பன். சொல்லாமல் போய்விட்டாள்”

என்று கவலைப்பட்டபோதுதான், அவளுக்குள்ளிருந்த விடுதலை நெருப்பைத் தோழியால் புரிந்துகொள்ள முடிந்தது.

நடேஸ்வராக் கல்லூரியில் படிக்கும் வரை ஒரு தவணைப் பரீட்சையில் குகபாலிகா முதலாமிடம் வந்தால், தோழி இரண்டாமிடத்தில் இருப்பர். மறு தவணையில் தோழி முதலாமிடத்துக்கு வர, குகபாலிகா இரண்டாமிடத்தில் இருப்பார். இருவருக்குமிடையிவான இடைவெளி ஒன்றோ, இரண்டோ புள்ளி களாகத்தான் இருக்கும். படிப்பில் முதல்தர போட்டியாளராக இருந்தவர்தான், குகபாலிகாவின் மிக நெருங்கிய நண்பி என்பது எல்லோரையும் வியப்படைய வைத்தது போலவே, அவர் போராடப் போனதும் பலருக்கு வியப்பைத் தந்தது.

படிப்பில் புலியாக இருந்தவர், விடுதலைப்புலியாக மாறியபோது இந்திய படைகள் எமது தாயகத்தைவிட்டு மெதுவாக விலகத்தொடங்கி விட்டிருந்தது. விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் 7ஆவது பாசறையில் படையத்தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்டு துளசி யாகியவர், அதன் பின் கப்புதூ – மண்டான் போன்ற வெளியான பகுதிகளில் எமது அணி களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். 1990ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் இலத்திரனியல் கற்கை – பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இலத்திரனியலோடு தொலைத்தொடர்புக் கருவிகளைப் பற்றியும் படித்துக்கொண்டே வேலை செய்யும் வல்லமை பெற்றிருந்த அந்த அணியில், துளசியின் அறிவும் திறமையும் மற்றவர்களில் இருந்து அவரை தனித்து அடையாளம் காட்டியது. வெளியில் இருந்து வருகின்ற ஆசிரியர்கள் கற்பித்துவிட்டுப்போகும் விடயங்களை அன்றன்றே தனது அணிக்கு மீளவும் விரிவாகத் துளசி கற்பிப்பார். ஐயம் திரிபற அவர்கள் கற்பதற்கு அவர் தனது விரிவான பங்கை ஆற்றியிருந்தார். செயல் முறைகளை ஆசிரியர்கள் ஒருதடவை சொல்லிக்கொடுத்தபோதே தெளிவாக விளங்கிக்கொள்ளும் அவர், ஆசிரியர்கள் போனபின் அணியினரை மறுபடி மறுபடி செய்வித்து அவர்களின் நினைவில் பதியவைத்துவிட்டார்.

ஒலியலை வாங்கிகளைச் செய்வது, தொடர்பாடல் கருவிகளைத் திருத்துவது, நேரக்கட்டுப்பாட்டுப் பொறிகளைச் செய்வது என ஒரு வருடம் வரை அந்த அணியினரோடு அவரின் பணி தொடர்ந்தது. 1991ஆம் ஆண்டின் இறுதியில் இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், சிறப்புப் படையணி ஒன்றினுள் உள்வாங்கப்பட்ட போது, துளசியும் அவர்களில் ஒருவராகப் போயிருந்தார்.

சிறப்புப் படையணியின் தொலைத் தொடர்புப் பகுதிக்குப் பொறுப்பாக விடப்பட்ட துளசி, தனது அணியினரை வைத்துப் படையணியினருக்குத் தொடர்பாடல் கருவிகளைப் பயிற்றுவித்ததுடன், அவர்களுக்கான படையப் பயிற்சியளித்தலிலும் பங்கேற்றார். அதேநேரம் சிறப்பு அணியினருக்கான கராத்தேப் பயிற்சியில் ஈடுபட்டு மண்ணிறப் பட்டியைப் பெற்றுக்கொண்டார்.

