லெப். கேணல் ஜோய்

In வீரத்தளபதிகள்

லெப். கேணல் ஜோய்

மட்டக்களப்பு – அம்பாறை பிராந்தியத் தளபதி
லெப். கேணல் ஜோய் / விசாலகன்
கணபதிப்பிள்ளை ரகுநாதன்
செங்கலடி, மட்டக்களப்பு

பிறப்பு:- 20.05.1956
வீரச்சாவு:- 30.11.1991

முடுகு… முடுகு…

ஆ… ஆ… கிறுகு… கிறுகு…

மெல்லிய உயரமாக இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக் கொண்டிருந்தான்.

‘ஏன்டா, கமல் இப்படிக் கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன்.

சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் மறுகா கோஸ்டி” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான்.

இது என்ன புது கோஸ்டி. வியப்பாக இருந்தது. அதில் உயரமாக மெல்லியவனாக இருந்தவனைப் பார்க்கிறேன்.

“அப்பன் இங்கே வா” அவனை அழைத்தேன்.

“நான் மட்டக்களப்பில இருந்து வந்தனான்” என்கிறான் அவன்.

எனக்கும் ஜோய்க்குமான ஆரம்ப அறிமுகம் இப்படித்தான் நிகழ்ந்தது.

எங்களுக்கு மணலாறு காடு மட்டும் புதிதல்ல, மட்டக்களப்பு தமிழும் புதியது தான்.

நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி என 70 மைல்கள் அகண்டு கிடக்கும் மட்டக்களப்பு.

உழவு, வெட்டு, விதைப்பு எல்லாம் ஒன்றாக நடக்கும். தேனும் வயலும் கொட்டிக் கிடக்கும் அழகான வளமான எம் நிலம்.

1988…….1989

எம்மைச் சுற்றிவர இந்தியப் படை.

நாம் உழுது உழுது விதைத்து அறுவடைக்கு ஆயத்தமான போது, அறுவடையை அழிக்க வந்த அயலவனை மிரட்டி விட்டு அபகரிக்க வந்த வேற்றவன்.

10 தமிழர்களுக்கு ஒரு இந்தியன். இந்திய முற்றுகைக்குள் புலிகளா? புலிகளின் முற்றுகைக்குள் இந்தியனா?

எம் மீதான முற்றுகை கண்முன் தெரிந்தது. அவன் மேலான எம் முற்றுகை தெரியாமல் நடந்தது. தடக்கித் தடக்கி அழிந்தான்.

நயினாமடு இந்தியப் படை முகாமுக்கு அருகே அவனது ஆட்டுப்பட்டி, ஒரு போராளி இரகசியமாக பட்டிக்கருகே சென்று ஆடுகளை “பா பா” என அழைக்கின்றான்.

ஒவ்வொரு ஆடாக, பட்டியிலிருந்த 29 ஆடுகளும் வெளியேறி வருகின்றன. ஆடுகளைச் சாய்த்த படி அவன் நடக்கின்றான்.

இந்திய இராணுவத்தில் ஒருவன் ஆடுகள் போவதைக் கண்டு விட்டுக் கத்தித் தொலைக்கிறான்.

ஆட்டை வந்து பிடிக்க அவனுக்குத் துணிவில்லை. வெளியேவர வேண்டுமானால் குறைந்தது 50 சிப்பாய்கள் துணை வேண்டும்.

ஆட்டைத்தேடி உலங்கு வானூர்தி வந்து ஆடு சாய்ப்பவனைத் தேடித் தேடி சுடுகின்றது.

அடுத்தநாள் இந்திய இராணுவத்தின் வோக்கி எண்ணில் அவனது ஆடு கத்தும் சத்தம் கேட்டு அவன் கத்திக்கொண்டிருந்தான்.

தனது ஆட்டையே காப்பாற்ற முடியாத இந்தியப் பெரும் படை தமிழீழ நாட்டுக்கு ஆசைப்பட்டது.

இப்படி அவனது முற்றுகைக்குள் நாமும், எமது முற்றுகைக்குள் அவனும் ஓடிப்படித்து விளையாடும் காலத்தில் தான் ஜோய் மணலாற்றிற்கு வந்தான்.

மணலாறு காடே குண்டு வீச்சால் அதிர்ந்து கொண்டிருந்தது.

