மேஜர் திவாகர்

In வீரத்தளபதிகள்

மேஜர் திவாகர்

மேயர் திவாகர்
சந்திரசேகரன் புலேந்திரன்
தமிழீழம் (யாழ் மாவட்டம்)

1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளின் பின்னர், பகைவன் கோட்டையொன்றைக் கைப்பற்றுவதற்கான முற்றுகையைத் தமிழர் வீரவரலாறு சார்பாகப் புலிகள் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சம் தீவுப்பகுதி மக்கள் ஏதிலிகளாயினர்.

பல இலட்சம் தீபகற்ப மக்கள் அல்லலுறுகின்றனர். இதற்கு நேரடிக் காரணமான படை முகாம் வீழ்த்தப்பட்டேயாக வேண்டும். இம்முகாமிற்குப் முதன்மை வழங்கற் பாதையாக விளங்கும் பண்ணைப் பாலம் தகர்க்கப்படல் வேண்டும். ஐம்பது மீற்றர் முன்னால் பகைவனின் பதுங்கிக் குறிபார்த்துச் சுடும் வீரர்கள் விழித்திருக்கின்றார்கள். அவர்களின் கழுகுப்பார்வை இவர்களின் பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. பகைவன் கண்களில் மண்ணைத்தூவி பண்ணைக் கடற்கரை நோக்கி வெடி மருந்துகளை நகர்த்த வேண்டும். எக்கணமும் உயிர் பறிபோகும் ஆபத்தான இப்பணியைத் திவாகர் செய்து கொண்டிருந்தான். எது நடக்கலாகாது என எதிர்பார்க்கப்பட்டதோ அது நடந்தேவிட்டது. ஆனால் சிறு அதிஸ்டத்துடன் எதிரியின் ரவையொன்று இவனது காலைத்துளைத்துச் சென்றுவிட்டது

கண்விழித்துப் பார்க்கையில் யாழ். மருத்துவமனையில் படுத்திருந்தான். காயம் மாறுகையில் அக்காலின் நீளம் ஒரு இஞ்சி கட்டையாகி இருந்தது. கீழ்க்காலின் ஒரு பகுதி தொடுகை உணர்வை இழந்திருந்தது. அக்காலை இழுத்திழுத்தே நடக்கவேண்டியிருந்தது. தனக்கேற்பட்ட வலுக்குறைவை நடையின் வேகத்தைக் கூட்டுவதன் மூலம் ஈடு செய்ய முற்பட்டான். அம் மருத்துவமனையில் போர்க் காயமுற்ற நூற்றுக்கணக்கான போராளிகள் பண்டுவம் (சிகிச்சை) பெறுகின்றார்கள். அவர்களின் தேவைகளைப் நிறைவும் செய்யும் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. இவனது ஆலோசனைகளும் பண்பான செயற்பாடுகளும் அதனை இலகுவாக்கியது. அப்பொறுப்பை முழுமையாகச் செய்யுமாறு கேட்கப்பட்டான். அதற்கு இவன் கால இடைவேளை கேட்டான். அடிப்படைப் பயிற்சி முடிவடைய முன்னரே தான் காயமடைய நேர்ந்ததையும், அதனைத்தான் முழுமைப்படுத்தினால் தான் தன்னால் முழுமையான போராளியின் மனநிலையில் செயற்பட முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினான். இயலாக் காலுடன் கடின பயிற்சிகளை நிறைவு செய்து பணிக்குத் திரும்பினான்.

காயமடைந்தவர்கள் பலரின் மனச் சமநிலையில் மாற்றமிருந்தது. அவர்களுக்குத் தாயாய், தாதியாய், தலைவனின் பிரதிபலிப்பாய், நண்பனாய் எனப் பலராய்ச் செயற்பட்டான். மருத்துவ நிபுணர்கள், மருத்துவம் கற்பவர்கள், ஏனைய மருத்துவப் பணியாளர்கள் அனைவருடனும் அன்பாகவும் போராளிக்குரிய பிரத்தியேக பண்பை வெளிக் காட்டும் வண்ணமும் உறவாடினான். அனைவர் மனதிலும் ஆழ இடம் பிடித்தான். மனித மனங்களையும் வளங்களையும் முகாமைத்துவம் செய்வதிலும் இவன் ஒரு நடைமுறை நிபுணனாகச் செயற்பட்டான்

