விலை போகாத தலைவன் பிரபாகரன்…!

In தமிழீழத் தேசியத்தலைவர்

வசந்தம், வறட்சி இரண்டுமின்றி வருடம் முழுதும் வெள்ளைப் பனி மட்டும் போர்த்தி நிற்கும் பூமிப்பந்தின் வடதுருவ முனை கண்ட மனிதர்களில் அடியேனும் ஒருவன். நார்வே நாடு ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களின் பெரும் படுக்கையான வடகடல், பெர்ரிங் வளைகுடா பகுதியில் வார்டோ, வாட்ரோ என்று இரண்டு சிறு நகர்கள். வருடத்தில் மூன்று மாதம் பகல் மட்டுமே உள்ள பகுதி இது.

சுமார் 1000 கி.மீ. சுற்றளவிற்குள் ஒரே ஒரு பச்சை தாவரச் செடிதான் உள்ளது. அதனை தேசியப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறது நார்வே நாட்டு அரசு. திரும்பிய திசையெங்கும் பனிவெளிகளையும், பனிமலைகளையும் மட்டுமே பார்க்க முடியும்.

ரஷ்யாவின் ஆழ்கடல் அணுகுண்டு சோதனைகள் பல இப்பகுதியில்தான் நடந்தது. பச்சைத் தாவரங்கள் துளிர்விட முடியா இப்பனிவெளிப் பரப்பில் விரைந்து பரவும் வெயில் அலைபோல் பல்லாயிரம் மழை மான்கள் மதர்த்த கொம்புகளுடன் கூட்டம் கூட்டமாய் ஓடுவது கண்டு “”இறைவா உமது படைப்புகள் எத்துணை அதிசயமானவை” என்று வியந்து கண்கள் மூடி நின்ற 1998-ம் ஆண்டின் அக்டோபர் மாத நாட்களை இப்போது நினைத்தாலும் மனம் சிலிர்க் கிறது.

சிங்களப் பேரினவாதம் வார்டோ, வாட்ரோ பகுதிகளுக்கு அகதிகளாய் கொண்டு வந்து சேர்த்த சுமார் 3000 தமிழர்களை சந்தித்து அவர்களது துன்பங்களைப் பதிவு செய்யத்தான் நான் வடதுருவ முனை வரைக்கும் வந்தது. புடைத்து விரிந்த புஜங்களும் பெருஞ்சதை தேகமும் கொண்ட கிராமத்து ரஷ்ய மீனவர் களே வெட்டச் சிரமப்படும் பெரிய வகை மீன்களை இடுப்பளவு பனியில் நின்று கொண்டு வெட்டுவது தான் அங்கே அகதித் தமிழர்களுக்குத் தரப்பட்டிருந்த வேலை. ஓராண்டுகூட தாக்குப்பிடிக்க முடியாமல் முதுகெலும்பு மரத்து நிரந்தரமாய் படுக்கையோடான பல தமிழர்களின் துயரக் கதைகளை நான் பதிவு செய்தேன். எனினும் மாலை நேரமானால் கந்தபுராணம், தேவாரம், மாவீரர் நினைவுப் பாடல்கள், இளையராஜாவின் இன்னிசை என அங்கும் சிறு வானொலிபரப்பு நடத்திய அம்மக்களின் தமிழ் வாழ்க்கை கண்டு எனக்குள் தலை வணங்காமல் இருக்க முடியவில்லை. “”ஓ சிங்கள இனவெறியே, உனக்கு நன்றி! என் தமிழை, கந்தனை, சிவபுரனை, இளையராஜாவை வடதுருவ நிலப்பரப்புவரைக்கும் கொண்டுவந்து சேர்த்த சிங்களப் பேரினவாதமே, உனக்கு நன்றி!” என என் நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்ததை இதனை சொல்லுமுன் ஒருமுறை தேடிப் பிடித்து மீண்டும் ஒருமுறை சிலிர்த்தேன்.

எனது எளிய வாழ்க்கை இன்றுவரைக்கு மாய் என்னை சுமார் 42 நாடுகளுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறது. அங்கெலாம் எனக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவங்கள் பல. அவற்றையெல்லாம் சொல்லியபின் கிளி நொச்சிக்கு வந்து சேரலாம், தேசியத் தலைவர் என ஈழத்தமிழ் மக்கள் வணங்கும் வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களை நேர் கண்டு 50 கேள்விகள் கேட்ட அனுபவத்தை சொல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆயினும் சொல் கின்ற இந்தக் காலத்தின் முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு இவ்விதழிலேயே கிளிநொச்சிப் பயணத்தை சொல்லப்போகிறேன்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலையினையும், அந்த விடுதலையினூடாக உலகத் தமி ழினத்தின் புத்தெழுச்சியையும் ஆசித்திருந்த தமிழர்கள் நாம், வலிகளும் உன்னதங்களும் ஒருங்கே சுமக்கும் நமது நெடிய வரலாற்றின் மிக நெருக்கடியானதோர் தருணத்தில் நிற்கிறோம்.