“பொங்கலுக்கு இந்தியன் வெடி கொளுத்துகிறான்” பொங்கலுக்கான நிகழ்ச்சிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஜஸ்டின் என்னைப் பார்த்துக் கூறினான்.

“இரவு என்ன நிகழ்ச்சி” நான் கேட்கிறேன்.

“பாட்டு, டான்ஸ் இப்படிப் பல” ஜஸ்டின் அபிநயம் பிடித்துக் காட்டினான்.

பொங்கல்இ கிறிஸ்மஸ்இ போராளிகளின் நினைவு நாட்கள் எனச் சில நிகழ்ச்சிகள் காட்டில் நடக்கும்.

இரவு, ஏதோ ஒரு புது மொழியில் பாடி தனக்கேற்றாற் போல் தன் பெரிய உடம்பை ஒய்யாரமாய் வளைத்து, நெளித்து ஜஸ்டின் ஆடினான்.

அடுத்து மேளங்களான தகரங்கள் முழங்க “ஜோய் வழங்கும் பிறேக் நடனம்” அறிவிப்பு வருகிறது.

வளைந்து, நிமிர்ந்து, முறிந்து… என்ன உடம்படா, இப்படி வளைந்து முறிகின்றது.

“வடமோடி, தென்மோடி இவன் பிறந்த இடமோடி, இவன் கூத்து என்ன கூத்தோடி” நான் என்னுள் முணுமுணுத்தபடி அவன் நடனத்தை ரசித்துச் சுவைக்கிறேன்”

ஆர்.பி.ஜி தோளில் வைத்தபடி ஜோய் நிமிர்ந்து நின்றால், உடம்பில் வளைவிருக்காது.

தமிழீழ – சிறீலங்காப் போர் மீண்டும், தொடங்கியபின், யாழ். கோட்டையைக் கைப்பற்றும் முயற்சியில் ஜோய் காயமடைந்தான்.

ஒரு கால் சிறிது காலம் உணர்வு குன்றி இருந்தது.

மட்டக்களப்பு மண்ணுக்கே உரிய கலை இரசனையும்இ இலகுவாகப் பழகும் பண்பும், சூதுவாதற்ற பேச்சுக்களும் ஜோயை விட்டுப் பிரிந்தது கிடையாது.

மட்டக்களப்பை மேலிருந்து பார்த்தால் கடற்கரையை அண்டிய பகுதிகள் பெரும்வெளியாக இருக்கும்.

கடலுக்குச் சற்று மேலே வந்து நிற்கும் நீர் மூழ்கிக் கப்பல் போல, சுற்றிவர இருக்கும் ஏரியும் இடையிடையே தெரியும் நிலங்களும், வீடுகளும் கரந்தடிப் போராட்டத்திற்கு கடினமான பகுதி தான்.

“70ல் வந்த புயலோடு மரங்கள் எல்லாம் அழிந்து போயிற்று. அடுத்து வந்த இனவாதப் புயலோடு எல்லாமே போயிற்று” என்றார் ஒருவர்.

ஓவ்வொரு வீட்டிலும் சோகக் கதைகள் இருக்கும். சிங்கள, முஸ்லீம் காடையர்களினதும், சிறீலங்கா இராணுவத்தினதும் கொலைத் தடயங்கள் பதிந்திருக்கும்.

இந்தியப் படையுடனான போராட்ட காலத்தில் தமிழீழத்தின் மற்றைய பகுதிகள் போலவே, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அழிவுகள் தொடர்ந்தது.

இந்தியப் படையுடனான போராட்ட காலத்தில் தமிழீழத்தின் மற்றைய பகுதிகள் போலவே, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அழிவுகள் தொடர்ந்தது.

மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்த போதும் “எங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடி மிகுந்த துன்பத்திற்கு நடுவில் போராடுகின்றோம்” என ஒரு வார்த்தை மட்டக்களப்பு, அம்பாறை விசேட தளபதி கருணாவிடம் இருந்து வந்ததில்லை.

“எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்றே எப்போதும் பதில் வரும்.

தலைவர் வளர்த்த பிள்ளை அவன் தளராது நின்றான். அவன் பாசறை தான் ஜோய் தவழ்ந்த வீடு.

அன்று தலைவரின் பாசறையான மணலாறுதான் அவன் வளர்ந்த வீடு.

இந்திய கூர்காப் படைகள் குறித்து பல வீரக்கதைகள் உண்டு.

