தலைவரை அன்னிய சக்திகளிடமிருந்து பாதுகாத்த இதய பூமி – வன்னிக்காட்டு வீரத்தின் அடையாளம் வணங்கா மண் மணலாறு!.

In தமிழீழத் தேசியத்தலைவர்

தலைவரை அன்னிய சக்திகளிடமிருந்து பாதுகாத்த இதய பூமி – வன்னிக்காட்டு வீரத்தின் அடையாளம் வணங்கா மண் மணலாறு!.

-எவரும் அறிந்திராத வரலாற்றுத் தடம்!.-

அது இயற்கை வனப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு அழகான பூமி. தமிழர்களின் தாயக நிலப்பரப்பான வடக்கையும் கிழக்கையும் இணைத்துவைத்திருக்கின்ற இதயபூமி என சிறப்புப்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ‘மணலாறு’ எனும் பிரதேசம்.

தமிழர் தாயகத்தைப்பொறுத்தவரையில் காடுகளுக்குப்பெயர்போன இடங்களில் மணலாற்றுக்காடும் தனக்கேயுரிய தனித்துவத்தைப்பெறுகின்றது. பார்க்கின்ற இடமெங்கணும் பசுமையான இலைகளைக்கொண்ட ஓங்கி உயர்ந்த மரங்களால் சூழப்பட்ட காடுகளைக்கொண்ட பிரதேசம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மணலாற்றுக்காடு தனக்கான அத்தியாயத்தை பதித்துள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கொக்கிளாய் கருநாட்டுக்கேணி கொக்குத்தொடுவாய் ஆகிய தமிழ்க்கிராமங்களைக்கொண்ட நெய்தல் நிலத்தையும் உள்ளடக்கியிருப்பது இந்தப்பிரதேசத்திற்குரிய தனித்துவமான சிறப்பியல்பு ஆகும். இந்த நெய்தல் நிலத்தில் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த மக்கள் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் சிங்களப்படைகளால் விரட்டியடிக்கப்பட்டு ஏதிலிகளாக்கப்பட்டனர்.

நான்கு தசாப்த காலமாக அகதி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் இந்த 2012-ம் ஆண்டில்த்தான் அநேகமான மக்கள் அந்தப்பகுதிகளில் மீள் குடியேறினார்கள் இதன் பெரும் பகுதி இப்போது சிங்கள மயமாகியுள்ளது.

மணலாறு என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது மணலாற்றுக்காடுதான். காலத்திற்குகாலம் பல போர்க்களங்களைக்கண்ட பூமியாக இந்த இதயபூமி விளங்குகிறது. நாயாற்றுப்பாலத்தைக்கடந்துவிட்டாலே மணலாற்றுக்காட்டுக்குள் பிரவேசித்துவிட்டதான பிரமையொன்று தோன்றும். மெல்லிய காற்று வீசும்போது மரக்கிளைகளின் மெல்லிய சலசலப்பு ஓசைகளும் ஆட்காட்டிக்குருவிகளின் சத்தங்களும் இடையிடையே கேட்கும் ஏனய காட்டுப்பறவைகளின் கானங்களுமாக அந்த வனப்பகுதியில் நிற்கின்றபோதெல்லாம் ஒருவிதத்தில் மனதிற்கான அமைதியை உணரமுடிந்தது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் அண்டை சர்வாதிகார நாட்டவர்களான இந்தியப்படையினர் அமைதிப்படை என்ற வேடத்துடன் அன்னை மண்ணில் கால் பதித்தார்கள். இந்தியப்படையினர் தாயகத்திற்கு வந்தபோது தம்மை வசந்தம் தழுவிக்கொண்டதாகவே தமிழீழ மக்கள் எண்ணி மகிழ்ந்தனர். ஆனாலும் காக்கவந்தவர்களே தாக்கத்தொடங்கியபோது விழித்துக்கொண்டது எம் தேசம். அமைதிப்படையான இந்தியப்படையினர் தமது அமைதி வேடத்தை கலைத்து அதற்கு மாறான ஆக்கிரமிப்பு நாடகத்தை அரங்கேற்றத்தொடங்கியிருந்தனர். இந்த நிலையில்த்தான் விடுதலைப்புலிகள் இந்தியப்படையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தாயகத்தில் அனைத்து இடங்களிலும் இந்தியப்படையினர் நிலைகொண்டிருந்ததோடு சுற்றிவளைப்புக்கள் தேடுதல்கள் கைதுகள் என்பவற்றையும் தீவிரப்படுத்தியிருந்தனர்.

