தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 38

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

தமிழீழத் தேசியத் தலைவரும்! – தமிழீழ விடுதலைப் போராட்டமும்

(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 38)

யாழ் வைத்தியாசாலையில் இந்திய படைகளால் அரேங்கேற்றப்பட்ட படுகொலைகள்

கடந்த பதிவில் வஞ்சகத்திற்கான காரணம் பற்றி புரிதலுக்காக பார்த்திருந்தோம். இன்றைய பதிவில் இந்திய படைகள் நயவஞ்சகமாக யாழ் போதனா வைத்திய சாலையில் அரேங்கேற்றிய படுகொலைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

இந்தியப் படையினர் ஈழமண்ணில் மேற்கொண்ட படுகொலைகளுள், உலகத்தின் பார்வையில் இருந்து கனிசமான அளவிற்கு மறைக்கப்பட்டதும், அதேவேளை ஈழத்தமிழர் நெஞ்சங்களில் இருந்து என்றைக்குமே மறக்க முடியாததுமான ஒரு சம்பவம் உள்ளது. யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள், இந்தியப் படையினரின் ஒட்டு மொத்த நோக்கத்தையும், அவர்களது நடவடிக்கைகளையும் சந்தேகத்துக்குள்ளாக்கியிருந்தது. ஒரு யுத்த காலத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட நடுநிலையாளராக கருதப்பட்டு மதிக்கப்படவேண்டும் என்ற சர்வதேச சட்டங்களையும்,, தர்மங்களையும், உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று தம்மைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் அப்பட்டமாக மீறிய ஒரு சம்பவமாக யாழ் வைத்தியசாலைச் சம்பவம் அமைந்திருந்தது.

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலையில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோர தாண்டவத்தில், வைத்தியர்கள், தாதிகள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயர்கள் என்று நூற்றிற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள். யாழ் வைத்தியசாலையின் வரலாற்றிலும், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றிலும் இலகுவில் மறக்கப்பட முடியாத இந்த நிகழ்வு பற்றி பல ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், முறிந்தபனை, அக்கினிக் கரங்கள் என்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்புக்கள், யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவங்களின் பரிமானத்தை வெகு அழகாக எடுத்துரைக்கின்றன.

குறிப்பாக நாவண்ணன் எழுதிய அக்கினிக் கரங்கள் என்ற தொகுப்பு, யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவங்களை மிகவும் உணர்ச்சியுடன் வெளிப்படுத்தி நிற்கின்றது.

வைத்தியசாவையில் நடந்த கோரம்

யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றிவிடும் என்பது சில நாட்களாகவே மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்திருந்தது. ஷெல் தாக்குதல்களால் காயங்களுக்கு உள்ளானவர்கள் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுக்கொண்டிருந்தார்கள். மருந்துகளுக்கு அங்கு மிகுந்த பற்றாக்குறை நிலவியதால், அறுவை சிகிட்சைகள் கூடுமானவரை தவிர்க்கப்பட்டே வந்தன. மருத்துவமனை சவக்கிடங்களில் 70 சடலங்கள் குவிந்து கிடந்தன.

அக்டோபர் 21ம் திகதி- தீபாவளி தினம். யாழ் கோட்டையில் இருந்து சகட்டுமேனிக்கு ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. வைத்தியசாலைச் சுற்றுவட்டாரத்தினுள்ளும் ஷெல்கள் விழ ஆரம்பித்திருந்தன. காலை 11.30 மணியளவில் யாழ் மருத்துவ மனையின் வெளி நோயாளர் சிகிட்சைப் பிரிவுக் கட்டிடத்தின் மீது ஒரு ஷெல் விழுந்து வெடித்தது. நன்பகல் 1.30 மணியளவில் மற்றொரு ஷெல் யாழ் வைத்தியசாலையில் 8ம் நம்பர் வார்டில் விழுந்து வெடித்தது. அதில் அங்கு தங்கியிருந்து சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த 7 நோயாளர்கள் கொல்லப்பட்டார்கள்.

மாலை நான்கு மணியளவில் இந்திய இராணுவம் யாழ் மருத்துவ மனைக்குள் நுழைந்தது. இந்திய இராணுவ வீரர்களின் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.

