மேஜர் சுருளி

In வீரத்தளபதிகள்

மேஜர் சுருளி
கந்தசாமி சிறிதரன்
யாழ்ப்பாணம்
30.05.2000

சிறிலங்கா படை ஊர்திகள் யாழ். நகர வீதிகளில் அரக்கத்தனமாக, வலம் வரும் காலம். ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள். இரவு வருவதற்காக போராளிகள் காத்திருப்பார்கள். இரவுக்காக காத்திருக்கும் புலிகளில் சுருளியும் ஒருவன்.

அவனது போராட்ட வாழ்வு பெரும்பாலும் இரகசியம் நிறைந்ததும், மறைவானதுமாகவே இருந்தது.

அன்றைய இரவுகள் மிகப் பயங்கரமானவை. எந்த வீதியிலும், எங்கும் படை ஓநாய்கள் வாய்பிளந்து நிற்கும். சில நேரங்களில் இரவின் அமைதியை துப்பாக்கிகளின் வேட்டுக்கள் கலைக்கும்.

ஒரு போராளியோ, அல்லது ஏதாவதொரு வேலைக்குப் போன தமிழ்மகனோ வீதியை முத்தமிட்டுக் கிடப்பான்.

சுருளி இயக்கத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்டதுமே அவனுக்கு கிடைத்த வேலை, எமது இயக்கத்தின் பெறுமதிமிக்கவையான ஆயுத, தளபாடங்கள், ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பே ஆகும். அந்த நேரங்களில் எம்மிடமிருந்தவையே சில ஆயுதங்கள் தான். அவற்றை இழந்துவிட நாம் ஒருபோதுமே தயாராக இல்லை. ஏனென்றால், எங்கள் விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுக்கும் உன்னதமான கருவிகள் அவை. அவற்றைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு போராளியும் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தான். அப்படிப்பட்டதொரு பொறுப்பான வேலைதான் சுருளிக்கும் கிடைத்தது.

பண்டிதர் அண்ணை தான் அந்த நாட்களில் இயக்கத்தின் பல்வேறு வேலைகளுக்கும் பொறுப்பாக நின்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். அந்த நெருக்கடி மிகுந்த நேரங்களில் பண்டிதர் அண்ணைக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டவர்களில் சுருளியும் ஒருவன். பண்டிதருக்கு சுருளியும் ஒரு செல்லப்பிள்ளை. பண்டிதர் அவனில் மிகுந்த அன்பை வைத்திருந்தார். அதே நேரம் பெரும் நம்பிக்கையையும் வைத்திருந்தார். அவரின் கைகளிற்குள் நின்று சுற்றிச்சுழன்று வேலை செய்தவன் சுருளி. அவரின் கைகளிற்குள்ளேயே வளர்ந்தவன். அவனைப் போன்ற இரவுப் பறவைகளின் பறப்புக்கள்தான் இயக்கத்தைக் காத்தது. போராட்டத்தை வளர்த்தது.

இயக்கத் தளபாடங்களை பாதுகாத்தல் என்பது இலகுவானதொன்றல்ல, மிகவும் கடினமான பணி. இரவு முழுவதும் ஆந்தை மாதிரி கண்விழித்து வேலை செய்ய வேண்டும். மழையிற்கும், வெயிலுக்கும் பாதுகாக்க வேண்டும். அதே நேரம் எதிரியின் கழுகுக் கண்களிற்கும் மறைக்க வேண்டும். இதில் ஏற்படும் சின்னத் தவறு கூட இயக்கம் ஓர் ஆயுதத்தை இழக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம்.

சுருளி எவருடனுமே இலகுவாகப் பழகுவான். அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விடுவான். அவனது அந்த இயல்பே அவனுக்கு வழங்கப்பட்ட வேலைக்கு பெரும் உதவியாக இருந்தது. அவனுடைய தோழர்கள் அவனைக் கேலி செய்வதுண்டு. எப்பவுமே சிரித்தபடி திரிகிறாயடா என்று, கள்ளங் கபடமற்ற இந்தப் பிறவி ஓர் உயர்ந்த போராளியாக வாழ்ந்தான்.

அந்த நேரத்தில் தான் ஒரு கடுமையான சுற்றிவளைப்பிற்கு உட்பட்டு பண்டிதர் அண்ணையும், எங்களின் சில தோழர்களும் வீரச்சாவைத் தழுவினர். பண்டிதர் அண்ணையின் வீரச்சாவு சுருளியை நன்றாகவே பாதித்தது. இயக்கத்திற்கு வந்தநாள் தொடக்கம் பண்டிதருக்கு பக்கத்திலேயே திரிந்த அவனால் அவரின் இழப்பைத் தாங்க முடியாமலிருந்தது. அன்று தொடக்கம் எத்தனையோ இரவுகளில், பண்டிதரின் நினைவுகள் இவனது விழிகளை நனைத்திருக்கிறது.