1993ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதியவர்களைக்கொண்ட அணியொன்று துளசிக்கு வழங்கப்பட்டு, சிறப்பு அணியினருக்கான கணினிப் பிரிவு தோற்றுவிக்கப்பட்டு, இவரின் பொறுப்பில் விடப்பட்டது. கணினி கற்கைநெறியில் தானும் ஈடுபட்டவாறே தனது பிரிவினருக்கும் கற்பித்துக் கொண்டிருந்தார் அவர். தேடல் அவரின் இயல்பாகவே இருந்ததால் கணினி பற்றிய ஆங்கில நூல்களைத் தேடி வாசித்து, அதைத் தமிழாக்கம் செய்து தனது பிரிவினருக்கும் வாசிக்கக்கொடுப்பார்.

“Populer Science” என்ற சஞ்சிகையில் What’s new என்ற பகுதியில் ஒவ்வொரு முறை ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும். அவற்றைத் தமிழாக்கம் செய்து ஷஷநவீன கண்டுபிடிப்புக்களில் சிறந்தவை|| என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டிருந்தார்.

இந்த வேலைதான் தன்னுடையது என்ற வரையறை எதுவும் துளசிக்கு இல்லை. அவரது பிரிவினர் க.பொ.த (சா.த) தோற்றுவதற்கென கடுமையாகப் படித்துக்கொண்டிருந்த சில நாட்களில் அவர்களது சமயலுக்கான மரக்கறிகள், மாமிச வகையறாக்களைச் சந்தையில் வாங்கி, உரைப்பையில் வைத்து மிதிவண்டித் தாங்கியில் வைத்துக் கட்டியபடி துளசி மிதிவண்டியில் போவதைச் சாதாரணமாகக் காணலாம்.

தமது வேலைகளைக் கணினி மயப்படுத்தவிளைந்த எமது அமைப்பின் சில பிரிவுகளுக்கு, குறிப்பாகத் தமிழீழ நிதித்துறையின், பெண், ஆண் போராளிகளை உள்ளடக்கிய ஒரு அணியினருக்கு துளசி கணினியைக் கற்பித்தார்.

1994ஆம் ஆண்டின் இறுதிவரை தொடர்பாடல், இலத்திரனியல் பிரிவினருக்கும், கணினிப் பிரிவுக்கும் பொறுப்பாக இருந்தவரின் சுமை மிக அதிகம். பிரிவுகளின் விரிவு கருதி 1995ஆம் ஆண்டில் தொடர்பாடல், இலத்திரனியல் பகுதி தனியாகப் பிரிந்து இயங்க, துளசி கணினிப் பிரிவைத் தொடர்ந்தும் வழிநடாத்தினார். அதுவரை நாளும் சிறப்பு அணியினரின் பெண்களைக்கொண்ட இரு அணிகள், ஆண்களின் ஒரு அணி, கடலுக்கான சிறப்பு அணியினரின் இரு அணிகள், கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளி மாணர்வகள், தமிழீழ படைத்துறைப்பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான தொடர்பாடல், இலத்திரனியல் வகுப்புகளுக்கான குறிப்புக்கள் துளசியால் தயாரிக்கப்பட்டு அவரது அணியினரால் கற்பிக்கப்பட்டிருந்தன.

போர்க்களம் போகும் அவா துளசியின் மனதில் கொழுந்துவிட்டெரிந்து கொண்டேயிருந்தது. 1991ஆம் ஆண்டில் ஆனையிறவு மீதான ஆகாய, கடல், வெளிச் சமருக்கு அழைக்கப்படாதவர் களில் துளசியும் ஒருவர். பெரும் சமர் ஒன்றுக்கான வாய்ப்பை இழந்த துளசிக்கு, இப்போது ஆவல் கட்டுமீறியது. துளசியின் வேண்டுகோளை மறுக்க முடியாத பொறுப்பாளர் அவரைப் போர்முனைக்கு அனுப்பினார்.

