கேணல் ரமணன்…!

In வீரத்தளபதிகள்

கேணல் ரமணன்…!

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் தெரிவித்த கருத்து மீள் பதிவு.

ரமணனை எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரியும். 1987 இன் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முன்னைய காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு அண்மையாக உள்ள அம்பிலாந்துறைக் கிராமத்தில் சிறிலங்கா படையினருடைய நகர்வு ஒன்றைத் தடுத்து நடத்திய சண்டை ஒன்றிலேயே எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகச் செயற்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு அம்பாறை காடு, மேடுகள், வயல்வெளிகள் எல்லாவற்றிலும் நாம் நீண்ட பயணங்களை நீண்ட நாள்கள் ஒன்றாகச் செய்திருந்தோம். பல்வேறு நடவடிக்கைகளிலே அவர் சேர்ந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகவும் அதன் பின்னர் றீகனின் அணியிலே ஒரு பகுதிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

அவரது குடும்பத்தினரதும் போராட்டப் பங்களிப்புக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவரது சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டிலே ஒருவராக இணைக்க நான் விரும்பியிருந்தேன். ஆனாலும், மாவட்டத்தின் தேவை கருதி அங்கே ஒரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக அவர் தனித்துவமாகச் செயற்பட்டிருந்தார்.

அவர் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த காலத்திலே வெற்றிகரமான பல நடவடிக்கைகளைச் செய்திருந்தார். அவற்றில் நான் நேரடியாக தொடர்புபட்டிருக்காத போதிலும் கூட அவருடைய நடவடிக்கைகள் எனக்கு வியப்பையும், பெருமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தத்தக்க வெற்றிகளை அவர் பெற்றிருந்தார்.

குறிப்பாகச் சொல்வதானால், சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரி சகபந்து என்பவர் மீது ஒரு வெற்றிகரமான கரும்புலி நடவடிக்கையையும், அதனைத் தொடர்ந்து இன்று கருணா போல் அன்று செயற்பட்ட ராசிக் என்ற துரோகி மீதான வெற்றிகரமான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளையும் அவரது புலனாய்வுச் செயற்திறன் சார்ந்த வெற்றிகளாக மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகின.

கருணாவின் துரோகம் வெளிப்பட்ட வேளையிலே ரமணன் அதிர்ச்சியுற்றிருந்தார். இவ்வாறு துரோகத்திற்கான செயற்பாட்டை மனதிலே வைத்துக் கொண்டு இந்த மனிதரால் எவ்வளவு தூரம் இவ்வாறு நடிக்க முடிந்தது என அவர் ஆச்சரியப்பட்டிருக்கின்றார். அந்தத் துரோகத்தை முறியடிப்பதிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மிக ஆபத்தான பணிகளை பொறுப்பேற்றுக் களத்திலே இறங்கியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும்.

தமிழீழத் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த மாறாத பற்றுறுதியும் விடுதலை என்பதில் அவருக்கிருந்த பூரணமான தெளிவும் தான் அவ்வாறான தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கும் அவருக்கு உறுதுணையாக இருந்ததென்றால் மிகையில்லை என்றார் பொட்டு அம்மான்.

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன்

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன் ஆகிய மாவீரரின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர.

பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணிபோல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும்போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்துவைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ.கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம்.

படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப் பாடசாலை உருவாவதற்கு அடித்தளமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு விளையாட்டுத்திடலும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் ஆய்வு கூடமும் அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள்.

அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப்போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பள்ளியை ஒரு உழுவூர்தி நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையாவிட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழுவூர்தியை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் நிறைவு தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக் குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு.

உழுவூர்தியின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்துகொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் இயல்பான பொது உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதேபோல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்துகொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழுவூர்தியைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல.

தலை தெறிக்கத் தப்பி ஓடியோர்போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்துகிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன்.

அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் அகவை அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது.

கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல ஆண்டுகளை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாகவிருந்து தமிழீழக் காவற்றுறையில் பணியாற்றுபவர்.

போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் எதிர்கொண்ட துயரங்களும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்துகொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது.

இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டி யவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு.

நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல் களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப் பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்தி ரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று,” என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப் புக் காலத்தில் தனித்துவமான திட்டங்களைத் தீட்டி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்திய ரமணன் தம்பிலுவில் துரோகிகளின் முகாம் தகர்ப் பில் ஒரு பகுதித் தலைமையை ஏற்றுச் சமர் செய்தவர். அந்தச் சமரில் விழுப்புண்ணடைந்தவர். அதன் பின், பூநகரித் தவளைச் சமரிலும், ஆனையிறவுப் பீரங்கித் தளத்தின் மீதான தாக்குதலிலும் அணித் தலைமைப் பங்கேற்றுப் படை நடத்தியவர். ஜயசிக்குரு விஞ்ஞானகுளச் சமரின்போது விழுப்புண்ணடைந்தார்.

