தமிழீழமே எங்கள் தேசம்

In சிறப்பு கட்டுரைகள்

“தமிழீழமே எங்கள் தேசம்”

தமிழீழம்எனும் ஒரு தேசத்தின் பெயரினை எண்ணிலடங்காத் தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் கொண்ட, வலிகளையும், வேதனைகளையும் கடந்துவந்த, நிமிர்வுகளையும், நிலையான தர்மத்தின் வாழ்வியலையும் குறியீடாக்கிக் கொண்ட ஒரு தொன்மைமிக்க வரலாறுகொண்ட, வீரம்செறிந்த இனத்தின் தனித்துவமான விடுதலையின் குறியீடாக உருவாக்கிக்காட்டியவர்கள் ‘மாவீரர்கள்’ எனும் அதிசயப்பிறவிகள்;

இத்தகைய மாவீரர்களின் புனிதமான இலட்சியப் பாதையில் , மகத்துவமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பி, அவர்களின் இலட்சியக் கனவை நிச்சயமாய் ஈடேற்றிக்கொள்வதாய் அவர்கள் நேசித்த மக்களால் எழுச்சியோடு ஒன்றாகக் கூடிநின்று உறுதியேற்றுக்கொள்கின்ற புரட்சித்திருநாளே மாவீரர் நாள்.

இன்றைய சூழ்நிலையில்,
தேசத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வி, பகைவர்களால் வன்கவரப்பட்ட தேசத்தின்மக்களாய் எம்மக்கள் வாழ்ந்துவருகின்ற வேளையில், எங்கெல்லாம் நாம் வித்துடலாய் எம் தோள்களில் சுமந்துசென்று எம் வீரமறவர்களை விதைத்தோமோ அந்தப் புனிதமான துயிலுமில்லங்களெல்லாம் அந்நியரின் காலடியில் மிதிபட்டுக்கிடக்கின்றன.

இதற்குமொருபடிமேல், தற்காலத்தில் தமிழர்கள், அவர்களது சொந்த நிலமான தமிழீழ மண்ணிலேயே மிகவும் பலவீனப்படுத்தப்பட்டு, பெரும்பான்மையாக வாழ்கின்ற அவர்களது வாழ்விடங்களில்கூட சிறபான்மையினராக மாற்றம் பெறச்செய்கின்ற இனச்சுத்திகரிப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய நிலையில்தான் நிர்ப்பந்தமாகவும், தெரிவுகளெதுவுமற்ற நிலையிலும், விலைபோகின்ற தலைமைகளைக் கொண்ட கையறுநிலையில் அரசியல் தலைவிதியைத் தொலைத்த தமிழர்கள், இலங்கைக்கான ஜனாதிபதிப் பொதுத்தேர்தலை, ‘அரசியல் அநாதைகளாக’ நின்றபடி எதிர்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தேர்தலின் முடிவினால் யார் வந்தால் நன்மை கிடைக்கும் என்ற அடிப்படை உலகியல் ஜனநாயக எதிர்பார்ப்பைக்கூட தமிழினம் முற்றாகத் தொலைத்து, யார்வந்தால் குறைந்தளவு ஆபத்து எனும் தெரிவுமட்டுமேயுள்ள அச்சுறுத்தல் நிலையிலேயே இத்தேர்தலைத் தமிழினம் எதிர்கொண்டிருக்கின்றது.

அதுவும், அவர்கள் மானசீகமாகப் போற்றி நிற்கும் வீரமறவர்களைப் பூசிக்கின்ற நவம்பர் மாதத்தில் திட்டமிட்டு நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் இத்தகைய ஏற்பாடு நடைபெற்றிருக்கின்றது.

தேர்தல் முடிந்ததும் காலப்போக்கில் ஏற்படப்போகின்ற நன்மை, தீமைகளை ஆய்வதற்கும், எதிர்வுகூறுவதற்கும் முன்னர், தேர்தலைத் தொடர்ந்துவரும் அடுத்த வாரங்களிலேயே இடம்பெறப்போகின்ற மாவீரர்தினத்தை தமிழினம் எவ்வாறான மனோநிலையில் , எத்தகையதொரு சூழ்நிலையில் எதிர்கொள்ளப்போகின்றது?, என்பதே இன்றுள்ள சவாலாக எழுந்து, தமிழீழ மக்கள் மனங்களில் எழுந்துள்ள ஆதங்கமாகவும் வலுப்பெற்றிருக்கின்றது.

தமிழர்களது இலட்சிய உறுதியிலும், அவர்களது வரலாற்று அடையாளங்கள்மீதும் ஏற்படுத்தப்படுகின்ற தொடர் ஆபத்துகளிலிருந்தும் நெருக்கடிக்குள்ளிருந்தும் ஒரு தேசம் தன்னை எவ்வாறு விடுவித்துப் பாதுகாத்துக் கொள்ளப்போகின்றது என்பது ஒட்டுமொத்த இனத்தின் எதிர்கால இருப்பிற்கே சவாலாக அமைந்திருக்கின்றது.

