ஈழத் தேசிய விடுதலை முன்னணி

In போரும் சமாதானமும்

இலங்கையில் இந்திய தலையீடு

அத்தியாயம் : 2

ஈழத் தேசிய விடுதலை முன்னணி

இந்திய புலனாய்வுத்துறைகளின் தலைவர்கள் மற்றும் திரு.பார்த்தசாரதி ஆகியோர் ராஜீவ் அரசின் புதிய வெளியுறவுக் கொள்கை சம்பந்தமாக அளித்த விளக்கங்களிலிருந்து எமக்கு ஒரு உண்மை புலனாகியது. புதிய இந்திய நிர்வாகம் வெகுவிரைவில் ஒரு போர் நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் ஒழுங்குகளைச் செய்யப்போகின்றது என்பது தெளிவாகியது. ஜெயவர்த்தனா நிச்சயமாகப் போர் நிறுத்தத்திற்கு இணங்குவார் என்பது எமக்குத் தெளிவாகத் தெரிந்தது. முதலாவதாகப் போர்நிறுத்தம் செய்து கொள்வது ஜெயவர்த்தனா அரசுக்குச் சாதகமானதாகவே அமையும். ஏனென்றால் தீவிரம் பெற்றுவந்த தமிழ்ப்போராளி அமைப்புகளின் கெரில்லாத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் அரச ஆயுதப் படைகள் மீதான இராணுவ அழுத்தம் நீக்கப்படும். இரண்டாவதாகப் பேச்சுவார்த்தையின்போது சிங்கள அரசாங்கம் கடும்போக்கைக் கடைப்பிடித்துத் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க மறுக்கலாம். ஆகவே, ராஜீவ் காந்தியின் புதிய இராஜதந்திர அணுகுமுறை ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சிகரத் திட்டத்திற்குச் சாதகமாகவும் தமிழர்களின் அரசியல் நலன்களுக்குப் பாதகமாகவும் அமையப்பெறுமென நாம் கருதினோம். ராஜீவ் ஆட்சிப்பீடத்தின் புதிய இலங்கைக் கொள்கையானது, எதிர்காலத்தில் இந்திய அரசின் நலனுக்கும் ஈழத் தமிழரது சுதந்திர இயக்கத்தின் அபிலாசைக்கும் மத்தியில் ஒரு பகை முரண்பாட்டை ஏற்படுத்தலாமென நாம் அஞ்சினோம்.

இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றத்தால் எழுந்த புதிய அரசியல் வளர்ச்சிப் போக்கு எமது விடுதலை இயக்கத்திற்கு ஒரு புதிய சவாலாக அமைந்தது. இந்தச் சவாலையும் அதிலிருந்து எழக்கூடிய அரசியல் ஆபத்துக்களையும் நாம் தனி அமைப்பாக, தனித்து நின்று எதிர்கொள்வது சாத்தியமற்றது என எனக்குத் தோன்றியது. தமிழ்ப் போராளி அமைப்புகள் ஒன்றிணைந்து, ஒன்றுபட்ட கூட்டுச் சக்தியாக இப்புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய காலம் கனிந்துவிட்டதாகவே நான் கருதினேன். தமிழ் விடுதலை அமைப்புகள் இணைந்த கூட்டு முன்னணி அமைக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுத் தேவை அப்பொழுது எழுந்தது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஈழத் தேசிய | விடுதலை முன்னணி என்ற கட்டமைப்பில் ஏற்கனவே ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற இயக்கங்கள ஒன்றுசேர்ந்து இயங்கி வந்தன. இந்த ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் விடுதலைப் புலிகள் ஒன்றிணைந்து இயங்க வேண்டுமென நான் கருதினேன். இதற்குத் தலைவர் பிரபாகரனை இணங்க வைப்பது என்பது எனக்குப் பெரிய சவாலாக அமைந்தது.

