மேஜர் சோதியா …!

In வீரத்தளபதிகள்

மேஜர் சோதியா அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்.

மேஜர் சோதியா 
மைக்கல் வசந்தி 
தமிழீழம் (யாழ் மாவட்டம்) 
தாய் மடியில் :26-09-1969
தாயக மடியில் :11-01-1990

இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சி பெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார்.

மன்னாரில் லெப்.கேணல். விக்டர் தலைமையில் நடைபெற்ற பெண் புலிகளின் முதலாவது தாக்குதல் தொடக்கம் இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வரை இவர் பல களங்களைக் கண்டவர். மணலாற்றுக் காட்டுக்குள் இருந்த காலத்தில் ஒரு நத்தார் தினத்தன்று சுகவீனமுற்றார். பின் 11.01.1990 அன்று சாவடைந்தார்.  இவரின் பெயரில் ‘சோதியா படையணி’ என்ற பெண்கள் படையணி 14.07.1996 அன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னான அனைத்துக் களங்களிலும் அது சிறப்புறச் செயலாற்றியது. இன்று வரை ஏறத்தாள ஐநூறு போராளிகளை இப்படையணி இழந்துள்ளது. தமிழீழப் போராட்ட வரலாற்றில் மேஜர் சோதியாவினது ஆளுமையும், திறமையும் இன்று வரையான மகளிர் படையணியின் வளர்ச்சிக்கான அச்சாணி.

பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக… நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகி விட்டன.

இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழி நடந்த, நேசித்த காலம்.

நெடி துயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.

சோதியாக்கா வயித்துக்குத்து… சோதியக்கா கால்நோ… சோதியாக்கா காய்ச்சல்… சோதியாக்கா…. சோதியாக்கா.

ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.

விடியல் – அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த பாசத்தாய்ப்பூமி என்பேன்.

அந்த இனிய கணப்பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.

காடு – ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வியாபித்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை பயம் தரும் அமைதி. குருவிகள் கூட எம்மைக்கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ? என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.

எங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வனத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். சிங்காரித்துப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.

சமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி நிர்வாகத் திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.

உணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு சாப்பாட்டுடன் நடை… நடை. தொலை தூரம் வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்து விடும். தொடுவானம் வரை தெரியும் நட்சத்திரங்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பணியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சுகனத்தாலும் தொடர்கின்றேன்.

கனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்க வேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை ஞாபகமூட்டும்.

கண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வரும்.

கல கல என பஜார் அடித்து சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.

கள்ளம் செய்து விட்டு அவர்முன் போகும்போது கிறிஸ்தவ பாதிரியாரை ஞாபகம் ஊட்டும் சோதியாக்கா… அதுதான் எங்கள் சோதியாக்கா.

பச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சுவாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. ~கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி…

காட்டில் சகல வேலைகள், முகாம் அமைத்தல், கொம்பாசில் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு சகல போராளிகளையும் விளக்கிக் கொண்டு, அவர்களது ஆலோசனைகளையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் நிர்வாகத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.

உழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ~நையிற்றிங் கேலான அவர் நோயால் அவதியுற்றபோது துடித்துப் போனோம்.

அந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. மரணச்சடங்கில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்து அழுதபடி அஞ்சலித்த காட்சி, நாம் நிமிர்ந்தோம்.

வளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.

சோதியாக்கா! நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் நிர்வாகம் செய்யும் நேர்த்தியைப் பாருங்கள்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.