பண்டிதரின் வேலைகளை மேஜர் அல்பேட் பொறுப்பெடுத்த பொழுது, அல்பேட்டுடன் இணைந்து சுருளியும் வேலைகளைச் செய்தான். யாழ். சிறிலங்கா காவல்துறை நிலையத்தின் மீது புலிகள் தாக்குதலை நடாத்திய பொழுது அல்பேட்டின் தலைமையில் சுருளியும் கலந்து கொண்டான். அந்த வேளைதான், படை முகாம்களை நாம் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தகாலம். அதன்போது பல தாக்குதல் நடவடிக்கைகளில் சுருளியும் ஒருவனாக பங்கு பற்றினான்.

யாழ் மாவட்டத்தில் உள்ள சுதுமலை கிராமம் தான் அவனது பிறப்பிடம். அங்குள்ள அம்மன் கோயிலடியில் ஓடித்திரிந்து வளர்ந்த பிள்ளை அவன். கோயிலடி வீதியிலும், மழை வெள்ளக் காலங்களிலும் வயல் வெளிகளிலும் விளையாடித் திரிந்த இவனின் நெஞ்சத்தில் விடுதலை உணர்வும் துளிர்க்கத் தொடங்கியது.

அது ஆயுதப் போராட்டத்தின் தொடக்க காலம். விடுதலை இயக்கம் எது சமூக விரோதக் கும்பல்கள் எதுவென பிரித்தறிய முடியாத நிலை. நரிகளெல்லாம் புலி வேசம் போட்டு நின்றன. உண்மையான விடுதலை இயக்கமொன்றுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற தாகம் சுருளியில் படிந்து கொண்டது. அவனுடன் அவனது கிராமத்து நண்பர்கள் சிலரும் சேர்ந்து கொண்டனர்.

அவர்கள் தெரிந்து கொண்டதெல்லாம், தலைவர் பிரபாகரனைப் பற்றி, அவரின் வீரத்தைப் பற்றி, அவரால் வகுக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் பற்றித்தான். புலிப்படையைத் தேடி அவர்கள் அலைய வெளிக்கிட்டார்கள். புலிகள் மட்டும் கண்ணுக்குத் தெரியவே இல்லை. மற்றும்படி எல்லா இயக்கத்தவர்களும் கால்களிற்குள் நின்றனர். “இயக்கத்தில் சும்மா ஆள்ப் பொலிவுக்கு சேரக்கூடாது. செயற்பட வேண்டும், ஒழுங்கும், கட்டுப்பாடும் வேணும், அதோடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் உறுதியும் தீவிரத்தன்மையும் வேணும். இதை எல்லாம் பார்த்துத் தான் நாங்கள் இயக்கத்தில் சேரவேண்டும்” என்று கூறி தன் நண்பர்களை தவறான வழிகளிற்கு சென்று விடாமல் பார்த்துக் கொண்டான் சுருளி.

இறுதியில் அவன் தான் எங்கோ அலைந்து புலிகளில் ஒருவரைச் சந்தித்துக் கொண்டான்.

அந்த நேரங்களில் தான், ஒரு நாள், மானிப்பாய் கிராமங்களை துப்பாக்கி வேட்டோசைகள் கண்விழிக்கச் செய்தன. காலை 6 மணிக்கு, பொது போக்குவரத்து பேரூந்தொன்றை மறித்த பச்சைப்பேய்கள் அதிலிருந்தவர்களை இறக்கி, வரிசையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர்.

காலையில் படிப்பதற்காக வந்த மாணவர்கள், பேரூந்து ஓட்டுனர் இன்னும் பொது மக்கள் சிலர் – உடல் சிதறி உயிரற்றுக் கிடந்தார்கள். அந்த படை மிருகங்கள், இந்தச் செய்தி தெரியாது வந்த சிற்றூந்து ஒன்றையும் மறித்து அதில் ஏறினர். அந்த சிற்றூந்து மானிப்பாயிலிருந்து மாதகல் படை முகாமை நோக்கி ஓட வெளிகிட்டது. அது ஓர் துயரம் நிறைந்த நிகழ்வு. அந்த சிற்றூந்துக்குள் இருந்த ஒவ்வொரு தமிழனும் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டான். சுடப்பட்டு வீதி வீதியாக வீசப்பட்டார்கள். அந்தப் பச்சை மிருகங்களின் கோரப்பற்கள் எங்கள் தேசத்தின் வீதிகளை சிதைத்துச் சென்றன.