சூரியக் கதிர் – 01 எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி இவருக்கு சமர்க்கள வாய்ப்பைக் கொடுத்தது. அந்த நடவடிக்கை முடியும் வரை காவும் குழுக்கள் சிலவற்றுக்குப் பொறுப்பாக நின்று களத்தில் காயமுறும் போராளிகளின் உயிர் காக்கும் கடினப் பணியைச் செய்திருந்தார்.

இரண்டு அக்காக்களுக்கும் ஒரு அண்ணாவுக்கும் செல்லத்தங்கையாக வீட்டிலே மென்மையாக வளர்ந்திருந் தாலும் கடின உழைப்பிற்கு அவர் பின்னிற்பதில்லை. சிறப்பு அணியினரோ இளம் வயதினர். 10 கிலோமீற்றர் தூரத்தை அவர்கள் ஓடும் வேகத்தில் எவராலும் ஓடிவிடமுடியாது. அதிகாலை 4.30 மணிக்கு ஓடுபாதைக்குவரும் துளசி 10 கிலோமீற்றர் தூரத்தை தன்னுடைய வேகத்தில் ஓடி முடிப்பார். இரண்டு, மூன்று நாட்களின் பின் அவரது கால்கள் வீங்கும். ஒரு நாள் ஓய்வெடுப்பார். மறுநாள் ஓடுவார். அவரை “ஓடு” என்று எவரும் சொன்னதில்லை. ஓடாமல் அவரும் நின்றதில்லை. அதனால்தான் சூரியக் கதிர் – 01 சமர்க்களத்தின் கடுமை யான நாட்களிலும் சிரிப்பு முகத்துடன் கடமையைச் செய்ய அவரால் முடிந்தது.

விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தன்னை 2ம் லெப்.மாலதி படையணியாக உருமாற்றிக்கொண்ட போதும் உடனிருந்த துளசி, வலிகாமத்திற்கான சண்டை முடிந்து எமது அணிகள் தென்மராட்சிக்கு வந்தகையோடு படையணியின் போர்ப்பயிற்சி ஆசிரியர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அதன் பின் துளசிக்கு ஓய்வே இருக்க வில்லை. சூரியக் கதிர் – 02 எதிர் நடவடிக்கை, ஓயாத அலைகள் – 01, உண்மை வெற்றி – 01, 02, 03 எதிர் நடவடிக்கைகள், பரந்தன் ஆனையிறவு ஊடுருவித் தாக்குதல் என நீள்கிறது அவர் பயிற்சி கொடுத்து அணிகளைக் களமிறக்கிய நடவடிக்கைகள். கூடவே தானும் போய்விடுவார்.

வன்னியைத் துண்டாடும் முயற்சியில் ஒரு பாரிய படைநகர்வு சிறிலங்கா அரசால் தயார்ப்படுத் தப்படுவதை ஊகித்த தலைவர் அவர்கள் எதிர் நடவடிக்கைக்கு எமது அணிகளைத் தயார்ப்படுத் தினார். நெடுங்கேணி, மாங்குளம் பகுதிகளில் காவல் உலா போய் இடங்களை பழக்கப்படுத்தும் வேலைகளை எமது அணிகள் செய்தபோது துளசியும் கூடவே நடந்தார். அந்நேரம் மணலாற்றுப் பகுதியில் முன்னரங்க நிலை களைப் பலப்படுத்தவென லெப்.கேணல் தட்சாயினியின் கொம்பனி புறப்பட்டது. இதுவரை நாளும் பயிற்சி வழங்கியதிலேயே அதிக காலத்தைச் செலவிட்ட துளசி, தன்னைத் தாக்குதல் அணியோடு இணைத்துவிடும்படி அடம்பிடித்து, தட்சாயினியின் கொம்பனியின் பிளாட்டூன்களில் ஒன்றைப் பொறுப்பேற்றார்.