அன்றய காலத்தின் ஆட்பலம் ஆயுதபலம் மற்றும் களச்சூழ்நிலைகளைக்கருத்திற்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைமை மணலாற்றுக்காட்டை தளமாக வைத்துக்கொண்டு போராட்டத்தேரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான செயற்திட்டத்தை முன்னெத்திருந்தது. அதற்கமைவாக தளபதிகளான பிரிகேடியர் சொர்ணம், பிரிகேடியர் பால்ராஜ் ஆகியோர் சந்திக்குச்சந்தி நிலைகொண்டிருந்த இந்தியப்படைகளின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு தலைவர் பிரபாகரன் அவர்களையும் அவரது மெய்பாதுகாப்பு அணியினரையும் பாதுகாப்பான முறையில் மணலாற்றுக்காட்டிறகு கூட்டிச்சென்றார்கள். இது உண்மையில் அன்றய நாட்களில் பிரிகேடியர் சொர்ணம், பிரிகேடியர் பால்ராஜ் ஆகியோர்களது துணிச்சலான சாதனை என்று கூறினால் அது மிகையாகாது.

தலைவர் பிரபாகரனைத்தேடி சந்துபொந்தெல்லாம் வலைவிரித்திருந்தனர். இந்தியப்படையினர். எப்படியோ தலைவரின் இருப்பிடத்தை அறிந்துகொண்ட இந்தியப்படையினர் தமது முழுப்பலத்தையும் திரட்டி விடுதலைப்புலிகளின் தலைமையை அழிப்பதற்கான படைநடவடிக்கைகளை மூன்று கட்டங்களாக பெருமெடுப்பில் மேற்கொண்டிருந்தனர். தலைவர் பிரபாகரன் உயிருடனோ அல்லது இறந்த பின்னர் அவரின் உடலோ தேவை என்ற வெறித்தனத்துடன் இந்தியப்படையினர் மணலாற்றுக்காட்டின் மீதான படைநடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆனாலும் விடுதலைப்புலிகளின் வீரம்செறிந்த எதிர்த்தாக்குதல்களால் இந்தியப்படையினர் பாரிய இழப்புக்களைச்சந்தித்தனர். அத்தோடு மணலாற்றுக்காட்டிலேயே தயாரித்த ஜொனிமிதிவெடிகளை இந்தியப்படையினர் முன்நகரும் பாதைகள் எங்கும் புதைத்துவிட்டனர் போராளிகள். இந்தியப்படையினர் பெருமெடுப்பில் முன்னேறிய சந்தர்ப்பங்களிலெல்லாம் புதைக்கப்பட்ட ஜொனிமிதிவெடிகள் ஆக்கிரமிப்புப்படைகள் கால் பதித்த இடமெல்லாம் வெடித்துபேய்தான் அடிக்கிறது என்றுகூறி அவர்களின் கால்ப்பாதங்களைக்களற்றின. தொடரான இழப்புக்களைச்சந்தித்த இந்தியப்படையினர் மணலாற்றுக்காட்டில் புலி அடிக்கவில்லை. பேய்தான் அடிக்கிறது என்றுகூறி தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கினர்.

விடுதலைப்புலிகளின் தலைமையையும் மணலாற்றுக்காட்டையும் பாதுகாப்பதற்காக ஆக்கிரமிப்புப்படைகளுடன் சமர்க்களமாடிய வீரமறவர்கள் பலர் தமது உயிர்களை தமிழீழத்தாய்க்கு காணிக்கையாக்கியிருந்தார்கள். அன்றய களச்சூழலுக்கு ஏற்றாற்போல அந்த மாவீரச்செல்வங்களின் வித்துடல்கள் இதயபூமித்தாயின் மடியிலேயே விதைக்கப்பட்டார்கள். அந்த மாவீரர்களின் விதைகுழிகள் அவர்களின் வீரவரலாறுகளை பறைசாற்றுகின்றன. வெளித்தெரியாத சோகமான கதைகள் பல இந்த இதயபூமியில் புதைந்துள்ளன. சில பகுதிகளில் சூரிய ஒளியைக்கூட கண்களால் காணமுடியாதளவிற்கு மரங்கள் சடைத்து வளர்ந்திருக்கின்றன. இத்தகய இயற்கையின் சூழல்கள்தான் அன்றய நாட்களில் விடுதலைப்புலிப்போராளிகளின் தலைமறைவுவாழ்க்கைக்கும் சாதகமாக அமைந்திருந்தன. போர்க்களநாயகர்களின் தியாகங்களையும் வீரதீரச்செயல்களையும் இந்த காட்டுமரங்களும் ஆயிரம் கதைகளைச்சுமந்துநிற்கின்றன.

இந்த மணலாறு மண்ணுக்கு ’வணங்காமண்’ என்றும் ஒரு சிறப்பான பெயர் உள்ளது. உண்மையில் யாருக்கும் தலைவணங்காது தன்மானத்துடன் தலைநிமிர்ந்து நின்ற மண். ஒருகாலத்தில் போரும் வாழ்வுமாக இருந்த மண் யுத்தத்திற்குப் பின்னரான இந்த 10 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும் தனக்கான தனித்துவத்தை இழந்துநிற்கிறது. இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான சண்டைக்காலங்களில் போராளிகளை பாதுகாத்ததோடு போராளிகளின் உணவுப்பொருடகளையும் பாதுகாத்த பெருமையும் இந்த காட்டுமரங்களையே சேரும்.