கேணல் ரமணனின் போராட்ட வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தே அவரோடு நெருக்கமாகப் பழகியவரும் பல சமர்க்களங்களை அவரோடு பகிர்ந்துகொண்டவருமான கேணல் ரமேஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “ஒரு சமரிலே ரமணனின் சம்பந்தம் இருப்பதைப் போராளிகள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கையும் சிறிலங்கா படையினர் அறியும் போது அவர்களுக்குப் பயமும் ஏற்படு வதுண்டு. அந்தளவிற்கு ரமணனின் திட்ட மிடல்கள் புகழ்பெற்றவையாக இருந்தன.” என்றார். படைத்துறைச் செயற்பாடுகளைப் புலனாய்வுத் தன்மையோடு நகர்த்துவது ரமணனின் தனித்துவம்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம். துரோகி கருணா எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நீசத்தனத்தில் இறங்கியபோது கொதித்தெழுந்த உள்ளங்களில் ரமணன் முக்கியமானவர். அவமானத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் எமது மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் பணியில் மிகப் பழுவான பணியொன்றை விரும்பி ஏற்கிறார் ரமணன். மிகச் சில போராளிகளுடன் மட்டக்களப்புப் பகுதியைப் பின்புறமாக அண்மித்து உள் நுளைகிறார். ரமணன் வந்துவிட்ட செய்தி விடுதலையை விரும்பிய மக்களுக்குத் தேனாக, துரோகி கருணாவிற்கோ இடியாகக் கேட்கிறது. ஏற்கனவே வாகரையை இழந்துவிட்ட கருணா இப்போது மாவடி முன்மாரியையும் இழந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். இந்த நேரத்தில் ரமணன் தொடுத்த தந்திரோபாயத் தாக்குதலால் நிலை குலைந்துபோய் தனது கையாட்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கருணா தப்பியோட முயற்சிக்கிறான். முதல் அணியாக குடும்பிமலைப் பிரதேசத்திற்குள் நுழைந்து கருணாவினால் கடைசி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட நீலனின் வித்துடலை மீட்ட அணி ரமணனுடையது.

அதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வினரும் ஒட்டுக்குழுக்களும் செய்த பெரும்பாலான சதிகளை முறியடித்து மாவடி முன்மாரிப் கோட்டத்தின் காவலனாகவும் மட்டக்களப்பின் துணைத் தளபதியாகவும் இருந்த கேணல் ரமணன் வவுணதீவிலுள்ள போராளிகளின் காவலரண் களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது எதிரியின் சதிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைகிறார்.

மண்ணின் மணத்தோடும் அதற்கேயுரிய இயல்புகளோடும் சீற்றத்தோடும் வளர்ந்த ரமணன் அந்த மண்ணின் தனிச் சிறப்பான கலைகளிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கியவர். பூநகரித் தகர்ப்பின் பின் எழுதுமட்டுவாள் ஜெயந்தன் முகாமில் அவர் எலும்புக்கூட்டு உடையணிந்து நடனமாடியதைப் பார்த்தவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். தளங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் பாடியதோடு மட்டுமல்லாது தான் கற்றதும், எதிரியை மறைந்திருந்து சுட்டதுமான பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஈகைச்சுடர் திலீபன் நினைவு நிகழ்வின்போது தனது உற்றவரும் பெற்றவரும் பார்த்திருக்க தலைவனைப் பற்றிய பாடலைப் பாடியதும் அனைவரது கண் முன்னும் அகலாது நிற்கும். கலைகளோடு மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் நேரே பங்கெடுத்து போராளிகளுடன் விளையாடி தளத்தை உற்சாகமாக வைத்திருந்த நாட்களும் பதிவுகளுக்குரியவை.

சுனாமியின் பின்னான நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டபோது, எதிரியால் இலக்குவைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மக்களோடு நின்றதும் நினைவழியா நிகழ்வுகள். பன்சேனைக் கிராமத்தில் திலீபன் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவரின் காத்திரமான பங்களிப்பு அந்தக் கட்டிடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் கண்முன் ஆடும்.

பழுகாமமும் அதற்குத் தலைப்பாகை கட்டி நிற்கும் ஒட்டிச் சதுப்பு நிலமும் ரமணனுடைய நினைவுகளைத் தன் ஆழங்களில் தாங்கி நிற்கின்றன. கண்ணாக் காடுகளின் சலசலப்பிலும் கொக்குப் பீச்சல் திடலில் ஓய்வு கொள்ளும் பறவையினங்களின் பாட்டிலும் ரமணனின் பெயர் நிச்சயம் சொல்லப்படும். தாயகப் பயணப் பாதையில் விழுமுன்னமே முளை விட்ட விருட்சமாகத் தனது தனித்துவமான போர் உத்திகளைத் தந்து சென்ற ரமணன் என்றும் அந்த உத்திகளின் வடிவத்திலும் நினைவுகளின் ஆழத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் 2006

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.