ஜெயவர்த்தனா அரசின் சூழ்ச்சிகரமான கபட நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்ற ரீதியில் ராஜீவ் காந்தியின் புதிய ஆட்சிப்பீடம் அவரசப்பட்டு மேற்கொள்ளவிருக்கும் புதிய இராஜதந்திர அணுகுமுறை எமது விடுதலை அமைப்புக்குப் பல சிக்கல்களை உருவாக்கலாமெனப் பிரபாகரனுக்கு எடுத்து விளக்கினேன். தனி இயக்கமாகத் தனித்து நின்று செயற்பட்டால், புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாது ஓரம் கட்டப்படும் ஆபத்து எமது இயக்கத்திற்கு ஏற்படலாம் என்பதையும் அவருக்குச் சுட்டிக்காட்டினேன். ஒரு பொதுவான அரசியல்-இராணுவ இலட்சியத்தின் அடிப்படையில் தமிழ் விடுதலை அமைப்புகள ஒன்று சேர்ந்து நின்றால் இந்தியக்கொள்கை மாற்றத்தால் எழக்கூடிய புதிய சவால்களைச் சமாளிப்பது இலகுவாக இருக்கும் என்பதையும் விளங்கப்படுத்தினேன். ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் நாம் கூட்டுச்சேர்ந்தால் தமிழரின் சுதந்திர இயக்கம் பலப்பட்டு, பாரிய சக்தியாக உருவகம்பெற்று, இந்திய இராஜதந்திர நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுக்கவல்ல கூட்டரணாக இயங்கமுடியும் என்றும் விளக்கினேன். பல கலந்துரையாடல்களின் பின்னர் இறுதியாகப் பிரபாகரன் எனது யோசனைக்கு இணக்கம் தெரிவித்தார். பிரபாகரனின் அனுமதியைப் பெற்றுக்கொண்டதும் ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களைத் தனித்தனியே சந்தித்து எமது இயக்கத்தின் விருப்பத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.

ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களான திரு.பாலகுமார்(ஈரோஸ்), திரு.சிறீ சபாரெத்தினம் (ரெலோ), திரு.பத்மநாபா (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகியோரை எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். அவர்களைத் தனித்தனியே சந்தித்து ராஜீவ் அரசின் புதிய சமரச அணுகுமுறை பற்றியும், இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டிணைந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதாயின் ஒரு பொதுப்படையான கொள்கைத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்போராளி அமைப்புகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் அவர்களுக்கு எடுத்து விளக்கினேன். ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து செயலாற்ற விடுதலைப் புலிகளின் தலைமை இணங்கியிருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தியதுடன் சந்திரகாசனின் ஆதிக்கத்திலிருந்து அவர்கள் முற்றாக விடுபடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்புக் கிட்டியதை அறிந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு பொதுவான கொள்கைத்திட்டத்தை வகுப்பது குறித்து விரிவான பேச்சுக்களை நடத்துவதற்கும் ஒற்றுமைப் பிரகடனத்தில் கைச்சாத் திடுவதற்குமாகப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துக் கலந்துரையாட அவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.

– 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் சென்னை நகரிலுள்ள விடுதி ஒன்றில் ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களுக்கும் பிரபாகரனுக்கும் மத்தியிலான சந்திப்பு நிகழ்ந்தது. இச்சந்திப்பில் நான் பிரபாகரனுடன் கலந்து கொண்டேன். மாணவர் பேரவைப் போராட்டக் காலத்திலிருந்தே ரெலோ தலைவர் சிறீ சபாரெத்தினத்தைப் பிரபாகரன் நன்கறிவார். ஈரோஸ் தலைவர் பாலகுமாரையும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும். சென்னை இந்திரா நகரில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைச் செயலகத்திற்குப் பல தடவைகள் வருகை தந்த பாலகுமார், பிரபாகரனையும் என்னையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் பத்மநாபாவை அன்றுதான் முதற்தடவையாகப் பிரபாகரன் சந்தித்தார்.