உணர்வுடைய தமிழர்கள் அனைவருமே இன்று தோற்கடிக்கப்பட்டவர்களாய் நிற்கிறோம். நிராகரிக்கப்பட்டவர்களாய், கண்ணீரும், செந்நீரும் கணக்கிலா தியாகங்களுமாய் ஈழத் தமிழ் மக்கள் வளர்த்த விடுதலை வேள்வி எப்பயனும் தராது வீணாயிற்றோ என்ற வேதனையும் அங்கலாய்ப்பும் ஆட்கொள்ள, அடுத்த அடி எடுத்து வைக்கக்கூட இடமில்லா அதல பாதாள எல்லைக்கு வந்துவிட்ட நிர்க்கதியில் நிற்கிறோம்.

25 ஆண்டுகளில் ஒன்ற ரை லட்சம் தமிழர்களை கொன்று 20 லட்சம் பேரை ஊர் ஊராய் உலகெங்கும் அடித்து விரட்டி அகதி களாக்கிய சிங்களப் பேரினவாதம் நம்மைப் பார்த்து இன்று ஏளனமாய் நகைக்கின்றது. தமிழர் விடுதலைப் போராட் டத்தை அழித்துவிட்ட வெற்றியை மதுக்கிண்ணங் கள் உரசி அவர்கள் கொண் டாடுகின்றனர். உண்மையில் உணர்வுடைய தமிழர்கள் நாம் நொறுங்கிப்போன மக்களாய் நிற்கிறோம்.

பேரழிவின் விளிம்பில் நிற்கும் அம்மக்களுக்காகப் பரிந்து பேசவோ, நெஞ்சுருகி நேர்மையுடன் நான்கு வார்த்தை ஆறுதல் கூறவோ உலகில் அதிகம்பேர் இல்லை. உலகின் வலுவானவர்கள் அத்தனை பேரும் அம்மக்களை அழித்து முடிக்க அணிவகுத்து நிற்கின்றனர்.

மனிதநேயம், மனித உரிமைகள் பற்றி உலகிற்கு நிறைய உபதேசம் புரியும் மேற்குலகின் கிறித்துவ நாடுகள், ஏகாதிபத்திய வல்லாதிக்கத் திற்கெதிராய் நெம்பித் திமிறும் இசுலாமிய நாடுகள், பாட்டாளி வர்க்க அதிகாரத்தின் மிச்சமிருக்கிற ஒரே முகமென மார்க்சீய பவுடர் பூசிக்கொண்டு உலா வரும் சீனா, வேதங் களின் சோபித நிலம் -இந்து மதத்தின் தர்மகர்த்தாவான இந்தியா -என உலகில், ஆசியப் பிராந்தியத்தில் வலுவான அத்தனைபேரும் அம்மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்திட வரிந்துகட்டி நிற்கும் சிங்கள பேரினவாதத்திற்கு ஆயுதங்கள் தந்தார்கள், அரசியல் தாங்கு தூண்களாக நின்றார்கள் -நிற்கிறார்கள், பொருளாதாரப் பேருதவிகள் செய்தார்கள், பல்லாயிரம் தமிழ் மக்களது மண்டை ஓடுகளின்மேல் நின்று சமாதானக் கல்லறைகள் கட்ட சிங்கள பேரினவாதத்திற்கு பெருநிதியும் திரை மறைவில் வாக்களித்துள் ளார்கள்.

விண்ணதிரக் குண்டுமழை. விடாத எறிகணை வீச்சு. வீதியெங்கும் பிணக்குவியல். உணவு, மருந்து, மனிதநேயம் ஏதுமில்லை. கண்ணெதிரே பெருங்கொடுமை நடந்தேறு கிறது.

கடந்த 40 நாட்களாய் பூவாகவும், பிஞ்சாகவும் நாளொன்றுக்கு சராசரி 100 தமிழ் பிள்ளைகளை கசாப்புக்கடைகளில் ஆடு, கோழிகள் சிதைக்கப்படுவதுபோல் சிங்கள ராணுவம் சிதைத்து வருகிறது. முல்லைத் தீவில் கூடிநிற்கும் இரண்டேகால் லட்சம் தமிழ் மக்களின் இன்றோ, நாளையோ என்ற நிலையில்தான் பிரபாகரன் அவர்களோடு எனது நேர்காணலின் முக்கிய சில பகுதிகளை, சில புரிந்துகொள்ளல்களுக்கு உதவுமென்ற அடிப்படையில் பதிவுசெய்ய விழைகிறேன்.

