தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 28

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.”

(சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 28 )

யாழ் குடா நாட்டில் வைத்து நொறுக்கப்பட்ட இந்திய படைகள்!

இந்த தொடர் பாகத்தில் அன்மைய பதிவுகளில் இந்திய படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் பற்றி விரிவாக பார்த்து வருகின்றோம் அதன் தொடர்ச்சியாக இந்த பாகத்தில் விடுதலைப் புலிகளின் அதிரடி தாக்குதலால் நிலை குலைந்த இந்திய படையினர் நிலை பற்றி விரிவாக பார்ப்போம்.

இந்தியப் படையினர் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட மனித வேட்டைகள் எல்லை அற்று தொடர்ந்தவண்ணமே இருந்தன.
ஸ்ரீலங்காப் படைகளைச் சேர்ந்த கொலையாளிகளையும் துணைக்கழைத்துக்கொண்டு யாழ்குடாவெங்கும் மனித வேட்டையில் இறங்கியிருந்த இந்தியப் படையினர், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று பாராமல் தமிழ்கள் என்று இனங்கண்டுகொண்ட அனைவரையும் படுகொலை புரிந்தபடி முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினரைத் தடுத்து நிறுத்துவதிலும், போரிட்டுக் அழிப்பதிலும்;, துரத்தி அடிப்பதிலும் விடுதலைப் புலிகள் தீரம் காண்பித்துக்கொண்டிருந்தார்கள். பல முனைகளிலும் முன்னேறிய ஆயிரக் கணக்கான இந்தியப் படையினரை ஒரு சில போராளிகளைக் கொண்ட விடுதலைப் புலிகள் அணிகள் தோல்வியடையச் செய்த சந்தர்ப்பங்கள் பல இருந்தன.

ஒரு பனை மரத்தில் பரன் அமைத்து பதுங்கியிருந்த ஒரு விடுதலைப் புலிப் போராளியே, இந்தியப் படையின் பாரிய அணி ஒன்றை நாட்கணக்காக தடுத்து நிறுத்தி சாதனை புரிந்த சம்பவங்களும் உள்ளன. விடுதலைப் புலிகள் எங்கிருந்து தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள் என்று இந்தியப் படையினருக்கு தெரியாது. பனைத் தோப்பில் இருந்து இடைக்கிடையே துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும். முன்னேற முற்பட்ட ஓரிரு ஜவான்களும் சரியாக குறிபார்த்து சுடப்பட்டு; வீழ்த்தப்பட்டுவிடுவதால் மற்றய இந்தியப் படைவீரர்கள் தொடர்ந்து முன்னேறப் பயந்து, நிலை எடுத்துப் பதுங்கிவிடுவார்கள். பனங்காணியை நோக்கி சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுவார்கள். ஓரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இவ்வாறு இந்த விளையாட்டு தொடரும். பனை மரத்தின் மீது பரன் அமைத்து தங்கியிருக்கும் புலி வீரரிடம் துப்பாக்கிச் சன்னம் தீர்ந்து அவர் அங்கிருந்து நகர்ந்த பின்னர் அல்லது அவர் வீர மரணம் அடைந்த பின்னர்தான், இந்தியப் படையினருக்கு தாம் ஏமாந்திருந்த விடயம் தெரியவரும். தமது இயலாமையை நினைத்து வெட்கப்படுவார்கள்.

அதேவேளை இதுபோன்ற சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டு வியூகங்களை மாற்றி அமைத்து இந்தியப் படையினர் மண் கௌவ்வியதும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் பனங் காணிகளில் இருந்து புறப்படும் ஓரிரு துப்பாக்கி வேட்டுக்களைப் பார்த்துவிட்டு, அங்கு ஒரு புலிப் போராளி மட்டும்தான் இருப்பார் என்று நினைத்து அள்ளி அடித்துக்கொண்டு பனங்காணிக்குள் நுழைந்த இந்தியப் படையினர், நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளால் சுற்றிவழைக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பலவும் உள்ளன.

புலிகளின் தாக்குதல்கள் எந்த வடிவில் எங்கிருந்து, எப்பொழுது மேற்கொள்ளப்படும் என்று இந்தியப் படையினருக்கு புரியாமல் இருந்தது. சந்தர்ப்பவசமாக அவற்றை அவர்கள் எதிர்கொண்ட போது வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டிருந்தார்கள். தாம் மிகவும் இலகுவாக நினைத்து சண்டையை ஆரம்பித்திருந்த விடுதலைப் புலிகள் ஒன்றும் சாமான்யமானவர்கள் அல்ல. உயர்ந்த இலட்சியத்துடன் பயிற்றப்பட்டு, உறுதியுடன் வளர்க்கப்பட்டு, உயிரைக் கூட மதிக்காது போராடும் வல்லவர்களை தாம் சமாளிக்கவேண்டும் என்பதை இந்தியப் படையினர் படிப்படியாக உணர்ந்து கொண்டார்கள்.