கூட்டத்தில் பரஸ்பர நல்லுறவும் நல்லெண்ணமும் நிலவியது. கூட்டான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை வகுப்பதன் அவசியம் குறித்து நான்கு தலைவர்கள் மத்தியிலும் கருத்தொற்றுமை நிலவியது. தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுவது என்ற பொது அரசியல் இலட்சியத்தை நான்கு அமைப்புகளும் வரித்துக்கொண்டன. கூட்டு இராணுவத் திட்டமானது, கூட்டுறவான நடவடிக்கையின் அடிப்படையில் படிப்படியாகக் காலப் போக்கில் பரிணாமம் பெற வேண்டும் எனப் பிரபாகரன் விளக்கிக் கூறினார். அதுவரை காலமும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு அமைப்பும் சிங்கள ஆயுதப்படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நிகழ்த்த வேண்டும் எனவும் முடிவாகியது. சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சியை நோக்கி இந்திய இராஜதந்திர நகர்வுகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், நான்கு அமைப்புகளின் தலைவர்களும் அடிக்கடி சந்தித்து அரசியல் சூழ்நிலை வளர்ச்சிப் போக்குக் குறித்து கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக, தமிழ் தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக ஒன்றிணைந்து போராடுவதென உறுதிப் பிரமாணம் செய்து கூட்டு மகஜர் ஒன்றில் நான்கு தலைவர்களும் கைச்சாத்திட்டனர்.

ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்பட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு எடுத்த அதே நாளிலிருந்து தமிழீழ தேசத்தில், வன்முறைத் தாக்குதல்கள் காட்டுத்தீ போலப் பரவின. 1985, ஏப்ரல் 10 ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமிற்குச் சமீபமாக அமைந்திருந்த காவல்துறைத் தலைமைச் செயலகம் விடுதலைப் புலிக் கெரில்லா வீரர்களின் பாரிய தாக்குதலுக்கு இலக்காகியது. அவ்வேளை யாழ்ப்பாண மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்த கேணல் கிட்டு, இத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். காவல்நிலையம் முன்பாக கேந்திர முனைகளில் வியூகம் அமைத்து, நிலையெடுத்த புலி வீரர்கள் மோட்டார்கள் ரொக்கட் ஏவுகணைகளால் காவல்துறைக் கட்டிடம் மீது உக்கிரமான தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். புலிகளின் குண்டு மழைக்கு நின்று பிடிக்க முடியாத காவல்துறையினர், இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் விட்டுவிட்டு அருகாமையிலுள்ள கோட்டை இராணுவ முகாமுக்கு ஓடிச்சென்று அங்குத் தஞ்சம் புகுந்தனர். கோட்டை முகாமிலிருந்து சண்டை நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்த இராணுவப் படையணி மீது புலி வீரர்கள் தாக்குதலைத் தொடுத்தனர். புலிகளின் உக்கிர தாக்குதலைச் சமாளிக்க முடியாத இராணுவத்தினரும் சிதறியோடிக் கோட்டைக்குள் பதுங்கினர். காவல்துறைத் தலைமைச் செயலகம், உதவிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயம் உட்பட பல்கூட்டுக் காவல்துறைக் கட்டிடங்கள் முற்றாகத் தகர்த்தப்பட்டன. பெருந்தொகையான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றிய பின்பு மறுநாட் காலை விடிவதற்குள் புலி வீரர்கள் அங்கிருந்து மறைந்தனர்.

யாழ்ப்பாணக் காவல்துறைத் தலைமைச் செயலகம் தாக்கி அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த விடுதலைப் புலிகள் இயக்கமும் ஏனைய அமைப்புகளும் தனித்தனியாக இராணுவ நிலையங்கள், காவல் நிலையங்கள், இராணுவ தொடர் வண்டிகள் போன்றனமீது கெரில்லாத் தாக்குதல்களை நிகழ்த்தி, சிங்கள ஆயுதப் படைகள் மீது பாரிய உயிர்ச்சேதத்தை விளைவித்தன. 1985 ஏப்ரல், மே காலப்பகுதியில் தமிழ்ப்போராளி அமைப்புகளின் வன்முறைத் தாக்குதல்கள் உச்ச கட்டத்தை அடைந்தன எனலாம். இக்கால கட்டத்தில் தலைவிரித்தாடிய வன்முறைத் தாக்குதல்களை ஒரு இந்திய எழுத்தாளர் கீழ்க் கண்டவாறு விபரித்திருக்கிறார்:

“தமிழ்ப் பகுதிகளில் சுழற்சியாக மாறி மாறிக் கட்டவிழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் திகலூட்டுவதாக இருந்தது. காற்றில் நடுங்கும் காட்டரசம் இலைபோல இலங்கை அதிர்ந்தது. ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் விடுதலைப் புலிகள் இயக்கம் இணைந்து கொண்டதை அடுத்து, கூட்டணிக்கு வெளியே நின்ற புளொட் உட்பட சகல தீவிரவாதப் போராளி அமைப்புகளும் புதிய உத்வேகம் பெற்றுச் செயற்படத் தொடங்கின. கொழும்பு அரசைப் பணியவைக்கும் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்துவது போன்று வடகிழக்கின் மூலைமுடுக்குகள் எங்கும் இவ்வமைப்புகள் சிறீலங்கா படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின”.

தமிழ் விடுதலை அமைப்புகளின் கெரில்லாப் போராட்டம் உக்கிரமடைந்து சிங்கள ஆயுதப் படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தி வந்த அந்தவேளை, இந்திய வெளியுறவுச் செயலர் திரு. ரொமேஸ் பண்டாரி கொழும்புக்கு அடிக்கடி வருகைதந்து போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை பற்றி ஜெயவர்த்தனா அரசுடன் கலந்துரையாடல்களை நிகழ்த்தினார். தமிழர் தரப்பிலிருந்து அதிகரித்து வந்த இராணுவ நெருக்கத்திற்கு முகம் கொடுக்க முடியாது அங்கலாய்த்த ஜெயவர்த்தனா இந்தியாவின் யோசனைக்கு இணங்கினார். தமிழ்ப் போராளி அமைப்புகளுடன் பேசுவதற்கு இணங்கிய ஜெயவர்த்தனா அதற்கு ஒரு நிபந்தனையும் விதித்தார்.

அதாவது, தமிழ் விடுதலைப் போராளி அமைப்புகளுக்கு வழங்கி வந்த சகல இராணுவ உதவிகளையும் இந்திய அரசு நிரந்தரமாக நிறுத்தவிடவேண்டும் என்றும், தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுமாறு தமிழ் அமைப்புகளை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் ஒரு கண்டிப்பான நிபந்தனையை விதித்தார். இந்த நிபந்தனையை நிறைவு செய்வதாக இந்திய அரசு உறுதியளித்ததை அடுத்துப் போர்நிறுத்தம் செய்வதற்கு ஜெயவர்த்தனா இயங்கினார். போருக்கு ஓய்வு கொடுப்பதும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குமான நாட்களும் நிர்ணயிக்கப் பட்டன. தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் சிறீலங்கா அரசுக்கும் மத்தியில் 1985 ஜுன் நடுப்பகுதியில் போர் நிறுத்தத்தைச் செயற்படுத்துவது என்றும் இந்திய அரசின் மத்தியஸ்துவத்தின் கீழ் மூன்றாம் நாடான இமாலய இராச்சியமான பூட்டானில் ஜுலை நடுப்பகுதியில் பேச்சுக்களைத் தொடங்குவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

ஜெயவர்த்தனாவின் கபட நோக்கம் குறித்து ஆழமான சந்தேகம் கொண்டிருந்த பிரபாகரனுக்கும் ஏனைய போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கும் திடீரெனப் போர்நிறுத்தம் செய்து கொள்வது சரியான அணுகுமுறையாகத் தென்படவில்லை. சிங்கள ஆயுதப் படைகள் மீதான இராணுவ அழுத்தத்தைத் திடீரென நிறுத்திக் கொள்வது அரச படைகளுக்கே அனுகூலமானதாக அமையுமெனப் பிரபாகரன் கருதினார். படிப்படியாகத் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வந்த கெரில்லாப்போரை, அதன் கேந்திர நோக்கை அடைவதற்கு முன்பாக, அதாவது சிங்கள இராணுவ இயந்திரத்தை வலுவிழக்கச் செய்வதற்கு முன்பாக, போருக்கு ஓய்வு கொடுப்பது என்பது போரியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிங்கள அரசுக்கே சாதகமானதாக முடியுமெனப் பிரபாகரன் எண்ணினார். தமிழ்ப் போராளி அமைப்புகளின், குறிப்பாகப் பிரமாதமான போரியல் சாதனைகளைப் படைத்து வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட இலட்சியத்திற்கு இது பங்கம் விளைவிப்பதாக அமையுமெனவும் அவர் கருதினார்.