வலிகளோடும் துன்பங்களோடும், அடக்கமுடியாத விடுதலை வேட்கையுடனும், எத்தகையதொரு நிலையிலும் இலட்சியப்பற்றுறுதியோடு பயணிக்கின்ற தமிழினத்தின் இருள்சூழ்ந்து நிற்கும் இன்றைய நாட்களில், எல்லாத்தடைகளையும் தகர்த்தெறிந்து எழுச்சிகொள்வதற்காய், தங்கள் இலட்சிய வீரர்களின்மேல் சத்தியம்செய்து உறுதியேற்கின்ற மேன்மைதங்கிய நாளாகவே இம்முறை மாவீர்ர் நாள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

தமிழீழ தேசத்தின் நிரந்தர அடிமைத்தனத்தைப் பறைசாற்றத் துடிக்கும் பேரினவாதத்தின் ஆதிக்க மனோநிலையை, அவர்களது இரும்புப்பிடிக்குள் இருந்தபடியே எல்லாவற்றையும் கடந்தும், நிமிர்ந்துகொள்ளத் துணிவுபெற்று உறுதியோடு போராடுகின்ற தமிழினத்தின் ஆன்மபலமாகவே மாவீரர்கள் வழிகாட்டுகின்றார்கள்.

தமிழினத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குமளவிற்கு சோதனைக்குட்படுத்தப்படுகின்ற இக்காலகட்டத்தில், சத்தியத்தின்வழியில் தொடரந்துநின்று ஒளிதருகின்ற விடுதலைச் சூரியன்களாக தம் சரித்திர நாயகர்களை நெஞ்சிருத்தி, இம்முறையும் தமிழினம் தனித்துவமாகவும், மிக எழுச்சியாகவும், அடிமை விலங்கை உடைத்தெறியவதற்காகச் சத்தியம் செய்கின்ற விடுதலைப் பேரெழுச்சி நிகழ்வாக்கி, ஓரணியாய் நின்று மாவீர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நிமிர்வுகொள்ளவேண்டும் என்பது வரலாற்றுக்கடமை.

தமிழீழம் எனும் தேசம், எத்தகைய தான்தோன்றித்தனமான நிறுவனமயப்படுத்தப்பட்ட இலட்சியச் சிதைவுகளையும் சவாலாகக் கடந்து, தமிழீழத்திலும்சரி, பிறநாடுகளிலும்சரி, தமிழீழத்தை மட்டுமே அடையாளப்படுத்துகின்ற, தமிழீழத்தை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருமித்த மக்களாய் ஒரு குடைக்கீழ் ஒற்றுமையாகப் பயணப்படவேண்டிய தொடக்கப்புள்ளியாக இம்முறை
மாவீரர் நாள் அமையப்பெறல் வேண்டும்.

குறிப்பாக தமிழீழம் தவிர்ந்த ஏனைய பிறதேசங்களில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள், ஒருமித்த ‘தமிழீழமக்களாக’ ஒன்றாக நின்று மாவீர்நாளை எழுச்சியோடு ஏற்பாடுசெய்து, தமிழீழத்தின் பேரெழுச்சியை மக்கள் மயப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் எழுச்சியாக அனைத்து அரசுகளுக்கும், சமூகங்களுக்கும் வெளிப்படுத்தி தமது விடுதலை அரசியலை முன்னெடுக்கவேண்டிய பணியை ஏற்றுக்கொள்ளவேண்டியது தவிர்க்கமுடியாத கடமையாகின்றது.

இதற்குமொருபடிமேலே, மாவீரர்வாரம் ஆரம்பிக்கின்ற காலப்பகுதியிலேயே, தமிழர்கள் வாழ்கின்ற தேசங்கள் அனைத்திலும் அவ்வவ் நகரசபைகளினூடாக மாவீர்ர்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு தமிழீழத்தின் எழுச்சிமிக்க அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது சாலச்சிறந்ததாகும்.

ஜனநாயக விழுமியங்கள் மறுக்கப்பட்ட ஒரு தேசத்தில் இடம்பெறுகின்ற தேர்தலின் முடிவுகளால் ஏற்படப்போகின்ற, கைமீறிப்போன, எத்தகைய தலைவிதிமாற்றங்களுக்கும் அச்சப்படாமல், தமிழீழ மக்களாக எழுச்சியோடு தலைநிமிர்ந்து, எங்களுக்கான விடுதலை அரசியலை உயிர்ப்போடு முன்னெடுத்து, எங்கள் தலைவிதியை நாமே தீர்மானிக்கின்ற வல்லமைமிக்க மக்கள்சக்தியாக ஒற்றுமையோடு வலுப்பெற்று, எமக்கான தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என மாவீர்ர்கள்மீது இதயசுத்தியோடு சத்தியம் செய்வோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

-சாதுரியன்-

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.