அந்த நிகழ்வின் பின்பு, வெளியில் வாழ்வதற்கு சுருளியின் மனம் இடந்தரவில்லை. அவன் ஓர் முழுமையான போராளியாக மாறிவிட்டான். பண்டிதர் அண்ணையுடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கினான்.

காலங்கள் ஓடின. விடுதலைப் போராட்டம் தொடர்ந்தது. சுருளியின் தம்பிகளில் ஒருவனான ரதிதரனும் புலிகளுடன் இணைந்து கொண்டான்.

இந்தியப்படைகள் தமிழீழ தேசத்தின் மீது ஆக்கிரமிப்பை நடாத்தி, ஓர் போரைத் தொடங்கிய நேரம் எம் தேசமெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ்ப் பெண்களில் பலர் படு மோசமாக பாலியல் வன்முறைக்காளானார்கள். இந்த மண்ணை நேசித்தவர்கள் பலர் பிடித்துச் செல்லப்பட்டார்கள். சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். தமிழீழ தேசத்தில் விலக இடமின்றி இந்தியர்கள் நிறைந்து போய் நின்றார்கள்.

அந்த நிலைகளில், ஆயுத தளபாடங்களையும், ஆவணங்களையும் பாதுகாப்பதற்காக சுருளியும் அவன் தோழர்களும் கடுமையாகப் போராடினார்கள். அந்த நாட்களில் அவர்கள் விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாத்தார்கள். அதற்காக ஆயுதங்களை பாதுகாத்தார்கள்.

சில நாட்கள் சென்றன. இந்தியப் படைகள் சுருளியைத் தேடத் தொடங்கினார்கள். சுருளியின் வீடு அடிக்கடி சுற்றிவளைக்கப்பட்டது. போராட்டத்திற்காக இருவரைத் தந்த அவனின் குடும்பம் கொடுமையான சித்திரவதைக்காளானது. பல ஆண்டுகளாக இருந்த பகையுணர்வை தேசவிரோதி ஒருவன் இந்தியர்களுடன் சேர்ந்து நின்று தீர்க்கத் தொடங்கினான்.

அப்போது தான் ஒரு நாள் சுருளியின் தம்பி ரதிதரனும், அவனது தோழர்களும் இந்தியப் படைகளாலும், தேசவிரோதிகளாலும் சுற்றி வளைக்கப்பட்டார்கள். சின்னதொரு சண்டை. ரதிதரனின் உடலிலும் சிலரவைகள் பட்டன. அவனது தோழர்கள் தப்பிச் சென்றார்கள். ரதிதரனின் உயிரற்ற உடலை இந்தியச் படையினர் வீதியால் இழுத்துச் சென்றார்கள். இந்த மண்ணை நேசித்த போராளி ஒருவன் தேசவிரோதிகளாலும், இந்திய படையினராலும் இந்த தேசத்தின் தெருக்களின் வழியே இழுத்துச் செல்லப்பட்டான்.

இந்திய படையினர் இங்கு நின்ற பொழுது, சில காலம் வன்னியில் நின்ற சுருளி, மீண்டும் யாழ்ப்பாணத்தில் வந்து நின்று செயற்படத் தொடங்கினான். ஆபத்து நிறைந்த அந்த நேரங்களில் சுருளியும், அவனது தோழர்களும் மிக அவதானமாகச் செயற்பட வேண்டி இருந்தது. தேசவிரோதிகளும், இந்தியப் படையினரும் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி முகாமிட்டு நின்றார்கள். தமிழீழ மக்கள் இந்தியத் துப்பாக்கிகளின் முனைகளில் – நின்று – வாழ்ந்தனர்.

அந்த நேரம் தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்களை மறைவிலிருந்து எடுக்க வேண்டியிருந்தது. ஏனையவற்றைப் பாதுகாக்க வேண்டி இருந்தது. இதற்காக சுருளியும், அவனது தோழர்களும் நம்பிக்கையானவர்களைத் தேடி அலைய வேண்டியிருந்தது.

இந்தியப் படைகள் இந்த மண்ணை விட்டு வெளியேறிய பின்பு, புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இணைந்து சுருளி செயற்பட்டான்.

சுருளி கொடுக்கப்படும் எந்த வேலையையும் பொறுப்புணர்ச்சியுடன், சிறப்பாகச் செய்து முடிப்பவன். பண்டிதரிடமிருந்து இவனில் தாவிக் கொண்டதில் ஒன்று எளிமை.

தன்னைக் கவனியாது, ஒரு மிதிவண்டியில் கிராமத்து வீதிகளால் ஏதோ ஒரு வேலைக்காக ஓடித்திரியும் சுருளி…… ஓர் வெடி விபத்தில் சிக்கினான்.

மூன்று நாட்கள், அவன் சாவுடன் போராடினான். ஆனாலும் 30.05.1991 அன்று மேஜர் சுருளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டான்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.