ஜுன் மாதம் ஆரம்பத்தில், றோ புலனாய்வுத்துறை உயர் அதிகாரியான திரு. சந்திரசேகரனைப் பிரபாகரனும் ஏனைய ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களும் சந்தித்தபோது அவர்கள் தமது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் மனம் திறந்து வெளிப்படையாகத் தெரிவித்தனர். திடீரெனப் போருக்கு ஓய்வு கொடுத்தல், சிங்கள ஆயுதப் படைகள் தம்மைப் பலப்படுத்தி, தமது போரியல் சக்தியை வலுப்படுத்த வழிசமைத்துக் கொடுப்பதாக அமையுமெனவும், அதேவேளை தமிழ் கெரில்லாப் படையணிகள் செயற்பாடின்றி ஊக்கமிழந்து மனத்தளர்வுக்கு ஆளாவார்கள் எனவும் சந்திரசேகரனுக்குப் பிரபாகரன் எடுத்து விளக்கினார்.

பிரபாகரனதும் ஏனைய போராளித் தலைவர்களதும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் சந்திரசேகரன் இருக்கவில்லை. சிங்கள ஆயுதப் படைகளுக்குப் போதுமான உயிர்ச்சேதமும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது என வாதித்த சந்திரசேகரன், மேற்கொண்டும் போர் அழிவுகள் ஏற்பட்டால் அரசு ஆட்டம் கண்டு தகர்ந்துவிடும் என்றும் அத்தகைய நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்க இந்திய அரசு விரும்பவில்லை என்றும் விளக்கினார். போர் நிறுத்தத்திற்கும் பேச்சுக்கும் ஜெயவர்த்தனாவை இணங்க வைப்பதற்கு ராஜீவ் காந்தியும், ரொமேஸ் பண்டாரியும் மிகச் சிரமமான இராஜதந்திர முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்தது என்றும் சொன்னார். தமிழ் விடுதலைப் போராளி அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்த ஜெயவர்த்தனா இணங்கியமையானது தமிழ்ப் புரட்சி வாதிகளுக்குக் கிட்டிய சட்டரீதியான அங்கீகாரம் என விளக்கிய சந்திரசேகரன், ஆயுதம் தரித்த விடுதலை இயக்கங்களைத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டே சிங்கள அரசு பேச வருகிறது எனக் குறிப்பிட்டார். பேச்சுக்கள் இடை நடுவே முறிந்து போனாலும் தமிழ் போராளி அமைப்புக்களை | இந்திய அரசு கைவிடாது என உறுதியளித்த அவர், இந்தியாவின் வழிநடத்தலுக்கு அமையப் போர்நிறுத்தம் செய்து, பேச்சுக்களில் பங்குபற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். இறுதியாக, மிகத் தயக்கத்துடன் பிரபாகரனும் ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் போர்நிறுத்தத்திற்கு இணங்கினர். சிறீலங்கா அரசாங்கத்திற்குத் தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் மத்தியிலான அதிகாரப்பூர்வமான போர்நிறுத்தம் 1985 ஜுன் மாதம் 18ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட கால அட்டவணையைக் கொண்ட நான்கு கட்டங்களாகப் போர்நிறுத்தம் அமையப் பெற்றது. ஒவ்வொரு கட்டத்திலும் சில நடைமுறைகளை இரு தரப்பினரும் பேண வேண்டும். இறுதிக் கட்டத்தில் போர் நெருக்கடி தணிந்து முழுமையான போர்நிறுத்தம் செயலுக்கு வரும். இந்த நான்கு கட்டப் போர்நிறுத்த உடன்பாட்டு விதிகள் குறித்துப் பிரபாகரன் திருப்தி கொள்ளவில்லை. சிங்கள ஆயுதப் படைகளினதும், ஆயுதம் தரித்த சிங்களக் குடியேற்றவாசிகளதும் வன்முறையிலிருந்து தமிழ்ப் பொதுமக்களுக்குப் போர்நிறுத்த உடன்பாட்டில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிக்கப்படவில்லை. இது பிரபாகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழரின் இனப்பிரச்சினை குறித்து, ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை அரசை எமது இயக்கம் வற்புறுத்தவேண்டுமெனப் பிரபாகரன் விரும்பினார். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் கூட்டுத்தலைமை வாயிலாக எமது கருத்துக்களை வெளியிடுவதே சாலச்சிறந்தது என நான் பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்கினேன். இதன்படி, போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த அன்றைய நாள் ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் அவசர கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தோம். இக்கூட்டத்தில் போர் நிறுத்தம், தீர்வுத் திட்டம் பற்றி எமது இயக்கத்தின் கருத்துக்களை ஏனைய அமைப்புகளின் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். போர் நிறுத்த உடன்பாட்டில் பல குறைபாடுகள் உள்ளன என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.