இந்தியப் படைத் தலைமைக்கு ஒரு விடயத்தில் நல்ல தெளிவு இருந்தது. அதாவது விடுதலைப் புலிகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். அதிகளவு போராளிகள் அவர்களிடம் கிடையாது. புலிகள் அமைப்பில் சுமார் 1500 பேர் அளவில்தான் இருப்பார்கள். அதுவும் அவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம் என்று பல இடங்களிலும் பரந்துதான் அவர்கள் நிலைகொண்டிருப்பார்கள். யாழ் குடா முழுவதுமாக பல முனைகளில் முன்னேறிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படையினரை ஒரு சில போராளிகளால் சமாளிக்கவே முடியாது என்பதில் இந்தியப் படை உயரதிகாரிகள் மிகவும் உறுதியாக இருந்தார்கள். அத்தோடு இந்தியப் படையினர் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்திருந்த யுத்த தாங்கிகளும், புலிகளுக்கு எதிரான சண்டைகளில் பாரிய வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

ஆனால், பல சந்தர்ப்பங்களில், புலிகள் வகுத்திருந்த வியூகங்கள், அவர்கள் மேற்கொண்ட புதிய போர் உத்திகள், இந்தியப் படை அதிகாரிகளின் எண்ணங்களில் மண்ணை அள்ளிப் போட்டிருந்தன. பல முனைகளில் முன்னேறிய இந்தியப் படை அணிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடைமறித்து தாக்கப்படுவார்கள். சண்டைகள் மிகவும் உக்கிரமாக நடைபெறும். இந்தியப் படையினர் முன்னேறவே முடியாதபடிக்கு தாக்குதல்கள் மிகவும் தீவிரமாக இருக்கும். “சரி, விடுதலைப் புலிகள் இந்த இடத்தில் மிகவும் பலமாக இருக்கின்றார்கள், தொடர்ந்து முன்னேறுவது அவ்வளவு உசிதம் அல்ல. திரும்புவதே புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், புலிகள் தரப்பில் இருந்து காண்பிக்கப்பட்டுக்கொணடிருந்த எதிர்ப்புக்கள் திடீரென்று நின்றுவிடும். புலிகள் பக்கமிருந்து ஒரு வேட்டுத்தானும் தீர்க்கப்படமாட்டாது. புலிகள் முற்றாகவே தமது தாக்குதல்களை நிறுத்திவிடுவார்கள். அடுத்து என்ன செய்வது என்று இந்தியப் படையினர் தடுமாறுவார்கள். தொடர்ந்து முன்னேறுவதா? அல்லது திரும்புவதா? தீர்மாணம் எடுக்கமுடியாது படை அதிகாரிகள் தடுமாறுவார்கள்.

புலிகள் பலமுடன் இருக்கும் பிரதேசத்தினுள் தொடர்ந்து முன்னேறினால் தாம் சுற்றிவழைக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயம் அவர்களை பிடித்துக்கொள்ளும். விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் திரும்பவும் மனமில்லை. தீர்மாணம் எடுக்கமுடியாமல் நாள் முழுவதும் யோசிப்பார்கள். யுத்த தாங்கிகளை முன்நிறுத்தி படை முன்னேற்றத்திற்கு வியூகம் வகுப்பார்கள். இந்தியப் படையினருக்கு அப்பொழுது உதவி புரிய ஆரம்பித்திருந்த மாற்றுத் தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்களை கிராமங்களினுள் அனுப்பி தகவல்சேகரித்தபோது அவர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஏற்படும். எதிர்முனையில் ஒரு புலி உறுப்பினர் கூட இல்லை என்று திரும்பிவந்த தமிழ் குழு உறுப்பினர்கள் கூறுவார்கள். ஆரம்பத்தில் அந்த தகவலையும் சந்தேகித்து, பின்னர் ஒருவாறு உண்மையை உறுதிசெய்துகொண்டு முன்னேற நினைக்கும்போது, புலிகள் இந்தியப் படையினருக்கு பின்புறமாக தாக்குதல்களை ஆரம்பித்திருப்பார்கள்.