அன்றயநாட்களில் போராளிகள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொதிகளை அளம்பில் செம்மலை ஆகிய கிராமங்களிலிருந்து தோள்களில் சுமந்துசென்று (கம்பாலடித்தல் முறையில். அதாவது தடிகளில் உணவுப்பொதிகளை கட்டி தோளில் சுமந்து செல்லுதல்) மணலாற்றுக்காட்டில் உயர்ந்து வளர்ந்திருக்கின்ற மரங்களின் கிளைகளில் உருத்தெரியாதவாறு கட்டி மறைத்துவிடுவார்கள். பின்னரான நாட்களில் சண்டைகள் இறுக்கமான கட்டங்களையடைந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் மரங்களில் மறைத்துவைத்த உணவுப்பொருட்கள்தான் கைகொடுத்ததாக அந்த நாட்களில் போராளிகளாகவிருந்தவர்கள் பலதடவைகள் சொல்லியிருக்கிறார்கள்.

1990ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தாயகத்திலிருந்து முழுமையாக வெளியேறியதைத்தொடர்ந்து மணலாற்றுக்காட்டிலிருந்த விடுதலைப்புலிகளின் தலைமையும் போராளிகளும் தமிழீழ நாட்டுக்குள் பிரவேசித்தபோதிலும் மணலாற்றுக்காட்டை கைவிடுவதற்கு தலைவர் பிரபாகரன் மணலாற்றுக்காட்டை கைவிடுவதற்கு தயாராக இருக்கவில்லை. அதற்கமைவாகவே லெப் கேணல் அன்பு அவர்கள் மணலாறு மாவட்டத்தளபதியாக தலைவர் பிரபாகரன் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.

லெப் கேணல் அன்பு அவர்கள் பொறுப்பாகவிருந்த காலத்திலும் பல சமர்க்களங்களைக்கண்டிருந்தது இந்த வணங்காமண். தொடர்ந்து வந்த நாட்களில் 1993-ம் ஆண்டு நவம்பர்மாதம் 11-ம் திகதி பூநகரி-நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டபோது அந்தச்சமரில் லெப் கேணல் அன்புவும் வீரகாவியமாகிவிட்டார். அந்த வீரத்தளபதியின் பெயரைத்தாங்கிய கலையரங்கம் நாயாற்றுப்பாலத்திற்கு அப்பால சிறிது தூரத்தில் அமைந்திருந்தது. ஆண்டுதோறும் அன்புவின் நினைவுநாட்களில் அந்த கலையரங்கம் அந்த மாவீரனின் வீரத்தையும் புகழையும் பறைசாற்றுவது வழக்கமாகவிருந்தது.

1995-ம் ஆண்டு யூலைமாதம் 27-ம் திகதி தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் தலைமையில் விடுதலைப்புலிகள் மணலாற்றில் அமைந்திருந்த ஐந்து இராணுவத்தளங்கள் மீதான தாக்குதலை சமநேரத்தில் தொடுத்திருந்தனர். இந்த தாக்குதலின்போது வீரச்சாவடைந்த பெண்போராளிகள் பலரின் உடலங்களை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். அந்த பெண்போராளிகளின் உடலங்களை சிங்களக்காடையர்கள் மனிதநேயமற்றமுறையில் கீறிக்கிழித்து மிகவும் கேவலப்படுத்தப்பட்டு பொலித்தீன் பைகளில்சுற்றி செஞ்சிலுவைச்சங்கத்தினர் ஊடாக விடுதலைப்புலிகளிடம் கையளித்திருந்தனர். சிஙகளக்காடையர்கள் நிகழ்த்திய இந்தக்கொடூரசசெயல் காலங்கள் கடந்துவிட்டபோதிலும் தமிழர்களின் மனங்களில் ஆறாத காயங்களை ஏற்படுத்திவிட்டன.

இலங்கை இராணுவத்தினர் மணலாறுப்பகுதியை முழுமையாக ஆக்கிரமித்த காலப்பகுதியான 2008-ம்ஆண்டின் நடுப்புகதிவரையிலும் விடுதலைக்காக போராடிய வீரப்புதல்வர்களுக்கும் வணங்காமண்ணுக்கும் நெருக்கமானதொரு உறவுப்பாலம் இருந்தது. வீரப்புதல்வர்கள் அனுபவித்த துயரங்களையெல்லாம் அந்த இதயபூமித்தாயாகிய வணங்காமண்ணைத்தவிர வேறெவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் நீண்டதொரு அத்தியாயமாகப்பதிவாகிவிட்ட வணங்காமண் இந்த ஒன்பது ஆண்டுகளாக தனது வீரப்புதல்வர்களின் முகவிரி தொலைத்துவிட்டதில் தனக்கேயுரிய கம்பீரத்தை இழந்துதவிக்கின்றது. வரலாற்றுநாயகர்களுக்கு வாழ்வளித்த வணங்காமண்.

ஈழப்பறவைகள் இணையத்துக்காக

செங்கோ வரலாற்று பதிவில் இருந்து ஈழம் புகழ் மாறன்

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.