போர்க்காலத்தில் பொருளாதார, மருந்து தடைகளால் மக்கள் இன்னல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்க்கைத் தரத்திலும் அக்கறை செலுத்தவேண்டி இருந்தது. தமிழீழ சுகாதார சேவைகள் நிறுவன மயப்படுத்தப்பட்டது. இதன் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றப் பணிக்கப்பட்டான். இக்காலகட்டத்தில் தான், வரலாற்றின் மிகப் பெரும் துன்பமாக யாழ்ப்பாண இடப்பெயர்வு நிகழ்ந்தேறியது. யாழ் மருத்துவமனையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் பொதுமக்களும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக நகர்த்தவேண்டியிருந்தது. இவ் மனிதாபிமானப் பணியின் பாரத்தின் பெரும்பகுதி இவன் தோள்களில் இறங்கியது. ஒற்றைக்காலில் சுற்றும் பம்பரமாக, இரவு பகல் பாராது இருபத்தினான்கு மணிநேரமும் இவன் சுழன்றது இன்னும் நினைவுகளில் உள்ளது

மக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இடிவிழுந்த சுடுகாடாக இயல் பிழந்து யாழ்.மண் காட்சியளித்தது. போராளிகளின் கள மருத்துவமனையாக “ஞானம்ஸ்” உல்லாச விடுதிக் கட்டிடம் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றது. பணியின் களைப்பால் சிறிது கண்ணயர்ந்த திவாகர் திடீரென எழுந்து “எண்பத்தொண்டில் இந்த ஹொட்டல்ல காமினி திசநாயக்கா வந்திருந்த போது தான் ஆமிக்காரங்கள் யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை எரித்தவங்கள். அது மாதிரி இனியும் ஏதாவது செய்வாங்கள். அதனால், யாழ். மருத்துவபீட நூலகத்தில் உள்ள நூல்களையாவது பாதுகாக்க வேண்டும்” எனக் கூறினான். இவனது எண்ணம் அங்கிருந்தவர்களுக்கு அதீதமாகப்பட்டது. அண்ணளவாக மருத்துவ பீடத்திற்கு முன்னால் 750M தூரம்வரை பகைவன் வந்துவிட்டான். வாகனங்களைக் கிட்டக்கொண்டு போகும் சத்தம் கேட்டாலே போதும் எறிகணைகளால் பொழிவான். தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் துணைக்கழைத்தான். தள்ளி உருட்டிச் செல்லக்கூடிய கட்டில்கள் சிலதைப் பார ஊர்திகளில் ஏற்றினான். புறப்பட்டு விட்டான். மருத்துவபீடப் பின்பக்க திடலுக்கு வெளியில் பாரவூர்திகளை நிறுத்திவிட்டு, எல்லோரும் உள்ளே சென்றார்கள். கையினால் மின்சூழ்களின் வெளிச்சம் பொத்தி மறைக்கப்பட, மாடியில் இருந்து மனிதச் சங்கிலியாக எல்லோரும் நின்று கைமாறிக் கைமாறிப் புத்தகங்களை உருளும் கட்டில்களில் ஏற்றி, தள்ளி வந்து பார ஊர்திகளில் ஏற்றி, சாவகச்சேரிப் பகுதிக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். யாழ்.நகர் பறிபோகும் கவலையில் அனைவரும் துவண்டிருக்கையில் அவன் அறிவு பூர்வமாகச் சிந்தித்தது மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது

இடம்பெயரும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யுமாறு ஐ.நா. தலைமைச் செயலர் அறிக்கை விட்டிருந்தார். எவ்வுதவிகளும் வந்துசேர எவ்வழிகளும் இல்லாத நிலை. மாரி மழையில் வாந்தி பேதியோ, வயிற்றோட்டமோ வந்து பல்லாயிரம் மக்கள் மடிய நேரலாம். எனும் மனித அவலம் எதிர்பார்க்கப்பட்டது. திரவ ஊடகமோ, நுண்ணுயிர் கொல்லி மருந்துகளோ ஒரு மருத்துவ நெருக்கடியைச் சமாளிக்கக் கூடியவாறு கையிருப்பில்லை. மருத்துவ சேவைக்கான நிர்வாகக் கட்டமைப்போ சீர்குலைந்துள்ளது. அவ்வேளை திவாகர் பின்வருமாறு கூறினான். மக்கள் கல்வியறிவுள்ளவர்கள். அடிப்படைச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள். திடீரென ஏற்பட்ட இவ்நெருக்கடியால் அவர்கள் கவனம் சிதறும். அதனால் மீண்டும் மீண்டும் சுகாதார விழிப்புணர்வை ஊட்டுவதனூடாகப் பிரச்சினையை வரவிடாமல் தடுக்கலாம். இவனது இக்கருத்து விரைவாகச் செயலுருப் பெற்றதால் எதிர்பார்த்த அவலம் வராமல் தடுக்கப்பட்டது

