பிரிகேடியர் ஆதவன் கடாபி

In வீரத்தளபதிகள்

பிரிகேடியர் ஆதவன் கடாபி

பிரிகேடியர் ஆதவன் (கடாபி) வீர வரலாறு…

ஆனந்தபுர சமர், மாவீரர்களின் வீர வரலாறு

யாழ் மாவட்டம் வடமராட்சிப் பகுதியில் கொற்றாவத்தை, வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1985 – 86 காலப்பகுதியில் இணைந்து கொண்டு இந்தியாவில் பயிற்சி பெற்றவர். விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுடும் பயிற்சிக்காக இந்திய இராணுவத்தால் தெரிவு செய்யப்பட்ட பத்து விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் ஒருவர். இவரது குறி பார்த்து சுடும் திறமையைக் கண்டு கொண்ட‌ லெப்.கேணல் பொன்னம்மான் தலைவருக்கு இவர் பற்றிச் சொல்லி அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து அவரது மெய்ப்பாதுகாவலர் குழுவில் ஒருவராக சிறப்பாக பணியாற்றியவர். இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் தலைவர் அவர்கள் சுதுமலை அம்மன் கோயில் முன்றலில் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரையின்போது தலைவரின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக பணியாற்றினார்.

சாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார்? அல்லது எப்படி உருவாக்கப்பட்டார்? தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.

வாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார். ‘முன்னேறிப் பாய்தல்’ என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய ‘புலிப்பாய்ச்சல்’ நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார்.

1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை – அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை – கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார். உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.

கரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது. இப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும். பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.

அதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும். இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.

பலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.

கடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.

நிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.

இவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன். குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.

 

எங்கள் வீரத்தலைவனுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் ஆனந்தபுரத்தில் எதிரியுடன் களமாடி வீழ்ந்த தளபதிகள் மற்றும் போராளிகளுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

 

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.