தாங்கிகளை முன்நிறுத்தி முன்னேற நினைத்திருக்கையில் புலிகள் திடீரென்று பின்புறம் இருந்து தாக்க ஆரம்பித்ததால் இந்தியப் படையினர் நிலை குலைந்து போய்விடுவார்கள். புலிகளுக்கும், இந்தியப் படையினரின் யுத்த தாங்கிகளுக்கும் இடையில் இப்பொழுது இந்தியப் படை ஜவான்கள். யுத்த தாங்கிகளை பயன்படுத்த முடியாது. இந்தியப் படையினர் தமது பழமைவாய்ந்த எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளை இயக்கும் முன்பதாகவே அவர்களில் பலர் புலிகளின் நவீன ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி வீழ்ந்துவிடுவார்கள். இவ்வாறு இந்தியப் படையினரின் அதிக எண்ணிக்கையிலான படைவீரர்கள், மற்றும் அவர்கள் முன்நிலைப்படுத்தி பயன்படுத்திய யுத்த தாங்கிகள் என்பன கூட, பல சந்தர்ப்பங்களிலும் செயலற்றவையாகவே மாற்றப்பட்டிருந்தன விடுதலைப் புலிகளின் புதிய போர் யுக்திகளினால்.

அடுத்ததாக புலிகளின் கன்னி வெடிகள் இந்தியப் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. கன்னி வெடிகள் எந்த ரூபத்தில் மறைந்திருக்கும் என்பதை இந்தியப்படையினரால் கற்பனை செய்யவே முடியவில்லை. தெருவோரம் கைவிடப்பட்டிருக்கும் துவிச்சக்கர வண்டிகூட, இந்தியப் படையினர் அருகில் செல்லும்போது வெடித்துச் சிதறும். வீதிகளில் அமைந்திருக்கும் மதகுகளின் கீழ்தான் கன்னிவெடிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்றில்லை. தாரிட்டு நன்றாகப் பூசி மெழுகிக் காணப்படும் தெருக்கள் கூட திடீரென்று வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திவிடும். தெருக்களிலும், வீதியோரங்களிலும் கன்னிவெடி பொருத்தப்பட்டிருக்கும் என்று அவதாணித்து மிகவும் கவனத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் போது, மின் கம்பங்களின் மேலே இருந்து கிளைமோர் வெடித்து பல இந்தியப் படையினர் கொல்லப்பட்டுவிடுவார்கள்.
இந்தியப் படையினரைப் பொறுத்தவரை ஈழ மண்ணில் அவர்களை அதிக அச்சத்திற்குள்ளாக்கிய ஒரு விடயம் என்னவென்றால், புலிகள் மேற்கொண்ட கன்னி வெடித்தாக்குதல்கள் என்றால் மிகையாகாது.

இந்தியப் படையினர் 1971ம் ஆண்டே கடைசியாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பாக்கிஸ்தானுடன் இந்தியா மேற்கொண்டிருந்த அந்த யுத்தத்திற்கு பின்னர், இந்தியப் படையினருக்கு யுத்த அனுபவம் அவ்வளவாகக் கிடையாது. காலிஸ்தான் சீக்கியத் தீவிரவாதிகளை அடக்குவதற்காக பஞ்சாப் பொற்கோவிலில் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த ‘புளுஸ்டார் படை நடவடிக்கை (Operation Blue star) தவிர 16 வருடங்களாக இந்தியப் படை யுத்த நடவடிக்கைகள் எதிலுமே ஈடுபட்டது கிடையாது.

திடீரென்று ஈழத்தில் புலிகளுடன் இந்தியப் படையினர் யுத்தத்தில் குதிக்கவேண்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் படையினர் தடுமாறித்தான் போனார்கள். அதுவும் புலிகள் இந்தியப் படையினருக்கு தொடர் இழப்புக்களை வழங்கிவர, அவற்றை வெற்றி கொள்ள முடியாத இந்தியப் படையினர் தமது இயலாமையை அப்பாவி மக்கள் மீது காண்பிக்க ஆரம்பித்திருந்தார்கள். புலிகளை வெற்றிகொள்ளமுடியாத இந்தியப் படையினர் தமது கோபத்தை அப்பாவி ஈழத் தமிழர்கள் மீது செலுத்தினார்கள். நூற்றுக்கணக்கான மக்களை கொன்றொழித்தார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சூறையாடினார்கள். அவர்கள் ஈழ மண்ணில் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தம் இப்படித்தான் அமைந்திருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இலங்கையில் இந்தியப் படையினர் தமது கைகளில் ஒன்றைப் பின்னால் கட்டிக்கொண்டு யுத்தம் புரிந்து வருவதாக இந்தியா கூறியதுதான். அந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையான இந்தக் கூற்றை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஊடகங்களுக்கு கூறிக்கொண்டிருக்கும் போது, இந்தியப் படையின் ஒரு அணி, யாழ் வைத்தியசாலைக்குள் பாரிய மனித வேட்டை ஒன்றை நடாத்தப் புறப்பட்டிருந்தது.

தொடரும்…

ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.