யாழ் மருத்துவமனை பறிபோனதால் எம் போரிடும் வலு குறைந்துவிட்டது. இதன் தொடராக எதிரி தென்மராட்சி வடமராட்சி பிரதேசங்களைக் கைப்பற்ற முயற்சிப்பான். ஆயிரக்கணக்கில் போராளிகளும் மக்களும் காயமடைவார் கள். இச் சவாலை முகம் கொடுப்பதற்கான வளப்பிரதியீட்டைக் குறுகிய காலத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்குத் துறைசார் மருத்துவக் குழுக்களைக் குறிப்பாகச் அறுவைப்பண்டுவத்திற்கான (அறுவைச்சிகிச்சைக்கான) மருத்துவ மாதுக்கள் ஆய்வு கூடத் தொழில்நுட்பவியலாளர்கள் போன்ற ஆளனி வசதியை ஏற்படுத்த வேண்டும். வழமை போல் இவனது லாவகமான செயற்பாட்டால் கைமேல் பலன் கிடைத்தது. இதனை முல்லைச்சமரில் காயமடைந்த ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட போராளிகளைக் காப்பாற்றியதன் மூலம் உணர முடிந்தது. நெருக்கடியான நேரங்களில் பொறுப்புக்களை நுணுக்கமாகக் கையாண்டதால் வன்னி மண் மீண்டும் ஒரு பாரிய பொறுப்பினை இவனிடம் ஒப்படைத்தது.

ஆம் இங்கு இவன் களமருத்துவப் பொறுப்பாளனாகச் செயற்படப் பணிக்கப்பட்டான். அகண்ட முன் அனுபவமற்ற பகுதி, ஆங்காங்கே அடிக்கடி அகோரமாக விரியும் சமர்க்களங்கள், ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் திருத்தப்படாத வீதிகள். எரிபொருள், மருந்துக்கும் தட்டுப்பாடான நிலை. ஒவ்வொருவரையும் பல தடவை சாவின் விளிம் புக்குக் கொண்டுபோய்க் கொண்டுவரும் மலேரியா, காயமடைந்தவர்களை வேகமாக நகர்த்தவோ, வைத்துப்பராமரிக்கவோ போதிய வளங்கள் இல்லாத நிலை. தலையிடி முதல் உடல் துண்டுபடும் காயங்கள் வரை அனைத்துமே சிரமத்தையே பரிசளிக்கும். இவ்வளவிற்கும் இவன் செயற்பட்டான். “கடினமாக உழைத்தோ அல்லது மிதமாக உழைத்தோ பாரிய வெற்றிகளைப் பெறலாம்” இவன் அடிக்கடி கூறும் கருத்தின் முற்பகுதியைத் தன் வாழ்வின் தத்துவ மாக்கியிருந்தான்.

எதிரி ஜெயசிக்குறு சமர்முனையைத் திறந்து விட்டான். வன்னியை இரண்டறுத்து, புலிகள் பலத்தைச் சிதறடித்து, தமிழர் தேசியத்தைச் செல்லாத விடயமாக்கும் முயற்சியில் பகைவன் மூர்க்கமாகவே ஈடுபட்டான். முதலைக்கு தண்ணியிலும் புலிகளுக்கு வன்னியிலும் பலம் என்பதை அவன் அனுபவத்தில் புரிய விரும்பிய காலம். பகை படைத் தொடரணியைத் தாண்டிக்குளத்தில் ஊடறுத்துத் தாக்கும் திட்டம் தயாரானது. கைவிடப்பட்ட வயல்களினூடும், காடுகளினூடும் புலிகள் நகரத் தொடங்கிவிட்டனர். சுமார் 30 கிலோ மீற்றர் இயலாத காலுடன் நடந்தான். மேலெழுந்த வாரியாகப் பார்க்கையில் ஒரு பிரிவுப் பொறுப்பாளன் ஒரு குழுவுடன் நகர்வது பொருத்தமற்றதாகத் தென்படலாம். எனினும் சாக்களங்களிலுள் நுழைந்து வெளிவருவது, தொடரும் சமற்களங்களில் சந்திக்கும் சவால்களுக்கு முகம் கொடுப்பதை இலகுவாக்கும் என்பதைத் திடமாக நம்பினான். களம் திறக்கும் இடமெங்கும் திவாகர் நிற்பான் என்பது வெளிப் படையானது. சமர்கள் முடிந்து தளம் திரும்பும் அவன் சில நாள் இடைவெளியில் தொய்ந்திருக்கும் நிர்வாக சேவைகளை வேகமாக ஒழுங்கு படுத்துவான். களமுனைத் தளபதிகளுடன் கலந்தாலோசனை செய்வான். முதன்மை, துணையான களமருத்துவ நிலைகளை எங்கெங்கு நிறுவுவதென முடிவெடுப்பான். வரைபடம், குறிப்புப் புத்தகமும் கையுமாக வரும் இவன் அவ்வவ் இடங்களில் மண்வெட்டியுடன் நின்று பதுங்குகுழிகளை அமைப்பான். ஒவ்வொரு மருத்துவ நிலையையும் மரபுசார் சிறு முகாமாக(மினிமுகாம்) மாற்றுவான். மருத்துவ நிலைகள் சுற்றிவளைக்கப்பட்டால் தாக்குப் பிடிக்கவும், தேவையேற்பட்டால் முற்றுகையை உடைக்கவும் தேவையான அனைத்தையும் படைய அறிவியல் பார்வையோடு செயற்படுத்துவான். புளியங்குளத்திலும், புத்தூரிலும் அவன் அமைத்த முகாம்கள் இயல்பான பார்வையில் களமருத்துவ முகாம்களாகவும், அலசும் பார்வையில் படைய பயன்பாட்டிற்குரிய முகாம்களாகவும் தென்பட்டன. இவ்விரு இடங்களும் முற்றுகைக்கு உள்ளாகித் தாக்குப்பிடித்து, பின் முற்றுகை உடைத்த நிகழ்வுகள் தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் சாதனைப் பதிவுகளாயின.