நார்வே நாட்டின் ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டபின் உலகப் பத்திரிகை -ஊடகங்களை பிரபாகரன் அவர்கள் சந்தித்த பின்னணியில்தான் எனது நேர் காணலும் நடந்தது. அப்போது நான் வெளிநாடுவாழ் இந்தியன் என்பதால் சட்ட சிக்கல்கள் இருக்கவில்லை. அனைத்துலக ஒலிபரப்பாளனாகவே அவரை சந்தித்தேன்.

கொழும்பில் வாகனமேறி வவுனியாவில் மதிய உணவு முடித்துக்கொண்டு கிளிநொச்சி புறப்பட்டோம். வழியெங்கும் யுத்தத்தின் வடுக்களாய் இருபுறமும் இடித்து கிடந்த கட்டிடங்கள், கல்விக்கூடங்கள். வாகன ஓட்டுநர் மட்டக்களப்பு தமிழர். தமிழீழ ஆதரவாளர். நீண்ட பயணத்தில் அவர் இட்டு வந்த தமிழீழப் பாடல்கள் வித்தியாசமாயிருந்தன. “”வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்… வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்” என்ற பாடல் இன்னும் நினைவில் நிற்கிறது. நெஞ்சில் பதிந்த பிறிதொரு பாடல், “”தலையை குனியும் நிலையில் இங்க புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா’ என்ற பாடல்.

எண்ணிப் பார்க்கையில் பிரபாகரன் அவர்கள் மீது வேறு பல விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் நிலை மாறாத மனிதன், விலை போகாத தலைவன். விரும்பியிருந்தால் சமரசம் செய்துகொண்டு சுகபோக அதிகார வாழ்வொன்று தேடிக்கொண்டிருக்கலாம். தனக்கென வங்கிக் கணக்குகூட வைக்காத ஒரு தலைவன்.

நேரில் சந்தித்த வேளை வார்த்தைகள் வராத பிரமிப்பில் நின்றிருந்தேன். தேசியத்தலைவர் என்று போற்றப்படும் அவர் மிகவும் இயல்பானவராயிருந்தார். படாடோபம், பந்தா எதுவும் இருக்கவில்லை. அவர் வந்திறங்கியபோது போராளிகள் நிலையெடுத்து நின்று மரியாதை செய்யும் பொதுவான ராணுவச் சடங்குகள்கூட இருக்கவில்லை. பாதுகாப்பிற்காய் நின்ற இளவயது போராளிகள்கூட “களத்தில் இணைந்து நிற்கும் சக தோழர் என்ற உணர்வோடே தங்கள் தலைவனிடம் பழகுவது காண வியப்பாயிருந்தது.

“வணக்கம்’ என்பதற்கு மேல் எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அவர்தான் முதலில் பேசினார். “”வானொலியில் உங்கட குரலுக்கும் நேராக பார்க்கும் உருவத்துக்கும் தொடர் பில்லையே. சின்ன பொடியன்போல் இருக்கிறீர்கள்” என்றார். அரைமணி நேர அளவளாவலுக்குப்பின் நேர்காணலுக்கு அமர்ந்தோம். காலை 10 மணி இருக்கும்.

முக்கியமாக நான் கேட்ட கேள்வி… “இந்தியாவை ஏன் நீங் கள் பகைத்துக்கொண்டீர்கள்?” இக்கேள்விக்கு அவர் சொன்ன பதிலை வரலாற்றிற்காக நான் இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

“”இந்தியாவை என்றுமே நாங்கள் பகை நாடாகக் கருதவில்லை, கருதவும் முடியாது. எங்கள் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் உளவியல் தாய்நாடு இந்தியாதான். இன்னும் நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து பாருங்கள். எங்கள் மக்களின் வீடுகளில் நடுப்படமாய் மகாத்மா காந்தி அவர்களின் படங்கள் இருப்பதை பார்ப்பீர்கள்.

இந்திய-இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்குத்தான் எங்கள் இளைஞர்கள் கைதட்டுகிறார்கள். எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு முதல்களம் அமைத்துத் தந்தது இந்தியாதான். இந்தியாவின் உதவியோடுதான் எங்கள் மக்களின் விடுதலைப் போராட்டம் இறுதியாக வென்றெடுக்கப் பட முடியும்.

உண்மையில் நாங்கள் இந்தியாவின நட்புறவை வேண்டுகிறோம். கசப்பான அனுபவங்கள் சில நடந்தது உண்மைதான்.

அதற்குக் காரணம் சில அதிகாரிகள்தான். உண்மையில் இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நாடு எவ்வாறு இருக்கிறதோ, அவ்வாறு இந்தியாவிற்கு தென் ஆசியாவில் நாங்கள் இருக்க விரும்புகிறோம்” என்றார்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.