காலம் எழுதிகளின் நினைவுக்கு என்ன கைமாறு செய்வோம்…?

In வரலாற்று சுவடுகள்

காலம் எழுதிகளின் நினைவுக்கு என்ன கைமாறு செய்வோம்…?

கார்த்திகை 27 – மாவீரர் நாள் பிள்ளைகள் துயிலும் கல்லறைகளுக்கு நெய்விளக்கேற்றும் திருநாள். உள்ளே உடல் வியர்த்துக் கிடப்பவரை மனதால் வெளியே தூக்கி மெய் கழுவி வாசம் பூசி முத்தம் பொழிந்து மீண்டும் குழிவைப்பதான பாவனையில் சுற்றம் சூழும் பெருநாள். தெய்வங்களுக்குப் படைப்பதில்லையே தவிர வரம் கேட்டு வணங்கும் நாள். நீண்ட விதைவயலின் வரிசையில் கூடி நிற்கும் சுற்றத்துக்கு அவர்கள் குரல்கேட்கும் தினம்.

பத்துமாதம் சுமந்து பகலிரவாய்க் கண்விழித்து அமுத முலைகொடுத்து தூக்கிச் சுமந்தவர் முன்னே அவர்கள் விழிதிறக்கும் நாள். பெற்றவளின் முன்னே பெரிதாய் நெடிதுயர்ந்து அம்மா என அழைப்பார்கள். அந்த ஒற்றைச்சொல் போதுமே சுமந்தவள் மெழுகாய் உருக. விதைத்த வயல்கள் பரந்து கிடக்கின்றன தாயகத்தின் திசையெங்கும். துயிலுமில்ல வாசல் கடக்கும் ஒவ்வொருதடவையும் தண்டனையற்ற குற்றவாளிகள் போலத்தான் கடந்து போகின்றோம். “உங்களை நம்பியே உள்ளே கிடக்கின்றோம் எங்கள் நெருப்பில் குளிர்காயாதீர்” காற்றில் வருகிறது கல்லறைக்குரல்.

துயிலுமில்லம் நுழையும் போதில் நீதிமன்றில் நிற்பது போலத் துடிக்கிறது மனம். விட்டபணி தொடராத குற்றவுணர்வில் வேர் காய்ந்து விடுகிறது உள்ளே. மாவீரர்கள் | அவர்களை எங்கிருந்து எழுதத்தொடங்குவது? எழுதத் தொடங்கினாலும் பேனா உருகிக் கரைந்து விடுகிறதே. ஈழத்தமிழர் நிமிர்வுக்கு அவர்கள் தானே வீரியம் தந்தனர். மிதித்தேறிப் போகலாமென்றிருந்த இனத்துக்கு முகமும், முகவரியும் தந்தனர். பிள்ளைப் பூச்சிகளாக எடுப்பார்கைப் பிள்ளைகளாக அழைத்தவர் பின்னே ஓடிய இனத்துக்கு நிமிர்வும், திமிர்வும் தந்தனர். காலம் எழுதிகளின் நினைவுக்கு என்ன கைமாறு செய்தோம் நாம்?

ஒருநாள் கூடி
பூ வைத்து நெய்விட்டு விளக்கேற்றி
அந்தப் பாடலையும்பாடி நெக்குருதல் மட்டும் போதுமானதா? சின்னப் பருவத்தின் கனவைத் துறந்து
இளமைக் காலத்தின் சிறகை அரிந்து தங்களை ஒறுத்துப்போன தேவைகளுக்கு என்ன நிவேதனம் படைத்தோம் நாம்?

– அவர்கள் கனவு மெய்ப்படாதவரை எந்தக் கிரிகையாலும் அவர்கள் ஆறமாட்டார்கள்.
விடுதலை அவர்களின் மூச்சாயிருந்தது
போராட்டம் அவர்களின் மூச்சாயிருந்தது வெறும் பேச்சிற் கழியவில்லை அவர் பொழுது.

– உலகம் ஓடிவரும் ஐ.நா-சபை தேடிவரும்
அகாசி வருவார் ஜோஜ் புஸ் தருவாரென நம்பியிருக்கவில்லை அவர்கள்.
களத்தில் நின்றனர் களத்தில் உண்டனர்
களத்தில் உறங்கினர்
களத்தில் உயிரையும் விட்டனர். அவர்களுக்கு எந்த மயக்கமும் இருக்கவில்லை
முடிதரித்த தலையராய் உலவினர் உயிர் கொடுத்த அழகராய் உறங்கினர்.

எந்தச் சுமையுமற்ற மனிதராய் தலைவனை மட்டும் நம்பினர். தலைவன் இடியமாட்டான் எனும் நம்பிக்கையில்
உறுதியுடன் நின்றனர் இறுதிவரையும். கார்த்திகைப் பூக்களின் திருநாள் வருகிறது
பிள்ளைகளிடம் போகும் பொழுதில் என்ன எடுத்துச்செல்வோம் இம்முறை? பாடலுடன் அவர்கள் கண்திறக்கும்போது கொடுக்க என்ன இருக்கிறது எம்மிடம்?

வெற்றி மட்டும்தான் வேண்டியதில்லை பின்னடைவையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எங்கள் கைகளில் இருக்கிறது அனுராதபுரம்
கொடுக்க மகிழ்ச்சியுடன் எடுப்பார்கள். எனினும் எம்மில் நெருப்பெரியவேண்டும் உண்மை மனிதராய் ஒளிர வேண்டும்
-மயக்கமில்லாத மனமும் வழிதவறாத நிலையும் வேண்டும்.

விடுதலையில் வழுவாத வீரியமும் தன்னையே கொடுக்கும் சக்தியும் வேண்டும்.
தலைவனை நம்பிய பயணமும் தமிழீழம் என்ற உறுதியும் வேண்டும்.
இவற்றைச் சுமந்தால் ஏற்பார்கள் இல்லையேல் உள்ளே சிரிப்பார்கள்.
சுவாசிக்கும்போது உள்ளிழுப்பது சுதந்திரத்தின் கனவுகளாக இருக்கவேண்டும்.

– மாவீரர் நாள் மயக்கமில்லாதவரின் மானப்பெருவிழா எத்தனை துயர்வரினும் இடியமாட்டோமென கல்லறைகளிற் சத்தியம் செய்யும் நாள். நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர்
கண்களிலே பூத்ததுபோற் பூத்துப் புன்னகைத்தீர்
எங்களுடன் பேசிக்களித்தீர் – போய்விட்டர்
தாயகத்தில் வீசிவரும் காற்றில் விரித்த சிறகெடுத்துத் தூரப்பறந்துவிட்ட துணிவுப்பறவைகளே! ஈர விழியிங்கு எமக்கின்னும் காயவில்லை செங்குருதி பாய்ந்து திசை சிவந்து

எதிரிகளின் தங்ககங்கள் யாவும் தணலிற் கருக்கியபின் வென்ற களிப்பில் வீடுவந்தோம்
அன்றிருந்து இன்றுவரை உம்மை எவ்விடத்தும் காணலையே. கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித் தூங்குவதாய்
சொல்லுகிறார் உங்கள் தேகம் தூங்காதே. மொட்டவிழும் பூவினிலே முகம் தெரியும்

கல்லறைக்கு கிட்டவர உங்கள் கண்தெரியும்
வீசுகின்ற காற்றினிலும் மூச்சுக் கலந்து
எம்மை உயிர்ப்பிக்கும்.

– வியாசன் –
விடுதலைப்புலிகள் பத்திரிக்கையில் இருந்து ஈழப்பறவைகள் இணையம்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.