ஜெயசிக்குறு படை நடவடிக்கை அர்த்தமற்றதாக்கப்பட வேண்டும். அதற்கு சாத்தியமானவைகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும். அவற்றில் ஒன்றாக கிளிநொச்சி மீண்டும் கைப்பற்றப்படல் வேண்டும். இது நடைபெறுமாயின் ஜெயசிக்குறு படை ரெயில் தடம் புரளும் அல்லது தடம் மாறும். அதற்கான சமர் 10.02.1997 அன்று தொடங்க திட்டமிடப்பட்டது. இச் சமர்க்களத்தின் சுற்றயல் பகுதிகளில் களமருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு. சமர் தொடங்கிவிட்டு. களமருத்துவ முகாமொன்றில் திவாகர் பணியாற்றி கொண்டிருக்கின்றான். ஆங்காங்கே வான் தாக்குதல்களும் நடாத்தப்படுகின்றது. இரவு நடைபெற்ற சண்டையின் பிரதிபலிப்பாய் காயக்காரரை ஏற்றிப் பல ஊர்திகள் அவ் மருத்துவ நிலைக்கு வந்துபோகின்றன. காயக்காரர்களுக்கு அவசர உயிர்காப்புச் சிகிச்சைகளும், ஏனையவும் செய்யப்பட்டு விரைவாகப் பின்தளம் அனுப்பப்படுகின்றார்கள். வானில் ஆளில்லா வேவு வானூர்தி ரீங்காரமிடுவது கேட்கின்றது. ஊர்தி ஓட்டங்களை வைத்து இவர்களுடைய முகாம் அடை யாளம் காணப்படலாம் எனும் அச்சம் தலைதூக்குகின்றது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அவரவர் தம் தம் கடமைகளில் மூழ்கியுள்ளனர். திடீரென செவிப்பறை வெடிக்கும், நிலம் அதிரும் வகையில் இரைச்சல் சத்தம் கேட்கிறது. நிலைமையைக் கணித்த திவாகர் “எல்லோரும் பங்கருக்க பாயுங்கள்” கத்தி முடிப்பதற்குள் படீர் படீர் என கிபிர்க் குண்டுகள் அவ்விடங்களில் விழுந்து வெடிக்கின்றது. வெடி மருந்துப் புகையும், தூசி மண்டலமும் விலக சில நிமிடங்கள் எடுத்தது. கண்டகாட்சி அதிர்ச்சியைக் கொடுத்தது. களமருத்துவ நிலை இருந்த இடம் கற்குவியலாகக் காட்சியளித்தது. பச்சை மரங்களும், மருந்துப் பொருட்களும், தசைத்துண்ட ங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. ஆம் களமருத்துவப் பொறுப்பாளன் திவாகர் மற்றும் இரு படைய மருத்துவர்கள் உட்பட நாற்பத்திமூன்று பேர் நேசித்த மண்ணில், போர்ப் பணியாற்றிய இடத்தில் விதையாகிப் போனார்கள் –

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுன் பல களங்களில் களமாடி பல போராளிகளை வளர்த்தெடுத்து வெற்றியை அள்ளி தந்த எங்கள் அண்ணன் மேயர் திவாகர்க்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.