கனவு நனவான பூரிப்பு அவருக்கு. மார்பிலே கட்டியிருந்த மேலதிக ரவைக்கூட்டு அணியை நித்திரிரையில்கூட கழற்றியதில்லை. எந்நேரமும் சுடுகலனையும் தொலைத்தொடர்புக் கருவியையும் சுமந்தபடி எப்போதும் சண்டைக்குத் தயாரான நிலையில்தான் மணலாற்றிலே துளசியைக் காணலாம். ஒரு நாளில் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகளில் தனது பிளாட்டூனின் கண்காணிப்பிற்கு உட்பட்ட இடங்களைச் சுற்றிப்பார்த்து அணியினருடன் கதைத்திருப்பார். எதையும் தான் செய்த பின்னரே ஏனையவர்களுக்குக் கட்டளையிடுவதால் எல்லோராலும் விரும்பப்படுகின்ற அணி முதல்வியாக அவர் இருந்தார். தட்சாயினி வந்து பார்த்துத் திருத்தம் செய்கின்ற அளவிற்கு அந்தப் பிளாட்டூனில் சிறிதுதவறும் இருக்காது..

இவர்கள் மணலாற்றில் நின்றபோதே நெடுங்கேணியில் இருந்தும், பின் வவுனியாவிலிருந்துமாக சிறிலங்காப் படைகள் நகரத்தொடங்கிவிட்டிருந்தன. புளியங்குளச் சந்தியை மையமாகக் கொண்டு படைத்தளம் ஒன்றை அமைத்து, எமது அணிகள் எதிரி நகர்வை முடக்கிவைத்திருந்தன.

தமக்கு எப்போது அழைப்புவரும் என்று ஆவலுடனிருந்த தட்சாயினியின் கொம்பனிக்கு வந்தது அழைப்பு. எதிரி நகர்வைத்தடுக்க அல்ல. ஊடுருவித் தாக்க. கொம்பனி தயாராகிவிட்டது. பிளாட்டூனின் வழிநடத்துனராக இருந்த துளசியை இப்போது நான் தட்சாயினியின் நிலைமை அறிவிப்பாளராக மாற்றிவிட்டதில் அவருக்குச் சிறிதும் உடன்பாடில்லை. களத்தில் நேரடியாக தான் நடவடிக்கையில் ஈடுபடுவதையே அவர் விரும்பினார். கொம்பனி மேலாளர் ஒருவரின் நிலைமை அறிவிப்பாளராகப் பணியாற்றவேண்டியதன் முக்கியத்துவத்தை நான் விளக்கிய பின்னரே, அரைமனதோடு ஒப்புக்கொண்டார்.

எதிரிகளால் சிறிதளவும் ஊகிக்க முடியாத துணிகரத் தாக்குதலாகவே தாண்டிக்குள ஊடறுப்புத் தாக்குதல் தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வெற்றிகரத் தாக்குதலில் துளசியின் பங்கு மறக்க முடியாதது.

சில நாட்களிலிலேயே அடுத்த ஊடுருவித்தாக்குதலுக்கு அணிகள் தயாராகின. இப்போதும் தட்சாயினியின் நிலைமை அறிவிப்பாளராகவே துளசியும் தயாராகினார். பெரியமடு மீதான ஊடுருவித் தாக்குதலின்போது, தேவையேற்பட்டால் கொம்பனியை இரண்டாகப் பிரித்துச் சண்டையில் ஈடுபடுத்தும்படி தட்சாயினியிடம் நான் கூறியிருந்தேன். கொம்பனி பிரிவதாக இருந்தால், உள்நுழையும் மற்றைய அணியைக் களத்திலே வழிநடத்தும் பணியைத் தன்னிடம் தரும்படி தாட்சாயினியிடம் துளசி உடனேயே கேட்டிருந்தார்.