அன்று யாழ் மருத்துவ மனையினுள் நடைபெற்ற சம்பவம் பற்றி அப்பொழுது அங்கு கடமையாற்றிக்கொண்டிருந்த வைத்தியரொருவர் இவ்வாறு கூறுகின்றார்: நாங்கள் அப்பொழுது வைத்தியசாலையின் கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றார்கள். 7ம் நம்பர் வார்ட்டை காலி செய்துவிட்டு வந்த நோயாளர்களும் அங்கு இருந்தர்கள். துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் படிப்படியாக எங்களுக்கு அருகில் வந்துகொண்டிருப்பதை எங்களால் கேட்க முடிந்தது. இந்திய இராணுவம் உள்ளே நுழைந்தாலும், அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுக்கு நாங்கள் விசயங்களை விளங்கப்படுத்தலாம் என்று நம்பிக்கொண்டிருந்தோம். எங்களுடன் இருந்த டாக்டர் கணேசரத்தினம் அறையை விட்டு வெளியே சென்றார். எங்களின் சக ஊழியர்கள் சிலர் இன்னமும் வார்டுகளில் தான் தங்கி இருந்தார்கள்.

சூட்டுச் சத்தம் இப்பொழுது மிகவும் அருகில் வந்துவிட்டிருந்தது. எங்களைச் சுறிறியிருந்த அபாயத்தை உணர்ந்து எல்லோரும் அப்படியே தரையில் விழுந்து படுத்துவிட்டோம்.சுட்டுக்கொண்டே கதிரியக்கப்பிரிவுக்குள் வந்தது இந்திய இராணுவம். அங்கு நெருக்கியடித்துக்கொண்டிருந்த மக்கள் தான் அவர்கள் கண்களில் முதலில் பட்டார்கள். மக்களைக் கண்டதும் உடனடியாக அவர்கள் மீது சரமாரியாகச் சுட்டுத்தள்ளத் தொடங்கினார்கள். நோயாளிகள் சூடுபட்டு செத்து விழுவதை கண்களால் கண்டோம். விரலைக் கூட அசைக்காமல் இறந்துபோனவர்களைப் போல தரையில் விழுந்து கிடந்தோம் இறந்து போனவாகளின் சடலங்களை அகற்ற வரும்போது, எங்களையும் அவற்றோடு போட்டு எரித்துவிடுவார்களோ, சுட்டுவிடுவார்களோ என்று முழு நேரமும் நடுங்கிக்கொண்டிருந்தோம். இரவில் மேலும் சில வெடிச்சத்தங்கள் கேட்டன. எங்களது தங்குமிடம் அமைந்திருக்கும் மேல் மாடியில் இந்தியப் படையினர் நடமாடும் சத்தம் கேட்டது. மறுநாட் காலை 11 மணிவரை கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் நாங்கள் அப்படியே கிடந்தோம். சடலங்களின் நடுவில்:

அன்றைய தினத்தில் யாழ் மருத்துவமனையில் இருந்த மற்றொருவர் இவ்வாறு தெரிவிக்கின்றார்: இந்திய இராணுவம் வெளி கேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது. மேற்பார்வையாளர் அலுவலகத்திற்குள்ளும், வேறு அலுவலகங்களுக்குள்ளும் அவர்கள் கண்டபடி சுட ஆரம்பித்தார்கள். என்னோடு பணிபுரிந்த பல ஊழியர்கள் இந்தியப் படையினரின் கண்மூடித்தனமாக தாக்குதல்களில் அகப்பட்டு இறப்பதைக் கண்டேன். எனது சக ஊழியர் ஒருவர் என்னிடம் இரகசியமா கூறினார்: “அப்படியே அசையாமல் படுத்துக் கிடவுங்கள். அன்று இரவு முழுவதும் இம்மி கூட அசையாமல் அங்கு கிடந்த சடலங்களின் அடியில் படுத்துக் கிடந்தோம்.

ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்த ஒருவருக்கு இருமல் இருந்தது. உரத்து இருமினால் இந்தியப் படையினரின் காதுகளில் விழுந்தவிடும். அதனால் இரவு முழுவதும் முனகியவாறு இருமிக்கொண்டிருந்தார். அவரது மெல்லிய முனகல்கூட ஒரு இந்தியப்படையினனது காதில் விழுந்துவிட்டது. ஒரு கைக்குண்டை அவர் மீது வீசி எறிந்தான். அந்த மேற்பார்வையாளரும், அவரது அருகில் கிடந்தவர்களும் பலியானார்கள். அம்புலன்ஸ் சாரதி இறந்தது எனக்குத் தெரியும். இன்னொரு இடத்தில் கைளை உயர்த்தியபடி ஒருவர் எழுந்து உரக்கக் கத்தினார்: “நாங்கள் அப்பாவிகள் இந்திரா காந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு… அவர் உரத்துச் செல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் மீது ஒரு கைக்குண்டை எறிந்தார்கள்.

அவரும் அவருக்கு அருகில் கிடந்த சகோதரரும் உடல் சிதறி இறந்துபோனார்கள்.

இந்திய படைகளின் படுகொலைகள் தொடரும்…

✍ ஈழம் புகழ் மாறன்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.