தீச்சுவாலை முறியடிப்புச் சமர்

In வெற்றி தாக்குதல்கள்

தீச்சுவாலை முறியடிப்புச் சமர்

யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள்.

புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் யாழ் இராணுவத்தை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் எல்லோருக்கும் கவலை. நாங்களும் எப்படா யாழ். கைப்பற்றப்படும் எண்டு பாத்துக்கொண்டு இருந்தம். ஆனா அப்பிடி இப்பிடியெண்டு இழுபட்டு கடசியா புலிகளின் அணிகள் மீதே தாக்குதல் தொடங்கி விட்டது. இந்த நிலையில் டிசெம்பர் 24 ஆம் திகதி 2000 ஆம் ஆண்டு புலிகளால் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அரசு அதை ஏற்காமல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியது. புலிகளும் அப்பகுதிகளில் இருந்து இழப்புக்களுடன் பின்வாங்கி விட்டார்கள்.

அதன் பிறகும் ஆனையிறவு நோக்கி தை மாதம் நடுப்பகுதியில் ஓர் இராணுவநகர்வு நடத்தப்பட்டு முகமாலையில் இப்போது காவலரண்கள் இருக்கும் இடம்வரை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. ஆனால் புலிகள் மாதா மாதம் யுத்த நிறுத்தத்தை நீடித்து அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இந்தநிலையில் ஆனையிறவு நோக்கி பெரியளவில் ஒரு முன்னேற்ற முயற்சிக்கு இராணுவம் தன்னைத் தயார்ப்படுத்தியது. 4 மாதத் தொடர்ச்சியான யுத்தநிறுத்த அறிவிப்புக்குப் பின் ஏப்ரல் 24 உடன் தாம் யுத்த நிறுத்தத்தை முடித்துக் கொள்வதாகப் புலிகள் அறிவித்தார்கள். இந்த 4 மாத காலப்பகுதியிலும் புலிகள் நூற்றுக்கணக்கான போராளிகளை இழந்திருந்தார்கள்.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஏப்ரல் 25 அதிகாலை ஆனையிறவு நோக்கி “அக்கினி கீல” அதாவது ‘தீச்சுவாலை’ என்ற பெயரில் அரச படை தனது நடவடிக்கையைத் தொடங்கியது. மிக ஆழமான திட்டம். ஏற்கெனவே வெற்றி உறுதி என்று தீர்மானிக்கப்பட்ட திட்டம். தென்னிலங்கைப் பத்திரிகையாளர்களை பலாலிக்குக் கூட்டி வந்திருந்தார்கள் தமது வெற்றியை உடனுக்குடன் அறிவிக்க. இராணுவ வல்லுநர்கள் பலர் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாழ இருபதினாயிரம் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்ட நடவடிக்கை. 3 நாட்களில் ஆனையிறவைக் கைப்பற்றல் என்பதுதான் அத்திட்டத்தின் குறிக்கோள். நடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்தபகுதி வெறும் 6 கி.மீற்றர் அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. அதற்குள்தான் அவ்வளவு சண்டையும். முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர்கொண்ட அந்தச்சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கி.மீற்றர் வரைகூட இராணுவம் முன்னேறியது. ஆனால் ஒரேநேரத்தில் அவர்களின் முழுக்காவலரணையும் படையினரால் கைப்பற்ற முடியாமற் போனது.