அணிகள் புறப்பட்டன. பெரியமடுவில் இருந்த சிறிலங்காப் படைத்தளம் ஊடுருவித் தாக்கப்பட்டது. களத்திலே அணியை வழிநடத்தும் கனவோடுபோன துளசியைத் தோழில் சுமந்தபடி திரும்பிவந்தன அணிகள். ஆளுமை மிக்க, அறிவாற்றல் உள்ள ஒரு போராளியை அதற்குள்ளேயே இழந்துவிட்டோமா என்ற வேதனை, துளசியை அறிந்த எல்லோருக்குள்ளும் எழுந்தது.

 

கல்லூரித் தோழிகள் ‘றோசா சரியான அமைதி’ என்கிறார்கள். வேலைக்குப் போகின்ற அம்மா, அப்பா, பாடசாலை போகின்ற அக்காக்கள், அண்ணா என துளசியின் மாணவப் பருவம் தனிமையில் கழிந்ததால் அந்நேரம் அவர் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் சிறப்புப் படையணியினருக்கோ அவர் நகைச்சுவை உணர்வு மிகுந்த நல்ல பொறுப்பாளர். ஆயிரக்கணக்காணவர்கள் ஒத்த இலட்சியத்தோடு உடனிருந்த சூழல் அவரை கலகலப்பாக்கிவிட்டது.

போர்ப்பயிற்சி ஆசிரியராக அவர் எங்களோடு இருந்த காலத்தில் தான் வயதில் மூத்தவர் என்றோ முதுநிலை அதிகாரி என்றோ வேறுபாடு காட்டாமல் எல்லோரோடும் ஒரே மாதிரியாகவே பழகுவார். பலரோடு அவர் இருக்குமிடத்தில் இளையவர் யார், மூத்தவர் யார் என பார்ப்பவர்களால் அடையாளம் காணமுடியாது. மிகப்பெரிய நகைச்சுவை ஒன்றைச் சொல்லிவிட்டு அவர் அமைதியாகிவிடுவார். கேட்டவர்கள்தான் அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டிருப்பார்கள். பார்ப்பவர்கள் துளசி அமைதியானவர் என்று எண்ணத்தக்க வகையில் சூழல் இருக்கும் நெருங்கியவர்களுக்கு மட்டுமே அவரின் இயல்பு புரியும்.

1994ஆம் ஆண்டின் கரும்புலிகள் நாள் அன்று சிறப்புப் படையணியின் ஒன்றுகூடலில், துளசி எழுதி நெறியாள்கை செய்து, கணினிப் பிரிவினர் நடித்த கருத்தாழம்கொண்ட சமூக நாடகம் அவரின் கலையாற்றலை எல்லோருக்கும் வெளிக்காட்டியது. சிறப்புப் படையணியின் ஒன்றுகூடல்களின் போது “இம்முறை கணினிப்பிரிவு என்ன கலைநிகழ்ச்சி கொண்டுவந்திருக்கின்றது” என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்குத் துளசியின் நெறியாழ்கையில் உருவாகுகின்ற நிகழ்ச்சிகள் இருக்கும். ஒருமுறை நாடகம் என்றால் அடுத்தமுறை தொலைக்காட்சி நிகழ்வு, இன்னொருமுறை வேறொன்று என்று புதிது, புதிதாக அவரின் நிகழ்ச்சிகள் இருக்கும்.

பிளாட்டூன் ஒன்றுடன் சண்டைக்குப்போன பட்டறிவில்லாமலே, கொம்பனி உதவியாளராகச் செயற்படத்தக்க அறிவாற்றல் கொண்ட துளசியைப் பற்றி எங்களுக்கு இருந்த கற்பனைகள் அதிகம். “துளசியக்கா நல்லதொரு பொறுப்பாளர். இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருப்பார்” சிறப்புப் படையணியினர் மட்டுமல்ல அவரை அறிந்த எல்லோருமே இதைத்தான் சொல்கின்றார்கள்.

பிரிகேடியர் யாழினி (விதுசா)
சிறப்புத் தளபதி, மாலதி படையணி

மூலம்: விடுதலைப் புலிகள் (ஆவணி – புரட்டாதி 2007)

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.