எங்கள் தாயகம் எத்தனை அழகு

In தாயக கவிதைகள்

எங்கள் தாயகம் எத்தனை அழகு

தாயின் மடிச்சுகத்தையும்,
தாயகமண்ணின் தனிச்சுகத்தையும்,
எழுதத் தொடங்கினால்….
ஏன் பேனா வற்றுவதில்லை?
அமுதசுரபி போலவும்,

அட்சயபாத்திரம் போலவும்
ஏன் அள்ள அள்ளக் குறைவதில்லை?
எந்தையர் பூமி எத்தனை அழகு.
கள்ளிச்செடி படர்ந்த கலட்டித் தரையானாலும்,
பச்சை போர்த்த படுக்கைபோல,
பார்க்கும்போது கண்ணில் காதல் வழிகிறதே.
ஒழுங்கில்லாத ஒற்றையடிப் பாதைகள்கூட
உச்சி வகிடெடுத்த பேரழகியின் தலையைப்போல்
உன்னத அழகோடு ஓடிவருகின்றனவே
ஏன்?

தொட்டளைந்த பூமியின் சுகமும், மணமும்
எட்ட இருக்கும் நிலத்தில் ஏற்படாது.
எங்கள் அன்னைமடி எத்தனை எழில்.
பிஞ்சுப் பிள்ளைகளின் மாமரங்கள்போல….
துள்ளிக் குதிக்கும் பிள்ளைக் கன்றுகள் போல….
வெள்ளலைகள் கரையொதுக்கும்
நுரைப்பூக்களைப் போல….
எங்கள் தாயகம் எத்தனை அழகு.
தமிழீழம் சந்தனக்காடு
இதிகாசத்தில் படித்த இந்திரன் பூமி
“தால் ஏரி” காலெடுத்து நடக்கும் “காஷ்மீரை”
காணக்கண்கோடி வேண்டுமாமே.
“ஹாவாய்” தீவின் கடற்கரையில்
ஒருநாள் நடந்துவிட்டு இறந்தாலே
பிறந்தபலன் பூரணப்படுமாமே!
யார் சொன்னது?

தென்தமிழீழத்தைத் தெரியாத ஒருவன்
சொல்லியிருக்கலாம்.
மஞ்சள் வெய்யில் மேனிதழுவும் மாலைநேரம்
கோணமலையில் நின்று கீழே பாருங்கள்@
கோட்டை வாசலில் நிமிர்ந்து நின்று
பாதாளமலையின் பக்கமாக விழிகளை வீசுங்கள்.
உவமையற்ற அழகை உணர்வீர்கள்.
வார்த்தைகள் தோற்றுப்போகும்.
பேறுகாலத் தாய்மை அழகோடு
நெற்பயிர்கள்
பால்மணிக்கதிர்கள் தள்ளும் பருவத்தில்
தம்பலகாமத்து வயல்வரம்புகளில்
காலாற நடந்து பாருங்கள்.

காலமழை பொய்க்காத காலத்தில்
கந்தளாய்க் குளம் நிறைந்திருக்கும் நேரத்தில்
உயர்ந்த அணைக்கட்டில் உட்கார்ந்து கொண்டு
தாள அசைவுக்குச் சதிராடும் பெண்களைப்போல
நீளப்பறக்கும் வெண்கொக்குகளை நிமிர்ந்து பாருங்கள்.
கந்தளாயின் காலடியில்
காஷ்மீர் கைகட்டி நிற்கும்
நிலம் வெளிக்காத புலதிப்பொழுதில்
“வெருகல்|” வேலன் திருவிழாக் காலத்தில்
மாவலி கங்கையின் மடியிலே விழுங்கள்.
கொட்டியாரக் குடாக்கடல் தேடி
கைநீட்டி வந்துகட்டித் தழுவும்
ஆற்றின் அருகில் அமர்ந்து கொள்ளுங்கள்
எங்கள் தாயகம் எத்தனை அழகு!

தென்தமிழீழம் சுந்தரப் பூமி
கன்னங்குடா,
பட்டித்திடல்
இன்னும் இன்னும் எத்தனை ஊர்கள்
அத்தனையும் அழகு.
வெள்ளிநிலா விளக்கேற்றிக்கொள்ளும்
நள்ளிரவில்
புளியந்தீவில் பொன்னாவரசு பூத்திருக்கும் காலத்தில்
மட்டுநகர் வாவிக்கு வாருங்கள்.
மேலே பெண்ணுருவம், கீழே மீனுருவம் கொண்ட
“நீரரமகளிர்”
குரலெடுத்துப் பாடிக் குளிப்பார்கள்.
படகெடுத்துப் பக்கத்தில் போனால்
முகம் மறைந்து முக்குளித்துவிடுவார்கள்.
கற்பனையென்றாலும் எத்தனை சுகம்!

மட்டக்களப்பு புல்வெளிகளில்
மேய்ச்சல் முடிந்து வீடுதிரும்பும் பசுக்களின்
மடிசுரந்து வீதியெங்கும் வெள்ளமாகும்
கன்றை நினைத்து கால்களை நனைக்கும்.
வண்டு துளைபோட்ட மூங்கில் காடுகள்
வாத்தியம் இசைக்கும்.
காடாய்ப் பரவிய கரும்புக்காட்டில்
நிலத்து நீரைத் தண்டுகள் உறிஞ்சுவதில்லை
கரும்புச் சாறைத்தான் நிலம் குடித்துக் கொள்கிறது.
இலங்கை இந்து சமுத்திரத்தில் மிதக்கும்
ஒரு தீவு
ஆனால் இரண்டு நாடுகள்.
தமிழீழம் பருவநிலை மாறுபடும் பகுதிகள் அடங்கிய
பரந்த தேசமல்ல….

ஒரேநாளில்
உதயத்தை காங்கேசன்துறையிலும்
அஸ்தமனத்தை அக்கரைப்பற்றிலும்
பார்த்துவிட்டுப் படுக்கைக்குப் போகலாம்.
மட்கடகளப்பின் முட்டித்தயிர்
புளிக்க முன்னர்
புங்குடுதீவு திருமணமொன்றின்
பந்தியிலே பரிமாறப்படும்.
யாழ்ப்பாணத்துக் “கறுத்தக் கொழும்பான்” அழுக முன்னர்
திருக்கோவிலில் தெருக்களில் விற்பனைக்கிருக்கும்
வடதமிழீழம் வறண்டது
வறண்டதே தவிர சுருண்டதல்ல.
தென்தமிழீழம் செழிப்பானது
செழிப்பானதே தவிர செருக்கானதல்ல.
திருமலை தமிழீழத்தின் தலைநகர்.
எங்கள் வானத்துக்கு நிலவு ஒன்றுதான்
தலைவனும் ஒருவன்தான்.
இன்று, மனங்களை அடைத்து நின்ற மலைகளெல்லாம்
விடுதலை அதிர்வால்
வெடித்துச் சிதறுகின்றன.

போராட்டத்தீயால் பொசுங்கி எரிகின்றன.
தென்தமிழீழம்
எங்கள் தாயகத்தின் தலைவாசல்.
தானியக் களஞ்சியம்
பாலும் தயிரும் பயிருக்குப் பாய்ச்சும் நிலம்.
இன்று
தமிழரின் குருதி பாயும் நிலம்.
அவர்களின் கண்ணீரைத் துடைக்க
கைகளை நீட்டுவோம்
எதிரியைக் கலைத்து எல்லையைப் பூட்டுவோம்.

-வியாசன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.