புலிகளின் பீரங்கிச்சூட்டு வலிமை அரசபடைக்கும் வெளியுலகுக்கும் – ஏன் தமிழ் மக்களுக்கும்கூட தெரிந்தது அச்சண்டையில்தான். 3 நாட் சண்டையிலும் களத்தற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. சிறிலங்கா வான்படையின் அட்டகாசம் அந்த 3 நாட்களிலும் உச்சமாக இருந்தது. பகல் நேரத்தில், எந்தநேரமும் வானில் ஆகக்குறைந்தது 2 போர் விமானங்கள் வட்டமிட்டபடி இருக்கும். அப்போது கட்டுநாயக்கா மீதான தாக்குதல் நடத்தப்படவில்லையாதலால் வான்படை வலிமை நன்றாகவே இருந்தது. விமானங்கள் மாறிமாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளைவிட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீர்ங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல்பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன. காயக்காரரை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தாக்கவென்றே ஆனையிறவு வெட்டையில் சுற்றிக்கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியது. வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொதுமக்கள்தான். வாகனங்களென்றால் கண்காட்சிக்குக் கூட வைக்க முடியாதவை. இடையில் நின்று போனால் தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ண வேண்டும். அவற்றில் காயக்காரரையும் போராளிகளையும் ஏற்றி இறக்கியவர்கள். ஆனையிறவு வெட்டையில் விமானங்களின் கலைப்புக்களுக்கும் குண்டு வீச்சுக்களுக்கும் ஈடுகொடுத்து காரியத்தைச் சரியாக செய்து முடித்தவர்கள். இதற்கிடையில் வான்படை பிரதான பாதைகளைக் குண்டுபோட்டுத் தடை செய்வதென்று முடிவெடுத்தது. அது வீசிய குண்டுகளில் ஒன்று மட்டுமே சரியாகப் பாதையில் விழுந்து பாதையைப் பாவிக்க முடியாதபடி தடை செய்தது. எனினும் பொதுமக்களின் உதவியுடன் விரைவிலேயே அது சீரமைக்கப்பட்டு பழையபடி வழங்கல்கள் நடந்தன.

இராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கிப் பார்த்தது. அவர்களால் புதிதாக எதையும் செய்ய முடியவில்லை. புலிகள் விடுவதில்லையென்பதில் உறுதியாக இருந்தார்கள். பலாலியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு இராணுவத்தால் தமது வெற்றியைக் காட்ட முடியவில்லை. மாறாக தமது இழப்புக்களையே காட்ட முடிந்தது. ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் சோர்ந்து போனது. இந்த நேரத்தில் 3 நாட்கள் தொடர்ச்சியான பறப்புக்களால் விமானப் படையும் செயற்பட முடியாநிலைக்கு வந்துவிட்டது. இந்த 3 நாட்களிலும் ஆகக் குறைந்தது 80 சோடிப் பறப்புக்களை வான்படை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஆகக் குறைந்தது 250 கி.கி. கொண்ட 6 குண்டுகள் வீசப்பட்டால்…. இத்தோடு காயக்காரரைச் சமாளிப்பதில் பெரும் பிரச்சனையேற்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பில் இரத்ததான அறிவித்தல்களைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

3 நாள் முழுமையான சண்டையின் பின் இராணுவம் விட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த முறியடிப்புக்கு புலிகளின் கண்ணிவெடிகள் முக்கிய காரணம். அதை அரச படைத்தளபதிகளே சிலாகித்துச் சொல்லியிருந்தனர். இராணுவம் பின்வாங்கிய பின் அந்த இடத்திற்குச் சென்று பாரத்தேன். பூரணமாக இராணுவ உடல்கள் அகற்றப்படாத நிலையில் பாரத்தேன். அனுமதியில்லாவிட்டாலும் எப்படியோ எல்லைப் படை என்ற பெயரில் போய்ப் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். அதுவும் லெப்.கேணல். சுதந்திரா என்ற பெண் தளபதியின் காப்பரணும் அதனைச் சூழக்கிடந்த ஏறத்தாழ இருபது இராணுவ உடல்களும்.

தாம் முற்றுமுழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டோம் என்று அறிந்தும் நிதானமாக, தீரமாகப் போரிட்டு இறுதியில் வீரச்சாவடைந்த அப்பெண்போராளிகளின் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. பின்னொரு நாள் தளபதி கேணல் பால்ராஜ் சொன்னார்: அந்தச் சமரின் போது களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகளே. அவர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.

அச்சமர்தான் புலிகளை இனி யுத்தத்தில் தோற்கடிக்க முடியாதென்பதை அரசுக்கும் குறிப்பாக வெளியுலகுக்கும் உணர்த்தியது. பின்னாளில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முதன்மையான காரணமாக அமைந்தவை இரு தாக்குதல்கள். ஒன்று தீச்சுவாலை எதிர்ப்புச் சமர், மற்றயது கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்புத் தாக்குதல். இன்று தீச்சுவாலை முறியயடிப்புச் சமர் ஆரம்பித்ததன் பதின்மூன்றாம் ஆண்டு நிறைவு. இந்த நேரத்தில் அம்முறியடிப்புச் சமரில் வீரகாவியமான மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.