ஒருமுறை ஒரு ஆங்கிலச் சிப்பாய் ஒரு கூர்க்காவைக் குறிபார்த்து “உன்னைச் சுடுவேன்” என்றான்.

அதற்கு கூர்க்கா அச்சிப்பாயைப் பார்த்து “முதலில் தலையை ஆட்டு பின் சுடு” என்றானாம்.

சிப்பாய் தலையை ஆட்ட தலை விழுந்து விட்டதாம்.

ஆங்கிலேயன் ‘சுடப்போகிறேன்’ என்று சொல்லும் போதே கூர்க்கா தனது கத்தியை அவனது கழுத்தைக் குறிபார்த்து வீசி விட்டானாம்.

அவ்வளவு விரைவு, கத்தி கூரானது. அதனால் வெட்டப்பட்ட தலை விழவில்லை. தலையை ஆட்டிய போது தலை விழுந்து விட்டதாம்.

இப்படி வீரக்கதை பேசும் கூர்க்காப்படையொன்று 02.03.1989 அன்று கேணல் பக்சியின் தலைமையில் மணலாற்றுக்குள் நுழைந்தது.

கமல், அரி, குகேந்திரன், சேவியர் இவர்களுடன் ஜோயும் அங்கு நின்றான்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தச் சண்டையில் கூர்க்காப்படை பக்சியின் உடலையும் விட்டு விட்டு ஒடியது. ஓடும் போது தமது கத்திகளை மண்ணில் புதைத்து புதைத்து ஓடியது.

கூர்க்காப் படை தமது கத்திகளை புதைத்துவிட்டு ஓடிய மணலாற்றில் ஜோயின் போரியல் கல்வி தொடர்ந்தது.

இவன் போன்றோரின் போரியல் கல்வியே இந்தியப் படைக்குப் போராட்டப் படிப்பினையாகியது.

தமிழீழ – சிறீலங்காப் போர் மீண்டும் தொடங்கிய போது சிறீலங்காப்படை, முஸ்லிம் காடையர், தேச விரோதக் கும்பல் இவற்றால் மட்டக்களப்பு, அம்பாறை தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

வீடுகள் எரிந்தன. பாலியல் வன்முறைகள் தொடர்ந்தன. மதவுகளுக்குக் கீழ், காட்டு மரங்களுக்குக் கீழ் தமிழ் மக்களின் வாழ்க்கை தொடர்ந்தது.

“தென் தமிழீழத்தில் புலிகளா? அழிந்து விட்டார்கள். என சிறீலங்கா கொக்கரித்தது. வீட்டில் ரகுநாதன் எனவும் இயக்கத்தில் ஜோய் எனவும் இப்போது விசாலகன் ஆகிவிட்ட ஜோய் மீண்டும் மட்டக்களப்பில் காலடி எடுத்து வைத்தான்.

மிகக் குறுகிய காலத்தில் அவன் ஆற்றல் கண்ட மட்டக்களப்பு, அம்பாறை விசேட தளபதி அவனை மட்டக்களப்பு அம்பாறை தளபதி ஆக்கினார்.

புலிகளா? எங்கே? எனக் கேட்டு கொக்கரித்த சிறீலங்காப் படை “ஐயோ எல்லா இடங்களிலும் மீண்டும் புலிகள்” என அலற அலற தாக்குதல்கள் தொடர்ந்தன.

தொடர்ந்த தாக்குதல்களில் ஒன்று 25.10.1991 கொக்கட்டிச்சோலை இராணுவ முகாமில் இருந்து மண்முனைத்துறைக்கு சென்ற இராணுவத்தினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்.

விசாலகன் (ஜோய்) தலைமையில் நடந்த இத்தாக்குதலில் எதிர்பார்த்தபடி தாக்குதல் வலயத்தில் சிறீலங்காப்படை வராததால் தான்னுதல் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

15 நிமிட தாக்குதலில் பல சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டனர் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

“விடுதலைப் புலிகள் இல்லை என்கிறீர்கள், அக்டோபர் மாதம் மட்டும் நாம் எதிரியிடம் இருந்து பறித்த ஆயுதங்கள் ஒன்றா இரண்டா” என பெருமையோடு தளபதி ஓர் செய்தியாளரை கேட்டார்.

டிசம்பர் 20 வெளிவந்த புரண்ட்லைன் (frontline) சஞ்சிகையில் விசாலகனின் நேர்காணல் வந்திருந்தது.

