தமிழீழத் தேசியத் தலைவரும்! – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 32

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

“தமிழீழத் தேசியத் தலைவரும்! – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.”

(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 32)

-விடுதலைப்புலிகளின் போர் உத்தியும் – திணறிய இந்திய படைகளும்-

கடந்த பதிவில் விடுதலைப்புலிகளின் அதிரடி தாக்குதல்களால் தின்றிய இந்தியப்படைகள் பற்றி பாத்திருந்தோம் அதன் தொடர்ச்சியாக இன்றைய பாகத்தில் விடுதலைப்புலிகளோடு மோத திராணி இல்லாத இந்தியப்படைகள் யாழ் போதானா வைத்திய சாலையில் அரங்கேற்றிய மனிதப்படுகொலைகள் பற்றி பார்ப்போம்.

இந்தியப் படைகள் ஈழமண்ணில் நிகழ்த்தியிருந்த மனித வேட்டைகளுள், யாழ் போதனா வைத்தியசாலையில் அவர்கள் மேற்கொண்டிருந்த கொலைகளே மிக மோசமான நடவடிக்கை. யாழ் போதனா வைத்தியசாலையினுள் நுழைந்த இந்தியப் படையினர் அங்கு தங்கியிருந்து சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த நோயாளர்கள், சிகிட்சையளித்துக்கொண்டிருந்த வைத்தியர்கள், தாதிகள் என்று பலரை கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றிருந்தார்கள். மிகவும் துயரகரமானதும், கேவலமானதுமான இந்த வைத்தியசாலைச் சம்பங்கள் பற்றி விரிவாக ஆராயும் முன்பாக, யாழ் குடாவை கைப்பற்றுவதற்காக இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த நகர்வுகள் பற்றி மேலோட்டமாகப் பார்த்துவிடுவோம்.

யாழ்நகரை நோக்கி பல முனைகளிலும் நகர்வுகளை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளின் பலத்த இடைமறிப்புத் தாக்குதல்கள் காரணமாக முன்னேற முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். “நான்கு நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிடுவோம் என யாழ்பாணத்தில் நிலைகொண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை நாலாபக்கமும் சுற்றிவழைத்து இந்தியப் படை நகர்ந்துகொண்டிருக்கின்றது. அவர்களால் எப்பக்கமும் நகர முடியாதபடிக்கு இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளைச் சுற்றி வழைத்து நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றெல்லாம் இந்தியாவின் தேசிய ஊடகங்களான ‘ஆக்காஷவாணியிலும், ‘தூரதர்ஷனிலும் கதைவிட்டபடி நடவடிக்கைகளில் இறங்கியிருந்த இந்தியப் படையினரால், பத்து நாட்கள் கடந்துவிட்டிருந்த போதும் யாழ் நகருக்குள் செல்லமுடியவில்லை.

இந்திய இராணுவம் பல புதிய படைப் பிரிவுகளை இந்தியாவில் இருந்து அவசரஅவசரமாக வரவழைத்து களம் இறக்கியிருந்தது. தமது போர் உத்திகளை அடிக்கடி மாற்றி அமைத்தது. விடுதலைப் புலிகளைப் பற்றி இந்திய உளவு அமைப்பான றோ தந்திருந்த தரவுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, விடுதலைப் புலிகள் தொடர்பான புதிய தரவுகளை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படைகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.
விடுதலைப் புலிகளின் தாக்குதல் முறைகள் இந்தியப் படையினருக்கு பெரும் தலையிடியாகவே இருந்தன. 1971ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தியப் படையினர் எந்த ஒரு யுத்தத்திலும் பங்கு பற்றவில்லை.

1956ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் நாகலாந்து பிரதேசத்திலும், 1984 இன் நடுப்பகுதி முதல் காலிஸ்தானிலும் இந்தியப் படையினர் கெரில்லாத் தாக்குதல்களை முறியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தாலும், விடுதலைப் புலிகளின் தாக்குதல் யுத்திகள் இந்தியப் படையினருக்கு புதியவைகளாகவே இருந்தன. அவர்கள் தமது யுத்தக் கல்லூரிகளிலும் சரி, இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளின் போதும் சரி, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல் பாணிகள் தொடர்பான பயிற்சிகள் பற்றிய அறிவைக் பெற்றிருக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவின் உளவு பிரிவான ‘றோ’ பயிற்சிகளை வழங்கியதாகப் பிதற்றிக்கொண்டாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருடனான யுத்த முனைகளில் கையாண்ட யுத்த முறைகள், ‘றோ’ முதற்கொண்டு

இந்தியப் படையினரின் பயிற்சி ஆசிரியர்கள் வரை மிகவும் புதியவைகளாகவே இருந்தன. அவசர அவசரமான இலங்கையில் இரண்டு யுத்தக் கல்லூரிகளை நிறுவி, யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப்படையினருக்கு புலிகளின் சண்டை யுத்திகள் பற்றிய புதிய பயிற்சி நெறியைக் கற்பிக்கவேண்டிய அவசியம் இந்தியப் படைத்துறைத் தலைமைக்கு ஏற்பட்டதும் இதனால்தான்.