பேச்சுகளுக்கு அடிப்படையாக ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டுமென இந்தியா மூலம் கோருவது என்ற பிரபாகரனின் யோசனையை முன்னணித் தலைவர்கள் கருத்தொற்றுமையுடன் ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசுக்குக் கையளிக்கும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் மகஜரைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மகஜர் எழுதி முடிந்ததும் பிரபாகரனும் ஏனைய முன்னணித் தலைவர்களும் அதில் கைச்சாத்திட்டனர். பின்னர் அந்தக் கூட்டறிக்கை றோ புலனாய்வு அதிகாரிகள் மூலமாகப் புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கூட்டறிக்கையில் சில முக்கிய பத்திகள் வருமாறு :

“எமது விடுதலை அமைப்புகளைச் சேர்ந்த சுதந்திரப் போராளிகளுக்கும் சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கும் மத்தியில் பகை நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்குடன் இந்திய அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை நாம் மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்தோம். இந்திய அரசின் மத்தியஸ்துவத்தையும் நல்லெண்ண சமரச முயற்சிகளையும் மனமார வரவேற்று எமக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகளையும் உத்தரவாதங்களையும் ஏற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் போர் நிறுத்தம் செய்வதென இம்மகஜரில் கைச்சாத்திட்ட நாம் கூட்டாக முடிவெடுத்துள்ளோம். எமது முடிவு ஒரு நல்லெண்ண சூழ்நிலையையும் இயல்பு நிலையையும் உருவாக்கிக் கொடுக்கும் என நம்புகிறோம். இந்தச் சமரசப் புறநிலையை ஏதுவாகக் கொண்டு சிறீலங்கா அரசாங்கம் ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கு மென எதிர்பார்க்கின்றோம். இத்தீர்வுத் திட்டம் எமக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்திருந்தால் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியற் தீர்வு காண்பது குறித்துப் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம்”.

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் போர் நிறுத்தம் செய்ய நாம் இணங்கியபோதும், போர் நிறுத்த உடன்பாட்டில் விதிக்கப்பட்ட கடப்பாடுகளும் நிபந்தனைகளும் எமக்கு அனுகூல மற்றவையாகவே உள்ளன. இவை குறித்து எமது கருத்துக்களையும், மாற்று யோசனைகளையும் இங்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

போர் நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து, அரசியற் தீர்வு குறித்து ஒரு விபரமான உருப்படியான திட்டத்தைச் சிறீலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த அரசியல் தீர்வுத்திட்டம் எம்மால் ஏற்றுக்கொள்ள கூடியதாக அமைந்தால் மட்டுமே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக நாம் எடுத்துக்கூற விரும்புகின்றோம். தமிழரின் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க மறுத்து, காலம் காலமாக மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள அரசுகள், தமிழ் மக்களை ஏமாற்றி இழைத்த நம்பிக்கைத் துரோகத்தின் கசப்பான வரலாற்று அனுபவத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அத்துடன் சிங்கள அரசுகள் தமிழ்த் தலைவர்களோடு செய்து கொண்ட உடன்பாடுகள் ஒப்பந்தங்களை நிறைவு செய்யாது முறித்துக் கொண்டமையும் உலகறிந்த உண்மை. அது மட்டுமின்றி, தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதைக் தட்டிக் கழித்து இழுத்தடிக்கும் ஒரு மோசமான நடைமுறையையும் சிங்கள அரசு கடைப்பிடித்து வருகிறது என்பதையும் நாம் இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆகவே, இந்த ஏமாற்று அரசியல் வித்தையில் நாம் பலிக்கடாவாக விரும்பவில்லை. அதனால்தான், பேச்சுக்களில் பங்குகொள்வது பற்றி நாம் தீர்மானிப்பதற்கு முன்பாக ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தைச் சிங்கள அரசு முதலில் எமது பரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்.

ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் புதுடில்லியில் சாதகமான வரவேற்பைப் பெறவில்லை . டில்லியிலிருந்து என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட திரு.சந்திரசேகரன் எமது நிலைப்பாட்டில் இந்திய அரசு அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குச் சிறீலங்கா அரசு மீது ஈழத் தேசிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனையை விதித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு கருதுவதாக அவர் விளக்கினார். எமது மகஜர் குறித்து இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை நான் பிரபாகரனிடம் எடுத்துக் கூறினேன்.

இப்பிரச்சினை குறித்து முன்னணித் தலைவர்கள் அவசர சந்திப்பு ஒன்றை நிகழ்த்திக் கலந்துரையாடினர். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னராக இலங்கை அரசு ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் நாம் உறுதி பூண்டு நிற்கவேண்டும் என பிரபாகரனும் ஏனைய கூட்டணித் தலைவர்களும் ஏகமனதாக முடிவெடுத்தனர். முன்னணித் தலைவர்களின் முடிவை திரு.சந்திரசேகரன் மூலமாக நான் டில்லிக்குத் தெரியப் படுத்தினேன். எமது விடாப்பிடியான நிலைப்பாடு குறித்து ஆத்திரமடைந்த சந்திரசேகரன், பிரபாகரனையும் ஏனைய கூட்டணித் தலைவர்களையும் விரைவில் இந்திய அரசு டில்லிக்கு அழைத்துத் தனது அதிருப்தியை நேரில் தெரியப்படுத்தும் என எச்சரித்தார். ராஜீவ் அரசுக்கும் தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் மத்தியில் நேரடியான முரண்பாடும் மோதலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது போல எனக்குத் தென்பட்டது.

1985 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 3 ஆம் நாள், பிரபாகரனும் நானும், ஏனைய கூட்டணி அமைப்புகளின் தலைவர்களும் அவர்களது அரசியல் உதவியாளர்களும் இந்திய இராணுவ விமானம் மூலம் புது டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தலைநகரின் மையத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டோம். நாம் அங்குச் சென்றதும் றோ புலனாய்வு அதிகாரிகளும் இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த உயரதிகாரிகளும் மாறி மாறி எம்மைச் சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கவுரைகள் அளித்தார்கள். தமிழ்ப்புரட்சி அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு ஜெயவர்த்தனாவை இணங்க வைப்பதற்கு ரொமேஸ் பண்டாரி மேற்கொண்ட இராஜதந்திர சாணக்கியத்தைப் பாராட்டினார்கள். இந்தியாவுக்கு இது ஒரு இராஜதந்திர வெற்றி எனக் குறிப்பிட்ட அவர்கள், இதன் மூலம் தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூறினார்கள். ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்கள் சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கக்கூடாது என்பதே இந்த விளக்கவுரையின் அடிநாதமான வேண்டு கோளாக அமைந்தது.

இந்திய அரசு அதிகாரிகளின் அறிவுரைகளும் அழுத்தங்களுக்கும் பிரபாகரனும் சரி, ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் சரி, பணிந்து இணங்கிப் போகவில்லை. எல்லோருமே ஒருமித்த கருத்துடன் தமது நிலைப்பாட்டில் உறுதிபூண்டு நின்றனர். முடிவின்றி இழுபட்டுக் கொண்டிருந்த இப்பிரச்சினை இறுதியாக றோ புலனாய்வுத்துறை அதிபர் திரு. சக்சேனாவிடம் கையளிக்கப்பட்டது.