“எங்களுக்கு மக்கள் ஆதரவில்லை என்கிறார்கள் இவ்வளவு சிங்களப் படை முகாம்களுக்கு நடுவில், படகில், உங்களை எங்களிடம் யார் அழைத்து வந்தார்கள்? ஆதரவில்லாமல் இது நடக்குமா?”

“முல்லைத்தீவில், அம்பாறையில் கைவிடப்பட்ட முகாம்களைத்தான் சிறீலங்காப் படை கைப்பற்றியது”

“மணலாற்றில் மைக்கல் முகாமுக்கு வந்த சிறீலங்காப் படை பின் வாங்கிய பின் அங்கு சென்ற நாம் கண்ணிவெடியில் சிக்கிய 100 காலணிகளைக் கண்டோம். எவ்வளவு இழப்பை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்”

“மட்டக்களப்பு நகரத்துள் நாங்கள் இல்லை என்பது பொய். நாம் தேவைக்கேற்ப, சூழலுக்கேற்ப எங்கும் செல்வோம்”

“நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் எனச் சொல்கிறார்கள். அக்டோபர் மாதம் மட்டும் 51 ஆயுதங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியுள்ளோம். இது நாங்கள் தோற்கடிக்கப்பட்டதையா காட்டுகிறது?”

“நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை வென்று கொண்டு தான் இருக்கிறோம்” என மிக உறுதியோடும், பெருமையோடும் அவன் நேர்காணல் தொடர்கின்றது.

27.11.1991, 3000க்கும் மேற்பட்ட சிறீலங்காப் படையினர் “வட்டேறவும்” என்ற பெயரில் சுற்றி வளைப்பில் இறங்கினர்.

இந்த இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக சிறப்புத் தளபதியின் வேண்டுகோளுக்கமைய விசாலகன் தாக்குதல் ஒள்றைத் திட்டமிட்டான்

பன்குடாவெளி இராணுவ முகாமிலிருந்தும், முதிரையடி ஏத்தம் இராணுவ முகாமிலிருந்தும் உணவுப் பொருட்களை எடுக்க செங்கலடி நோக்கி வரும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தத் தீர்மானித்தான்.

தாக்குதல் மையப்பகுதியில் உள்ள முக்கிய வீதியில் 25 மீற்றர் நீளமுள்ள கறுத்தப்பாலமும், அவ்வலயத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் 15 மீற்றர் நீளமுள்ள இன்னுமொரு பாலமும் இருந்தது.

29.11.1991 காலை 8.40 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. 7 சிறீலங்காப்படையினர் கொல்லப்பட்டனர். மற்றையோர் தப்பி ஓடினார்கள்.

தாக்குதல் வலயத்தில் நின்ற விசாலகனிடம் இருந்து கட்டளைகள் பிறந்து கொண்டிருந்தன.

தாக்குதலில் காயமடைந்து காட்டுக்குள் ஓடிமறைந்த சிறீலங்கா இராணுவ வீரன் சுட்ட ரவை ஒன்று விசாலகனின் தொண்டைக்கு கீழ் தாக்குகின்றது.

படுகாயமடைந்த ஜோய் 30.11.1991 அன்று காலை 5.30 மணிக்கு வீரச்சாவைச் சந்தித்துக் கொண்டான்.

இந்தியப் படை வெளியேறிய சிறிது காலத்தில் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் செல்ல இருந்த தேனிசை செல்லப்பா குழுவினருக்காக திரு.காசி ஆனந்தன் அவர்கள் தான் முன்பு எழுதிய

மீன் மகள் பாடுகின்றாள்
வாவி மகள் ஆடுகின்றாள்
மட்டு நகர் அழகான மேடையம்மா – இங்கே
எட்டுத் திசையும் கலையின் வாடையம்மா

என்ற பாடலுக்கு புதிதாக கடைசியில் நாலு வரிகளை எழுதினார். அதன் கடைசி இரண்டு வரிகள்

போர்க்கலையில் வல்ல புலிக்கூட்டமும் உண்டு
பகையைப் பொடிப் பொடியாக்கும் போராட்டமும் உண்டு

. முடுகு – முன்னேறு
. கிறுகு – திரும்பு
. மறுகா – பின்புஇ பிறகு
(இவை இன்றும் மட்டக்களப்பு பகுதியில் வழக்கிலிருக்கும் பழந்தமிழ் சொற்களாகும்)

நினைவுப்பகிர்வு:
யோகரத்தினம் யோகி
வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.