ஈழத்தமிழரின் வீரம்பதித்த ஆனந்தபுரம்

In தமிழீழ போராட்ட வரலாறு

ஈழத்தமிழரின் வீரம்பதித்த ஆனந்தபுரம்-

‘ ஆனந்தபுரத்திலை ஆமி பொக்ஸ் அடிச்சிட்டானாம்… எங்கடை கன தளபதியளும் போராளியளும் அதுக்குள்ளையாம்…’

‘ உப்பிடி எத்தினை பொக்ஸை உடைச்சுவந்த எங்கடை பிள்ளையள்… எப்பிடியும் உடைச்சுப்போட்டு வந்துவிடுவினம்……. ‘

தங்களுடைய தலைகளை இலக்குவைத்து ஏவப்பட்டுக்கொண்டிருந்த குண்டுகளை பொருட்படுத்தாது, தமது காவலர்களாக நிற்கும் போராளிகளைப்பற்றிய தவிப்பும் ஏக்கமும் சுமந்திருந்தார்கள் மக்கள்.

தமிழர்களின் இனஎழுச்சியை எக்காலத்திலும் அடக்கி ஒடுக்கிவருகிறது சிங்களப் பேரினவாதம்.  உரிமைகளை மறுதலித்துவரும் இந்த சிங்கள இனவாதத்தின் கோரமுகம்,  பல்வேறு காலகட்டங்களில் தமிழர்கள்மீதான படுகொலைகளாக வெளிப்பட்டிருக்கின்றது.

தமிழர்களின் வரலாறு இத்தகைய அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தனது பக்கங்களில் அவ்வப்போது பதிவுசெய்திருக்கிறது. அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு அனைத்துலகப் போர்விதிகளுக்கு முரணாக ஆனந்தபுரத்தில் இலங்கைப்பேரினவாதம் நிகழ்த்திய கொடூரம் இன்று நினைவுகொள்ளத் தக்கது.

அந்தக் கொடூரமான சம்பவம் நடைபெற்று பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் ஆறாதவடுவாக இது இன்றும் நிலைத்திருக்கின்றது.

முல்லைத்தீவு மவாவட்டத்தின் ஆனந்தபுரப்பகுதி அது. இந்தப்பகுதியில் 2009 ஏப்பிரல் மாதத்தில் முதல்வாரத்தில் மிகுந்தபரபரப்பாக இருந்தது.

‘ எப்பிடியாவது எங்கடைபிள்ளையள் ஆமியைக் கலைச்சுப்போடுவாங்கள்… நாங்கள் ஊருக்கு திரும்பிப் போவம்… ‘

இந்த நம்பிக்கையில் ஒருதுளிகூட குறையாதவர்களாக மக்கள் இருந்தார்கள்.

மக்களின் நம்பிக்கைக்கு உயிரூட்டுவதுபோல, ஆனந்தபுரத்தில் தேசியத்தலைவர் அவர்களின் தலைமையில், பாரிய ஊடுருவற்தாக்குதல் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தது.

30 ஆண்டுகால தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில், குறுகியகால மிகப்பெரிய திட்டமிடல் தாக்குதலாக ஆனந்தபுரம் தாக்குதல் அமைந்திருந்தது. மாவிலாற்றிலிருந்து தொடர்ச்சியாக பாரிய உயிர் மற்றும் படைக்கல இழப்புகளைச் சந்தித்து வந்த சிங்களப்படையினர், உலகநாடுகள் பலவற்றின் திட்டமிடலோடு, மூர்க்கமான இனவழிப்பு போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

வன்னிப்பெருநிலப் பரப்பில் பெரும்பகுதியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துவிட்ட நிலையிலும், ஆக்கிரமிப்பு இராணுவத்தை விரட்டியடிக்கும் அல்லது துவம்சம் செய்யும் உக்கிரத்தோடு, தாக்குதலுக்கான திட்டம் தேசியத்தலைவர் அவர்களால் தீட்டப்பட்டது.

தேசியத்தலைவர் அவர்கள் நேர்நின்று வழிகாட்ட, மூத்த முன்னணித் தளபதிகளும் பல நூற்றுக்கணக்கான போராளிகளும் ஆனந்தபுரக் களத்தில் நின்றனர். ஆக்கிரமித்து நிற்கும் படையினரை விரட்டி, தம்மின உறவுகளின் வாழ்நிலத்தை மீட்டெடுக்கும் ஓர்மம் அவர்களுக்குள் பொங்கிக்கொண்டிருந்தது. அனைத்துப் போர்வலுவையும் அங்கு அவர்கள் குவித்திருந்தனர்.

ஆனால், வல்லாதிக்க சக்திகள் நுட்பமான தொழில்நுட்பத்துடன் கூடிய புலனாய்வு தகவல்களை வழங்கி சிங்களப்படையினருக்கு பேருதவி புரிந்ததன. இதன்விளைவாக ஆனந்தபுரத்தில் போராளிகளின் போர்முனைப்பு எதிரிப்படைகளுக்கு கசிந்தது.

எதிர்வினையாhக சிங்களப்பேரினவாதத்தின் குரூரசிந்தனை திட்டமிட்டது. விடுதலைப் போராளிகளை சுற்றிவளைத்து, அவர்களின் விநியோக வழிகளைத் தடுத்தது. அத்துடன், அனைத்துலகப் போர்விதிமுறைகளுக்கு முரணாக, தடைசெய்யப்பட்ட போர் உபகரணங்களையும் நச்சுக்குண்டுகளையும் பயன்படுத்தி, தாக்குதலையும் மேற்கொண்டது.