புதுடில்லியிலுள்ள தனது தலைமைச் செயலகத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தார் திரு.சக்சேனா. பல மாடிகளைக் கொண்ட வானளாவிய பிரமாண்டமான கட்டிடம். கட்டிட வாசலிலே ஆயுதம் தரித்த கரும்பூனை அதிரடிப் படைவீரர்கள் எம்மைச் சூழ்ந்து கொண்டு, உயர்மாடியிலுள்ள சக்சேனாவின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். கடுமையான முகத்துடன் முறைப்பான பார்வையுடன் எமக்காகக் காத்திருந்தார் றோ அதிபர். அவரது அகன்ற மேசைக்கு முன்னால் இருந்த நாற்காலிகளில் பிரபாகரனும் நானும் மற்றும் ரெலோ தலைவர் சிறீசபாரெத்தினம், ஈரோஸ் தலைவர் பாலகுமார், ஈ.பி.ஆர.எல்.எவ் தலைவர் பத்மநாபா ஆகியோர் அமர்ந்து கொண்டோம். முதலில் தனது உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டுத் தனது வழக்கமான பாணியில், கனத்த குரலில் நேரடியாகவே விடயத்திற்கு வந்தார். தமிழரின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நேர்மையான முயற்சிக்குத் தமிழ்த் தீவிரவாதத் தலைவர்கள் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திக்கூறிய திரு. சக்சேனா ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

உங்களது விட்டுக்கொடாத கடும்போக்கைப் புதிய இந்திய அரசு பொறுத்துக்கொள்ளாது. உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான புகலிடச் சலுகைகளை மறுக்கவும் தயங்காது என மிரட்டினார் சக்சேனா. பூட்டான் தலைநகரமான திம்புவில், இன்னும் இரு வாரங்களில் பேச்சக்கள் ஆரம்பமாக உள்ளன. இப்பேச்சுக்குள் நிபந்தனையற்ற முறையில் நடைபெறும். பேச்சுக்களில் பங்குபற்ற நீங்கள் மறுத்தால், இந்திய மண்ணிலும் இந்திய கடற்பரப்பிலும் நீங்கள் செயற்பட முடியாது போகும் என்று கண்டிப்பான குரலில் கத்தினார். நான் வசனத்திற்கு வசனம் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். ஆத்திரத்தை விழுங்கியபடி துயரம் தோய்ந்த முகங்களுடன் சக்சேனாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் போராளி அமைப்புகளின் தலைவர்கள். ஏதோ சொல்வதற்காக வாயசைத்தார் பத்மநாபா. ஆனால் சப்தம் வெளிவராது தொண்டைக்குள் மடிந்து போயிற்று. மௌனம் சாதித்தபடி ஆழமான சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார் பிரபாரகன். கெரில்லாத் தலைவர்களின் கொதிப்புணர்வைப் புரிந்து கொண்ட சக்சேனா, நான் கூறியவற்றை நீங்கள் ஆழமாகப் பரிசீலனை செய்து, ஆக்கபூர்வமான பதிலை நாளைய தினம் கூறினால் போதும் என்றார், அத்துடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.

நாம் அனைவரும் விடுதிக்கு திரும்பிய உடனேயே ஒரு அவசரக் கலந்துரையாடலை நிகழ்த்தினோம். தனது கருத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிவித்தார் பிரபாகரன். பேச்சுக்களில் பங்குகொள்ள மறுத்து வீணாக இந்திய அரசைப் பகைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் பங்குகொண்டு எமது போராட்ட இலட்சியத்தைக் கைவிடாது எமது அரசியல் கொள்கையை எதிரியிடம் எடுத்துச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்திய அரசைப் பகைக்காமல் ஈழத் தேசிய விடுதலை முன்னணி பேச்சுக்களில் கலந்து கொள்வதுதான் சிறந்த வழி என்றார் பிரபாகரன். அவரது நிலைப்பாட்டையே நானும் ஆதரித்தேன். ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் புலிகளின் தலைவரது கருத்தை ஏகமனதாக ஆதரித்தனர். நிபந்தனையற்ற முறையில் சமாதானப் பேச்சுக்களில் பங்கபற்றுவது என்ற ஈழத்தேசிய விடுதலை முன்னணித் தலைமையின் முடிவு மறுநாள் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அன்ரன் பாலசிங்கம்

அடுத்து வரும் பதிவு : திம்புப் பேச்சுக்கள்

“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.