இதற்கிடையில் இந்தியப் படையினர் யாழ் நகரைக் கைப்பற்றுவதில் ஏற்பட்டிருந்த காலதாமதத்தை நியாயப்படுத்த இந்திய அரசியல் தலைமையும், இராணுத் தலைமையும் சில சப்பைக்கட்டு காரணங்களை தமது பிரச்சார ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டிருந்தன.
“விடுதலைப் புலிகள் பெண்கள், சிறுவர்களை முன்நிறுத்தி, அவர்களின் பின்னால் நின்று சண்டை புரிவதாக” இந்தியத் தலைமை தொடர்ந்து கூற ஆரம்பித்திருந்தது. சண்டைகள் உக்கிரம் அடைந்து இந்தியப் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்து, இந்தியப் படை வீரர்களின் உடல்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியத் தலைமையின் இதுபோன்ற புளுகுகள் மேலும் அதிகரிக்க ஆரம்பித்தன.

‘இந்தியப் படையினரின் முகாம்களை நோக்கி பெரும் திரளான பொதுமக்கள், சிறுவர்கள் வருவார்களாம் அவர்களுடன் பேசவென்று இந்தியப் படை அதிகாரிகள் வெளியில் வருவார்களாம் திடீரென்று அந்த பொதுமக்களும், சிறுவர்களும் நிலத்தில் விழுந்து படுத்து விடுவார்களாம் அவர்களின் பின்னால் வரும் விடுதலைப் புலிகள் இந்தியப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுடுவார்களாம். இப்படிப் பல கதைகளை இந்தியப் படை அதிகாரிகள் இந்தியாவின் தூரதர்ஷனிலும், ஆல் இந்தியா ரேடியோவிலும்; தினசரிகளிலும் அவிழ்த்துவிட்டிருந்தார்கள். இப்படியான கதைகள் இந்தியாவின் தலைமைக்கு இரண்டு வகைகளில் உதவியிருந்தன. முதலாவது இந்தியப் படையினர் தரப்பில் ஏற்பட ஆரம்பித்திருந்த அளவிற்கதிகமான உயிரிழப்பிற்கு காரணம் கற்பிப்பதற்கு இதுபோன்ற கதைகள் உதவியிருந்தன. அடுத்ததாக, யாழ்ப்பாணத்தில் அப்பாவிப் பொதுமக்களை இந்தியப் படையினர் கொலை செய்வதாக வெளியாக ஆரம்பித்திருந்த செய்திகளுக்கு நியாயம் கற்பிப்பதற்கும் இதுபோன்ற கதைகள் இந்தியப் படைத்துறை தலைமைகளுக்கு உதவியிருந்தன.

இந்தியப் படையினர் ஈழத்தில் தமிழ் பெண்களை கற்பழித்து வருவதாகவும் தமிழ் நாட்டில்; செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தியப் படையினரின் அந்த நடவடிக்கைக்கு நியாயம் கற்பிப்பதற்கு இந்தியப் படைத்துறைத் தலைமை கைவசம் ஒரு கதையை வைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் இந்தியப் படையினர் தேடுதல்கள் நடாத்தச் செல்லும்போது, அங்கு இருக்கும் இளம் பெண்கள் திடீரென்று தமது பாவாடைகளுக்குள் இருந்து துப்பாக்கிகளை எடுத்து இந்தியப் படையினரை நோக்கிச் சுட்டுவிடுகின்றார்கள் என்று இந்தியப் படையினரின் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு இந்தியத் தலைமை நியாயம் கற்பித்திருந்தது.

வெறும் கதைகளினாலேயே கட்டியமைக்கப்பட்டிருக்கும் இந்தியா, ஈழ மண்ணில் தான் நிகழ்த்திய அனைத்து அட்டூழியங்களுக்கும் ஏதாவது ஒரு கதையைக் கூறி, அவற்றை நியாயப்படுத்த முற்பட்டது. யாழ்ப்பாணத்தில் அகதி முகாமைத் தாக்கிவிட்டு அதற்கொரு கதை கோவிலைத் தாக்கிவிட்டு அதற்கொடு கதை வைத்தியசாலையில் படுகொலைகள் புரிந்துவிட்டு அதற்கொரு வியாக்கியானம் என்று ஈழ மண்ணில் இந்தியப் படைகள் ஆடிய கோர தாண்டவங்கள் அனைத்திற்குமே இந்தியா அழகான கட்டுக்கதைகளை அமைத்திருந்தது அதன் சரித்திரத்தைப் போல.

இவற்றில் மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வெளிட்ட மற்றொரு கதைதான். ‘இலங்கையில் இந்தியப் படையினர் தமது கைகளில் ஒன்றைப் பின்னால் கட்டிக்கொண்டு போராடி வருவதாக’ இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்துத்தான் அந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் படையின் ஒவ்வொரு ஜவான்களும் ஈழத்தில் கண்மூடித்தனமான மனித வேட்டைகளில் இறங்கியிருந்தபோது, பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என்ற பாகுபாடில்லாமல் தமிழ் மக்களைக் கொன்று குவித்துக் கொன்டிருந்தபோது, தமிழ் மக்களின் சொத்துக்களைச் சூறையாடி அழித்துக்கொண்டிருந்தபோது, இந்தியப் பிரதமர் இந்த நகைச்சுவைத் துணுக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தியாவின் இந்தக் கூற்றுப் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்:
“இந்திய இராணுவம் ஒரு கையைப் பின்னால் கட்டியபடி போராடியது என இந்தியா கூறுவது கேலிக்கூத்தானது. ஒரு கையைப் பின்னால் கட்டியபடி இந்திய இராணுவம் எமது மக்கள் மீது இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள் என்றால், இரு கைகளாலும் எத்தகைய அட்டூழியங்களைப் புரிந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகின்றது…

தொடரும்..

ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.