மன்னராட்சிக்காலத்தின் முன்னைய வரலாற்றில் எவராலும் வெல்லப்பட முடியாத வீரனாகத் திகழ்ந்தவன் எல்லாளன் என்னும் எங்கள் மூதாதையன். எல்லாளனை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் வீரத்திறனற்ற துட்ட கெமுனு எல்லாளன்மீது தீராத பகைகொண்டிருந்தான்.

ஒருமுறை நேருக்கு நேராக நிகழ்ந்த போரில், குதிரைமீதிருந்து வழுவிய மாவீரத்தமிழ்மன்னன் எல்லாளனை, சூழ்ச்சியாக வென்று மார்தட்டிய பேரினவாத சிந்தனையிலூறிய துட்டகெமுனுவைப் போலவே, எம்மினப் போராளிகளையும் தளபதிகளையும் சூழ்ச்சியால் வீழ்த்தி வெட்கமற்று, வெற்றிக்கூச்சலிட்டது சிங்களப்பேரினவாதம். இந்திய அமைதிப்படையால் கூட அழிக்கமுடியாத தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை தாம் அழித்துவிட்டதாக அவர்கள் முரசறைந்தார்கள். ஆனால் இந்தக் கூச்சலின் பின்னணிகளை தமிழ்மக்களும் நன்கறிவர்.

இந்த நடவடிக்கையில், எக்கணத்திலும், எச்சூழ்நிலையிலும் தம்முயரை ஈகம் செய்யத் துணிந்திருந்த பிரிகேடியர்களான கடாபி, தீபன், விதுஷh, துர்க்கா, மணிவண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான ஆண்பெண் போராளிகள் மாவீரர்களானார்கள். எதிரியின் சூழ்ச்சியின் விளைவாக தாம் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்துகொண்ட நிலையிலும் பின்வாங்க மறுத்து, இறுதிக்கணத்திலும் தம் மக்களுக்காக உயிர்களை அர்ப்பணித்துச் சென்றனர் இந்த வீரப்புதல்வர்கள்.

இவர்களில் பலருக்கு பெற்றவர்கள் இருந்தார்கள். குடும்பம், மனைவி, பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக தாய்நாட்டையும் தம்மினத்தையும் நேசித்தார்கள் இவர்கள். அதனால்தான் தம்மினத்தவர்களை அழிக்கவந்த படையினரை அழிக்க வீரசபதமேற்றார்கள்.

வாளெடுத்து வெல்லமுடியாதென்று வஞ்சனையால் வீழ்த்தப்பட்டார்கள் இந்த மானமாமறவர்கள் என்பதை இந்த உலகம் அறியும். ஆனாலும் பல்வேறு சுயநலன்களுக்காக எமது மாவீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் உலகம் திரைபோட்டு மறைத்துவருகின்றது. எனினும், தாங்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த மக்களின் அச்சமற்ற வாழ்வுக்காக தங்களையே அர்ப்பணித்துச் சென்றிருக்கிறார்கள் இவர்கள். இவர்களின் உயிர்ககொடைகளை ஒருபோதும் எம்மினம் மறந்துவாழாது என்பது உறுதி.

இலங்கை என்பது ஒரேநாடு என ஒருபுறத்தில் கூவிக்கொண்டு, அதேநாட்டில் வாழும் தமிழ்மக்களை அடக்கி ஒடுக்கி இல்லாதொழித்துவிட படாதபாடுகள் பட்டுக்கொண்டிருக்கிறது சிங்களப் பேரினவாதம்.

ஆனந்தபுரம் நாங்கள் தோற்றுப்போன இடமல்ல. எங்களின் இனமானம் நிலைநிறுத்தப்பட்ட இடம். இனத்தின் துயரம்துடைக்க ஒவ்வொரு வீரத்தமிழனும் தன்னுயிரை ஒப்புக்கொடுக்கத் தயங்கமாட்டான் என்பதை எதிரிகளுக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே உணர்த்திய இடம்.

மக்களின் துயர்கண்டு துடித்தெழுந்த போராளிகள் இறுதிக்கணம் வரை அசையாது நின்று,  தாம்நேசித்த மக்களின் துயரற்ற வாழ்விற்காக தீயிற் குளித்தார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் தம் நெஞ்சிற்பதித்துக் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். மற்றவர்கள் வாழ்வதற்கான தெய்வீகத் துறவறத்தை மேற்கொண்ட இவர்களின் ஈகம் ஒப்பற்றது.

தாங்கள் போரிடுவது ஈவிரக்கமற்ற கொடிய எதிரிகளுடன் தான் என்பதை எப்போதும் எம்வீரர்கள் தெரிந்துதான் இருந்தார்கள். இவர்கள் தம்முயிர்களை தம்மினத்து மக்களுக்காகவே அர்ப்பணம் செய்தார்கள். இவர்களின் உயிர்களின்மீது ஆணைசொல்லி, முரண்களைக் களைந்து உலகத்தமிழர்கள் ஒருமித்து நிற்பதே இவர்களுக்கு செய்யும் உண்மையான வணக்கமாக அமையும்.

‘ அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை ‘

என்கின்ற வள்ளுவனின் கூற்றுப்படி, நியாயமான முறையில் கிடைக்கும் வெற்றிதான் நிலைத்து நிற்கும் என்பதை காலம் ஒருநாள் சிங்களப் பேரினவாதத்திற்கும், வல்லமைமிக்க உலகநாடுகளுக்கும் உணர்த்தும். அந்த நாளுக்காக காத்திருப்போம்.

‘ நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். இந்தவிதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும் ‘

என்ற எம் தேசியத் தலைவரது கூற்று மெய்யாகும்.

சிவசக்தி

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.